Tuesday, November 16, 2010

விடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி !

    அழகிய பெண்களின் படங்களை முகப்பில் சூடிக் கொள்ளாத, சினிமாக் கவர்ச்சி மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத, சிறு பிள்ளைகளுக்குக் கூட ஒரு நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துவிடக் கூடியதோர் பெறுமதியான பத்திரிகையாக நான் விடிவெள்ளியைக் காண்கிறேன். இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியரின் உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை மட்டுமே தாங்கி வரக் கூடிய ஊடகங்கள், அன்றும் இன்றும் நம் நாட்டில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. முஸ்லிம்களுக்கென்றொரு தனியானதொரு ஊடகம் அவசியமாக உள்ளதென்பது எம்மில் பலராலும் உணரப்பட்டுள்ள இவ்வேளையில், விடிவெள்ளியானது இச் சிறுபான்மை இனத்தவருக்காகவே வாராவாரம் தொடர்ந்தும் வெளிவருவது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.

    இலங்கை, பல கலவரங்களைத் தொடர்ந்தும் கண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தின் கண்ணீர்ச் சொட்டொன்று எனச் சொல்லப்படக் கூடிய அளவுக்கு, இந் நாட்டு மக்களின் துயரானது, பலராலும் அறியப்பட்ட ஒன்று. கடந்த காலங்களிலும், இன்றும் அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் நம் சமூகம், தனது கருத்துக்களையும், உண்மை நிலவரங்களையும், தனது தேவைகளையும் பகிரங்கமாக வெளியே சொல்லிவிட முடியாது. அவ்வாறு சொன்னாலும் அவை, எல்லா ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலையிலும் இல்லை. தணிக்கை செய்து, அரசு சொல்லிக் கொடுப்பதை மட்டுமே மொழிந்து தள்ளும் நம் தேசத்துப் பத்திரிகைகளுக்கு மத்தியில் விடிவெள்ளியை, நிஜமான விடியலின் அறிகுறியுடனானதோர் ஊடகமாகவே எந்தவித மனக் கிலேசமுமின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது.

    சமூகத்தின் அபிவிருத்தி சார்ந்த தகவல்களோடு, அநீதிகள் குறித்தும் தைரியமாக புகைப்படங்களையும் ஆதாரமாக வைத்து விடிவெள்ளியில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் அனைத்துமே வரலாற்றுச் சான்றாக சேகரித்து வைக்கப்பட வேண்டியன. உலகளாவிய ரீதியில் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாமிய சமூகம் சந்திக்க நேரும் விபரீதங்கள், இஸ்லாம் மார்க்கம், குர்ஆன், இஸ்லாமிய ஆடைகள், நமது இறுதித் தூதர் குறித்தான சித்திரங்கள் என அனைத்துமே மாற்று மதத்தவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் வேளைகளில், அவை குறித்த உண்மையான தகவல்களை நமது முஸ்லிம்களிடத்தில் கொண்டு சேர்ப்பது அவசியமாகிறது. அதனைச் செவ்வனே நிறைவேற்ற இன்று எத்தனை ஊடகங்கள் முன்வருகின்றன எனப் பார்த்தால், விடிவெள்ளிதான் முதலில் நிற்கிறது.

    நமது மக்களிடையே வாசிக்கும் பழக்கமும், கட்டுரை, கவிதை, கதைகள், விமர்சனங்கள் எனத் தமது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் வெளிக் கொண்டு வருபவர்களும் அருகி வருவதைக் காணமுடிகிறது. மாற்று ஊடகங்களின் ஆதிக்கம், நாளுக்கு நாள் பெருகிவருகையில் பத்திரிகைகளை, சஞ்சிகைகளை  வாசிப்பதென்பதுவும், அதற்கு எழுதுவதென்பதுவும் நம்மிடையே நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இன்று, தமது குழந்தைகளுக்கான இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்களுக்காக ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கும் பெற்றோர்கள் கூட, ஐம்பது ரூபாய்க்கும் குறைவான சிறுவர் பத்திரிகைகளை, சிறுவர் கதைப் புத்தகங்களை அவர்கள் வாசிக்கவென வாங்கிக் கொடுப்பதில்லை. வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதைக் குழந்தைகளின் பெற்றோர்களே புரிந்துகொள்ளாதவிடத்து, வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர்த்து வளரும் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனேதுமில்லை.

    சிறு பிள்ளைகளுக்கு, பெரியவர்களான நாம் எதை எதைச் செய்ய சிறுவயதில் ஊக்கப்படுத்துகிறோமோ, அவற்றைத்தான் அவை வளர்ந்தும் செய்துகொண்டே இருக்கும். எனவே இப் பிள்ளைகள் தமது பதின்ம வயது முடியும் வரையில், மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப்படும் பாடசாலைப் புத்தகங்களோடு மட்டும் உறவாடிவிட்டு, பிற்காலத்தில் தமது கருத்துக்களை எடுத்துரைக்கத் தெரியாதவர்களாக, தமது எண்ணங்களை முழுமையாக வெளியிட முடியாதவர்களாக, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்தும், தன்னைச் சுற்றியும் இவ்வுலகிலும் அன்றாடம் என்னென்ன நடக்கின்றன என்பதைக் கூட அறியாதவர்களாக வளர்ந்து விடுகிறார்கள். இவ்வாறாக பின்னடைந்த சமூகமாக வளரும் சந்ததி பல ஆபத்துக்களை எதிர்நோக்குகிறது. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலாமையும், எல்லோரிடமும் ஏமாந்து போய்விடும் தன்மையும் இவர்களிடம் மிகைத்துவிடும் அபாயம் இதனாலேயே உருவாகிறது. தன்னம்பிக்கை அற்றவர்களாக, யாரேனும் சொல்வதை எந்தத் தர்க்கமும் சுய சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இவர்கள் மாறி விடுகின்றனர்.

