Showing posts with label வல்லினம். Show all posts
Showing posts with label வல்லினம். Show all posts

Wednesday, February 8, 2012

கதவைத் தட்டும் கதைகள் - எழுத்தாளர் க.ராஜம் ரஞ்சனி

பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’  கதையிலும் காக்கைகள் மீண்டும் வருகின்றன. கதையின் நாயகனைக் காக்கைகள் காணும் போதெல்லாம் துரத்தித் துரத்தி அவன் தலையைக் கொத்துக்கின்றன. காக்கைகளின் கொடுமைகளுக்கு அவன் உள்ளாகின்றான்.

அவனது சிறுவயதில் காக்கைக் கூடொன்றைப் பிய்த்தெறிந்த குற்றத்துக்காகக் காக்கைகள் பழி வாங்குகிறதென கிழவியொருத்தி கூறுகின்றாள். இவ்வரிகளுக்கு முன்னர் அவன் காக்கைகளால் துரத்தி கொத்தப்பட்டு படும் விந்தையான அவஸ்தைகளுக்குக் காரணம் விளங்காமல் மனதேறியிருந்த பரிதாபங்கள் மெல்ல விலகி புரிய வைக்கின்றன. கிழவினால் கூறப்படும் இவ்விடயம் பின்வரும் இரு விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.

(1) துரத்திக் கொத்தும் பாவங்கள்

நவீன உலகமாயதலுக்கிடையில் மனிதர்களும் இயந்திரமாகி வருகின்றனர். அதனால் பாவங்கள் செய்ய அவர்கள் அஞ்சுவதில்லை; அச்சப்படுவதில்லை. செய்யும் பாவங்கள் யாவும் கதையில் வரும் இக்காக்கைகளுக்கு ஒப்பானவை. பாவங்கள் துரத்தி தாக்கும்போது தங்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள் அவை என மனிதர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். மனித நெஞ்சங்கள் தாங்கள் உருவாக்கிய பாவங்களை மறக்கலாம். ஆனால் பிறந்த பாவங்கள் அம்மனிதர்கள் அறியாமலேயே அவர்கள் அருகிலேயே வளர்கின்றன. காலத்தின் நகர்வுகள் பாவங்களை வழி நடத்தி செல்கின்றன. தருணங்களும் வாய்ப்புகளும் தாங்களே உருவாக்கிய பாவ பிடியில் சிக்க வைக்கின்றன. பாவங்கள் பிடியிலிருந்து விலக இயலாது சிக்கித் தவிக்கும் இக்கட்டான வேளைகளில் பரிதாபங்கள் தோன்றுகின்றன.

(2) பலி வாங்கும் உணர்ச்சி

மன்னிக்கும் மாண்பு மறைந்து பலி வாங்கும் உணர்ச்சி தற்காலத்தில் மேலெழுந்து நிற்பதன் அவலம்தான் சமூக அழிவு. காக்கைகளுக்குப் பலி வாங்கும் எண்ணம் இருப்பது வருத்தற்குரியதென்றாலும் குறை சொல்வதற்கில்லை. ஏனென்றால் பட்சிகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமைகளில் மன்னிப்பும் இடம்பெற வேண்டும்.

கதையின் கடைசி நிமிடங்களில் மரணம் என்றொரு தருணம் இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியாய் அமைகின்றது. காக்கைகளின் அனுதாபம் என மெல்லிய திரை கண்களுக்கு முன் விழுந்தாலும் இனி தங்களின் தாக்குதலுக்கு ஒருவன் இல்லாமல் போன வருத்தத்தின் நிழல் திரையின் பின்னால் விழுகின்றது. திரையைக் கண்டு கொள்ளும் பல கண்களுக்கு மத்தியில் சில கண்களுக்கு மட்டும் நிழல் திரையை விலக்கி சுயத்தைக் காட்சிபடுத்தி கொள்கின்றது.

மனிதர்களே மனிதர்களின் தலையைக் கொத்தும் நிலை அதிகரித்துவிட்டது. கதையில் வரும் காக்கைகளின் தாக்குதலுக்கு ஆளாகும் மனிதனின் மீதான பரிதாபம் விரிந்து அடிமையாக்கப்படும் மனித குலத்தின் மீது பரவுகின்றது. இந்நிலை குடும்பம் தொடங்கி சமூகம், சமுதாயம், உலகம் என பரந்து கொண்டே செல்கின்றது. ஆனாலும் ஒரு பிரிவினால் அடிமையாக்கப்படுபவர்கள் இன்னொரு பிரிவினரை அடிமையாக்க விரும்புகின்றனர். தங்களின் அடிமை வாழ்வினால் துன்பப்பட்டாலும் பிற மனிதர்களைத் தங்களின் அடிமையாக்கி அதே போன்றதொரு துன்பத்தைத் தருவதில் பெரும்பாலும் மனிதர்கள் திருப்தியடைகின்றனர்.

