Saturday, March 2, 2013

'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்


            விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.

            "ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்பது கூடத் தெரியாது."

            "ஆனா அவர் என்னோட தந்தைன்னு எனக்குத் தெரியும்."

            இவ்வாறாக நீதிபதியின் முன்னால் வாதிட்டுக் கொள்ளும் தம்பதியினது விவாகரத்து குறித்த விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான காரணம் வலிதற்றதெனக் கூறி அவ் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது நீதிமன்றம். அதற்கு மேலும் கணவன், மகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி தனது பெற்றோரிடம் சென்று விடுகிறாள். அதற்கு முன்பு, கணவன் வங்கி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்றதன் பின்னால் வீட்டில் தனித்திருக்கும் தனது வயோதிப மாமனாரைப் பார்த்துக் கொள்வது யாரென்ற கவலையில் மனைவி, ஒரு பெண்ணை அதற்காக ஏற்பாடு செய்கிறாள். அதன் பின்னர் அக் குடும்பத்தில் நடந்தவை என்ன என்பதுதான் படத்தின் கதை.

            இஸ்ரேலை ஆட்டம் காண வைத்து, இஸ்ரேலின் திரைப்படமான 'ஃபுட் நோட்(Footnote)"டைத் தோற்கடித்து, இந்த வருடத்துக்கான 84 ஆவது ஒஸ்கார் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினை வென்றெடுத்திருக்கிறது "எ ஸெபரேஷன் - A Separation (பிரிவொன்று)" எனும் இந்த ஈரான் திரைப்படம். ஈரானிய, இஸ்லாமியப் பண்பாடுகளை விளக்கும் இத் திரைப்படமானது ஒஸ்கார் விருதினை வென்று தனது இருப்பை அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் உரக்கச் சொல்லியிருக்கிறது.

            படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இணைந்து படத்தினை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்கள். நாம் பார்த்துப் பழகியிருக்கும் சினிமாக்களில் மிகைத்திருக்கும் சினிமாத்தனங்களுக்கு மத்தியில் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாத காட்சியமைப்புக்களும், நடிப்பும், யதார்த்தமும் அதன் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது.

            தனது கணவன் கடனாளியான நிலையில், அன்றாட வாழ்க்கையைக் கழிக்கச் சிரமப்படும் ஏழைப் பெண் ராஸியா தனது கணவனுக்குத் தெரியாமல் நாளாந்த வருமானத்துக்காக தனது ஆரம்பப் பாடசாலை செல்லும் மகளுடன்  அம் முதியவரைக் கவனித்துக் கொள்ளவென வந்து செல்கிறாள். இறைபக்தி மிக்க அவள், பகல்வேளையில் அவ் வீட்டுக்கு வந்து முதியவருக்கு பணிவிடை செய்துவிட்டு, அவ் வீட்டவர்கள் வந்ததும், தனக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புகிறாள். ஒரு நாள், அவள் வீட்டினைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில், முதியவர் வீதிக்குச் சென்று விடுகிறார். வாகன நெருக்கடிக்கிடையே வீதியைக் கடக்கும் முதியவரைக் காப்பாற்ற அவள் ஓடுகிறாள்.

            அடுத்த நாள் வங்கிக்குச் சென்ற நாதிரும், பாடசாலை சென்ற அவனது மகள் தேமேயும் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தால் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. சாவி வைக்குமிடத்தில் சாவி இல்லை. தன்னிடமிருந்த திறப்பைக் கொண்டு கதவைத் திறக்கும் கணவன், உள்ளே சென்று பார்க்கிறான். மகள் அலறுகிறாள். அவனது முதிய தந்தை கட்டிலருகே விழுந்து பேச்சு மூச்சற்றிருக்கிறார். அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. திகைத்துப் போகின்றனர் கணவனும் மகளும். முதலுதவிகள் செய்து தந்தையைக் காப்பாற்றுகிறான்  கணவன். கோபமும், கழிவிரக்கமும், அழுகையும் அவனிடம் மிகைத்திருக்கும் நிலையில் ராஸியா, தனது மகளுடன் வீட்டுக்கு வருகிறாள். தனது தந்தையை அநாதரவான நிலையில், கைகளைக் கட்டித் தனியாக விட்டுச் சென்றதற்கு ராஸியாவைத் திட்டி வெளியே தள்ளுகிறான் கணவன். தனது பணத்தைத் திருடியதாகவும் அவள் மீது குற்றம் சுமத்துகிறான். அவள் வாசலிலிருந்து கதறுகிறாள். தனது அன்றைய ஊதியத்தைத் தருமாறு கெஞ்சுகிறாள். திடீரென ராஸியாவும் அவளது மகளும் கதறியழுவதைக் கேட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் தேமே. படிகளில் விழுந்து எழும்பும் ராஸியாவைக் காண்கிறாள் அவள்.