    எதையுமே வாசிக்கும் ஆர்வமற்ற பிள்ளைகளின் நிலை இவ்வாறெனில், வாசிக்கும் ஆர்வமுள்ள பிள்ளைகளின் நிலை நம் தேசத்தில் எவ்வாறிருக்கிறது? அவர்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான களம் எவ்வாறான செய்திகளை, அனுபவங்களைத் தாங்கி வருகிறது? நமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கிடைக்கும் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமது அனேகமான பக்கங்களை சினிமா குறித்த தகவல்களாலும், உலகின் அந்தரங்க அசிங்கங்களை வெளிப்படுத்தும் தகவல்களாலும், வீண்விளையாட்டுக்களாலுமே நிரப்பியிருக்கின்றன. இவ்வாறான பத்திரிகைகளை பிள்ளைகள் பார்ப்பதனால் அவர்களது மன உணர்வுகளும், ஆர்வங்களும், திறமைகளும் வழி தவறிப் போய்விடுகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை பிள்ளைகளிடத்தில் உருவாக்குவது எவ்வாறு? தமது கருத்துக்களைத் தாமே எழுத்துக்களின், ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்த அவர்களை ஊக்கப்படுத்துவது எவ்வாறு? அவர்களது ஆர்வங்களை, திறமைகளை வளரச் செய்வது எவ்வாறு?

    நெடுங்காலமாக எனக்கிருந்து வந்த இம் மனக் குறையினை ஓரளவேனும் நீக்கியிருக்கிறது விடிவெள்ளியின் சிறுவர் பக்கம். அறிவார்ந்த தேடலை ஊக்குவிக்கும் குறுக்கெழுத்துப் போட்டியோடு, சிறுவர் குறிப்புக்கள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்களால் இப் பக்கம் நிறைந்திருக்கிறது. பிள்ளைகளின் வாசிப்பையும், ஓவியம் வரையும் திறமையையும், எழுத்தாற்றலையும்  வளரச் செய்வதில் முன் நிற்கும் இப் பக்கத்துக்கு பெற்றோர்கள் தயக்கமேதுமின்றி தமது சிறுவர்களை எழுதச் சொல்லலாம். ஒரு சிறு குறையாக நான் இப் பக்கத்தில் காண்பது, கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் இடையில் காணப்படும் ஓவியங்களின் அளவே. இந்தச் சித்திரங்களின் அளவைச் சிறிதாக்கி, இப் பக்கத்தில் இப்பொழுதிருப்பதைப் போலவே இன்னும் இன்னும் சிறுவர்களிடமிருந்து வரும் ஆக்கங்களை அதிகரிக்கையில் இதன் பலன் இன்னும் அதிகமாகும். அவ்வாறே விடிவெள்ளியே ஒரு பொதுவான தலைப்பினைக் கொடுத்து மாணவர்களுக்கிடையிலான கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தி அவர்களை இன்னும் எழுத ஊக்குவிக்கலாம். இப் போட்டிகளின் மூலம் அவர்களிடம் தேடி வாசிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும்.

    இதைப் போலவே எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கக் கூடிய களமாக விடிவெள்ளியின் இலக்கியப் பக்கமும், கட்டுரைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்களும் இருக்கின்றன. எழுதிப் பிரபலமானவர்களோடு, அனேகமாக நல்ல கட்டுரைகளையும், கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியதால் களம் கிடைத்த புதியவர்களையும் இப் பக்கத்தில் காணக் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றாக எழுதியும் இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கியவர்களென்பதனாலேயே பிரசுரிப்பதைத் தவிர்த்து, அவர்களது  எழுத்துக்களை நிராகரித்து, எழுதியவர்களுக்கே தமது எழுத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயத்தைச் செய்யும் நமது தேசத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் மத்தியில், திறமையை மட்டுமே கண்டு, அப் படைப்புக்களைப் பிரசுரித்து புதியவர்களையும் ஊக்கப்படுத்தும் விடிவெள்ளியின் பணி பாராட்டத்தக்கது. இன்னும் இப் பக்கத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்களுக்கும் ஒரு களம் அமைத்துக் கொடுத்தால், மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்யும் ஆற்றலும், இன்னுமொரு மொழியைக் கற்கும் ஆர்வமும் நமது சமூகத்தினிடையே வளருமென்பதில் ஐயமில்லை.

    தனது இணையத்தளம் மூலமாக உலகளாவிய ரீதியில் இலவசமாக, தமிழை வாசிக்கக் கூடிய அனைவராலும் பார்த்துப் பயன்பெறக் கூடிய விதத்தில், தான் கொண்டிருக்கும் பன்னிரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்தையும் வீணென்று ஒதுக்கிவிட முடியாத தரத்தில் உயர்ந்து நிற்கிறது விடிவெள்ளி. தாங்கிவரும் செய்திகளும், கட்டுரைகளும், படைப்புக்களும், புகைப்படங்களும், நிகழ்வுகளும் நமது சமூகத்தில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வரக் கூடியன. ஆகவே அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், வாசகர் கடிதங்களுக்காகவும் ஒரு சிறு பகுதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன். ஆண்டாண்டு காலமாகச் சிந்தித்து, பலரும் ஆலோசித்து இயற்றும் சட்டங்களாலும், அதிகாரங்களாலும், பலவந்தங்களாலும், நிர்ப்பந்தங்களாலும் செய்ய முடியாதவற்றை, சேவைகளை ஊடகங்களால் நொடிப் பொழுதில் செய்துவிடலாம். அவ்வாறானதொரு நேர்மையான ஊடகமாக விடிவெள்ளி தொடர்ந்தும் வெளிவர வாழ்த்துகிறேன். விடிவெள்ளி தொடர்ந்து நீடித்து நிலைத்து மின்னட்டும். மின்னும் இன்ஷா அல்லாஹ் !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கைநன்றி
# விடிவெள்ளி வார இதழ் 11.11.2010 (மூன்றாம் வருட சிறப்பிதழ்)

Wednesday, March 10, 2010

'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'

'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது....அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான்.'

        நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.

        முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.