அடிமையாக்கும் அதிகாரத்துவங்கள் வெளிமட்டத்தில் நிகழும் பொழுது அதன் எதிர்ப்புகள் எளிதாக அமைந்துவிடுகின்றன. அதிகாரத்துக்குரிய அம்சங்களாக பணம், பதவி முன் இடங்களைப் பிடித்திருப்பதாக எண்ணும் பலரின் கண்களுக்கு அது அநீதியாகவும் அநியாயமாகவும் தெரிகின்றது. ஆனால் பெண்களை அடிமைப்படுத்த இத்தகைய அம்சங்கள் வேண்டியிருக்கவில்லை. அவ்வகை அம்சங்கள் ஏதுமில்லாதவர்கள் கூட பெண்களை அடிமைப்படுத்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய அதிகாரங்கள் மீதான பார்வைகள் என்றும் நியாயத்தின் கொள்கைகளைச் சீர்தூக்கி பார்க்க தவறுகின்றன. அடிமைப்படுத்த மனதின் காயத்தைச் சொல்லும் கதை ஒன்றையும் இக்கணம் பகிர்ந்துகொள்கின்றேன். ‘தண்டனை’  எனும் கதையை எழுதியவரும் எம்.ரிஷான் ஷெரிப் அவர்கள்தான்.

இக்கதையைப் புரிந்து கொள்ள இருவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அஸ்விதா

நல்லவள்.
அமைதியானவள்.
கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவள்.
பணம் மட்டுமே முக்கியம் என கருதாதவள்.
பெண்ணுக்குரிய கடமைகள் அனைத்தையும் குறைவின்றி செய்பவள்.
அவளது பொழுதுபோக்கு எழுதுவது.
திருமணமான இரண்டாவது நாள் வரை அவள் அழகாக ஓவியங்கள் வரைந்தாள். அதன் பின்னர் வரைவதில்லை.

அஸ்விதாவின் கணவன்

கோபக்காரன். கோபத்தை அஸ்விதாவிடம் கையில் கண்டதைத் தூக்கியெறிந்தோ அவள் எழுதிவைத்த காகிதங்களைக் கிழித்தெறிந்தோ அல்லது அவளைச் சிகரெட்டால் சுட்டோ வெளிப்படுத்துவான்.

அவள் எழுதுவது அவன் வெறுக்கும் முக்கிய விஷயம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தோழியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைதான் வீடு திரும்புவான்.

ஓர் விடியற்காலையில் அவள் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் கோபத்தின் உச்சியில் அவளை அறைந்து பேனா மற்றும் அவள் தன் உயிராய் எழுதி சேமித்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் எரிக்கின்றான். அதன் பின்னரும் அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. அவளும் தன் கடமையைத் தொடர்கின்றாள்; பட்டினியாக இருக்கின்றாள். இரு நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொள்கின்றாள். பிரேதப் பரிசோதனை முடிவுகள் அவனைக் கைதியாக்கி சிறையிலடைக்கின்றன.

கதையின் இறுதி வரி இது. ‘அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.’ அஸ்விதா என்ற பெண் கணவன் என்ற புனித உறவினால் அடிமையாக்கப்பட்டுள்ளாள். தன் பொறுப்புகளைச் செவ்வனே செய்து யாருக்கும் எவ்விதத்திலும் இடையூறற்ற தான் விரும்பிய எழுத்தில் ஈடுப்பட்டது குற்றமென கருதியவன் மனிதனல்ல என்ற எண்ணம் எழுந்து கொண்டிருக்கையில் கதையின் இறுதி வரி அதை மெய்ப்பிக்கும் சான்றாகின்றது. அடிமைகள் குடும்பத்தில் உருவாகும்போது அது சமுதாயத்திலுள்ள அதிகார சுரண்டலைவிட கொடுமையானதாக உள்ளது. அடிமைகள் குடும்பத்தில் அழிக்கப்பட்டால் அடிமையற்ற சமுதாயத்திற்கும் உலகத்திற்கும் அது வித்திடும்.

முதலில் குறிப்பிட்ட கதையில் காக்கைகளுக்கு அவன் முன்னாளில் செய்த அநீதி காரணமாயிருக்கக்கூடும். ஆனால் எவ்வித அநீதிக்கும் காரணமில்லாமல் அஸ்விதா அனுபவித்த கொடுமைகள் அனுதாபத்துக்குரியது. இவ்வாறான கொடுமைகள் திரைப்படங்களில் மட்டுமே அனுதாபத்தை ஏந்தி கொள்கின்றன.

இரு கதைகளையும் கடந்த பின்னர், மனிதர்கள் மெல்ல சிறிதாகி கறுத்த இறகுகள் கொண்ட தேகத்தைப் போர்த்தி காக்கைகளாகவும் காக்கைகள் அலகு மறைந்து மூக்குடன் வளர்ந்து இறகுகளற்ற பெருத்த தேகத்தைக் கொண்ட மனிதர்களாகவும் உருமாறி நினைவுகளில் மீண்டும் மீண்டும் தோன்றி மறைகின்றனர்.

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - 38. பெப்ரவரி, 2012

Sunday, January 1, 2012

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில் ! - கவிஞர் தேனம்மை லக்ஷ்மணன்

    நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்.. சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்...இது காலச்சுவட்டின் வெளியீடு.

      வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும், வாழ்வியல் துயரங்களும், புலம்பெயர் நிலையும், எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும், தணிக்கவியலா தனிமையும், நட்புகான தேடலும் பொங்கிக் கிடக்கிறது. எரிக்கப்பட்டவர்களையும், நசுக்கப்பட்டவர்களையும், அழிக்கப்பட்டவர்களையும், அவர்களின் வலியையும், வலுவற்றவர்களாக ஆக்கப்படுவதுமான ஆதங்கம் விரவிக் கிடக்கிறது

      கொழுத்த வெய்யில் ஆதிக்கக் குறியீடாகவும், வீழும் நிழல் இயலாமையின் குறியீடாகவும், கோடை எல்லையற்ற வன்மமும் அழிவும் கொண்டதாகவும், விருட்சம் தொன்மையின் பிரதிபலிப்பாகவும், காற்று புலம் பெயதர்லாகவும், மழை எல்லா இடத்திலும் பெயரும் இருப்பற்ற இருப்பாகவும், துயரங்களின் சாட்சியாகவும், பறவைகள் நிம்மதியின்மையைக் குறிப்பனவாகவும், பூக்கள் விள்ளவொணா துயரின் வெளிப்பாடாகவும், தீ, நெருப்பு எரிமலை உக்கிரம் உள்ளடக்கிய உணர்வின், இருப்பின் வெளிப்பாடாகவும், நாகம், பாம்பு வன்முறையின் குறியீடாகவும், குருடன், அந்தகன் எதுவும் மாற்றவியலா கழிவிரக்கமாகவும், சுயமும், காதலும், தேடலும், நிம்மதியும், நட்பும், தனிமையும் கொண்டு தாய் தேசத்தில் இன்னும் வாழும் எண்ணற்ற மனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாய் இருக்கிறது.

      மனிதன் இயற்கையின் நடுநிலையை குலைப்பவனாக, நடுநிசி தன் பாடலை நிறுத்துவதில் ஆரம்பிக்கும் ரிஷானின் கவிதைகள், நிலவு தின்னும் நட்சத்திரங்களுடனும், இருள் விழுங்கும் நிலவுடனும், காப்பரணில் கிடத்தப் பெறும் குழந்தை கற்றுக் கொள்ளும் முதல் மொழி குறித்தான கவலையுடனும்   தொடர்கிறது.

      சூறாவளியின் பாடல் ஒப்பாரியாவதும், அநீதிப் பருக்கைகள் தின்னும் காக்கைகளின் எரிச்சலும், கோடையின் வன்மமும், புலம் பெயர்ந்தவர்களாவது நிம்மதியாயிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்புவதும், கடவுளின் கூற்றுவனை சபித்தும், ஏழு ஜென்மமும் வதைக்கும் வலி மிகுந்த துயரமும், உள்ளங்கைகளில் சிதறவிடும் நினைவின் கணங்களின் சுமையும் நம்மை தணிக்கவியலா ஏக்கத்துள் தள்ளுகின்றன..

      காதலின் ரேகைகள் மழைக்கரமாய் அழைப்பதும், காத்திருப்பின் தவிப்பும், மீன்தொட்டித் தாவரம் புலம் பெயர்ந்து கண்ணாடிக் கூண்டுக்குள் சமுத்திரம் தேடும் விழைவும், சுதந்திரமெனும் மாயமான் தேடுதலின் கனவிலும், விருட்சம் அறியாப் பூவின் வலியும், எதையும் சீர்படுத்தவி்யலா ஏக்கமும், வன்முறையெனும் பாம்பின் வாயில் சிக்கியவர்கள் கலகக்காரர்களாக சித்தரிக்கப்படுவதும், சாட்சிகளேதுமற்ற மழையில் தெருக்களில் கேள்வி கேட்பாரற்று அழிக்கப்பட்ட மக்களுக்கான துக்கமும், செவிட்டூமைக்குருடனின் தவிப்பும், கிழச்சிங்கத்தின் கதையும், தேவதைகளும், சாத்தான்களும் ஒருமித்துக் கொடியேற்றுவதுமான கனவும், வார்த்தைகளின் வீச்சம் தாங்கிய கருந் தழும்பும், இயற்கையை சீரழிக்கும் மனப்போக்கை கண்டிக்கவியலாத் தன்மையும், காதலியின் அன்பு நடுகல்லாய் வியாபிப்பதும்,

      புலம் பெயர் நாடோடிப் பறவையின் துயரமும், ஒருமித்துப் போராடாமல் சிதறிய மழைத்துளியாய் போன ஒற்றுமையும், பகிரப்படாத அன்பும், எலும்பு மலைகள் உருவாக்கிய போரின் விளைவும், அநீதியான குருதிச் செங்கோலும், மெல்லிசை அழிவதும், பொம்மை நேசத்தில் அன்பு கூட சலிப்பதும், இரு இன மக்களும் துவேஷமுற்றவர்களாய்ப் பிரிவுற்றதும், வீழ்தலின் நிழலில் சுயமற்றுப் போவதும், ஆணாதிக்கத்தில் பெண் வாழ்வும், சித்தம் பிசகியவனின் கோடையும், சாகசகாரியின் வக்கிரமும், பாவப்பட்ட மனதும், காவல் நாகமே கொன்றழிப்பதுவும், அகதிப் பட்சியின் அவலமும், விசித்திரக் கூடு கட்டும் அதன் முன்னெச்சரிக்கைத்தனமும், தாய் தேசம் புதைகுழிவீடானதும்,

      வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் இறப்பும், பின்னங்கால் வடு ஏந்தும் இழந்த சொந்தங்களின் நினைவும், சாம்பல் நிற மரணமும், வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவனது விரிந்திருந்த விழியின் ஏக்கமும், காதல் நெருப்பு விழுங்கும் பறவையாய், முடிவற்ற துர் சாவுகள் முடிவிலியாகவும், புதியன மோகித்து பழையன கழிதல் விருட்சதுரோகமாகவும், குணவிலங்குகளும், வீண்பழி சுமத்திய காதல் எண்ணங்களும் வண்ணங்களும், ஊடலாய், காதலி நிலாத்திருடியாகவும், நிராகரிப்பின் பெருவலியாகவும், காதல், காமமற்ற நட்பும், பேரன்பின் தேவதையின் வருகையும், வெற்றி்யை சூடத்தரும் நேசத்துக்குரிய எதிரியும், தனித்துப் பசித்திருக்கும் சுயமும், முயன்று தோற்றதும், அநீதிகள் நிறைந்த செஞ்சாயக் கருங்குருதி ஈழமும்....

      இப்படி என்னைப் புரட்டிப் போட்ட புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை... ஒவ்வொரு கவிதையையும் உள்வாங்கி உருப்படுத்திக்கொள்ள வெகு நேரமாயிற்று எனக்கு..படித்துப்பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..

      என்  எண்ணங்களில் தாங்கவொணா பாதிப்பை ஏற்படுத்திய எழுத்து ..பகிர்வு இது.. நன்றி அறியத்தந்த அரிய கவிஞர் ரிஷானுக்கும்., இந்தப் புத்தகத்தைப் பரிசளித்த சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்.

- தேனம்மை லக்ஷ்மணன்,
இந்தியா

நன்றி - வல்லினம் இதழ் 21 - செப்டம்பர் 2010

Saturday, July 2, 2011

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

(01)

................................
உதயசூரியன் கவிழ்ந்து
ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா
எங்கிலும் மழைக் குப்பை...குப்பை..


    உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது 'இலை துளிர்த்து குயில் கூவும்' தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, மழைநாட்காலையிலும் எதிர்பார்க்கும் இவர் இங்கு ஒரு அதிகாலைப் பாணிச் சேவலாகி விடியலில் நிகழும் ஒவ்வொன்றையும் அழகான உவமைகளில் விவரித்திருக்கிறார். ஒரு சேவலுக்கு விடியலில் பெய்யும் மழை குறித்து என்ன கோபம் இருக்கும்? அதனை அதனது கூட்டுக்குள்ளேயே முடங்க வைத்து, வெளியிலிறங்கி உணவு தேட முடியாமல் செய்து விடும் மழை. எனினும் சேவலுக்கு எப்பொழுதுமே குப்பைகள் பிடிக்கும். ஈர்க்குத் தடிகளால் பெருக்கி அள்ளிவீசப்படாத குப்பைகளில்தான் அவை தமக்கு விரும்பிய உணவைத் தேடிப் பெற்றுக் கொள்ளமுடியும். எனினும் இங்கு ஒரு சேவலே சூரியனிடம் குப்பைகளைப் பெருக்கி வீசச் சொல்கிறதெனில், அம் மழைக் குப்பை எவ்வளவு விசாலமானதாகவும் பயனற்றதாகவும் இருக்கவேண்டும்? உண்மையில் விடியல்வேளையில் பெய்யும் பெருத்த மழை எல்லா விலங்குகளையும் முடங்கச் செய்துவிடுகிறது தான்.

...................................
நார் நாராய் மழைத் தூறல்
ஓலை முனையில் எறும்பூர்ந்து
குண்டு விழுந்து வெடித்துச் சிதறி
களி மண் தரையெல்லாம்
தொப்புள் குழிகள்


    எனச் சொல்லும் கவிதையிலும் மழை ஒரு குறியீடாக வருகிறது. இன்னும் மேலே கூறியதைப் போல வெயிலை வேண்டி நிற்கும் இன்னுமொரு கவிதையாக 'தவளை கத்தும் மழை'யைச் சொல்லலாம். இதற்கு நேர்மாறாக கொடும் வெயிலின் உஷ்ணம் தாக்கி மழையை எதிர்பார்க்கும் கவிதையாக 'நெருப்பு மழை' கவிதையைச் சொல்லலாம். இவற்றைப் போலவே தனது நேசம் கொண்டவளை 'மழை முகில் போல் நீ நீராலானவளா?' எனக் கேட்கும் 'மனங்கொத்தி' கவிதையிலும், 'மயில் துளிர்த்து கொக்கும் பூக்கா', 'ஒருவரில் ஒருவர் சாய்ந்து', 'இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை', 'திட்டில் கனி' ஆகிய கவிதைகளிலும் மழை, கவிதையின் கருவோடு ஒட்டி வந்துசெல்வதைக் காணலாம். இவ்வாறாக ஈரத்துடனான கவிஞரின் மனக் கிடக்கையை வெளிப்படுத்தும் மழையானது, இத் தொகுப்பில் ஒரு செல்லப் பிராணியைப் போல பல இடங்களில் வந்துசெல்கிறது.  'வான் பார்த்த முணுமுணுப்பு' கவிதை, யாராலும் எளிதில் மறந்துவிட இயலா மன வடுக்களை விட்டுச் சென்ற சுனாமி குறித்து கடலுக்கான கேள்வியாக எழுகிறது.

    கவிஞர் எஸ்.நளீமின் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை இயற்கை, சுயம், நேசம், யுத்தம் ஆகிய நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். பொதுவாக உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் பாதிக்கக் கூடிய முதல் மூன்று வகையோடு, யுத்த தேசத்துக்குள் பிறந்து வளர்ந்து அதன் துயரங்களை நேரடியாக அனுபவித்ததன் காரணத்தால் எழக் கூடிய மன உணர்ச்சிகளையும் கவிதைகளாக வடித்திருக்கிறார் கவிஞர்.

    தனது நேசத்துக்குரியவள் குறித்த கவிதைகளும் தொகுப்பில் பரவலாக இருக்கின்றன. 'மும்மணிக் கோர்வை ஒன்று' கவிதையில் 'நாணம்', 'விளைச்சல்' ஆகிய துணைத் தலைப்புக்களில் எழுதப்பட்ட இரு வரிக் கவிதைகள் விருப்பத்துக்குரிய ஒருவரின் அசைவுகள் குறித்தே எழுதப்பட்டிருக்கின்றன. தொகுப்பின் தலைப்புக் கவிதையான 'இலை துளிர்த்துக் குயில் கூவும்' கவிதையை தனது நேசத்துக்குரிய செல்ல மகளின் வளர்ச்சியில் செழித்தோங்கும் செவ்வருத்தை மனம் நிறையப் பூத்ததில் மகிழும் ஒரு தந்தையாக நின்று எழுதியிருக்கிறார். அதே போல தாயின் அரவணைப்பை எப்பொழுதும் வேண்டுமொரு குழந்தைப் புத்திரனாக தனது தாயின் மேலுள்ள பாசத்தை 'உயிரில் ஒட்டு வைத்து' கவிதையில் இப்படி அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

..........................................
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச் சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்


    கவிஞரின் பால்யத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மிக அருமையாக ஒரு கவிதைக்குள் கோர்வைப்படுத்தியிருக்கிறது தொகுப்பிலிருக்கும் 'கண்ணீரால் முகம் கழுவி' கவிதை. விடியலுக்கு முன்பே எழுந்து, சமைத்து, குளித்து, கூந்தலைப் பின்னலிட்டு, அழுதபடி தன் குழந்தைகளை முத்தமிட்டுக் கையசைத்து விடைபெற்று, பேரூந்தில் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் செல்லும் தாய், இரவுக்கு முந்திய அந்தியில்தான் மிகுந்த களைப்போடு வீடு வருகிறாள். பத்துவருடங்களாக நீதிமன்றத்துக்கு அலைய வைக்கப்பட்ட அந்த அப்பாவித் தாயின் துயரம் சூழ்ந்த பருவகாலத்தை நினைவுறுத்தி அச்சுறுத்துகிறது கவிஞருடைய துணையின் அதிகாலைக் குளியலும், கூந்தல் பின்னலிடலும். கவிதையினூடே வீண் அலைச்சலுக்குட்படுத்திய சட்டத்தையும் நீதியையும் சபிக்கிறார் கவிஞர். இவ்வாறான எத்தனை சாபங்களை நீதிமன்றங்கள் கண்டிருக்கும்? சட்டங்களும் நீதிகளும் சாபங்களை அத்திவாரமாக்கித்தான் எழுப்பப்பட்டிருக்கின்றன. நேர்மைக்கான இடைவெளியில் தப்பிவரும் நீதங்கள் சொற்பம்தான்.

    தனது துணையை யாரெனக் கண்டுகொள்ள முன்பு அவளைக் குறித்தான தேடலை வெளிப்படுத்துகிறது 'தேடல்' கவிதை. தனிமையில் பசி மறந்து மனம் கொத்தப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஏகாந்தவேளையொன்றில் காதலியின் நினைவுகள் தின்ன, அவளுக்கான பல கேள்விகளோடு வரையப்பட்டிருக்கிறது 'மனங்கொத்தி' கவிதை. 'உன் மகுடி நாதம்', 'ஒருவரில் ஒருவர் சாய்ந்து', 'கையடக்கத் தாஜ்மஹால்', 'உன்னைச் சூடும் பூக்கள்', 'சிரிப்பிசையும் பேச்சுப்பாடலும்' ஆகிய கவிதைகள் காதலியின் மீது தான் வைத்திருக்கும் பரிபூரண அன்பையும், நெருக்கத்தையும் குறிக்கும் வகையில் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன.

(02)

    'சுமையா' எனும் கவிதை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் இறுதிக் கணங்களை எடுத்துரைக்கிறது.

.............................
வெள்ளாப்பில்
உன் இறப்பிற்கு சாட்சியாய்
இரத்தமும் இறகும் கிடந்தது


    எனும் வரிகளினூடே அப் பெண்ணின் சடலமும், (இறகு ஆடையைக் குறிக்கிறதென்றால்) அவளது துணியும் கிடந்ததெனக் கவிஞர் விவரிக்கிறார். இக் கவிதையும், இதன் இறுதி வரிகளும் கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் 'ஸெய்த்தூன்' கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. காணாமல் போன பெண்ணொருத்தி குறித்த அக் கவிதையிலும்

...............................
ஊர் எல்லையைச் சற்றுத் தாண்ட
சேலை இருந்தது...
மேல் சட்டை இருந்தது....
இரத்தம் இருந்தது...
ஸெய்த்தூன் இருக்கவில்லை!


என இப்படித்தான் அவளது துணித் துண்டொன்று இரத்தம் தோய்ந்து காற்றிலசைகிறது. 

    இவ்வாறான உண்மைச் சம்பவங்களைக் கவிதைகளாக்கும் போது கவிஞர்களிடையே ஒரே மாதிரியான கருப்பொருளும், ஒரே மாதிரியான இறுதிவரிகளும் சாத்தியமானதுதான். தனது சமூகத்தின் தடங்களில் இரத்தக் கறை படிய வைத்த சம்பவங்களும், தனது உறவுகளை அகாலத்தில் மண்ணிட்டு மூடச் செய்த அசம்பாவிதங்களும், ஆயுதங்கள் சாட்சியாக நடந்தேறிய அநீதங்களும் இக் கவிஞர்களைச் சூழவும் ஒரே மாதிரியாக நிகழ்ந்தவையாக இருக்கையில், ஒரே மாதிரியான கருப்பொருளைக் கொண்ட வரிகளையும் எழுதத் தோன்றுவதில் ஆச்சரியமேதுமில்லை.