            அதன்பிறகுதான் அக் குடும்பத்தில் பாரிய சிக்கல்கள் எழுகின்றன. ராஸியா ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள் என்பதுவும், அந்தச் சம்பவத்தில் அவளது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என்பதுவும் அக் கணவனைக் கொலைகாரனெனக் குற்றம்சாட்டி அவனைக் கைது செய்ய ஏதுவாக அமைகிறது. அதன் பின்னர் நடந்தவை என்ன? அக் கணவன், மனைவி விவாகரத்து வழக்கிற்கு என்னவானது? மகள் தேமே, முதிய தந்தை ஆகியோரின் நிலைமை என்ன? என்பவற்றை உணர்வுபூர்வமாக இத் திரைப்படம் சித்தரிக்கிறது.

            நடிப்பென்றே சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் ஆழமாக, கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லா நடிகர்களும். பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பேமென் மோடி, திரைக்கதையாசிரியராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியவர். இத் திரைப்படத்தின் இயக்குனரான அஸ்கர் ஃபர்ஹதியின் திரைப்படமான 'அபௌட் எல்லெ(About Elle)'யில் 2009இல் அறிமுகமானவர். இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதினை வென்றிருக்கிறார்.

            கணவனோடு வாதிடும்போதும், கணவனுக்காக வாதிடும்போதும் மிகச் சிறப்பாகத் தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை லைலா ஹாதமி, சிறந்த நடிகைக்கான விருதினை பல தடவைகள் வென்றவர். இவர்களது மகளாக இயக்குனரின் சொந்த மகளான ஸரீனா ஃபர்ஹதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அழுகையையும், கவலையையும் உள்ளடக்கியபடி இவர் துயருரும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமானது.

            கர்ப்பிணியாக வீட்டு வேலைகள் செய்கையிலும், அபாண்டமான பழி சுமத்தப்பட்ட நிலையில் அழுகையுடன் குரலுயர்த்திப் பேசும்போதும், தனது குழந்தையை இழந்து கையறு நிலையில் தவிக்கும்போதும், கணவனுடைய கோபத்தை எதிர்கொள்ளும்போதும் என பல முகங்களைக் காட்டி நடிக்க முடிந்திருக்கிறது பணிப்பெண்ணாக நடித்திருக்கும் நடிகை சரே ஃபயத்திற்கு. ஏற்கெனவே பலமுறை சிறந்த நடிகை விருதினை வென்றிருக்கும் இவர் இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதினையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

            பல திரைப்படங்களை இயக்கி விருதுகளை வென்று சிறந்த இயக்குனராக தனது பெயரை நிலைநாட்டியுள்ள இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதிக்கு இத் திரைப்படத்தின் மூலமும் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. எட்டு லட்சம் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படமானது, இதுவரையில் இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகளையும், டர்பன் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், ஃபஜ்ர் திரைப்பட விழாவில் ஏழு விருதுகளையும், 15 ஆவது ஈரான் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளையும், இன்னும் பல முக்கியமான திரைப்பட விழாக்கள் பலவற்றில் விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது.

            படத்தின் ஒரு காட்சியில் நாதிருக்கும் ஸிமினுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உரையாடல் இப்படி இருக்கிறது.

            "இந்தப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல."
            "அவர்களுடைய குழந்தை இறந்து விட்டது."
            "என்னோட தந்தையும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் கதைக்கவேயில்ல."
            "அவர் இதுக்கு முன்னாடியும் கூடக் கதைக்கல்ல"
            "ஆனா அவர் பேசிய சில சொற்கள்ல நான் சந்தோஷப்பட்டிருக்கேன்."
            "அவர் பேசாம இருக்கிறது ஒரு குழந்தையை இழக்கிறதை விட அவ்வளவு மோசமானதா?"
            "அதுக்கு நான்தான் காரணம்னு நீங்க எப்படிப் பார்க்குறீங்க?"
            "அப்புறம் எப்படி அவ தன்னோட குழந்தையை இழந்தா?"
            "எனக்குத் தெரியாது. அவளோட கணவன் அவளுக்கு ஏதோ செய்து அதனால குழந்தையை இழந்திருக்கலாம். இப்ப என் மீது குற்றம் சுமத்துறா. அன்னிக்கு டொக்டர்கிட்ட போனதா அவளோட பிள்ளை சொல்லுது. நான் வீட்டுக்கு வரும்வரை டொக்டரிடம் போறதுக்கு அவளால ஏன் காத்திருக்க முடியாமப் போனது? இவ்வளவு வயதானவரை அவள் ஏன் கட்டிலோடு கட்டி வச்சுட்டுப் போனாள்?"

