(01)
................................
உதயசூரியன் கவிழ்ந்து
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா
எங்கிலும் மழைக் குப்பை...குப்பை..
உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது 'இலை துளிர்த்து குயில் கூவும்' தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, மழைநாட்காலையிலும் எதிர்பார்க்கும் இவர் இங்கு ஒரு அதிகாலைப் பாணிச் சேவலாகி விடியலில் நிகழும் ஒவ்வொன்றையும் அழகான உவமைகளில் விவரித்திருக்கிறார். ஒரு சேவலுக்கு விடியலில் பெய்யும் மழை குறித்து என்ன கோபம் இருக்கும்? அதனை அதனது கூட்டுக்குள்ளேயே முடங்க வைத்து, வெளியிலிறங்கி உணவு தேட முடியாமல் செய்து விடும் மழை. எனினும் சேவலுக்கு எப்பொழுதுமே குப்பைகள் பிடிக்கும். ஈர்க்குத் தடிகளால் பெருக்கி அள்ளிவீசப்படாத குப்பைகளில்தான் அவை தமக்கு விரும்பிய உணவைத் தேடிப் பெற்றுக் கொள்ளமுடியும். எனினும் இங்கு ஒரு சேவலே சூரியனிடம் குப்பைகளைப் பெருக்கி வீசச் சொல்கிறதெனில், அம் மழைக் குப்பை எவ்வளவு விசாலமானதாகவும் பயனற்றதாகவும் இருக்கவேண்டும்? உண்மையில் விடியல்வேளையில் பெய்யும் பெருத்த மழை எல்லா விலங்குகளையும் முடங்கச் செய்துவிடுகிறது தான்.
...................................
நார் நாராய் மழைத் தூறல்
ஓலை முனையில் எறும்பூர்ந்து
குண்டு விழுந்து வெடித்துச் சிதறி
களி மண் தரையெல்லாம்
தொப்புள் குழிகள்
எனச் சொல்லும் கவிதையிலும் மழை ஒரு குறியீடாக வருகிறது. இன்னும் மேலே கூறியதைப் போல வெயிலை வேண்டி நிற்கும் இன்னுமொரு கவிதையாக 'தவளை கத்தும் மழை'யைச் சொல்லலாம். இதற்கு நேர்மாறாக கொடும் வெயிலின் உஷ்ணம் தாக்கி மழையை எதிர்பார்க்கும் கவிதையாக 'நெருப்பு மழை' கவிதையைச் சொல்லலாம். இவற்றைப் போலவே தனது நேசம் கொண்டவளை 'மழை முகில் போல் நீ நீராலானவளா?' எனக் கேட்கும் 'மனங்கொத்தி' கவிதையிலும், 'மயில் துளிர்த்து கொக்கும் பூக்கா', 'ஒருவரில் ஒருவர் சாய்ந்து', 'இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை', 'திட்டில் கனி' ஆகிய கவிதைகளிலும் மழை, கவிதையின் கருவோடு ஒட்டி வந்துசெல்வதைக் காணலாம். இவ்வாறாக ஈரத்துடனான கவிஞரின் மனக் கிடக்கையை வெளிப்படுத்தும் மழையானது, இத் தொகுப்பில் ஒரு செல்லப் பிராணியைப் போல பல இடங்களில் வந்துசெல்கிறது. 'வான் பார்த்த முணுமுணுப்பு' கவிதை, யாராலும் எளிதில் மறந்துவிட இயலா மன வடுக்களை விட்டுச் சென்ற சுனாமி குறித்து கடலுக்கான கேள்வியாக எழுகிறது.
கவிஞர் எஸ்.நளீமின் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை இயற்கை, சுயம், நேசம், யுத்தம் ஆகிய நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். பொதுவாக உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் பாதிக்கக் கூடிய முதல் மூன்று வகையோடு, யுத்த தேசத்துக்குள் பிறந்து வளர்ந்து அதன் துயரங்களை நேரடியாக அனுபவித்ததன் காரணத்தால் எழக் கூடிய மன உணர்ச்சிகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் கவிஞர்.