    தொகுப்பிலிருக்கும் 'ஆயிரத்திலோர் இரவில்' கவிதையும் இவ்வாறானவோர் இழப்பின் வேதனையை உரைப்பதுதான். யுத்தம் எழுப்பிய மயான பூமி மண்மேடுகளையும், மரணத்தின் வாசனையையும் மீளவும் நினைவுறுத்துகிறது 'கபன் துணிக் குவியல்' கவிதை. இக் கவிதையைப் போலவே பள்ளிவாயிலுக்குள் நிகழ்ந்த கொடூரத் தாக்குதலை விரிவாக விவரித்திருக்கிறது 'சந்தூக்குப் பயணிகள்' கவிதையும். இவ்வாறாக ஆயுதங்கள் மூலம் அடிக்கடி நிகழ்ந்த கொடூரங்களின் விளைவுகள்தான் 'நடுநிசி வாழ்க்கை' கவிதையில் துப்பாக்கிதாரிகள் குறித்து அஞ்சும்படி செய்திருக்கின்றன. ஆயுதங்களைச் சுமந்தலைபவர்களுக்கு அந்த ஆயுதங்களெப்போதும் துணையாக வராதென்ற நிதர்சனத்தைச் சொல்கிறது 'அலகு தீட்டி சுள்ளி முறித்து' கவிதை.

    தனது மண்ணென்ற உரிமையில் மரணம் குறித்த அச்சம் சிறிதுமற்று தன்னம்பிக்கையோடும் மிகுந்த தைரியத்தோடும் ஆயுதத்தை ஏந்திக் கொண்டிருப்பவர்களிடம் எதிர்த்து நிற்கும் கேள்விகளை முன்வைக்கிறது 'மரணம் மரணமில்லை' கவிதை. இவ்வாறாக தனது உரிமையை தயக்கம் சிறிதேனுமின்றி எடுத்துரைத்தவனின் இறுதி மூச்சை அடக்கிப் போன, துப்பாக்கிதாரிகள் வந்துபோன இரவின் நிகழ்வொன்றை 'பிறழ்வு' கவிதையில் காணலாம். கலவரக் காலத்தில் குருதிக் கறையோடு அச்சம் படிந்திருந்த நாட்களை நினைவுருத்தி, நிம்மதியான வாழ்வொன்றை ஆவலுறுகிறது 'நிலா ஒளிந்த இரவில்' கவிதை.

    போருக்கென்றொரு கோர முகமும், வாரியெடுத்து அச்சுறுத்தித் துரத்திவிடும் அகன்ற கைகளும் இருக்கின்றன. அவை அப்பாவி மக்களின் உயிர் பறித்தும், எஞ்சியவர்களைத் தமது மண்ணை விட்டு இடம்பெயரவும் செய்துவிடுகின்றன. அவ்வளவு காலமும் தம்மைச் சுமந்த மண்ணை, உயிரோடு தோலுரிக்கப்படும் வேதனையோடு விட்டுச் செல்லும் ஒரு அகதி மூதாட்டியின் அந்திம கால வேண்டுதலாக, தனது மண் தந்திருக்கும் ஞாபகங்களையும், மண்ணின் மீதான பற்றுதலையும், அதனை விட்டுத் தூரமாக நேர்ந்த துயரத்தையும் மிகுந்த வலியோடு சொல்கிறது 'பாட்டியின் ஈறல்' கவிதை. யுத்த தேசத்தில் கணத்துக்கொவ்வொன்றாக கணக்கின்றி நிகழும் படுகொலைகள் குறித்து இன்னுமொரு கவிதையின் இரு வரிகள் இப்படிச் சொல்கின்றன.

...................................
புறாச் சிறகுகளின் சடசடப்பின்போதே
உதிரும் இறகாய் நிகழும் கொலைகள்


    புறாவின் சிறகுகள் எவ்வளவு வேகமாக அடித்துக் கொள்ள வல்லன. அதைப் போலவே சிறு ஓய்வுமற்று எல்லாச் சிறகுகளையும் உதிர்த்தபடி வேகமாகவே நிகழ்கின்றன படுகொலைகளும். சமாதானத்தின் போர்வையைப் போர்த்தியபடி மனிதப் பலியெடுக்கும் அதிர்வுகளை 'சமாதானப் பலி' கவிதை எடுத்தியம்புகிறது. வெளிப்பூச்சுக்கு சமாதானத்தை மாத்திரமே சொல்லித் தப்பித்துக் கொள்ளும் ஊடகங்களை 'சந்தூக்குப் பயணிகள்' கவிதையிலும், ஆயுதங்களேந்தி செய்ய முடியுமான எல்லா அக்கிரமங்களையும் ஆற்றிவிட்டு அப்பாவியாக வேடம் தரிப்பவர்களை 'பசுத்தோல் போர்த்தி' கவிதையிலும் சாடியிருக்கிறார் கவிஞர்.

    இவ்வாறாக ஒரு காலத்தின் வடுக்களை வலியோடு எழுதியிருக்கும் கவிஞர், 'இன்னுமோர் தேசிய கீதம்' கவிதை மூலமாக நம்பிக்கையின் விதைகளையும் தூவியிருக்கிறார். எப்பொழுது வெளியேற்றப்படுவோமெனத் தெரியாது காக்கைக் கூட்டில் குயில் குஞ்சாய் வளரும் ஒரு சமூகம், மலர் போல தம் விடுதலையை வடிவமைக்கும் பாடலை இசைத்திடும் இக் கவிதை, விழுந்தாலும் வேரூன்றி விருட்சமாய் உயிர்த்தெழுந்திடும் உறுதியையும் நம்பிக்கையையும் ஆவலையும் விவரிக்கின்றது.

    ஒரு நகரில் தனித்து விடப்பட்ட தன் ஜீவிதத்தின் உயிர் பிழியும் பொழுதுகளையும் கவிதைகளாக எழுதிவிடத் தவறவில்லை எஸ். நளீம். பெருநகரங்கள் சுயநலம் மிக்கவை. ஒரு உயிருக்கு இடரென்றால் அவை ஏனென்றும் திரும்பிப் பார்க்காத அகங்கார விழிகளைக் கொண்டவை. வெளிப் பார்வைக்கு எல்லா அழகுகளையும் பூசிக் கொண்டிருக்கும் அதன் இடுக்குகளில் கசியும் அந்தரங்கங்களின் அசிங்கம். ஒப்பனைகளில் மறைத்து மின்னிடும் அதன் அழகு முகத்தில் வசித்திட நேரும்போதுதான் தெரியும் அங்கு மிதந்திடும் நாற்றமும் அந்தகாரமும். 'அசிங்கம் சூழ் வாழ்வு', 'இரவு சில குறிப்புகள்', 'சூரியன் இறங்கித் தலையில் குந்தி', 'ஒன்றின் இன்னொன்று அல்லது நிழல் உலகு' ஆகிய கவிதைகள் நிம்மதி தராத அவரது நகரச் சூழலை, அவரது தனிமை தந்த மன உணர்வுகளைச் சொல்கின்றன.

    தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கவிதைகளிரண்டு. அருமையான வர்ணனைகளைக் கொண்டு முழுமையாக எழுதப்பட்டிருக்கும் 'தலைக்குள் அணில்' கவிதை முற்றத்திலிருக்கும் ஒரு தென்னையைக் குறித்து எழுதப்பட்டது. அடுத்ததாக இதே போன்ற அழகான வர்ணனைகளோடு, பொதுவாக யாருமே கண்டு கொள்ளாத ஒரு சாஸ்திரக்காரியை விவரித்து எழுதிய 'செவ்வந்தி பூசிச் சிரித்து' கவிதை. இரண்டுமே மிகுந்த அழகுணர்ச்சியோடும், வார்த்தைத் தெளிவோடும் எழுதப்பட்டு கவிஞர் சொல்லவிழைவது முழுதாகத் தெளிவாகிறது.

    தனது ஒவ்வொரு கவிதைக்குமென கவிஞர் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புக்களே கவிதையைக் கட்டாயம் வாசித்தேயாக வேண்டுமென்ற ஈர்ப்பை மனதினுள் விதைத்துவிடுகின்றன. அத்தோடு அருமையான அத் தலைப்புக்கள் கவிஞரின் கவி படைக்கும் வல்லமையையும் கோடிட்டுக் காட்டிவிடுகின்றன. காத்திரமான இக் கவிதைகளோடு பயணித்து முடிக்கும்வேளை சிறப்பான கவிதைத் தொகுப்பொன்றை வாசித்து முடித்த திருப்தி கிடைத்து விடுகிறது.

    தெளிவான கருப்பொருள்களோடு எழுதப்பட்டிருக்கும் இக் கவிதைகளில் சில புரியாச் சொற்கள் புகுந்திருப்பது மட்டும்தான் வாசிக்கும்போது இடறச் செய்துவிடுகின்றது. கவிஞர் பிறந்து வளர்ந்த பிரதேச வழக்குச் சொற்களான அவை, அப்பிரதேசத்துக்கு அயலில்லாத என்னைப் போன்றவர்களுக்கும், பிற தேசத்தவர்களுக்கும் எளிதில் புரிந்துவிடக் கூடியவையல்ல. இச் சொற்களுக்கான தூய தமிழ்ப் பொருளை கவிஞர் பிற்குறிப்பிலேனும் தர மறந்திருக்கிறார். அடுத்த தொகுப்புக்களிலேனும் இச் சிறு குறையை கவிஞர் நிவர்த்தி செய்து வெளியிடுவாரேயானால், பல நிலங்களிலும் இப் படைப்புக்கள் சென்று பாராட்டினைச் சூடிவருமென்பதில் ஐயமில்லை. இனி வரும் காலங்களிலும், படைப்புக்களிலும் இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்.

- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# தினகரன் வாரமஞ்சரி 2010.10.31
# வல்லினம் - கலை இலக்கிய இதழ் 24, டிசம்பர் 2010
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் எழுத்தாளர்கள்