            எல்லாக் கதாபாத்திரத்தின் மீதும் அனுதாபத்தை ஏற்படுத்தி விடும்படியான படத்தின் ஒவ்வொரு காட்சியும் உரையாடல்களும் நாற்காலியின் முனைக்கு நம்மை இழுத்து வருகிறது. காந்தமாக ஈர்க்கிறது. எந்தநிலையிலும் எதுவும் நடக்கலாம் எனும் உயிர்ப்பு நிலை படம் முழுவதும் விரவியிருக்கிறது. இக் கதை இடம்பெறும் களம் ஈரானாக இருந்தபோதிலும், இக் கதையானது ஈரானுக்கு மாத்திரமானதேயல்ல. முழு உலகத்தின் எல்லா மூலைகளிலும் எக் கணத்திலும் நடைபெறக் கூடியது.

            நடுத்தர வர்க்க இஸ்லாமியக் குடும்பங்களிலெழும் சிக்கல்கள், பாசப் போராட்டங்கள், பிரிவுகள் என முக்கியமானவற்றை உள்ளடக்கி உருவாகியிருக்கும் இத் திரைப்படமானது ஈரானின் கலாசாரத்தையும், அரசியலையும் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பழமைக்கும் நவீனத்துக்கும் இடையிலான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நவீன ஈரானில் ஆண் பெண் உறவு குறித்துச் சித்தரித்துள்ளதோடு, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் மீதுள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தியுள்ளதன் மூலம் அமெரிக்காவின், முஸ்லிம்கள் மீதான தீவிரவாத எண்ணங்களையும் அசைத்துப் பார்க்கிறது. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது மார்க்கத்தின் எல்லைக்குள் நின்று உண்மையாகவும், நேர்மையாகவும் வாழப் போராடுகின்றமையை எடுத்துக் காட்டுகிறது.

            ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது ஈரான் திரைப்படமாக இது இருப்பதோடு, ஒஸ்கார் விருதினை வென்ற முதல் ஈரான் திரைப்படமாகவும் இது அமைகிறது. ஈரானிய மக்கள் இத் திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒஸ்கார் விருதினை வென்றதை விடவும், தமது எதிரி தேசமான இஸ்ரேலின் திரைப்படத்தைத் தோல்வியடையச் செய்து முதலிடத்தைப் பிடித்ததனால் ஈரானில் இத் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. பெண்ணுடலையும் ஆபாசங்களையும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்கும் நமது இந்திய மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கிடையில், துளியும் ஆபாசமற்றும் சிறந்த, உலகத்தரமான, நல்ல திரைப்படங்களைத் தர முடியுமென்று நீருபித்திருக்கிறது இந்த ஈரானியத் திரைப்படம். பல நல்ல திரைப்படங்களை உலகுக்குத் தந்திருக்கும் ஈரான், இத் திரைப்படத்தின் மூலமும் தனது படைப்பாற்றலை மீண்டும் உறுதியாக  நிலைநிறுத்தியிருக்கிறது. வரவேற்போம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# காலச்சுவடு  இதழ் - 153, செப்டம்பர், 2012
# எதுவரை இதழ் - ஜனவரி, 2013
# பேசாமொழி இதழ் - பெப்ரவரி, 2013
# உயிர்மை
# எங்கள் தேசம்
# திண்ணை
# பதிவுகள்

Friday, February 1, 2013

மட்டக்களப்பின் 'மகுடம்'          சிறுவயது முதற்கொண்டே மட்டக்களப்பு குறித்த உருவகமொன்று எனக்குள் இருக்கிறது. அப் படிமம் எனது பாட்டியால் விதைக்கப்பட்டது. உண்ண அடம்பிடிக்கும்போதும், உறங்க மறுக்கும்போதும் பாட்டியால் சொல்லப்பட்ட எனது பால்ய காலக் கதைகளில் மட்டக்களப்பு எனும் பரப்பு தவறாமல் இடம்பிடித்திருக்கும். பாட்டியோ, எனது குடும்பத்தினரோ இதுவரை ஒருபோதும் மட்டக்களப்பு சென்றதில்லை. இப்பொழுதெல்லாம் நினைத்தபோது அந் நகரத்துக்குச் செல்லமுடியுமான காலத்தில் இருக்கிறோம். ஆனால் பாட்டியின் காலத்தில் யாராலோ, எப்பொழுதோ சொல்லக் கேட்ட ஒரு ஊரின் பெயர், அங்கு செல்ல வேண்டுமென்ற அவரது உள்மன ஏக்கங்களோடு விதைக்கப்பட்டு, அவரது வாய்வழிக் கதைகளில் வேர்விட்டு வளர்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
           