        கென்ய எழுத்தாளரான 'கூகி வா தியாங்கோ' எழுதிய 'தேயும் ஒளி', 'இருள் நீடிக்கிறது' ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட 'தேம்பி அழாதே பாப்பா' (Weep not child) மேற்கூறிய வலிகளைச் சொல்கிறது. தமது மண்ணில் நிம்மதியாக வாழும் கறுப்பு மனிதரிடையே வேற்று மனிதர்கள் நுழைவதால் ஏற்படும் மாற்றங்களை நிலம், கல்வி, காலநிலை, தொழில், யுத்தம், அடக்குமுறை, அநீதி, தோல்வி எனப் பல விடயங்களைத் தொட்டு எழுதப்பட்டிருக்கும் இந் நாவலானது கருப்பொருளில் நைஜீரிய எழுத்தாளரான 'சினுவா ஆச்சிபி'யின் சிதைவுகள் (Things fall apart) நாவலை ஒத்திருக்கிறது. இரண்டுக்குமான ஒரே கருப்பொருள் பூர்வீக நிலச் சொந்தக்காரர்களிடையேயான அந்நியர்களின் ஆக்கிரமிப்பும், அது ஏற்படுத்தும் சமூகச் சிதைவுகளும், வன்முறைகளும், சீரழிவுகளுமாகும்.


'சுதந்திரம்?' என்று அவனுடைய சகா கேட்டான்.
'அது ஒரு மாயை. உனக்கும் எனக்கும் என்ன சுதந்திரம் இருக்கின்றது?'
'நாம் எதற்காகப் போராடுகிறோம்?'
'கொல்லுவதற்கு. நீ கொல்லாவிட்டால், நீ கொல்லப்பட்டு விடுவாய். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கவேண்டும். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்கவேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. குண்டுகள், நச்சுப்புகை, இன்னும் பல ஆயுதங்களைப் பயன்படுத்தி வெள்ளைக்காரனும் கொல்லுவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றான்.'
' ஒரு மகத்தான நியாயத்திற்கல்லாமல், போராடுவதுவும் கொலைகள் செய்வதும் தவறானது என்று நீ நினைக்கவில்லையா?'
'எங்களுடைய மகத்தான நியாயம் என்ன?'
'ஏன்? சுதந்திரமும் நமது இழந்து போன பாரம்பரியத்திற்கு மீளுவதும் தான்!'
' நீ சொல்வதில் நியாயம் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டிலே நான் இழந்துவிட்ட என் சகோதரன் மீளாத வரையிலும், சுதந்திரம் எனக்கு அர்த்தமற்றதாகவே இருக்கும். அது நிகழக்கூடிய காரியம் அல்ல. எனவே, போராடுவதும், என் வாளுக்கிரையாகி மடிபவனைக் கண்டு ஆனந்திப்பதையும் தவிர எனக்கு வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. ஆனாலும், போதும். சீஃப் யாகோபு செத்துத்தான் ஆக வேண்டும்.'


        சுதந்திரம் பற்றிய இந்தக் கருத்தாடல், யுத்த களங்களிலுள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும் குரல்தான். யுத்தம், அதன் தேவை, இரத்தம், பலி, ஆட்களைக் கொன்றொழிக்கும் வாழ்க்கை அனைத்துக்குமான மூல காரணம் பயம்தான். தனது உடைமை தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஒருவன் ஆயுதமேந்தினால், எதிரி தான் கைப்பற்றி வைத்திருப்பதை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவனுக்கெதிராக ஆயுதமேந்துகிறான். இதுவே வழிவழியாகத் தொடர்கிறது.

        இந் நாவலின் ஒரு பகுதியில் கறுப்பினச் சிறுவனான நியோரோகே, தனது தந்தை வேலை பார்க்கும் வெள்ளையினத்தவர் வீட்டுச் சிறுவன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. அது பற்றி நியோரோகே சொல்கிறான்.

' என் தந்தையைப் பார்ப்பதற்காக நான் அடிக்கடி வந்திருக்கிறேன். என் உயரமுள்ள ஒரு பையன் இங்கே இருக்கிறான். அவனுடைய தோல் மிகவும் வெள்ளை. அவன் திரு.ஹோலண்ஸின் மகனாக இருப்பானென்று நான் நினைக்கிறேன். தன் தாயின் பாவாடையிலே அவன் தொங்கிக் கொண்டு திரியும் விதத்தை நான் விரும்பவில்லை. அவன் பயந்த சுபாவம் உள்ளவன் போலும். இருப்பினும் அவனுடைய கண்கள் என்மீதே பதிந்திருந்தன். சற்று ஆச்சரிய உணர்ச்சியுடன் பார்த்தான். இரண்டாம் முறை அவன் தனியாக இருந்தான். என்னைக் கண்டதும், அவன் எழுந்து, என் திசையிலே நடந்து வந்தான். அவன் எதற்காக அப்படி வந்தான் என்பதை அறியாமல் நான் பயந்து போனேன். நான் ஓடினேன். அவன் அப்படியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் திரும்பி நடந்தான். நான் அங்கு செல்லும் பொழுதெல்லாம் என் தந்தைக்குப் பக்கத்தில் நிற்பதை நான் உறுதி செய்து கொள்ளுவேன்.'
        இதே ஸ்டீபன் எனும் வெள்ளையினச் சிறுவனை, இருவரும் வளர்ந்து வாலிபர்களாகி விட்ட பிறகு கல்லூரியில் எதேச்சையாகச் சந்திக்க நேர்கிறது நியோரோகேக்கு. அப்பொழுதில் அவர்களது சிறுபராயச் சந்திப்பு குறித்து இருவரும் நினைவுகூர்கிறார்கள்.

நியோரோகேயுடனோ, அல்லது வேறு யாராவது பிள்ளைகளுடனேயோ பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேலியோரமாகக் காத்திருந்த அநேக சந்தர்ப்பங்களைச் சுலபமாக ஸ்டீபனினால் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனால், அவர்கள் சமீபித்த பொழுதெல்லாம் அவன் பயந்தான்.

'நாங்கள் உன்னைப் பார்த்ததில்லை'
'நான் வீதியோரமாக ஒளிந்திருப்பேன். நான் உங்களிலே சிலருடன் பேச ஆசைப்பட்டேன்.' ஸ்டீபன் தன்னுடைய நாணத்தினை இழந்து கொண்டிருந்தான்.
'ஏன் நீ பேசவில்லை?'
'நான் பயந்தேன்.'
'பயமா?'
'ஆம். நீங்கள் என்னுடன் பேசமாட்டீர்களென்றும், என்னுடைய சகவாசத்தினை விரும்ப மாட்டீர்களென்றும் நான் பயந்தேன்.'
'நான் அன்று உன்னைப் பார்த்து ஓடியதை மன்னித்துக் கொள். நான் கூடப் பயந்துபோனேன்.'
'பயம்?' இப்பொழுது ஸ்டீபன் அதிசயப்படும் முறை வந்தது.
'நான் உன்னைக் கண்டு பயந்தேன்.'
'ஆனால், உனக்கு நான் ஒரு கெடுதலும் செய்யவில்லையே?'
'இருந்தாலும் பயமாக இருந்தது. உன்னுடைய நோக்கத்தை என்னாலே எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?'
'வேடிக்கை'
'ஆம். வேடிக்கைதான். ஏதாவது ஒன்றைக் கண்டு பயப்படும் விதத்திலே வளர்க்கப்பட்டதினாலோ, அல்லது மற்றவர்கள் பயப்படுகிறார்கள் என்பதினாலோ, உள்ளம் பயப்பட வேண்டும் என்கிற பக்குவத்தை அடைந்து, அதன் காரணமாக எதையாவது கண்டு பயப்படுவது வேடிக்கையானதுதான்...அதுதான் என் பயத்திற்குக் காரணம். என்னுடைய சகோதரர்கள் நைரோபிக்குச் சென்று வீதிகளிலே நடந்து, வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது, ஐரோப்பியர்கள் தங்களைப் பார்த்த விதத்தினைத் தாங்கள் விரும்பவில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.'
'எல்லா இடங்களிலும் இதே கதைதான். ஆப்பிரிக்கர்கள் தங்களைப் பார்க்கும் விதத்தினை  தாங்கள் விரும்பவில்லை என்று அநேக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..........'


        என உரையாடல் தொடர்கிறது. இங்கு நியோரோகே கறுப்பின இளைஞன். ஸ்டீபன் வெள்ளையின இளைஞன். நிலத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் எதிரிகளான இரு இனத்துப் பெரியவர்களினதும் புதல்வர்கள். இருவருக்கும் சிறு வயது தொட்டே எதிர் இனத்தவர்கள் மீதான அச்சம். அதனையே இந்த உரையாடல் தெளிவுபடுத்துகிறது. காலங்காலமான அடக்குமுறை விதைத்த அச்சமும், அடக்கியாளும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சமும் அச் சமூகத்தினைப் பாழ்படுத்தியிருக்கிறது. சிறு மனங்களில் விதைக்கப்பட்ட அச்சத்தின் விதை வளர்ந்து மிக மோசமான எதிர்வினைகளைத் தூவுவதை கதை விரிவாக அலசியிருக்கிறது. கறுப்பினத்தவர்களை, வெள்ளையின இராணுவத்துக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தைச் செய்பவரான, நியோரோகேயின் அன்புக்குரியவளான மிவிஹாகியின் தந்தை யாகோபு கொல்லப்பட்டு விடுகிறார். அவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நியோரோகேயின் தந்தை நிகோதோ வெள்ளையின வன்முறைக்குப் பலியாகி விடுகிறார். அதனால் ஸ்டீபனின் தந்தை ஹோலண்ஸ், நியோரோகேயின் சகோதரனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இப்படியான பழிக்குப் பழிகள் வரலாறாகியிருக்கின்றது.

        பூர்வீக நிலத்தில் நிம்மதியாகவும், தமது வாழ்வியக்கங்களோடு அமைதியாகவும் வாழ்ந்துவருபவர்களிடையே விஷக் கிருமிகள் போல வேற்று மனிதர்கள் நுழைந்து அதன் அமைதி கெடுவதென்பது கென்ய, ஆப்பிரிக்க மக்களோடு மட்டும் நின்றுவிட்ட ஒன்றல்ல. நமது தேசங்களிலும் இதைத்தான் அனுபவித்திருக்கிறோம். அனுபவிக்கிறோம். வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந் நாவல்கள்.


        'சினுவா ஆச்சுபி'யின் சிதைவுகள் நாவலில், கொட்டப்பட்ட நீர், பளிங்குச் சீமெந்துத் தரையில் வழுக்கி நகர்வதைப் போல வெள்ளையினத்தவர்கள், அக் கறுப்பினத்தவர்கள் மத்தியில் ஊடுருவியதைச் சொல்கிறது. பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாச்சார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்திலும் பெரிதும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது இந்த ஊடுருவல். 'ஒக்கொங்வோ' எனும் மனிதனையும், அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றம் அனைத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களது வாழ்வை கொடிய இருள் சூழ்ந்ததை மிகவும் ஆழமாகவும், வாசகர்களும் உணரும் வலியோடும் தந்திருக்கிறார் சினுவா ஆச்சுபி.

'தங்கள் கோயிலைக் கட்ட ஒரு நிலம் கேட்கிறார்கள்.' உசென்டு தங்களுக்குள் ஆலோசனை செய்தபோது தன் சக பெருங்குடி மக்களுக்குச் சொன்னான். ' நாங்கள் ஒரு துண்டு காணி கொடுப்போம்' என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். அவர்களிடையே ஆச்சரியத்தையும் இணக்கமின்மையையும் வெளிக்காட்டும் முணுமுணுப்பு தோன்றியது. ' தீய காட்டின் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்போம். சாவை வென்றவர்கள் என்று பெருமை பேசுகிறார்கள். யுத்த பூமி ஒன்றைக் கொடுப்போம்.  அங்கே தங்கள் வெற்றியைக் காட்டட்டும்.' எல்லோரும் சிரித்துக்கொண்டு அதற்குச் சம்மதித்தார்கள்.

        'தீய காடு' என்பது அப் பூர்விக மக்களின் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த ஒரு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதி. அம்மை, குஷ்டம் போன்ற தீராக் கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கும் பூமி. வெள்ளையர்கள் வந்து அவர்களுக்கென்றொரு இடம் கேட்ட பொழுது 'வெகு விரைவில் இறந்துவிடுவார்கள்' என்ற அதீத நம்பிக்கையோடு கறுப்பினத்தவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இடம். பின்னாட்களில் கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான எல்லா இடங்களையும் வெள்ளையர்கள் கைப்பற்றிக்கொள்வதற்கு திட்டம் வகுத்துக் கொள்ளப்போவது தெரியாமல் கொடுத்த முதல் இடம்.

        இப்படியாக, இந்த இரண்டு நாவல்களுமே கறுப்பினத்தவர்களின் பூர்வீக வாழ்க்கை முறைகளை, கலாச்சார நடைமுறைகளை, சில மூட நம்பிக்கைகளை, இன்னும் வலிகளை, பின்னாட்களில் எதிர்கொள்ள நேர்ந்த அடக்குமுறை, அநீதி, வன்முறைகளைச் சொல்வதில் வெற்றியடைந்திருக்கின்றன. பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டிகளென்று வெள்ளையர்கள் பரப்பிய கருத்தினைப் பொய்யாக்கி, தன் பங்கு நேர்மையினை எடுத்தியம்புகின்றன இரண்டு கதைகளும், அதன் மாந்தரும். சினுவா ஆச்சுபியின் நாவலில் வாசிக்கக் கிடைக்கும் சுவாரஸ்யமான, பூர்வீக கறுப்பின மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், திருமண, திருவிழா, போட்டி, பந்தய நிகழ்வுகள், வன்மங்கள் போன்றன குறித்த பரந்த விளக்கம் கூகி வா தியாங்கோவின் நாவலில் அவ்வளவாக இல்லையெனினும் இரண்டுமே ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கின்றன. அதே போல, இரண்டு நாவல்களிலுமே பலதார மணம், கதை சொல்லும், கேட்கும் வழக்கம் என்பன போன்ற பல விடயங்கள் பொதுவானதாக இருக்கின்றன. அத்தோடு, இரண்டு நாவல்களினதும் பிரதான கதாபாத்திரம் இறுதிவரை பல வன்முறைகளை, காயங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையை நோக்கித்தான் நகர்கிறது.

        ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு இந் நாவல்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த எழுத்துக்களை, அவை சொல்லவரும் அதே உணர்வுகளோடு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் 'சினுவா ஆச்சுபி'யின் 'சிதைவுகளை' தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் என்.கே. மகாலிங்கம், 'கூகி வா தியாங்கோ'வின் 'தேம்பி அழாதே பாப்பா'வை தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆகியோரை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.

        யுத்தம், புலம்பெயர நேரும் கொடுமை, அது தரும் பேரிழப்புகள், சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் வலி அனைத்தும் இக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்குப் போலவே எல்லா மக்களுக்கும் பொதுவானது. அதன் குரல், மரண ஓலத்தை ஒத்தது. வெளிப்படையாக எழுதப்பட்ட நாவல்கள் இவை. எழுதப்படாதவை இன்னும் எத்தனையோ?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கைநன்றி

# வல்லினம் மலேசிய கலை இலக்கிய இதழ் -14, பெப்ரவரி,2010
# உயிர்மை

Monday, February 1, 2010

'அபராதி' எனும் குற்றமிழைத்தவன்


01.
    கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன் எனப்படுபவன் தான் காணும் எல்லாவற்றிலும் கவிதையைத் தேடுகிறான். காண்கிறான். கண்டடைகிறான். பழைய நினைவுகள் பாரமாக உணரும்வேளை அவற்றை கவிதையாக இறக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த நினைவுகளில், நிகழ்வுகளில் அவன் மூழ்கி விடுகிறான். அவையும் பின்னாட்களில் கவிதைகளாகி விடும்.

    அவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அபராதி'. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் 'அபராதி'யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் கவிஞர். தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை.

    ஒரு பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்காளாக நேரிடுவதால் அதனைச் சாடியே அனேக கவிதைகள் முந்தைய தொகுப்பான 'ஒரு கடல் நீரூற்றி'யில் உள்ளவை போல இத் தொகுப்பிலும் உள்ளன. ஆனால் வேறு வேறு பரிணாமங்கள். வேறு வேறு துயரங்கள். முன்னர் எழுதப்படாதவற்றின் மிச்சங்கள். யாரும் இன்னும் தொட்டுக் காட்டி விடாதவை புதுவிதமான, தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன.

    'ஆதித் துயர்' தலைப்பே அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள். அக் கவிதையில்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது


    இங்கு வெய்யில், இயற்கைக் காரணிகளால் பெண்கள் படும் துயரங்களையும்,

வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்


    இங்கு வேட்டை நாய், சமூகத்தாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் ஏற்படும் துயரங்களையும் குறிப்பதாகக் காண்கிறேன். ஏதேனுமொரு முன்னேற்றப் பாதையில் பெண்ணானவள் தன் பாதங்களை எட்டிவைக்கும்போதெல்லாம் வேட்டை நாயைப் போல அழியா நிழல் அவளை வழி மறிக்கிறது. குறுக்கிடுகிறது. அதையெல்லாம் பொறுமையாகத் தாண்டி அவள் நடைபோட வேண்டியவளாகிறாள். அக் குறுக்கீடுகள் வழிவழியாகத் தொடர்வதை கவிதையின் இறுதிப்பகுதி இப்படிச் சொல்கிறது.

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்


    அம்மா எனும் ஒற்றைச் சொல், ஒரு வெளிச்சப் புள்ளியாக நம் ஒவ்வொருவருடனும் என்றென்றும் கூடவே வருவது. இடர் சூழும் கணம் தோறும் வாய் தவறியேனும் அம்மா என்று உச்சரித்து விடுகிறோம். வலியகற்றும் மருந்து போல அந்தச் சொல்லுக்கே அவ்வளவு வலிமையிருக்கிறது.

    வாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் தாய் மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பாள். நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவளால் மட்டுமே முடியும்.

    அன்பு முழுவதற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைத்தால், அது அம்மா என எழுந்து நிற்கும். ஆனால், நம்முடன் கூடவே இருக்கையில் அந்த முழுமையான அன்பை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். ஒளி மிக்க சூரியனை அருகில் வைத்துக் கொண்டு, வெளிச்சத்தைத் தேடி அலைவது போல வேறெங்கெங்கோ எல்லாம் அன்பைத் தேடி அலைந்தபடி இருக்கிறோம்.