தனது நேசத்துக்குரியவள் குறித்த கவிதைகளும் தொகுப்பில் பரவலாக இருக்கின்றன. 'மும்மணிக் கோர்வை ஒன்று' கவிதையில் 'நாணம்', 'விளைச்சல்' ஆகிய துணைத் தலைப்புக்களில் எழுதப்பட்ட இரு வரிக் கவிதைகள் விருப்பத்துக்குரிய ஒருவரின் அசைவுகள் குறித்தே எழுதப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் தலைப்புக் கவிதையான 'இலை துளிர்த்துக் குயில் கூவும்' கவிதையை தனது நேசத்துக்குரிய செல்ல மகளின் வளர்ச்சியில் செழித்தோங்கும் செவ்வருத்தை மனம் நிறையப் பூத்ததில் மகிழும் ஒரு தந்தையாக நின்று எழுதியிருக்கிறார். அதே போல தாயின் அரவணைப்பை எப்பொழுதும் வேண்டுமொரு குழந்தைப் புத்திரனாக தனது தாயின் மேலுள்ள பாசத்தை 'உயிரில் ஒட்டு வைத்து' கவிதையில் இப்படி அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
..........................................
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச் சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்
கவிஞரின் பால்யத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மிக அருமையாக ஒரு கவிதைக்குள் கோர்வைப்படுத்தியிருக்கிறது தொகுப்பிலிருக்கும் 'கண்ணீரால் முகம் கழுவி' கவிதை. விடியலுக்கு முன்பே எழுந்து, சமைத்து, குளித்து, கூந்தலைப் பின்னலிட்டு, அழுதபடி தன் குழந்தைகளை முத்தமிட்டுக் கையசைத்து விடைபெற்று, பேரூந்தில் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் செல்லும் தாய், இரவுக்கு முந்திய அந்தியில்தான் மிகுந்த களைப்போடு வீடு வருகிறாள். பத்துவருடங்களாக நீதிமன்றத்துக்கு அலைய வைக்கப்பட்ட அந்த அப்பாவித் தாயின் துயரம் சூழ்ந்த பருவகாலத்தை நினைவுறுத்தி அச்சுறுத்துகிறது கவிஞருடைய துணையின் அதிகாலைக் குளியலும், கூந்தல் பின்னலிடலும். கவிதையினூடே வீண் அலைச்சலுக்குட்படுத்திய சட்டத்தையும் நீதியையும் சபிக்கிறார் கவிஞர். இவ்வாறான எத்தனை சாபங்களை நீதிமன்றங்கள் கண்டிருக்கும்? சட்டங்களும் நீதிகளும் சாபங்களை அத்திவாரமாக்கித்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன. நேர்மைக்கான இடைவெளியில் தப்பிவரும் நீதங்கள் சொற்பம்தான்.
தனது துணையை யாரெனக் கண்டுகொள்ள முன்பு அவளைக் குறித்தான தேடலை வெளிப்படுத்துகிறது 'தேடல்' கவிதை. தனிமையில் பசி மறந்து மனம் கொத்தப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஏகாந்தவேளையொன்றில் காதலியின் நினைவுகள் தின்ன, அவளுக்கான பல கேள்விகளோடு வரையப்பட்டிருக்கிறது 'மனங்கொத்தி' கவிதை. 'உன் மகுடி நாதம்', 'ஒருவரில் ஒருவர் சாய்ந்து', 'கையடக்கத் தாஜ்மஹால்', 'உன்னைச் சூடும் பூக்கள்', 'சிரிப்பிசையும் பேச்சுப்பாடலும்' ஆகிய கவிதைகள் காதலியின் மீது தான் வைத்திருக்கும் பரிபூரண அன்பையும், நெருக்கத்தையும் குறிக்கும் வகையில் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன.
(02)
'சுமையா' எனும் கவிதை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் இறுதிக் கணங்களை எடுத்துரைக்கிறது.
.............................
வெள்ளாப்பில்
உன் இறப்பிற்கு சாட்சியாய்
இரத்தமும் இறகும் கிடந்தது
எனும் வரிகளினூடே அப் பெண்ணின் சடலமும், (இறகு ஆடையைக் குறிக்கிறதென்றால்) அவளது துணியும் கிடந்ததெனக் கவிஞர் விவரிக்கிறார். இக் கவிதையும், இதன் இறுதி வரிகளும் கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் 'ஸெய்த்தூன்' கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. காணாமல் போன பெண்ணொருத்தி குறித்த அக் கவிதையிலும்
...............................
ஊர் எல்லையைச் சற்றுத் தாண்ட
சேலை இருந்தது...
மேல் சட்டை இருந்தது....
இரத்தம் இருந்தது...
ஸெய்த்தூன் இருக்கவில்லை!
என இப்படித்தான் அவளது துணித் துண்டொன்று இரத்தம் தோய்ந்து காற்றிலசைகிறது.
இவ்வாறான உண்மைச் சம்பவங்களைக் கவிதைகளாக்கும் போது கவிஞர்களிடையே ஒரே மாதிரியான கருப்பொருளும், ஒரே மாதிரியான இறுதிவரிகளும் சாத்தியமானதுதான். தனது சமூகத்தின் தடங்களில் இரத்தக் கறை படிய வைத்த சம்பவங்களும், தனது உறவுகளை அகாலத்தில் மண்ணிட்டு மூடச் செய்த அசம்பாவிதங்களும், ஆயுதங்கள் சாட்சியாக நடந்தேறிய அநீதங்களும் இக் கவிஞர்களைச் சூழவும் ஒரே மாதிரியாக நிகழ்ந்தவையாக இருக்கையில், ஒரே மாதிரியான கருப்பொருளைக் கொண்ட வரிகளையும் எழுதத் தோன்றுவதில் ஆச்சரியமேதுமில்லை.
தொகுப்பிலிருக்கும் 'ஆயிரத்திலோர் இரவில்' கவிதையும் இவ்வாறானவோர் இழப்பின் வேதனையை உரைப்பதுதான். யுத்தம் எழுப்பிய மயான பூமி மண்மேடுகளையும், மரணத்தின் வாசனையையும் மீளவும் நினைவுறுத்துகிறது 'கபன் துணிக் குவியல்' கவிதை. இக் கவிதையைப் போலவே பள்ளிவாயிலுக்குள் நிகழ்ந்த கொடூரத் தாக்குதலை விரிவாக விவரித்திருக்கிறது 'சந்தூக்குப் பயணிகள்' கவிதையும். இவ்வாறாக ஆயுதங்கள் மூலம் அடிக்கடி நிகழ்ந்த கொடூரங்களின் விளைவுகள்தான் 'நடுநிசி வாழ்க்கை' கவிதையில் துப்பாக்கிதாரிகள் குறித்து அஞ்சும்படி செய்திருக்கின்றன. ஆயுதங்களைச் சுமந்தலைபவர்களுக்கு அந்த ஆயுதங்களெப்போதும் துணையாக வராதென்ற நிதர்சனத்தைச் சொல்கிறது 'அலகு தீட்டி சுள்ளி முறித்து' கவிதை.
தனது மண்ணென்ற உரிமையில் மரணம் குறித்த அச்சம் சிறிதுமற்று தன்னம்பிக்கையோடும் மிகுந்த தைரியத்தோடும் ஆயுதத்தை ஏந்திக் கொண்டிருப்பவர்களிடம் எதிர்த்து நிற்கும் கேள்விகளை முன்வைக்கிறது 'மரணம் மரணமில்லை' கவிதை. இவ்வாறாக தனது உரிமையை தயக்கம் சிறிதேனுமின்றி எடுத்துரைத்தவனின் இறுதி மூச்சை அடக்கிப் போன, துப்பாக்கிதாரிகள் வந்துபோன இரவின் நிகழ்வொன்றை 'பிறழ்வு' கவிதையில் காணலாம். கலவரக் காலத்தில் குருதிக் கறையோடு அச்சம் படிந்திருந்த நாட்களை நினைவுருத்தி, நிம்மதியான வாழ்வொன்றை ஆவலுறுகிறது 'நிலா ஒளிந்த இரவில்' கவிதை.