            இலங்கைக்குள் பல ஊர்களுக்குள்ளும் பயணிக்கும்பொழுது காண நேரும், பருத்து, அகன்று, உயர்ந்த பழங்கால விருட்சங்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக இங்கேயே தரித்திருக்கும் இவை எத்தனை எத்தனை வரலாறுகளை, மனிதர்களை, நடமாட்டங்களை, காலநிலை மாற்றங்களை, அனுபவங்களைக் கண்டு வளர்ந்திருக்குமென சிந்தித்து வியந்திருக்கிறேன். அதையொத்து, இலங்கையின் வரைபடத்தில் உள்ளடங்கியிருக்கும் மட்டக்களப்பைக் காணும் ஆவலும் ஏக்கமும் எனக்குள்ளும் இருக்கிறது. மீன்கள் பாடிடும் பெரும் களப்பமைந்த அதன் வரலாற்றை அறியும் ஆவல் மிகைத்திருக்கிறது.
           
            மட்டக்களப்பு மண்ணை மேலும் வியக்கச் செய்யும்விதமாக, ஒரு அபூர்வமாக மலரும் பூவையொத்து, 'மகுடம்' எனும் கலை, இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழை அண்மையில் சற்றுத் தாமதமாக வாசிக்கக் கிடைத்தது. முதல் இதழை எடுத்தவுடனேயே வாசிக்கத் தூண்டியது பேராசிரியர்.செ.யோகராசா எழுதியுள்ள 'மட்டக்களப்பின் வரலாற்றை அறிதல்' எனும் ஆய்வுக் கட்டுரை. மட்டக்களப்பின் கலை, இலக்கியம், நாட்டாரியல் போன்ற இன்னும் பல பிரதான அம்சங்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரையானது மிகவும் பயனுள்ளதாகவும் சேமிப்புக்குரியதாகவும் உள்ளது. அதேபோல பெறுமதியான இன்னுமொரு தொடர் கட்டுரைதான் 'பெருநதியும் ஒரு கிளை நதியும்' எனும் தலைப்பில், இலங்கையின் தென்பகுதி சிறுபான்மையின மக்கள் பெரிதும் அறிந்திராத கூத்து எனும் கலையின் பரிமாணங்களையும், வரலாற்றையும் விளக்கி எழுதும் பேராசிரியர்.சி.மௌனகுருவினால் எழுதப்படும் தொடர்கட்டுரை.
           
            இரண்டு இதழ்களிலும் வெளிவந்திருக்கும் கவிதைகள் அனைத்தும் காத்திரமானதும் அருமையானதுமான தெரிவுகள். அ.ச.பாய்வாவின் 'ஆயிரம் தலைவாங்கி...' நிதர்சனமான கவிதை. அப்படியும் நடந்திருக்கலாம் என்பதைத்தாண்டி, அப்படித்தான் நடந்திருக்கிறது என பொட்டில் அறைகிறது. வி.மைக்கல் கொலின் எழுதியுள்ள 'பரசுராம பூமி' சிறுகதையும் அதையே வேறுவிதமாக உரைக்கிறது. யுத்தம் தழுவிச் சென்ற தேசத்தின் சேதங்கள் எத்தனை ஓலங்களைக் காற்றில் அலைய விட்டிருக்குமென எண்ணிப் பார்க்கவும் முடியாமலுள்ள நிலையில் கதையும், கவிதையும் பெரும் தாக்கங்களை உள்ளுக்குள் உண்டுபண்ணுகின்றன.  அதைப் போலவே 'இன்றைக்காவது' எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் குறுநாவல், நல்லதொரு கருவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சுவாரஸ்யமான நெடுங்கதை எனலாம். இது எத்தனையோ மானிடர் அனுபவித்த துயர நிகழ்வுகள் குறித்து 1994 இல் எழுதப்பட்ட கதையாயினும், இன்னும் அச் சூழ்நிலைகளிலோ துயரநிகழ்வுகளிலோ எவ்வித மாற்றமுமில்லை என்பதே நிதர்சனம்.
           
