Showing posts with label வல்லமை. Show all posts
Showing posts with label வல்லமை. Show all posts

Wednesday, April 15, 2015

வழித்தடம் உரைக்கும் எமது மொழிபெயர் உலகினுள் !



தமிழ், ஒரு வாசனையைப் போல உலகம் முழுவதும் பரந்துள்ள மொழியாகவிருக்கிறது. உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் ஏதோவொரு மூலையிலாவது எவராவது ஒருவர் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வரட்சி மிகுந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஆபிரிக்க மக்கள், ஏதேனுமொரு செழுமை மிக்க பிற தேசத்துக்கு புலம் பெயர நேருமிடத்து அங்கும் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பாவிப்பதைப் போல, தமிழ் மொழியைப் பேசுபவர்களும் தாம் வாழ நேரும் நிலங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனமாகவேனும் தமிழைப் பேசியும், எழுதியும் அம் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

    உலகம் முழுவதுமான தமிழ் மொழியின் பரவலுக்கு, தமிழ் பேசும் மக்களின் புலம்பெயர்தலே காரணமாக இருக்கிறது. தொழிலின் நிமித்தமோ, யுத்தத்தின் பலிகடாக்களாகவோ, வேறு தேவைகளுக்காகவோ தம் பூர்வீக இடங்களை விட்டும் புலம் பெயரும் தமிழ் பேசும் மக்கள் தம் உயிரோடு இரண்டறக் கலந்த மொழியையும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று எம் மொழியைக் கற்றாலும் தமிழ்தான் அவர்களது சிந்தனை மொழியாக இருக்கிறது. 

     பண்டைய காலம் தொட்டு, நம் மூத்த குடிகளின் மொழியான தமிழைப் பேணிப் பாதுகாப்பதில் அவர்களது காப்பியங்களும், இலக்கியங்களும் பெரும்பங்காற்றியிருப்பதை மறுப்பதற்கில்லை. அச் செல்வங்கள் இல்லையெனில், புராண தமிழின் பெருமையைக் கூறும் சான்றுகள் ஏது? எனில், அவற்றைப் பாதுகாத்து இந் நவீன காலத்துக்குக் கொண்டு தந்த அப் பெருந் தகைகளை எவ்வாறு மறத்தலோ, மறுத்தலோ தகும்? 

     அனைத்தும் நாகரிக மயமாகி விட்ட இக் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறும், இலக்கியங்களும், தமிழ் மொழி மூலமான படைப்புக்களும் உலகம் முழுவதும் பரவி விட்டபோதிலும், வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில் தமிழ் மொழி இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டியது அம் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயாகும். இந்த இடத்தில்தான் எழுத்தாளர்களுக்கு ஈடாக, அவர்களது படைப்புக்களை ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களும், அம் மொழிபெயர்ப்புக்களைத் தொகுத்து உலகம் முழுவதும் வாழும் வேற்று மொழி மானிடருக்குக் கொண்டு சேர்ப்பவர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். உலகம் போற்றும் அவர்களது செயல் பெரும் மதிப்புக்குரியதாகிறது.

     சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்க்கும் நோக்கோடு 2001 ஆம் ஆண்டு பலரது ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாகத் தோற்றம் பெற்றதுதான் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம். இத் தோட்டத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்கள், அரிய தமிழ் நூல்களின் மீள்பதிப்பு, திறமையானவர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தலும், கௌரவித்தலும், இலவச தமிழ் நூல் வினியோகம் எனப் பல விளைச்சல்கள் வெற்றிகரமாக நடந்துகொண்டேயிருக்கின்றன. 

     அவற்றுள் மற்றுமொரு பெறுமதிமிக்க விளைச்சலாக, அண்மையில் காலமான  பேராசிரியர் திரு.செல்வா கனகநாயகம் அவர்களது முயற்சியின் பேரில், கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எம்.எல்.தங்கப்பா, அனுஷியா ராமஸ்வாமி, மைதிலி தயாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'In Our Translated World' என 'தமிழ் இலக்கியத் தோட்டம்' ஒரு முழுத் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளமையானது, இங்கு பெரிதும் பாராட்டத்தக்கது. 'தமிழ் இலக்கியத் தோட்ட' வெளியீடாக வெளிவந்த இத் தொகுப்பினை வெளியிடும் அனுமதியைப் பின்னர் பெற்ற இந்திய 'விகடன்' பதிப்பகம், இன்னும் பல பிரதிகள் அச்சிட்டு, மலிவு விலையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

     கடந்த முப்பது வருடங்களில் தமிழில் பல ஆயிரக்கணக்கான கவிதைகள் அச்சு ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் சிரமமான விடயம் என்பதோடு பரந்த அர்ப்பணிப்பும், உன்னிப்பான கவனமும், கவிதைகள் மீதான வெகுவான ஈடுபாடும் தேவைப்படும் பணியாகவிருக்கிறது. அதை மிகுந்த ஈடுபாட்டோடும் அக்கறையோடும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கமும் அவரது நண்பர்களும் செய்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'தமிழ் இலக்கியத் தோட்டத்துக்காக' தொகுத்த, அதன் நிறுவுனர்களில் ஒருவரான அமரர் திரு. செல்வா கனகநாயகம் கனடா, டொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். அத்தோடு மொழிபெயர்ப்பாளர். எனவே, வேறு சில மொழிபெயர்ப்புப் படைப்புக்களை வாசிக்கும்போது எழும் ஐயப்பாடுகளும், குழப்பங்களும், வார்த்தை மயக்கங்களும், பிசகுகளும் இத் தொகுப்பை வாசிக்கும்போது எழவேயில்லை. ஆங்கில மொழிபெயர்ப்போடு, அதன் மூலத் தமிழ்க் கவிதையும் அருகருகே அச்சிடப்பட்டிருப்பதால் தமிழ் வாசகர்களுக்கு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

    எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஆக்கங்களைப் படைப்பவர்கள் எனில், அப் படைப்புக்களை அவற்றின் மூலத்தோடு எவ்வித மாற்றமும் செய்யாது, இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பவர்கள் அதனை ஒரு தவம் போலவே செய்கிறார்கள். எனவே யதார்த்த வாழ்வியல், யுத்தம், நேசம், துரோகம், இயலாமை, இயற்கை, வன்மம், இழப்பு என மனித வாழ்வில் சந்திக்க நேரும் எல்லாமும் கொண்ட காத்திரமான எழுபத்தெட்டு தமிழ்க் கவிதைகளை, அவற்றின் செறிவும், உள்ளடக்கமும், சாரமும், அழகும் மாறாது இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதென்பது இலகுவான விடயமாக ஒருபோதும் இருப்பதில்லை.

    கடந்து சென்ற அண்மைய மூன்று தசாப்தங்கள் தமிழ் பேசும் மக்களிடத்தில் இலகுவாக மறக்கப்படக் கூடிய காலகட்டமல்ல. அக் காலகட்டத்துக்குள் வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் புதையுண்டு கிடக்கின்றன. எனவே இத் தொகுப்பிலுள்ள இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோரின் கவிதைகளில் பல யுத்தத்தின் துயரங்களையும், கண்ணீரையும் எடுத்துரைப்பவை. விடையற்ற வினாக்களாக நம் முன் வைக்கப்படுபவை. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கவிதைகள் வாழ்வியல் பிரச்சினைகளின் வெவ்வேறான பரிமாணங்களை சித்தரிப்பவை. எல்லாக் கவிதைகளுமே ஒன்றுக்கொன்று வேறானவை. வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தை ஈர்ப்பவை. இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிதைகளுமே சர்வதேசமும் அறிய வேண்டியவை.
  
   உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட புதிய தலைமுறைகள் கூட இக் காலத்தில் தம் வேரைப் பிடுங்கி வேற்று மொழிகளிலேயே நட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதனால் சமூக ரீதியிலும், கலாசார ரீதியிலும் தமிழின் செழுமை அரிதாகும் வாய்ப்பே மிகும். எனவே வரவேற்கத்தக்க இவ்வாறான தொகுப்புக்கள் தொடர்ந்து வெளிவருவதானது காலத்தின் தேவையாக இருக்கிறது. வரவேற்போம் !

- எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
 # ஆக்காட்டி கலை இலக்கிய இதழ் - ஜனவரி 2015, மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள், நவீன விருட்சம் இதழ், இனியொரு இதழ்


Wednesday, September 3, 2014

'With You, Without You' - திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்



            பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

            யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

            இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக  2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

கேள்வி - 'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

பதில் - வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள்  கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

            இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய 'ஆண்மையை' விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

            பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர்  வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

கேள்வி - திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து  கிடைத்தது?

பதில் - இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

கேள்வி - இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

பதில் - இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

கேள்வி - இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

கேள்வி - இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

பதில் - திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

கேள்வி - நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?


பதில் - இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

கேள்வி - இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

பதில் - எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

            அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம்  ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.


- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், ஜூலை - 2014
# வல்லமை இதழ் 
# இனியொரு இதழ்

Monday, March 3, 2014

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்



எழுத்தாளர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களால் 
'வல்லமை 2014' சிறப்புப் பரிசினை வென்ற எனது புத்தக மதிப்புரை


நூல்  - சயாம் மரண ரயில் (நாவல்)
ஆசிரியர் - சண்முகம்
பக்கம்:  304  
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________     
       தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.
           இன்றைய காலத்தில் 'சயாம் - மரண ரயில் பாதை'யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் 'சயாம் மரண ரயில்' நாவல்.

            பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.


            ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. 'சயாம் மரண ரயில்' - எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வல்லமை இதழ்
# அம்ருதா இதழ்
# எதுவரை
# இனியொரு