    கவிஞர் ஃபஹீமா ஜஹானின் 'அம்மா' கவிதை சொல்லும் செய்தியும் அதுதான்.

இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்


    என ஆரம்பிக்கும் கவிதையானது நமது எல்லோர் வீடுகளிலும் நிகழும் பல விடயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது. வீடுகளில்  இல்லத்தரசி என எளிதாக வகைப்படுத்தப்படுபவள் வீட்டிலாற்றும் பணிகளெதுவும் எவராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று


என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக


    என நிதர்சனங்களை வெளிப்படையாகச் சொன்னபடி தொடர்கிறது கவிதை.


02.
    இலட்சியங்கள் பலவற்றைக் கொண்ட பெண்ணை, பல பொறாமைக் கரங்கள் வழி மறித்து நிற்கும். பறக்கவென நாடும் அவளது சிறகுகளைப் பிடுங்கி எறியவெனக் காத்துக் கிடக்கும். அவளது நடைபாதைகளை முட்களால் நிரப்பிவிட்டு, தடுக்கிவிழுகையில் கைகொட்டிச் சிரிக்கும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகள் சமூகக் கட்டமைப்பு, காதல், கலாச்சாரம் எனப் பலவற்றாலானது. அவ்வாறாக பலவகையான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள 'அவளை வழியனுப்பிய இடம்' , கிரீடங்களை அவமதித்தவள்',  'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்', 'தற்கொலை',  'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்'  ஆகிய கவிதைகள்.

பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்


    எனத் தொடங்கும் 'அவளை வழியனுப்பிய இடம்' கவிதையானது,

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன


    எனத் தொடர்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தெள்ளிய நீர்க்குடம் எனும் அழகிய குறியீடு, சலனமேதுமற்றிருக்கும் பெண்களின் இளகிய மனதிற்கு மிகப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தூய அருவியிலிருந்து அவளேந்திச் சென்ற தெளிந்த நீரைச் சிதறடிப்பதன் மூலம் அவளை தாகத்திற்குள்ளாக்கி தன்னிடம் கையேந்தச் செய்வது உடைத்தவனின் திட்டமாக இருந்திருக்கக் கூடும்.

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்


    அடுத்ததாக அவளைப் பட்டினியில் ஆழ்த்துவதற்காக, அவளது பயிர் நிலங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த வன்மத்தோடு இறங்குகிறான். தாகத்திலும் பட்டினியிலும் அவளைத் தள்ளிவிடுவதன் மூலம் அவளது முழுவதுமான வாழ்வாதாரங்களைச் சிதைப்பது அவன் நோக்கமெனில், இது பல பெண்களின் வாழ்வினை அடியொற்றிய கவிதைதானே ?!

    இதே போன்றதொரு இன்னுமொரு கவிதைதான் 'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்' கவிதையும்.

முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன


    எனத் தொடங்கும் கவிதை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடச் சென்ற இடத்திலும் அநீதியிழைக்கப்படுவதை ஆரம்பவரிகளில் உணர்த்துகிறது. தொடர்ந்து பெண் வாழ்வின் பல அவலங்களைச் சொல்லி,

இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது


    என முடிகிறது. 'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்'  கவிதையில் சிறுவயது தொட்டே ஒரு பெண்ணின் வாழ்வில் கொடூர ஆட்சி செலுத்தும் அதிகாரங்கள் நிறைந்த, நேரடியாக தீய நடவடிக்கைகள் கொண்டவரைச் சாடுகிறார் இப்படி.

உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்

.............
.............
அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

'தற்கொலை' கவிதையில் இதே கருத்து வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

அற்பப் புழுதான் - நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்03.
    காதல் இரு பார்வைகளின் சங்கமத்தில் பிறக்கிறது. பார்த்துக் கொள்ளும் வேளையில் பேரழகென மிளிரும் அது, எதிர்காலமும், தம்மைப் பார்த்திருக்கும் சுற்றுச் சூழலும், சமூகமும் குறித்த சிந்தனை எழும்போது அச்சத்தைத் தந்துவிடுகிறது. அது விருப்பமின்றி ஒரு பிரிவுக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் நிறைந்த மழை நாளின் பயணமொன்றை அழகுறச் சொல்கிறது 'காட்டில் பெய்த மழை' கவிதை.

மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்


    எனத் தொடரும் கவிதையில் மலையையும் ஏந்தும் தைரியமும் பலமும் பெற்றவனாக ஆணையும், வீழ்ந்து சிதறி நீரோடு கலந்து பயணிக்கும் மழைத்துளியாக, இன்னொன்றுடன் சார்ந்து பயணிக்கவேண்டியவளாக  பெண்ணையும் சித்தரித்து, ஆணின் பலம் வாய்ந்த நிலையையும், பெண்ணின் பலவீனமான நிலையையும் இப்படிப் பிரித்துக் காட்டுகிறார் கவிஞர்.

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?


    வல்லமைகள் கொண்டவனாகவும், தனக்குப் பிடித்தமானவனாகவும் ஒருவனைக் கண்டுகொள்ள நேர்ந்த போதிலும், பெண்ணுக்கென காலங்காலமாகத் தொடரும் சமூகக்கட்டமைப்புக்களாலும், சூழ்நிலைகளாலும், நாணத்தாலும் அவள் அவனை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. அதை மிகவும் அருமையாகச் சொல்கிறது கவிதையின் இறுதி வரிகள். பெண்களைச் சூழ மூடியிருக்கும் அனைத்தையும் 'ஆண்டாண்டு காலப் போர்வைகள்' எனும் சொற்றொடர், அருமையாக வெளிப்படுத்துகிறது.

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

    இதையெழுதும் இக் கணத்தில் கூட எத்தனை எத்தனையோ இல்லங்களில் முதிய ஆத்மாக்கள் தாங்கள் விட்டுவந்த, தங்களைக் கை விட்ட வழித் தோன்றல்களை எண்ணி எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை ஆதரிக்க நீளும் கரமொன்றினை எதிர்பார்த்து வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம் அன்பினையும் எஞ்சியிருக்கும் உயிரையும் தவிர்த்து வேறேதும் இல்லை. அதனாலேயே அநாதரவாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 'மரணத்தை யாசித்தவள்' கவிதையானது தனது அந்திமக் காலத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு கூற்றுவனை எதிர்பார்த்துக் காத்திருந்த  ஒரு முதிய ஆத்மாவின் கதையைச் சொல்கிறது.

நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை


    அந்த வீட்டில் முதியவளின் அருகமர்ந்து அவளது வேதனைகளை, வலிகளை அன்பாக விசாரித்து, பணிவிடை செய்ய யாருமற்ற நிலையை மிகத் தெளிவாக விவரிக்கின்றன கீழுள்ள வரிகள்.

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது

பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்

    எனினும், அவளது மரணத்தின் பின்னர், அவள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீருற்றி நட்டு வளர்த்த மரங்கள் மட்டும் அவளை நன்றியோடு தேடிக் கொண்டிருப்பதை இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.

நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்


    இங்கு 'நீரூற்றியதால் வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்' எனும் சொற்றொடரானது நேரடியான ஒரு அர்த்தத்தைக் குறிப்பதோடு, அந்த முதியவள் பிரதிபலன் எதிர்பாராமல் வளர்த்து, பின்னர் அவளைப் போல அன்பு காட்ட யாருமற்று நிராதரவாக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்தான் குறிப்பிடுகின்றன.

    ஒரு மழை என்னவெல்லாம் செய்யும்? அடாது பெய்யும். எல்லா இடங்களையும் நனைத்துப் போகும். வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் சென்று நீர்வாழ்ப் பிராணிகளின் வாழ்விடங்களை மாற்றும். சிலவற்றை அழகாக்கும். சிலவற்றை அவலட்சணப்படுத்தும். இன்னும் தான் வந்துபோனதை உறுதிப்படுத்த இலைகளிலும் குட்டைகளிலும் தெருக்களிலும் தேங்கி நின்று ஈரம் காட்டும். இவையெல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த மழை, நின்று போன காரணத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹான் 'மழை' கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.  இங்கு ஒரு பெண்ணின் விழிநீரின் சக்தி, மழையை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கிறது.

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை


    'மழை'யைப் போலவே 'வெயில்' கவிதையானது காடுகள் அழிக்கப்படுவதால் விளையும் சுற்றுச் சூழலின் வெப்ப அதிகரிப்பையும், அதன் காரணமாக நிகழும் பறவைகளின் இடப்பெயர்வுகளையும், இன்னும் தீவுக்களத்தில் இரத்தம் காயாத நிலையையும் ஒரே கவிதையில் தெளிவாகச் சொல்கிறது.


04.

    தொகுப்பிலுள்ள 'நொந்த உடலுக்கான நஞ்சு', 'ஊற்றுக்களை வரவழைப்பவள்' ஆகிய இரு கவிதைகளும் கவிஞரின் சிறுவயதில் அவருக்கும் அவரது அம்மம்மாவுக்குமிடையிலான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. தனது நினைவுகளில் ஆழமாக வேறூன்றியிருக்கும் நிகழ்வுகளை, கிளைகளாக கவிதைகளில் விரித்திருக்கிறார்.

    'நொந்த உடலுக்கான நஞ்சு' கவிதையில், பால்யத்தின் பருவங்களில் எல்லாக் குழந்தைகளையும் போலவே, நோய் கண்டு வாய் கசக்கும் குழந்தையாகக் கவிஞர் தனது நோய் தீர்க்கத் தரப்படும் மருந்தினை வெறுக்கிறார்.

காற்றில் திரிதலாகா
தண்ணீர் அளைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்

    இங்கு மருந்து குடிக்க வைக்கும் அன்னையை 'நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக' விவரித்திருக்கிறார். தாய் தனது ஆரோக்கியத்துக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மையை அறியாது தாயை எதிரியாகப் பார்க்கும் சிறு குழந்தையின் மனோபாவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.

விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே


    காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தையை முற்றவெளி விளையாட அழைக்கிறது. நீரோடும் வாய்க்கால்கள் கப்பல் விடக் கூப்பிடுகின்றன. காற்றில் திரியக் கூடாதென்றும், தண்ணீரளையக் கூடாதென்றும் மருத்துவர் விதித்திருக்கும் கட்டளைகளை அலட்சியப்படுத்தி விளையாட்டில் நோய் மறந்த குழந்தையை மருந்து கொடுக்கவென கதறக் கதற தூக்கிவருகிறார்கள் உறவினர்கள்.

மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
........................
........................
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்


    தொடரும் இவ் வரிகளில் மருந்துண்ண அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கண்முன்னே தெரியும்படி மிக அருமையான விவரிப்பு.

அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்


    அக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் மந்திரங்களறிந்த அம்மம்மாவை இங்கு தன்னைக் காத்த காவல் தேவதையெனச் சொல்லியிருக்கிறார் கவிஞர். செல்லக் குழந்தையின் அழுகையை பொறுமையுடன் ஆற்றும் வித்தையை பாட்டிகள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள். பாட்டிகளின் அன்பும், அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.

    'ஊற்றுக்களை வரவழைப்பவள்' கவிதையிலும் இதே போன்று அம்மம்மாவுடன் தோட்டத்தில் திரிந்த தனது சிறுபராயக் காலங்களை நினைவு கூர்ந்திருக்கிறார் கவிஞர். இங்கும் சிறுமியினதும், முதியவளினதும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காட்சிப்படிமங்களாய் கண்முன்னே விரிகின்றன.

அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்


    அம்மம்மாவின் பார்வைக்குத் தப்பிய கணங்களில் சிறுமியின் குறும்புகளைச் சுட்டித் தொடரும் இக் கவிதையானது கோடை பற்றிச் சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்


    அம்மம்மாவின் குணவியல்புகளை, பழக்கவழக்கங்களை மேலுள்ள வரிகள் சொல்வதோடு, தோட்டத்தில் வாடிய பயிர்களை நோக்கி நீர் செல்லவென, ஆற்றின் கரையிலிருந்து அம்மம்மா கால்வாய் வெட்டிவிட்டதையும், அதனைப் பின்னர் குளிக்கவென வந்துசெல்பவர்கள் சிதைக்க, மீளவும் மீளவும் அம்மம்மா கால்வாய் வெட்டியதையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

    ஆற்றோரத் தோட்டமொன்றில் மிக ஆவலாக செடிகள் வளர்க்கும் சிறுமியொருத்தியின் ஒருநாள் நிகழ்வினை 'அவள் வளர்க்கும் செடிகள்' எனும் கவிதை மிக அருமையாக விவரிக்கிறது. அவள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றிடவென ஆற்றிலிருந்து நீரள்ளி வருகிறாள் சிறுமி.

சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்


    வழமையாக தண்ணீரைத் தேடும் மீன்களுக்கு மத்தியில் மீன்களைத் தேடி நீர் துள்ளும் அதிசயத்தைக் கவிதையில் அழகாகச் சொல்லும் கவிஞர்,

செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்


    என அந் நதி நனைக்க வளர்ந்து வரும் கரையோரப் பெருமரங்களைப் போல, தான் வளர்க்கும் செடிகளும் வளரவேண்டுமெனத் தண்ணீர் ஊற்றியதையும் நினைவுபடுத்திக் கொள்கிறார். வேர்களுக்கென்று தனி மொழி இருக்கின்றதா? எப்பொழுதும் கரையோர வேர்களின் உச்சரிப்புகளை நதி திருடிக் கொண்டு வேர்களை மௌனமாக்கி விடுகிறது.


05.
    காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாழ்வில் விரிசல் விழுவதையும், அவர்களது மனங்களிடையிருந்து விலகிச் செல்லும் காதலைப் பற்றியும், அவ்வாறாக ஆத்மார்த்த அன்பை இழந்து நிராதரவாக்கப்பட்ட ஒரு மனைவியின் நிலையையும் தெளிவாகச் சித்தரிக்கிறது 'பேய்களால் தின்னப்படுபவள்' கவிதை.

......................
......................
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்


    காதலிக்கும் காலங்களில் காதலனின் அன்பின் வெளிப்பாடுகள் பலவாறாக இருக்கும். அவற்றைக் குறித்து மேலுள்ள வரிகள் தெளிவுபடுத்துவதோடு ,

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....

    என திருமணத்திற்குப் பிறகான காதலனின் நேசம் மாறுபடுவதையும், காதலின் அவல நிலையையும் தெளிவாகச் சொல்லி முடிகிறது இக் கவிதை.

நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்


    என ஆரம்பித்திருக்கும் 'கடைசிச் சொல்' கவிதையும் இதே போல காலம் பிரித்துப் போட்ட நேசர்களின் கதையொன்றாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.

மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று

நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களுக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்


    பரஸ்பர அன்புக்குள் துரோகமும் புறக்கணிப்பும் சந்தேகமும் தலைதூக்கும்போது அன்பும் பொறுமையும் வெளியேறிவிடுகிறது. பின்னாட்களில் காலம், நினைவுகளில் பதிந்திருப்பவற்றையும் அழித்துவிடுகிறது.

    கருங்கற் பாறைகளெனத் தொடர்ந்திருக்கும் மலைகளை நாம் ஒரு பார்வையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் கவிஞரோ மலையை ஒரு மூதாட்டியுடன் ஒப்பிட்டு, மலையின் குணவியல்புகளை மிக அருமையாக விவரித்திருக்கிறார். மலை, அது வழிய விடும் நீர்வீழ்ச்சிகள், எப்பொழுதாவது கீழே விழும் சிறு பாறைகள், இடுக்குகளில் வளர்ந்திருக்கும் மூலிகைச் செடிகள், மலையோடு பிணைந்திருக்கும் மர வேர்கள், மலையின் விம்பம் தாங்கும் மலையடிவார நீர் நிலைகளெனப் பலவற்றை நினைவுறுத்துகிறது 'மலைகளின் மூதாட்டி' கவிதை. நிச்சயமாக இனி மலைகளைக் காண நேரும் பொழுதெல்லாம் இக் கவிதை நினைவுக்கு வரும்.

    அதைப் போலவே கட்டுமானங்களைத் தன் வேர்கள் மூலமாகத் தகர்ப்பதாலும், அடர்ந்து வளர்ந்திருக்கும் தன் கிளைகள் விஷப் பிராணிகளின் சுதந்திர நடமாட்டங்களுக்கு இடமளிப்பதாக இருப்பதாலும் வேருக்கு நஞ்சூட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பெரிய நிழல் மரத்தைப் பற்றி 'நஞ்சூட்டப்பட்ட மரம்' கவிதையில் மிகக் காத்திரமாக விவரித்திருக்கிறார்.

    தொகுப்பிலுள்ள 'தீவில் தனித்த மரம்', 'உயிர் வேலி', 'மீட்டெடுக்க முடியாமற் போன விம்பம்' ஆகிய கவிதைகள் அநாதரவாக்கப்பட்ட ஒரு பறவை, கண்ணாடி, மரம் ஆகிய குறியீடு, படிமங்களைக் கொண்டு தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றன.

    பறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன.  அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களை, கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும், சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. 'அபராதி' எனும் தொகுப்பு, நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் !

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி 15-11-2009, 22-11-2009
# ஊடறு
# பெண்ணியம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Tuesday, January 5, 2010

' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்

     ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.


    ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

    ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

    எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...'  கவிதைத் தொகுப்பு.

    தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..' ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

    சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

    இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

    காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

    படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

    பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

    தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

    அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

    தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

    என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில்  புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

    ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்


உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!


எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!


அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

    இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

    எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்


உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

    என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

    அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

    இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம்  புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!


அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.


எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

    யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

    தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது  பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன


நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

    இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

    எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

    இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின்  உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !


இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

    வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை


இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

    'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

    காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும்  ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

    பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.


எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

    இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

    'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

    'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

    என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

    'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

    நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

    'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞனொருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

    போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

    ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!


இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

    'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

    என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

    இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

    எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

    என்பதோடு முற்றுப்பெருகிறது.

    இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு  இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக் கேட்டுக் கொள்கிறேன்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி - 01.11.2009, 08.11.2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# புகலி