            முதலாம் இதழில் 'அரூப வெளிப்பாட்டு வாதத்தில் கோபிறமணனின் ஓவியங்கள்' ஒரு மாற்றத்திற்கான வித்திடல் எனலாம். கலையும், ஆற்றலும் நிறைந்திருக்கும் ஒருவர் மறைந்திருத்தல் தகாதது. அவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சு.சிவரெத்தினத்தைப் பாராட்டவே வேண்டும். இதழில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டிருக்கும் கோபிறமணனின் கைவண்ணங்கள் பல விடயங்களைப் பகர்கின்றன. நந்தினி சேவியரின் 'அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' தொகுப்பு குறித்து காத்தநகர் முகைதீன்சாலி எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரையானது தொகுப்பை உடனே வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது. விமர்சனக் கட்டுரைகளோடு அதில் இடம்பெற்றிருக்கும் தொகுப்புக்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பிரதேசத்தைத் தாண்டி எங்கோ தொலைவில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அத் தொகுப்புக்கள் எளிதில் கிடைப்பது சாத்தியமில்லை. எனவே அடுத்தடுத்த இதழ்களில் இவை இடம்பெறுமென எதிர்பார்க்கிறேன்.
           
            1950 - 1980 காலப்பகுதியை முன்வைத்து சி.ரமேஷ் எழுதியிருக்கும் 'ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் முஸ்லிம் கவிஞர்கள்' எனும் கட்டுரை நான் அறியாக் காலப்பகுதியின் இலக்கியத்தில் முக்கியமாக கவிதையின் பரிணாமத்தை அழகாக விளக்குகிறது. இந்த ஆய்வில் விடுபட்ட கவிஞர்களும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கருணாகரனினதும், இதழில் இடம்பெற்றிருக்கும் இன்னும் சிலரதும் கவிதைகள் நான் முன்பு சொன்னதைப் போலவே துயர வரலாறொன்றில் எஞ்சிய வாழ்வின் காயங்களை விவரிக்கின்றன. திசேராவின் பார்வை வித்தியாசமானதாகவிருக்கிறது. அவர் ஒவ்வொன்றைப் பார்ப்பதிலும், அவற்றை எழுத்துக்களாகக் கோர்ப்பதிலும் புதுமைகளை உண்டுபண்ணி என்னை வியப்புக்குள்ளாக்கிவிடுகிறார்.
           
            மகுடத்தின் இரண்டாம் இதழில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான நேர்காணல் குறித்து நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவானதும் நேர்மையானதுமான ஒரு நேர்காணலை வாசித்த திருப்தி ச.இராகவனின் நேர்காணலை வாசித்தபோது ஏற்பட்டது. எவ்விதமான பொய்ச் சாயங்களும், பூடகமான பதில்களுமற்று வெளிப்படையாக அவர் அளித்துள்ள பதில்கள் சுவாரஸ்யமாகவும் அதேசமயம் பாதியில் மூடிவைக்கத் தோன்றச் செய்யாத ஒரு நல்ல புதினத்தை வாசிப்பதை ஒத்ததுமான உணர்வைத் தந்தது. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் உரையாடக் கூடியவருக்குள் ஒளிந்திருக்கும் இறந்தகால அனுபவங்கள் இன்னுமின்னும் பல நல்ல எழுத்துக்களை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வரும் என்பது நிச்சயம். அவரது நேர்காணலின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.
           
            இவ் வருடத்தின் ஜனவரியிலேயே மலர்ந்திருக்கும் பூ, எனது கைக்குக் கிடைக்க ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருக்கிறது. எனினும் அப்பொழுதுதான் பூத்த வாசனையோடு, சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் பெறுமதியானதும் காத்திரமானதுமான ஆக்கங்களோடு 'மகுடம்' பூரித்துத் தளும்பியிருக்கிறது எனலாம். இலங்கையில் மிகவும் குறைவாக, விரல்விட்டு எண்ணக் கூடிய அளவேயுள்ள காத்திரமான இலக்கிய இதழ்களுக்கிடையே புதிதாக வரத் துவங்கியிருக்கும் மகுடமும் சிறப்பான இடத்தை வகிக்கும் என்பதை முதல் இரண்டு இதழ்களிலேயே நிரூபித்து நம்பிக்கையளிக்கிறது 'மகுடம்'.

- எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# வீரகேசரி
# தினகரன்
# உயிர்மை
# திண்ணை
# பதிவுகள்