Wednesday, February 8, 2012

கதவைத் தட்டும் கதைகள் - எழுத்தாளர் க.ராஜம் ரஞ்சனி

பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’  கதையிலும் காக்கைகள் மீண்டும் வருகின்றன. கதையின் நாயகனைக் காக்கைகள் காணும் போதெல்லாம் துரத்தித் துரத்தி அவன் தலையைக் கொத்துக்கின்றன. காக்கைகளின் கொடுமைகளுக்கு அவன் உள்ளாகின்றான்.

அவனது சிறுவயதில் காக்கைக் கூடொன்றைப் பிய்த்தெறிந்த குற்றத்துக்காகக் காக்கைகள் பழி வாங்குகிறதென கிழவியொருத்தி கூறுகின்றாள். இவ்வரிகளுக்கு முன்னர் அவன் காக்கைகளால் துரத்தி கொத்தப்பட்டு படும் விந்தையான அவஸ்தைகளுக்குக் காரணம் விளங்காமல் மனதேறியிருந்த பரிதாபங்கள் மெல்ல விலகி புரிய வைக்கின்றன. கிழவினால் கூறப்படும் இவ்விடயம் பின்வரும் இரு விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றது.

(1) துரத்திக் கொத்தும் பாவங்கள்

நவீன உலகமாயதலுக்கிடையில் மனிதர்களும் இயந்திரமாகி வருகின்றனர். அதனால் பாவங்கள் செய்ய அவர்கள் அஞ்சுவதில்லை; அச்சப்படுவதில்லை. செய்யும் பாவங்கள் யாவும் கதையில் வரும் இக்காக்கைகளுக்கு ஒப்பானவை. பாவங்கள் துரத்தி தாக்கும்போது தங்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள் அவை என மனிதர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். மனித நெஞ்சங்கள் தாங்கள் உருவாக்கிய பாவங்களை மறக்கலாம். ஆனால் பிறந்த பாவங்கள் அம்மனிதர்கள் அறியாமலேயே அவர்கள் அருகிலேயே வளர்கின்றன. காலத்தின் நகர்வுகள் பாவங்களை வழி நடத்தி செல்கின்றன. தருணங்களும் வாய்ப்புகளும் தாங்களே உருவாக்கிய பாவ பிடியில் சிக்க வைக்கின்றன. பாவங்கள் பிடியிலிருந்து விலக இயலாது சிக்கித் தவிக்கும் இக்கட்டான வேளைகளில் பரிதாபங்கள் தோன்றுகின்றன.

(2) பலி வாங்கும் உணர்ச்சி

மன்னிக்கும் மாண்பு மறைந்து பலி வாங்கும் உணர்ச்சி தற்காலத்தில் மேலெழுந்து நிற்பதன் அவலம்தான் சமூக அழிவு. காக்கைகளுக்குப் பலி வாங்கும் எண்ணம் இருப்பது வருத்தற்குரியதென்றாலும் குறை சொல்வதற்கில்லை. ஏனென்றால் பட்சிகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமைகளில் மன்னிப்பும் இடம்பெற வேண்டும்.

கதையின் கடைசி நிமிடங்களில் மரணம் என்றொரு தருணம் இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியாய் அமைகின்றது. காக்கைகளின் அனுதாபம் என மெல்லிய திரை கண்களுக்கு முன் விழுந்தாலும் இனி தங்களின் தாக்குதலுக்கு ஒருவன் இல்லாமல் போன வருத்தத்தின் நிழல் திரையின் பின்னால் விழுகின்றது. திரையைக் கண்டு கொள்ளும் பல கண்களுக்கு மத்தியில் சில கண்களுக்கு மட்டும் நிழல் திரையை விலக்கி சுயத்தைக் காட்சிபடுத்தி கொள்கின்றது.

மனிதர்களே மனிதர்களின் தலையைக் கொத்தும் நிலை அதிகரித்துவிட்டது. கதையில் வரும் காக்கைகளின் தாக்குதலுக்கு ஆளாகும் மனிதனின் மீதான பரிதாபம் விரிந்து அடிமையாக்கப்படும் மனித குலத்தின் மீது பரவுகின்றது. இந்நிலை குடும்பம் தொடங்கி சமூகம், சமுதாயம், உலகம் என பரந்து கொண்டே செல்கின்றது. ஆனாலும் ஒரு பிரிவினால் அடிமையாக்கப்படுபவர்கள் இன்னொரு பிரிவினரை அடிமையாக்க விரும்புகின்றனர். தங்களின் அடிமை வாழ்வினால் துன்பப்பட்டாலும் பிற மனிதர்களைத் தங்களின் அடிமையாக்கி அதே போன்றதொரு துன்பத்தைத் தருவதில் பெரும்பாலும் மனிதர்கள் திருப்தியடைகின்றனர்.