போருக்கென்றொரு கோர முகமும், வாரியெடுத்து அச்சுறுத்தித் துரத்திவிடும் அகன்ற கைகளும் இருக்கின்றன. அவை அப்பாவி மக்களின் உயிர் பறித்தும், எஞ்சியவர்களைத் தமது மண்ணை விட்டு இடம்பெயரவும் செய்துவிடுகின்றன. அவ்வளவு காலமும் தம்மைச் சுமந்த மண்ணை, உயிரோடு தோலுரிக்கப்படும் வேதனையோடு விட்டுச் செல்லும் ஒரு அகதி மூதாட்டியின் அந்திம கால வேண்டுதலாக, தனது மண் தந்திருக்கும் ஞாபகங்களையும், மண்ணின் மீதான பற்றுதலையும், அதனை விட்டுத் தூரமாக நேர்ந்த துயரத்தையும் மிகுந்த வலியோடு சொல்கிறது 'பாட்டியின் ஈறல்' கவிதை. யுத்த தேசத்தில் கணத்துக்கொவ்வொன்றாக கணக்கின்றி நிகழும் படுகொலைகள் குறித்து இன்னுமொரு கவிதையின் இரு வரிகள் இப்படிச் சொல்கின்றன.
...................................
புறாச் சிறகுகளின் சடசடப்பின்போதே
உதிரும் இறகாய் நிகழும் கொலைகள்
புறாவின் சிறகுகள் எவ்வளவு வேகமாக அடித்துக் கொள்ள வல்லன. அதைப் போலவே சிறு ஓய்வுமற்று எல்லாச் சிறகுகளையும் உதிர்த்தபடி வேகமாகவே நிகழ்கின்றன படுகொலைகளும். சமாதானத்தின் போர்வையைப் போர்த்தியபடி மனிதப் பலியெடுக்கும் அதிர்வுகளை 'சமாதானப் பலி' கவிதை எடுத்தியம்புகிறது. வெளிப்பூச்சுக்கு சமாதானத்தை மாத்திரமே சொல்லித் தப்பித்துக் கொள்ளும் ஊடகங்களை 'சந்தூக்குப் பயணிகள்' கவிதையிலும், ஆயுதங்களேந்தி செய்ய முடியுமான எல்லா அக்கிரமங்களையும் ஆற்றிவிட்டு அப்பாவியாக வேடம் தரிப்பவர்களை 'பசுத்தோல் போர்த்தி' கவிதையிலும் சாடியிருக்கிறார் கவிஞர்.
இவ்வாறாக ஒரு காலத்தின் வடுக்களை வலியோடு எழுதியிருக்கும் கவிஞர், 'இன்னுமோர் தேசிய கீதம்' கவிதை மூலமாக நம்பிக்கையின் விதைகளையும் தூவியிருக்கிறார். எப்பொழுது வெளியேற்றப்படுவோமெனத் தெரியாது காக்கைக் கூட்டில் குயில் குஞ்சாய் வளரும் ஒரு சமூகம், மலர் போல தம் விடுதலையை வடிவமைக்கும் பாடலை இசைத்திடும் இக் கவிதை, விழுந்தாலும் வேரூன்றி விருட்சமாய் உயிர்த்தெழுந்திடும் உறுதியையும் நம்பிக்கையையும் ஆவலையும் விவரிக்கின்றது.
ஒரு நகரில் தனித்து விடப்பட்ட தன் ஜீவிதத்தின் உயிர் பிழியும் பொழுதுகளையும் கவிதைகளாக எழுதிவிடத் தவறவில்லை எஸ். நளீம். பெருநகரங்கள் சுயநலம் மிக்கவை. ஒரு உயிருக்கு இடரென்றால் அவை ஏனென்றும் திரும்பிப் பார்க்காத அகங்கார விழிகளைக் கொண்டவை. வெளிப் பார்வைக்கு எல்லா அழகுகளையும் பூசிக் கொண்டிருக்கும் அதன் இடுக்குகளில் கசியும் அந்தரங்கங்களின் அசிங்கம். ஒப்பனைகளில் மறைத்து மின்னிடும் அதன் அழகு முகத்தில் வசித்திட நேரும்போதுதான் தெரியும் அங்கு மிதந்திடும் நாற்றமும் அந்தகாரமும். 'அசிங்கம் சூழ் வாழ்வு', 'இரவு சில குறிப்புகள்', 'சூரியன் இறங்கித் தலையில் குந்தி', 'ஒன்றின் இன்னொன்று அல்லது நிழல் உலகு' ஆகிய கவிதைகள் நிம்மதி தராத அவரது நகரச் சூழலை, அவரது தனிமை தந்த மன உணர்வுகளைச் சொல்கின்றன.
தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கவிதைகளிரண்டு. அருமையான வர்ணனைகளைக் கொண்டு முழுமையாக எழுதப்பட்டிருக்கும் 'தலைக்குள் அணில்' கவிதை முற்றத்திலிருக்கும் ஒரு தென்னையைக் குறித்து எழுதப்பட்டது. அடுத்ததாக இதே போன்ற அழகான வர்ணனைகளோடு, பொதுவாக யாருமே கண்டு கொள்ளாத ஒரு சாஸ்திரக்காரியை விவரித்து எழுதிய 'செவ்வந்தி பூசிச் சிரித்து' கவிதை. இரண்டுமே மிகுந்த அழகுணர்ச்சியோடும், வார்த்தைத் தெளிவோடும் எழுதப்பட்டு கவிஞர் சொல்லவிழைவது முழுதாகத் தெளிவாகிறது.
தனது ஒவ்வொரு கவிதைக்குமென கவிஞர் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புக்களே கவிதையைக் கட்டாயம் வாசித்தேயாக வேண்டுமென்ற ஈர்ப்பை மனதினுள் விதைத்துவிடுகின்றன. அத்தோடு அருமையான அத் தலைப்புக்கள் கவிஞரின் கவி படைக்கும் வல்லமையையும் கோடிட்டுக் காட்டிவிடுகின்றன. காத்திரமான இக் கவிதைகளோடு பயணித்து முடிக்கும்வேளை சிறப்பான கவிதைத் தொகுப்பொன்றை வாசித்து முடித்த திருப்தி கிடைத்து விடுகிறது.
தெளிவான கருப்பொருள்களோடு எழுதப்பட்டிருக்கும் இக் கவிதைகளில் சில புரியாச் சொற்கள் புகுந்திருப்பது மட்டும்தான் வாசிக்கும்போது இடறச் செய்துவிடுகின்றது. கவிஞர் பிறந்து வளர்ந்த பிரதேச வழக்குச் சொற்களான அவை, அப்பிரதேசத்துக்கு அயலில்லாத என்னைப் போன்றவர்களுக்கும், பிற தேசத்தவர்களுக்கும் எளிதில் புரிந்துவிடக் கூடியவையல்ல. இச் சொற்களுக்கான தூய தமிழ்ப் பொருளை கவிஞர் பிற்குறிப்பிலேனும் தர மறந்திருக்கிறார். அடுத்த தொகுப்புக்களிலேனும் இச் சிறு குறையை கவிஞர் நிவர்த்தி செய்து வெளியிடுவாரேயானால், பல நிலங்களிலும் இப் படைப்புக்கள் சென்று பாராட்டினைச் சூடிவருமென்பதில் ஐயமில்லை. இனி வரும் காலங்களிலும், படைப்புக்களிலும் இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்.
- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# தினகரன் வாரமஞ்சரி 2010.10.31
# வல்லினம் - கலை இலக்கிய இதழ் 24, டிசம்பர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்
Saturday, July 2, 2011
Home »
உயிர்மை
,
கவிதை
,
சமூகம்
,
திண்ணை
,
தினகரன்வாரமஞ்சரி
,
நிகழ்வுகள்
,
வல்லினம்
» இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
0 comments:
Post a Comment