Wednesday, December 2, 2009

தத்ரூப வியாபாரிகள்

        ஒரு பெரிய கடைக்குள் யாருமறியாமல் திருடவென நுழைகிறீர்கள். உள்ளே இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அவை இயங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கிறீர்கள். பூட்டப்பட்டிருக்கும் சாதாரண வீடொன்றுக்குள் பூட்டை உடைத்துச் சாமான்களை அள்ளிப் போவதைப்போல வெகு இயல்பாக அக் கடையிலும் பொருட்களை அள்ளியெடுப்பீர்களா? மாட்டீர்கள். காரணம் உங்களை உற்றுக் கவனிக்க ஆளிருக்கும்போது நீங்கள் எப்பொழுதும் இயல்பாக இருக்கமாட்டீர்கள். ஏதோ ஒன்று உங்களை உற்று நோக்கும்போது உங்கள் இயல்பு தொலைந்துவிடுகிறது. அவ்வாறு இயல்பு தொலைந்து, போலியாக யதார்த்த வண்ணம் பூசப்பட்ட ஆனால் இயல்பானதெனச் சொல்லிக் கொள்பவைதான் இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனேகமான 'ரியாலிட்டி ஷோ'க்கள்.

        அண்மையில் இவ்வாறான ரியாலிட்டி ஷோ மூலம் தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டார் இந்திய நடிகை ராக்கி சாவந்த். பதினாறு இளைஞர்கள், ராக்கியை மணக்கவென முன்வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பல போட்டிகள், பரீட்சைகள் வைத்து, ராக்கி இறுதியில் அதிலொருவரைத் தேர்ந்தெடுத்தார். ராக்கி சொல்லும் அனைத்தையும் செய்யக் காத்திருந்த இளைஞர்களைச் சூழவும் எப்பொழுதும் கேமராக்கள் மின்னிக் கொண்டிருக்கையில் இதனை ரியாலிட்டி ஷோ எனச் சொல்வது சரியில்லை. ஆனால் அப்படித்தான் சொல்கிறது என்டிடிவி. அதுதான் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து, தொடர்ந்தும் ஒளிபரப்பி, நிறைய பணத்தையும் கண்டு, ராக்கிக்கு ஒரு துணையையும் தேடிக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்ட தொலைக்காட்சி சேவை.

        எப்பொழுதும் கேமராவுக்காக, அலங்காரம் மின்னும் முகங்களுக்குள் இயல்பான மனித வெளிப்பாடுகள் ஒளிந்துகொள்கின்றன. அதிலும் இது போன்றதொரு நிகழ்ச்சிக்காக, சுற்றிவர கேமராக்கள் சுழல, எப்படியும் சில நாட்களில் பல்லாயிரம் மக்கள் நம்மைப் பார்ப்பார்கள் என்ற உணர்வோடு ராக்கியைக் கவர்ந்திடத் தயாராகிய இளைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் குறைகளை, பாசாங்குகளை மறைத்து, கேமராவுக்குத் தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும்படி, மிகவும் நல்லவர்களாக, திறமைசாலிகளாக வளையவந்தனர். இதில் எங்கிருக்கிறது யதார்த்தம்? இது முழுக்க முழுக்க நாடகம். கதை, வசனம் இல்லாமல் ஒவ்வொருவரும் நடிக்கவைக்கப்படுகிறார்கள். அவ்வளவே. அவர்களில் பலரும் தங்களைச் சூழ எந்தக் கேமராவும் இல்லாத அன்றாட  சாதாரண வாழ்க்கையின் போது இயல்பானதொரு வேற்றுமுகத்தைக் காட்டக் கூடும். எனவே பொதுவாகவே இவ்வாறான நிகழ்ச்சியின் மூலம் நல்ல துணையைக் கண்டடைவது என்பது சாத்தியமற்ற ஒன்று.

      
        'நாங்கள் இவ்வாறான ரியாலிட்டி ஷோக்களில் யதார்த்தத்தைக் காண்கிறோம்' என அந் நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் பலரும் சொல்லக் கூடும். இந் நிகழ்ச்சிகள் எல்லாமே கேமரா கவர்ந்துகொண்ட எல்லாக் காட்சிகளையுமே உலகுக்குக் காட்டிவிடுவதில்லை. இத்தனை வாரங்களுக்கென அவை செதுக்கப்படுகின்றன. அப்படிச் செதுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் அங்கங்களில் கூட சம்பந்தப்பட்டவர்களின் அழுகைகளுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தொடுவதன் மூலமே இந்த 'ஷோ'க்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதனை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டுமென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி காட்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இதில் ரியாலிட்டி, யதார்த்தம், தத்ரூபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

        பொதுவாகவே எல்லா மனிதர்களும், இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள். அதிலும் தாம் பார்த்து, ரசிக்கும் மனிதர்களின் அந்தரங்கங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் அவர்களைப் பெரிதும் கவரக்கூடியவை. பலரிடமும் அது பற்றி திரும்பத் திரும்ப பேச வைக்கக் கூடியவை. அந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் இந் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இயக்குனரால் இயக்கப்பட்டு, நடிக நடிகைகள் கிளிசரின் உதவியால் அழுது வழியும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு மத்தியில், தாங்களறிந்த பிரபலங்கள் பொது மேடைகளில் 'தத்ரூபமாக'க் கண்ணீர் சிந்துவதைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களாலேயே இந் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் அழுகைக்காட்சிகள் எப்படி அவற்றின் வெற்றிக்கு வழி காட்டியதோ, அது போலவே நடிகர் சிம்புவின் அழுகை 'ஜோடி நம்பர் 1' பக்கமும், தேர்வு பெறாத குழந்தைகளின் அழுகை 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' பக்கமும், நடிகை சாண்ட்ராவின் அழுகை 'அணுவளவும் பயமில்லை' பக்கமும்,  'மானாட மயிலாட', 'ஓடி விளையாடு பாப்பா', இன்னும் பல 'யதார்த்த' நிகழ்ச்சிகளின் அழுகைகள் அந் நிகழ்ச்சிகளின் பக்கமும் பொது மக்களை ஈர்த்து அவற்றின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

        எனவே உருக்கமான காட்சிகளால் உருவாக்கப்படும் இந் நிகழ்ச்சிகள் பலவும் ரியாலிட்டி என்ற பெயரில் இடம்பெறும் போலி நாடகங்கள். இவற்றுக்காக பார்வையாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்து விலைபோகிறார்கள். ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நடிகை ராக்கி சாவந்தினதும், பொது மக்களில் ஒரு இளைஞரினதும் முழு வாழ்க்கையையுமே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்மானித்ததைப் போல பொதுமக்களையும், அவர்கள் அறிந்த பிரபலங்களையும் பலிகடாக்களாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளமைத்து, பணம் ஈட்டி, இலாபம் பார்க்கும் இந்தத் தொலைக்காட்சிச்  சேவைகளனைத்துமே தத்ரூப வியாபாரிகளன்றி வேறென்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# புகலி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணைWednesday, November 4, 2009

பாட்டு (மட்டும் தமிழில்) பாட வாA : 'This episode third round for thirty thousand. Readyயா இருக்கீங்களா?'

B : 'Yeah..lets go '

A : 'Almost உங்களுக்கு preparation time வேற..so I think u must have done some homework'

B : 'Brushed up some of songs. பார்ப்போம்.'

A : 'பார்க்கலாம். So can we have the third round? '

    3 ஆவது சுற்றுப் பாடல் தேர்வுகள் அவருக்குக் காட்டப்படுகிறது.

B : ' I've choice த்ரிஷாவா இல்ல P.B.? '

A : ' Why P.B.ஸ்ரீநிவாஸ்? Its a male play back singer இல்லையா I mean?'

B : 'Yeah..but ..mm..I just felt I know some of his best solos..I know because நிறைய கேட்ட பாடல்கள். His best I mean just scream of solos that is sung like காலங்களில் அவள் வசந்தம் or songs like that..'

A : ' நிலவே என்னிடம் நெருங்காதே'

B : 'Yeah..I know such songs. Just ஆனா ரெண்டு மூணுதான் தெரியும். Very apprehensive. But till இருக்கும்னு ஒரு நம்பிக்கை..I'll go for P.B ஸ்ரீநிவாஸ் hits'

    பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய இரு பாடல்களின் ஆரம்ப வரிகள் திரையில் காட்டப்படுகின்றன. போட்டியாளர் அதிலொன்றைத் தெரிவுசெய்து, திரையில் கொடுக்கப்படும் அப் பாடலின் வரிகளைப் பார்த்துப் பாடவேண்டும். பாடலின் இடையில் ஆறு அல்லது ஏழு சொற்கள் இடைவெளியாக இருக்கும். அச் சொற்களை மறவாது சரியான இடத்திலிட்டு போட்டியாளர் பாடவேண்டும். ஒவ்வொரு பாடலுக்குமான பரிசுத்தொகை இந்திய ரூபாய்கள் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பித்து எட்டுப் பாடல்களின் முடிவோடு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சத்தை எட்டும்.

A : 'இந்த இரண்டு பாடல்கள்ல ரெண்டுமே the beautiful songs..the evergreen classics '

B : ' Yeah..so just..Yeah..its looks nice..ok..I think ..'

A : 'looks nice ?'

B : 'looks nice. its sounds good. aah நிலவே என்னிடம் நெருங்காதே would be a nice choice. ஏன்னா மௌனமே வார்த்தையாய் எனக்கு பாதிதான் தெரியும். I don't know அங்கிங்க scattered ஆ I know.But Im not sure. So I guess நிலவே என்னிடம் நெருங்காதே எனக்கு ஓரளவுக்கு நான் கேட்டிருக்கேன்.'

    கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காணக் கிடைத்த கண்கொள்ளாக் காட்சியிது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியா எனக் கேட்டுவிடாதீர்கள். சத்தியமாக இது தமிழ் பேசும் மக்களுக்கான விஜய் தொலைக்காட்சியின், பிரபலங்களைத் தமிழில் பேசவும், பாடவும் செய்வதற்காக நடத்தப்படும் 'பாட்டுப்பாட வா' நிகழ்ச்சியின் கடந்த வார அங்கம். மேற்சொன்ன அட்சர சுத்த ஆங்கில வார்த்தைகளை மொழிந்தவர்கள் இரு பிரபல பிண்ணனிப் பாடகிகள். சரி. இருவரும் வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டபவர்கள், தமிழில் பேசச் சிரமப்படுகிறார்களோ என நீங்கள் நினைத்தால், அது தவறு. இருவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மண்ணின் புதல்விகள் பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி மதுமிதா.


    இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு  தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம். இதில் தமிழ் எங்கே வாழ்கிறது? இதுவே தொடர்ந்தால் தமிழ் எங்கே வாழப் போகிறது? இத்தனைக்கும் பரிசுத் தொகை ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்கள்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழ்ப்பாடகி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழை வாழ வைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கூட ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடத்துகிறார். எத்தனையோ வேற்றுமொழி நடிகர்கள், பாடகர்கள் தமிழ் திரையுலகுக்கு வந்து, நல்ல தமிழில், உச்சரிப்பிலும் கூட அட்சர சுத்தமாக பேசி, பாடி வரும்போது, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இப்படி தமிழைக் கொல்வது ஏற்கப்படக் கூடியதா? இதே நிகழ்ச்சியில் முன்பு போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பாடகர்கள் சத்யன், பிரசன்னா, முகேஷ், நடிகை அபிராமி ஆகியோர் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், தொகுப்பாளரை விடவும் அழகிய தமிழில்தான் உரையாடினார்கள். நடிகை அபிராமி, நடிகர் கமல்ஹாசனின் கதாநாயகியாக 'விருமாண்டி' உட்பட இன்னும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கடந்த ஆறு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் கல்வி கற்பவர். ஆங்கிலச் சூழலில் இருந்துவிட்டு வந்த அவரே முழுக்க, முழுக்க தமிழில் பேசி, தமிழில் பாடி வெற்றிப்பணத்தோடு போனதைக் காண முடிந்தது. எனில், நமது ஒரு சில தமிழ் போட்டியாளர்கள் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தைக் காவித் திரிவது ஏன் எனப் புரியவில்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் உரையாடிக் கொள்ளட்டும். தமிழுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியிலுமா இந்தளவு ஆங்கிலம்? இதில் போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்த தொகுப்பாளரே ஆங்கிலத்தை விட முடியாமல் அவதிப்படுவதைப் பார்க்கும் போது 'என்ன கொடுமையிது' என்றே எண்ணத் தோன்றுகிறது.

    அதிலும் முத்தாய்ப்பாக பாடகி மதுமிதா, போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெறும்போது தமிழுக்காகச் சொன்ன வார்த்தைகள் இவை.

அனுராதா ஸ்ரீராம் : 'Its I think its கொஞ்சம் difficult. So Its a brilliant. I mean very lucky today and also the commitment is there. நீங்க listல இருந்து எந்தப் பாடல்கள் பிடிக்கிறதோ அதையாவது நீங்க வந்து..you know.. ரசிச்சு, உள்வாங்கி, அந்த lyrics எல்லாம் இவ்ளோ தூரம் மனசுல வச்சிருக்கிறது I think ever young expiring playback singer..and we totally enjoyed your show..Congratulations..and Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '

மதுமிதா : 'நான் என்ன சொல்ல விரும்புறேன்னா, ஒரு ஒரு பாடலுக்கும் வரிகள் வந்து ஒரு backbone மாதிரி. So பாடுற எல்லோருமே வந்து நீங்க ஒரு show பாடினாலோ இல்ல try by hearting the lyrics..that only takes ten minuts.அதுவும் நம்மல்லாம் we are from tamilnadu.  நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'

அனுராதா ஸ்ரீராம் : ' Lovely..can we have lot of applauds for that. Thank you so much Madhu. Can we have the cheque please?'

    நடிகர் வடிவேலு பாணியில் 'முடியல' என்று சொல்லத் தோன்றுகிறதா? இது தான் தமிழ் நிகழ்ச்சி. தமிழை வாழ வைக்கப்போகும் சுத்தமான தமிழ் நிகழ்ச்சி.

    விஜய் தொலைக்காட்சி, தமிழுக்காகப் பல போட்டிகளை அறிமுகப்படுத்தி தமிழ் மொழியை வாழ வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் பாராட்ட வேண்டும். சிறுவர், சிறுமிகளின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு', 'நீயா நானா?' போன்றவற்றில் அழகிய தமிழைக் கேட்க முடிகிறது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு,  நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - உயிர்மைThursday, October 1, 2009

அணுவளவும் பயமில்லை

கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து மீற்றர் தூரத்திலொரு பெரிய வட்டம் நிலத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்த நீல நிற வட்டத்துக்குள்ளே அதை விடச் சிறிய ஒரு மஞ்சள் நிற வட்டம். அந்த மஞ்சள் வட்டத்துக்குள்ளே சிவப்பு நிற மிகச் சிறிய வட்டம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குத் தரப்படும் பொருளை கடப்பாறையால் அள்ளி, பத்து மீற்றர் தொலைவில் இருக்கும் அந்த வட்டத்தை நோக்கி எறியவேண்டும். அப் பொருள் போய் விழும் இடத்தினைப் பொறுத்து உங்கள் போட்டி ஆரம்பமாகும்.

        அப் பொருள் நீல நிறப் பெரிய வட்டத்துக்குள் விழுந்தால், ஒரு தட்டு நிறைய உங்களுக்குத் தரப்படும் முழு உணவினை சற்றும் மிச்சம் வைக்காமல் நீங்கள் உண்ணவேண்டும். மஞ்சள் நிற வட்டத்துக்குள் விழுந்தால் அதே உணவின் சிறிய பகுதியை உண்டால் போதும். சிவப்பு நிற வட்டத்துக்குள் விழுந்தால் உண்ணவே தேவையின்றி நீங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடுத்த சுற்றுக்குப் போக உங்களுக்குச் சவாலாக இருக்கும் அந்த உணவைப்பற்றிச் சொல்லவில்லையே. அந்த உணவுதான், நான் முன்னர் சொன்ன பல நாட்களுக்கு முன்னர் செத்த விலங்கின், வீச்சத்தோடு புழு வடியும் குடல் பகுதி.

        இது போன்ற பல போட்டிகளில் தேர்ச்சி பெற்று, இச் சுற்றுக்கு ஆறு இளம்பெண்கள் வந்திருந்தார்கள். முதல் பெண் எறிந்த பொருள் நீல வட்டத்துக்குள் விழுந்தது. முகம் அஷ்டகோணலாகிப் போக, பார்க்கும் என்னையும் அறுவெறுக்க வைத்தபடி அவர் வேறு வழியின்றி அந்தக் குடல்பகுதியை உண்ணத் தொடங்கினார். உதடுகளில் தொங்கிக் கொண்டு புழுக்கள் நெளிந்தன. உணவு, தொண்டையைத் தாண்டிப் போகும் பொழுதெல்லாம் வாந்தி வருவது போலச் சத்தமிட்டார். இரு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே போட்டிக்கு வந்திருந்த சக பெண்களும் மூக்கோடு வாயையும் இறுகப் பொத்தியபடி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் சாப்பிட்டு முடித்து, நடுவரால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றாரென அறியக் கிடைத்ததும் அந்த இடத்தின் ஒரு மூலைக்குப் போய் சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுக்கத் தொடங்கினார். அடுத்த பெண் எறிந்ததும் நீல வட்டத்துக்குள் விழுந்தது. அவர் தன்னால் இதனை உண்ணமுடியாதெனச் சொல்லி போட்டியை விட்டும் விலகிப் போனார். அடுத்தடுத்த பெண்கள் எறிந்ததுவும் நீல நிற வட்டத்துக்குள் விழுந்து, அதே உணவு உண்ணக் கொடுக்கப்பட்டது. மூக்கைப் பிடித்து ஒக்காளித்தபடி உண்டவர்கள், வெற்றி அறிவிப்பு வந்ததும் உடனே போய் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அன்று மதியம் சோறு இறங்கவில்லை.

        இன்னுமொரு சுற்று இப்படி. செத்த விலங்குகளின் உடல்கள் ஒரு அறைக்குள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதன் உடலிலிருந்து விழுந்த புழுக்கள் தரையெங்கும் நெளிகின்றன. மேலாடையில்லாமல் வெற்றுடம்போடு அந்தத் தரையில் ஊர்ந்துபோகவேண்டும். பிறகு அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய உருளையான பாத்திரத்தின் அடி ஆழத்தில் இருக்கும் சாவியை எடுக்க வேண்டும். அந்த ஆழமான பாத்திரம் முழுவதுமாக இறந்த விலங்குகளின் கொழுப்புக்களாலும், கழிவுகளாலும் நிரம்பி வழிபவை. அதனுள்ளேதான் அந்தச் சாவி ஒளிந்திருக்கிறது. அதற்குள் தலையோடு மூழ்கித் தேடி சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் பின் அறையின் ஒரு மூலையில் உறைந்த பனிக்கட்டியிருக்கும் பெட்டியைத் திறக்கவேண்டும். அந்தப் பனிக்கட்டியை விரல்களால் குடைந்து அதன் மத்தியில் இருக்கும் இன்னுமொரு சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் போய் அதன் மூலம் வாசல் கதவைத் திறந்தால் அந்த அறையை விட்டும் வெளியே வரலாம். இவ்வளவையும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்துமுடித்தால் அடுத்த சுற்றுக்கும் போகலாம்.

        இந்தப் போட்டியில் இது போலப் பல சுற்றுக்கள். விஷத் தேள்களை உடலில் ஊர்ந்துசெல்ல விட வேண்டும். பாம்புகளோடு, கொடிய விலங்குகளோடு ஒரு சிறு பெட்டிக்குள் இருந்து காட்டவேண்டும். கரப்பான் பூச்சி, சிலந்தி போன்ற சிறு பிராணிகளை தயங்காமல் உயிரோடு உண்டு காட்டவேண்டும். எந்தவித மறுப்பும் சொல்லாமல் சாக்கடைக்குள் இறங்கிக் காட்டவேண்டும். அவர்கள் சொல்லும் உயரமான இடங்களிலிருந்து குதித்துக் காட்டவேண்டும். நிர்வாணமாக தெருவில் நடந்துசெல்ல வேண்டும். கண்கள் கட்டப்பட்ட, முடி திருத்துபவர்களிடம் தைரியமாகத் தலையைக் கொடுக்கவேண்டும். பல இளைஞர்களும் , யுவதிகளும் பின்வாங்காமல் இவற்றையெல்லாம் செய்துகாட்டுகிறார்கள். காரணம் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் மற்றும் பிரபலம் !

        நான் மேற்சொன்னவையெல்லாம் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று தனது பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் செய்த  Fear Factor தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சில பகுதிகள் மட்டுமே. அதே போன்ற நிகழ்ச்சியொன்றை நேற்று விஜய் டீவியிலும் பார்த்தேன். நிகழ்ச்சியின் தலைப்பு 'அணுவளவும் பயமில்லை'.  'காபி வித் அனு' நிகழ்ச்சி நடத்தும் அனு ஹாசனின் நிகழ்ச்சியென்பதால் 'அனுவளவும் பயமில்லை' எனத் தலைப்போ என்று இத் தலைப்பை மீண்டும் மீண்டும் கவனித்தேன். நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது.

முதற்கட்டமாக பிரபலமான ஏழு தொலைக்காட்சி நடிகைகளை அழைத்து வந்து அவர்களுக்கு போலிஸ் பயிற்சிமுறையின் போது கொடுக்கப்படும் சில கட்டப் பயிற்சிகளைச் செய்யச் சொன்னார் அனு. உயரமான இடத்தில் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் ஊர்ந்து செல்லல், கம்பி வளையங்களில் ஏறி, இறங்குதல் போன்றவற்றைச் செய்தார்கள் அப் பெண்கள். அடுத்து ஒரு உயரமான சுவற்றிலிருந்து கயிற்றில் தொங்கிப் போய் எதிர்ப்புறத்திலிருந்த அடுத்த உயரமான சுவரில் உட்காரவேண்டும். இரு நடிகைகள் இதில் கீழே விழுந்து, காலிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு, காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்ட அந்த இரு நடிகைகளையும் தமது தொடர்களுக்காக ஒப்பந்தம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிறு கலங்கியபடி பார்த்திருந்திருப்பார்கள். மீதி நடிகைகள் இன்னும் பல சாகசங்களைச் செய்து, பாம்புப் பெட்டிக்குள் கைகளை விட்டுக் காட்டி, அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியோ எதிர்வரும் காலங்களில் விஜய் டீவியின் அமெரிக்க உத்திகளால், பார்வையாளர் எண்ணிக்கை இன்னுமின்னும் அதிகரித்து, அவர்களது பணப்பெட்டி நிறையப் போவது மட்டும் உறுதி.

        அனு ஹாசன் மற்றும் விஜய் டீவிக்கு இரண்டு கோரிக்கைகள். எப்படியும் அடுத்தடுத்த காலங்களில் நான் மேற்சொன்னபடி அமெரிக்கத் தரத்துக்கு இந் நிகழ்ச்சியும் வந்துவிடும். அடுத்த போட்டிகளின் போதாவது ஒரு மருத்துவரையும், ஆம்புலன்ஸ் வண்டியையும் அருகிலேயே வைத்திருங்கள். கலந்து கொள்பவர்கள் அந்தரத்தில், உயரத்தில் கால்கள் உதற நீங்கள் சொல்லும் சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது 'இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள்?', 'அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?' என ஒலிவாங்கியைக் கொடுத்து, அவர்களிடம் அபத்தமான கேள்விகளைக் கேட்காதீர்கள். அத்தோடு இனிமேலாவது, கலந்துகொண்டவர்களுக்கு இப் பயிற்சிகளைச் செய்து காட்டிய போலீஸாருக்குத் தொப்பை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயிற்சியாளர்களைப் பார்க்கும்போதும் இவ்வளவு சாகசமான பயிற்சிகளைச் செய்துமா இந்தளவு பருத்த தொப்பை வந்திருக்கிறதென ஆச்சரியமாக இருக்கிறது. முடிந்தால், கொஞ்சமாவது சமூகப்பற்று இருந்தால் இந் நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள். தொலைக்காட்சி பார்த்து, எல்லாவற்றையும் செய்துபார்க்கும் பல குழந்தைகளின், சிறுவர் சிறுமிகளின் உயிர்கள் காப்பாற்றப்படட்டும். அவர்களுக்குத்தான் உண்மையில் அணுவளவும் பயமில்லை பாருங்கள்.

        இது போன்ற சாகசங்களை, வீர தீரச் செயல்களை எல்லாம் இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் பார்க்கவேண்டும் என்றில்லை. கடந்த ஜூலை மாத இறுதியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துக்கருகே பலவிதமான பயங்கர ஆயுதங்களோடு பஸ்ஸுக்குள் ஏறி பயணிகளிடம் தம் வீரதீரம் காட்டிய கல்லூரி மாணவர்களை நேரில் பார்த்துத் தெறித்தோடிய மக்களுக்கு இந்தத் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தந்துவிடாது. அதுபோலவே கடந்த அதே ஜூலை மாதத்தில் பீகாரின் தலைநகரம் பாட்னாவில், பொது இடத்தில் எல்லோரும் பார்த்திருக்க 22 வயதுப் பெண்ணொருவரை ஆடைகள் கிழித்து அசிங்கப்படுத்தி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் எல்லோரும் பார்க்க ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தி, வீதியில் வைத்து ஒரு கும்பல் மானபங்கப்படுத்திய கொடூரக் காட்சியைக் கண்டவர்களுக்கு மேற்படி சாகச நிகழ்ச்சிகள் பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.

        இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த வெறித் தாண்டவத்தைச் செய்தியாக்கி விற்றுப் பணம் பார்க்கும் ஆர்வம் அவர்களை வழி நடத்திய அளவு கூட மனிதாபிமானம் அவர்களை வழி நடத்தவில்லை. இந் நிகழ்வில் பொதுமக்களும் சூழ நின்று ஏதோ சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதுபோல அந்த அநீதமிழைக்கும் கும்பலுக்கெதிராக எதுவுமே செய்யாமல் பார்த்திருந்தது கூட மிகவும் வேதனைக்குரியது. பொதுமக்களை விடுவோம். போலிஸ்காரர்களே இந் நிகழ்வின்போது அருகிலிருந்திருப்பின் அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்திருப்பர் எனத் தோன்றுகிறது. முன்பு இவர்கள் வேடிக்கை பார்த்த அழகை சென்னை, அம்பத்தூர் சட்டக் கல்லூரி மோதலில் நாம்தான் கண்டிருக்கிறோமே.

        சட்டக் கல்லூரி கலவரத்தின் போதே, அரசும் போலிஸும் இதுபோன்ற கல்லூரி மாணவர்களின் வெறித்தனமான வன்முறைகளுக்கெதிராக ஏதேனும் உயர்மட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தால், எழும்பூர் இரயில் நிலைய அட்டகாசம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கல்லூரி மாணவர்கள் மேல் பெரிய அளவில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியம் இருக்கும் காரணத்தால் அவர்கள் மேலும் மேலும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். அதிரடிச் சண்டைக் காட்சிகளோடும், வெட்டுக் குத்துக்களோடும் எடுக்கப்படும் சினிமாக்கள் அவர்களது இள ரத்தங்களைத் தூண்டிவிடுகின்றன. எதிர்காலம் குறித்த அச்சங்களெதுவுமின்றி தம்மை, எல்லாம் வல்ல கதாநாயகர்களாகச் சித்தரித்துக் கொண்டு மோதல்களில் இறங்கிவிடுகிறார்கள். இப்பொழுதாவது இதற்கொரு சட்டம் கொண்டுவரப்படட்டும். இல்லாவிட்டால் காவல்துறையைச் சிரிப்புப் போலிஸாக மட்டுமே கண்டு வளரும் கல்லூரி மாணவர்களிடம் சட்டங்கள், தண்டனைகள் குறித்து கேட்கப்படுமிடத்து இப்படிச் சொல்லுவார்கள். 'அணுவளவும் பயமில்லை'.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Tuesday, September 1, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !


        அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

        மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

        இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

        இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

        தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

        போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

        'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

        போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

        குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்நன்றி - உயிர்மை