அடிமையாக்கும் அதிகாரத்துவங்கள் வெளிமட்டத்தில் நிகழும் பொழுது அதன் எதிர்ப்புகள் எளிதாக அமைந்துவிடுகின்றன. அதிகாரத்துக்குரிய அம்சங்களாக பணம், பதவி முன் இடங்களைப் பிடித்திருப்பதாக எண்ணும் பலரின் கண்களுக்கு அது அநீதியாகவும் அநியாயமாகவும் தெரிகின்றது. ஆனால் பெண்களை அடிமைப்படுத்த இத்தகைய அம்சங்கள் வேண்டியிருக்கவில்லை. அவ்வகை அம்சங்கள் ஏதுமில்லாதவர்கள் கூட பெண்களை அடிமைப்படுத்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய அதிகாரங்கள் மீதான பார்வைகள் என்றும் நியாயத்தின் கொள்கைகளைச் சீர்தூக்கி பார்க்க தவறுகின்றன. அடிமைப்படுத்த மனதின் காயத்தைச் சொல்லும் கதை ஒன்றையும் இக்கணம் பகிர்ந்துகொள்கின்றேன். ‘தண்டனை’  எனும் கதையை எழுதியவரும் எம்.ரிஷான் ஷெரிப் அவர்கள்தான்.

இக்கதையைப் புரிந்து கொள்ள இருவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அஸ்விதா

நல்லவள்.
அமைதியானவள்.
கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவள்.
பணம் மட்டுமே முக்கியம் என கருதாதவள்.
பெண்ணுக்குரிய கடமைகள் அனைத்தையும் குறைவின்றி செய்பவள்.
அவளது பொழுதுபோக்கு எழுதுவது.
திருமணமான இரண்டாவது நாள் வரை அவள் அழகாக ஓவியங்கள் வரைந்தாள். அதன் பின்னர் வரைவதில்லை.

அஸ்விதாவின் கணவன்

கோபக்காரன். கோபத்தை அஸ்விதாவிடம் கையில் கண்டதைத் தூக்கியெறிந்தோ அவள் எழுதிவைத்த காகிதங்களைக் கிழித்தெறிந்தோ அல்லது அவளைச் சிகரெட்டால் சுட்டோ வெளிப்படுத்துவான்.

அவள் எழுதுவது அவன் வெறுக்கும் முக்கிய விஷயம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தோழியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைதான் வீடு திரும்புவான்.

ஓர் விடியற்காலையில் அவள் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் கோபத்தின் உச்சியில் அவளை அறைந்து பேனா மற்றும் அவள் தன் உயிராய் எழுதி சேமித்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் எரிக்கின்றான். அதன் பின்னரும் அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. அவளும் தன் கடமையைத் தொடர்கின்றாள்; பட்டினியாக இருக்கின்றாள். இரு நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொள்கின்றாள். பிரேதப் பரிசோதனை முடிவுகள் அவனைக் கைதியாக்கி சிறையிலடைக்கின்றன.

கதையின் இறுதி வரி இது. ‘அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.’ அஸ்விதா என்ற பெண் கணவன் என்ற புனித உறவினால் அடிமையாக்கப்பட்டுள்ளாள். தன் பொறுப்புகளைச் செவ்வனே செய்து யாருக்கும் எவ்விதத்திலும் இடையூறற்ற தான் விரும்பிய எழுத்தில் ஈடுப்பட்டது குற்றமென கருதியவன் மனிதனல்ல என்ற எண்ணம் எழுந்து கொண்டிருக்கையில் கதையின் இறுதி வரி அதை மெய்ப்பிக்கும் சான்றாகின்றது. அடிமைகள் குடும்பத்தில் உருவாகும்போது அது சமுதாயத்திலுள்ள அதிகார சுரண்டலைவிட கொடுமையானதாக உள்ளது. அடிமைகள் குடும்பத்தில் அழிக்கப்பட்டால் அடிமையற்ற சமுதாயத்திற்கும் உலகத்திற்கும் அது வித்திடும்.

முதலில் குறிப்பிட்ட கதையில் காக்கைகளுக்கு அவன் முன்னாளில் செய்த அநீதி காரணமாயிருக்கக்கூடும். ஆனால் எவ்வித அநீதிக்கும் காரணமில்லாமல் அஸ்விதா அனுபவித்த கொடுமைகள் அனுதாபத்துக்குரியது. இவ்வாறான கொடுமைகள் திரைப்படங்களில் மட்டுமே அனுதாபத்தை ஏந்தி கொள்கின்றன.

இரு கதைகளையும் கடந்த பின்னர், மனிதர்கள் மெல்ல சிறிதாகி கறுத்த இறகுகள் கொண்ட தேகத்தைப் போர்த்தி காக்கைகளாகவும் காக்கைகள் அலகு மறைந்து மூக்குடன் வளர்ந்து இறகுகளற்ற பெருத்த தேகத்தைக் கொண்ட மனிதர்களாகவும் உருமாறி நினைவுகளில் மீண்டும் மீண்டும் தோன்றி மறைகின்றனர்.

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - 38. பெப்ரவரி, 2012

0 comments: