Monday, June 12, 2017

அன்பைத் தேடி ஒரு தப்பித்தல்


     'ஒவ்வொரு தடவையும் நாம் எமது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்க முற்படும்போதும், ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உடனே அவர் கலவரமடைந்து விடுகிறார்'

     திருமணம் முடிப்பதற்காகப் பேசி வைத்திருக்கும் மணப்பெண்ணான நெகாருடன் தமது வாழ்க்கை பற்றிக் கலந்துரையாட முற்படும் போதெல்லாம் மணமகன் இமானை ஒரு தொலைபேசி அழைப்பு குறுக்கிடுகிறது. அதனைத் தொடர்ந்து அவன் கலவரமடைந்து உடனே அவளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறான். அவள் அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவளைப் புதிருக்குள்ளும், குழப்பத்துக்குள்ளும் ஆழ்த்தும் அத் தொலைபேசி அழைப்பு பற்றி வினவுகிறாள். தனது கணவனாகப் போகிறவன் ஏதோ ஒரு பெருந் துயரத்துக்குள் சிக்கியிருப்பதை அவள் உணர்கிறாள். அவளது தொடர்ச்சியான கேள்விகளின் பிறகு அவன், வாழ்நாள் முழுவதும் தான் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு நபர் தனது வாழ்வில் இருப்பதாகக் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிறாள். இத் திருமணத்தை அந் நபர் விரும்பவில்லை என்றும் இத் திருமணத்தின் மூலம் அவர் மிகுந்த கவலைக்காளாவார் எனவும் கூறுவது அவளை மென்மேலும் குழப்பத்துக்குள் தள்ளி விடுகிறது. இமான், தனது வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவ் வீட்டுக்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் நெகாரிடம், இமானின் தாய் அவளுக்குள்ள முக்கிய பொறுப்பினை மிகுந்த பரிதவிப்புடனும் அன்புடனும் விளக்குகிறார். அன்பளிப்பாக ஆபரணங்களை வழங்குகிறார். பின்னர் இமான், அவன் குறிப்பிட்ட அந் நபரைச் சந்திக்க அவளை அழைத்துச் செல்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். தனது வீட்டுக்குக் கவலையோடு திரும்பும் அவள், அவர்களது திருமணம் குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகிறாள்.

     ஒரு உள்ளத்தை மட்டுமே உயரிய இடத்தில் வைத்து நேசித்து வரும் இன்னுமொரு உள்ளத்திடம் மட்டுமே அன்பும், பாசமும், சம்பந்தப்பட்டவரது எதிர்காலம் குறித்த கவலைகளும் மிகைத்திருக்கும். அவரது எதிர்கால நலனுக்காகவும், அவரது நல்வாழ்வுக்காகவும் பல அர்ப்பணிப்புக்களை அவர் செய்யத் துணிவார். சம்பந்தப்பட்டவர் அதனை உணராவிட்டாலும் கூட, அன்பை எந்தத் தன்னலமும் பாராது வழங்கிவருபவருக்குள் தொடர்ந்தும் அன்பானது, ஒரு நீர்வீழ்ச்சியைப் போல வழிந்து கொண்டேயிருக்கும். அது என்றும் வற்றாத நீரூற்று. அவ்வாறான அன்பு தொடர்ந்தும் தேவைப்படக் கூடிய, வளர்ந்த பிறகும் குழந்தைப் பருவத்தை இன்னுமின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட திரைப்படம்  என்ற குறிப்போடு ஆரம்பிக்கிறது 'நித்திய குழந்தைகள்' 'Eternal Children / Eternal Kids' எனும் ஈரானியத் திரைப்படம்.

     வாக்குறுதிகளும், சத்தியங்களும் இக் காலத்திலெல்லாம் மதிப்பிழந்து போயுள்ளன. ஒருவரிடம் ஏதேனுமொரு தேவையை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு பொய்ச் சத்தியங்களும், போலி வாக்குறுதிகளும் மலிந்துள்ள காலமொன்று நம்மைச் சூழ்ந்திருக்கிறது. சத்தியங்களால் ஏமாற்றப்படுகிறோம். வாக்குறுதிகளால் மோசடி செய்யப்படுகிறோம். அனைத்தையும் தாண்டி இக் கணத்திலும் கூட எவரேனும் வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கலாம். சத்தியங்களால் அடுத்தவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றுள் எத்தனை சத்தியங்கள் காப்பாற்றப்படப் போகின்றன என்பதை காலம் மட்டுமே அறியும். அவ்வாறாக, எதுவும் உரைக்க முடியாமல் மரணத் தருவாயிலிருந்த தனது தந்தையினது பார்வை பாஷையைப் புரிந்துகொண்டு, அவருக்களித்த வாக்குறுதியை இறுதி வரை காப்பாற்றப் போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் அவ் வாக்குறுதிக்காகவும், அன்புக்காகவும் அவன் சந்திக்க நேரும் சிக்கல்களை தொட்டுச் செல்கிறது திரைப்படம். அவனது வாழ்விலுள்ள இன்னுமொரு நபரைப் பற்றித் தெரிந்து கொண்டதன் பிற்பாடு, 'தமது திருமணம் குறித்த தனது முடிவு எதுவாக இருப்பினும், அதனை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என சத்தியம் பண்ணக் கூறும், தான் மிகவும் நேசிக்கும் பெண்ணை இயலாமையுடன் பார்க்கிறான் இமான்.

     அவர்களது திருமணத்துக்குக் குறுக்கீடாகவிருக்கும் அந்த மர்ம நபர் யார்? அந்த நபர் ஏன் இந்தத் திருமணத்தை வெறுக்கிறார்? அவருக்கும் இமானுக்குமான உறவு என்ன? போன்ற பல கேள்விகளை திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் புதிருடன் தந்திருக்கிறார் திரைப்படத்தின் இயக்குனர் பௌரான் தெரக்ஷந்தே.

    பிறக்கும்போதே டௌன் நோய்க்கூட்டறிகுறி(Down Syndrome)யுடன் பிறந்த அலியைப் பராமரிக்கும் பொறுப்பு, அவனது தந்தை இறந்ததன் பிறகு, சகோதரன் இமானிடம் வருகிறது. அவர்களது தாயுடன் இணைந்து இமான், அலியை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொள்கிறான். இமானுடன் மிகவும் நெருங்கிப் பழகும் அலிக்கு, அவர்களது வாழ்வினூடாக இன்னுமொரு பெண் நுழைவது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அவன் அதனை வெறுக்கிறான். தனது சகோதரன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் எனச் சிந்திக்கும் அவனது குழந்தை மனம், இமான் இன்னுமொருவர் மீது அன்பு செலுத்துவதைத் தாங்கிக் கொள்வதில்லை.இது ஒரு புறமிருக்க இமானின் நேசத்துக்குரிய காதலி நெகார் இவ்வாறான சிறுவர்கள் குறித்த தனது ஐயங்களை வைத்தியரைச் சந்திப்பதன் மூலமும், இவ்வாறான சிறுவர்களின் தாய்மாரை சந்திப்பதன் மூலமும் தெளிவுபடுத்திக் கொள்கிறாள். பின்னர் திருமணத்துக்கு மறுப்பினைத் தெரிவித்த தனது பெற்றோருக்கும் நிலைமையினை விளக்கி அவர்களையும் சம்மதிக்க வைக்கிறாள். தொடர்ந்து அலியுடன் தனக்கு மிகவும் அன்பு உள்ளதை, அலிக்கு புரிய வைப்பதற்காக அலிக்கான பரிசுப் பொருட்களோடு இமானின் வீட்டுக்குச் செல்கிறாள். இமானையும், தாயையும் தவிர வேறெவரையும் தன் பக்கம் அனுமதிக்காத அலி, அவனது அறைக்கு வரும் அவளை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்கிறான்.

     குழந்தைகளின் அகவுலகம் விசித்திரமானது. யாருமற்ற வெளியிலும் கூட அவர்களால் எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்தி விட முடியும். நாகரீகம் கருதி, வளர்ந்த மனிதர்கள் மறைக்கப் பார்க்கும் விதவிதமான உள்ளக் கிடக்கைகளை குழந்தைகள் சட்டென்று வெளிப்படுத்தி விடுகின்றன. நாம் இரு விழிகளால் பார்க்கும் ஒரு காட்சியினை, குழந்தைகள் பல்வேறு விழிகளால் பார்த்துக் கேள்விகளை எழுப்புகின்றன. கேள்விகள் எல்லாவற்றுக்குமான பதில்கள் நம்மிடம் இருப்பதில்லை. குழந்தைகளின் முன்னிலையில் நாம் அறியாமையுடையவர்களாக ஆகி விடுகிறோம். நம் அளவுக்கு வளர குழந்தைகளுக்கு காலம் இருப்பதால், அங்கு நாம் குழந்தைகளாகி விடுகிறோம். அவர்களது மொழி, அவர்களது நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் அவர்களிடமே கற்றுக் கொண்டு, அவர்களிடமே ஒப்புவித்து அவர்களுக்கு நெருக்கமாகி விடுகிறோம். 

நெகார் இதனைத்தான் செய்கிறாள். தன்னால் இயன்ற நேரங்களிலெல்லாம் இமானின் வீட்டுக்கு வந்து, அலியுடன் இணைந்து விளையாடுகிறாள். அவனை அவன் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறாள். அவளது மனதைத் துன்புறுத்தும் விதமாக நடந்துகொள்ளும் அலியின் செய்கைகள் அவளை நோகடித்தபோதிலும் பொறுத்துக் கொள்கிறாள். அவனுக்கு கரண்டியைக் கொண்டு நாகரிகமாக உணவருந்தும் முறையைக் கற்றுத் தருகிறாள். ஒரு நாள், இமானது வீட்டுக்கு வருகை தரும் அவளது பெற்றோரின் முன்னிலையில், அலி அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு ' எனது அன்புக்குரிய நெகார், என் தோழி' என்கிறான். அதிர்ச்சியடைகின்றனர் பெற்றோர்.

     தாயாகவோ, சகோதரியாகவோ, தாதியாகவோ, ஆசிரியையாகவோ இல்லாத ஒரு பெண், இன்னுமொரு இளைஞனுடன் தனித்திருத்தல் என்பதுவோ, அவனுடன் விளையாடுவதோ, பயணங்கள் செல்வதோ, தொட்டுப் பேசுவதோ ஆகுமாக்கப்படாத ஒரு சமூகத்தில், குழந்தை மனதுடனும், வளர்ச்சியடையாத மூளையுடனும் கூடிய ஒருவன் என்றபோதிலும், இளைஞனான அவனது இவ்வாறான நடவடிக்கைகள் அதிர்ச்சியைக் கிளப்பிவிடப் போதுமாகி விடுகின்றன. அவனது நடவடிக்கைகளிலும், உள்ளத்திலும் கள்ளமோ, கபடமோ இல்லையென்ற போதிலும், அவனது உருவத்தையும் தோற்றத்தையும் வைத்தே அனைத்தும் அளவிடப்படுகின்றன. இமானினதும், நெகாரினதும் திருமணத்தை நிறுத்த, அவளது பெற்றோருக்கு இது போதுமாக இருக்கிறது. திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து அறிந்த இமானின் தாய் அதிர்ச்சியுருகிறார். மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்படுகிறார். அலியை சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் சேர்த்தால் மாத்திரமே இத் திருமணம் நடைபெறுமென நெகாரின் தந்தை நிபந்தனை விதிக்கிறார். இமான், அலியை அழைத்துச் சென்று ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விடுகிறான். பிறகு இமான், தான் கூட இருந்து பார்த்துப் பார்த்து வளர்த்த அலியைப் பிரிந்த துக்கத்தில் இரவெல்லாம் கண்ணயராது அழுதபடி தவிக்கிறான். சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அலியும், தனது உறவுகளை எண்ணி இரவெல்லாம் உறக்கம் வராமல் அழுகிறான். பிரார்த்திக்கிறான். தனது சகோதரனைத் தேடிப் பிதற்றுகிறான். புதிய சூழல் அவனைப் பெரிதும் அச்சுறுத்துகிறது.

     பிரிவினை குழந்தைகளும் உணருகின்றன என்பதனை, அவை உறவுகளைத் தேடிக் கதறும்போது உணர்ந்து கொள்ளலாம்.  பிரிவு என்பது இலகுவானதல்ல. அது உயிருருக்கும் வலி. உயிருடனே ஒரு ஜீவனின் தோலை உரிப்பதை விடவும் மிகுந்த வேதனையைத் தரும் கொடூரம் அது. பிரிவினை எவராலுமே எளிதாகத் தாங்கிக் கொள்ள இயலுமாக இருப்பதில்லை. பிரிவின் காரணமாக உறவுகள் பிரிந்துவிட்ட போதிலும், நினைவுகள் என்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். சேர்ந்திருந்த காலத்தில் சென்ற பயணங்கள், பாவித்த பொருட்கள், ஒன்றாக நடந்த தெருக்கள், இணைந்து கழித்த இன்பமான கணங்கள் என எல்லாமும் ஞாபகத்தில் வந்துகொண்டேயிருக்கும். அவை பிரிவின் முந்தைய கணத்தில், பிரியாதிருக்க ஏதேனும் செய்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தையும் இயலாமையையும் ஒன்றாகத் தந்தபடியிருக்கும். பிரிவிற்கு முன்னரான காலப்பகுதியில் எவ்வளவு தூரம் அன்பாக இருந்தோம்... ஒருவருக்கொருவர் இரகசியங்களேதுமின்றி எவ்வளவு வெளிப்படையாக இருந்தோம்... என்பதையெல்லாம் பிரிந்ததன் பின்னரே மனங்கள் உணருகின்றன. சிலவேளைகளில் இன்னுமொருவரது உயர்வுக்காக, எதிர்கால நலனுக்காக கௌரவமான பிரிவுகள் தேவையாக இருக்கின்றன. என்றபோதிலும் பிரிந்ததன் பிற்பாடு, பிரிவுக்கு முன்பு ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொண்ட இரகசியங்களை, கனவுகளை, வாழ்க்கையை மற்றவர் எல்லோரிடமும் பகிரங்கப்படுத்தி அவரைக் கேவலப்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவருடன் நேசம் வைத்து வீணாகக் கழிந்த காலத்தினைக் குறித்து அடுத்தவர் வேதனையும், வருத்தமும் அடையச் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் ஒருவரை உண்மையாகவே நேசித்து, பிரிந்திருப்பீர்களானால் உங்களால் ஒருபோதும் அவருக்கெதிராக இதனைச் செய்ய முடியாது.

     ஒரு பிரிவின் பின்னர் சமூகத்தில் அவர்களைக் குறித்து நிறையக் கேள்விகள் எழும் என்பது யதார்த்தம். சமூகத்தின் எல்லாக் கேள்விகளுக்கும் எம்மால் பதில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. அது நமது பதில்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பதுமில்லை. அதற்குத் தேவை ஊர் வம்பு மாத்திரமேயன்றி உங்களதும், எனதும் நலனல்ல. நீங்கள் நேர்மையாகவே உண்மையான பதில்களை அளித்தபோதிலும் கூட, சமூகத்தில் நுழைந்து அவை வெளிப்படும்போது பல அங்கங்கள் மேலும் மேலும் அவற்றில் புதிதாகத் தோன்றியிருக்கும். எனவே என்னைப் பொறுத்தவரையில் பிரிவின் பின்னர் ஒருவரைப் பற்றி மற்றவர் இன்னுமொருவரிடத்தில் பேசுவது கூடத் தவறானது. பழகிய காலங்கள் இனியவை எனில், பிரிவில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன் எனில், எனது வாழ்வில் அதன் பிறகு அவருக்கு இடமில்லையெனில், பிரிவின் பின்னர் என் மீது முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு எனது மௌனமும், புன்னகையும் மாத்திரமே பதிலாக இருக்கும். ஆனால் அம் மௌனத்தினதும், புன்னகைக்கும் பின்னால் எனக்குள், கேள்விகளை முன்வைக்கும் உங்களைப் பற்றிய முகத்திரை பயங்கரமாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். அதைத் தவிர்த்து, என்னால் ஒரு காலத்தில் நேசிக்கப்பட்ட ஒரு ஜீவனை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவோ, கீழ்த்தரமாகச் சித்தரிக்கவோ மாட்டேன். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், எனது வாழ்க்கை எனது கையில் எனப் போய்க் கொண்டே இருப்பது எனது இயல்பாக இருக்கும்.

    அவ்வாறானதொரு முடிவை இமானும் எடுக்கிறான். தனது தம்பியின்றி தன்னால் வாழ முடியாது என உறுதியாக உணர்ந்த பிற்பாடு, அவன் மறுநாளே போய் நெகாரின் தந்தையைச் சந்திக்கிறான். தனது உடன்பிறப்பினைத் தன்னால் பிரிந்து இருக்க முடியாதெனவும், இதற்கும் மேலே அவளது தந்தை அவனைப் பிரிந்தால்தான் இந்தத் திருமணம் நடக்குமென உறுதியாக இருப்பாரானால், தனக்கு இந்தத் திருமணம் மட்டுமல்ல, இனி திருமணமே வேண்டாம் எனவும் நெகாரின் தந்தையிடம், கலங்கிய விழிகளோடு உறுதியாகக் கூறுகிறான். தொடர்ந்து அவன் தனது தம்பியை மீட்டு வரச் செல்லும்போது வரும் தொலைபேசி அழைப்பு, சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து தம்பி அலி காணாமல் போய்விட்ட தகவலைச் சொல்கிறது.

     நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் தொலைந்துபோவது கொடுமையான ஒன்று. நீண்ட நாள் நம்மால் பாவிக்கப்பட்ட சடப்பொருளொன்றையே, அது அதனுடைய பயன்பாட்டை இழந்துபோன பிற்பாடும் கூட ஏதாவது நினைவுக்காக, சந்தோஷத்துக்காக சேர்த்து வைத்திருப்போம். அதைத் தொலைத்தால் மிகவும் வருத்தப்படுவோம். ஆனால், தினந்தோறும் தினசரிகளில், காணாமல் போனவர்கள் தொடர்பான எத்தனையோ விளம்பரங்களை மேலோட்டமாக வாசித்துவிட்டுத் தவிர்த்துச் செல்கிறோம். ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் காணாமல் போனவர்கள் எப்பொழுதோ புன்னகைத்துக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தைப் பார்த்தும் பார்க்காமலும் கடந்து செல்கிறோம். புகைப்படங்களிலிருக்கும் அந்த மனிதர்களும் கூட யாருக்கோ நெருக்கமானவர்கள் என்பதை உணர மறுக்கிறோம். தங்களைப் பற்றிய பூரண விபரங்களை எவரிடமும் தெளிவாகக் கூற முடியுமான வளர்ந்தவர்கள் காணாமல் போகும்போதே இந் நிலையென்றால், தன்னைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ எதுவுமே கூறத் தெரியாத குழந்தை மனதுடனுள்ள ஒருவர் காணாமல் போய்விட்டால் அவரது நிலைமை என்னவாகும்? சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து தனது அண்ணனைத் தேடித் தப்பிச் சென்ற அலியைக் கண்டுபிடிக்க காவல்துறையினதும், பத்திரிகைகளினதும் உதவியை நாடுகிறான் இமான். விடயம் தெரியாத அவர்களது தாய், அலியை தான் பார்க்க வேண்டும் என்கிறார். அலி எங்கே? அவனுக்கு என்னவாகிறது?

    ஸெதாரா போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெண். காவல்துறைக்குத் தெரியாமல், பூங்காக்களிலும், கடைத் தெருக்களிலும் போதைப் பொருட்களை விற்றுவருகிறாள். சட்டவிரோதமான காரியங்களைச் செய்துவரும் கணவனோடு அவள் ஒரு ஒடுங்கிய, சிறிய, ஒதுக்குப்புறமான வீடொன்றில் வாழ்ந்து வருகிறாள். தற்செயலாக பூங்காவில் சந்திக்க நேரும் அலியை, அவள் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். தமது தொழிலுக்கு உதவியாக இருக்குமென கணவனும் அதனை விரும்புகிறான். ஸெதாரா போதைப் பொருட்களை விற்க அவனையும் அழைத்துச் செல்கிறாள். வீடு திரும்பியதும் உணவு சமைத்துப் பரிமாறுகிறாள். அவளுக்கு கரண்டியைக் கொண்டு நாகரிகமாக உணவருந்தும் முறையைக் கற்றுத் தருகிறான் அலி. அவனை அன்புடன் பராமரிக்கிறாள் ஸெதாரா.

     எளிதில் ஏமாந்துவிடக் கூடிய, நம்பிக்கையும், நேர்மையும் உடையவர்களை ஏமாற்றுவதற்காகவே உலகில் பலர் இருக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. அவர்கள் பணத்திலும், அந்தஸ்திலும், தகுதியிலும் மேலே வந்து விடுவதற்கான ஏணியாக இவ்வாறான குழந்தை மனம் கொண்டவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏற்றிவிட்ட ஏணியை பின்னர் எளிதில் மறந்து விடுகின்றனர் அல்லது தள்ளி உதாசீனப்படுத்தி விடுகின்றனர். ஏமாறுபவர்கள் இதனை உடனே உணர்வதில்லை. ஏமாற்றப்பட்டதன் பிறகே வலியுடன் கூடிய ஒரு நிரந்தரமான தழும்பு அவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொடுக்கிறது. ஆனாலும், தொடர்ந்தும் அவர்களுக்கு இருக்கும் குழந்தை மனமும், நேர்மையும், மன்னிக்கும் மனப்பான்மையும் திரும்பத் திரும்ப அவர்களை ஏமாறச் செய்கின்றன. ஏமாற்றுபவர்களுக்கு இதுவே பெரும் உதவியாக அமைந்து விடுகிறது.

     மோசமான ஒருவனிடம் வந்து சிக்கிக் கொண்ட ஸெதாராவின் நிலைமையும் இவ்வாறேதான் இருக்கிறது. அவள் அறிந்தே இம் மோசமான தொழிலைச் செய்து வந்த போதிலும் கூட, அவளுக்குள்ளும் ஈரமான மனது உள்ளதென்பதை அலியுடனான உறவு சித்தரிக்கிறது. குழந்தைகளேதுமற்ற அவளுக்கு, அவன் தனது குழந்தையாகத் தென்படுகிறான். தனது கணவன், அலிக்கு போதை மருந்து ஊசியை ஏற்ற முயற்சிப்பதைக் கண்டு பதறிப் போய் காப்பாற்றுகிறாள் அவள். தனது சகோதரனைத் தேடி அவளிடம் அழுகிறான் அலி. அவனது சகோதரன் அவனைத் தேடி வர மாட்டானெனக் கூறும் அவள், தன்னை அங்கு விற்றுப் போன தனது சகோதரன் பற்றிய துயரக் கதையை அவனிடம் கூறி அழுகிறாள். அவளை அழ வேண்டாமெனக் கூறி ஆறுதல்படுத்துகிறான் அலி. பின்னர் அலியை தனது கணவன் இன்னுமொருவனுக்கு பணத்துக்காக விற்று விட்டதைக் கேட்டு அதிரும் அவள், அந்த நள்ளிரவில் அலிக்கு உணவு கொடுத்து அவனை வீட்டைவிட்டு அனுப்பி வைக்க முயல்கிறாள். செல்ல மறுக்கும் அலியை இருளிலும், குளிரிலும் பலவந்தமாக வெளியே தள்ளி கதவைச் சாத்துகிறாள் ஸெதாரா. நாய்களின் குரைப்பொலியைக் கேட்டு அச்சமுறும் அலி திரும்பத் திரும்ப கதவினைத் தட்டுகிறான். அவனைக் கல்லாலெறிந்து துரத்தி விடுகிறாள் அவள். பின்னர் கதவருகே அமர்ந்து கேவிக் கேவி அழுகிறாள். நடந்து நடந்து பெருந்தெருவுக்குள் நுழையும் அலி ஒரு வாகனம் மோதி கீழே விழுகிறான். குருதி வழிய கீழே கிடக்கும் அவனுடலைத் தாண்டிச் செல்கிறது வாகனம். அலிக்கு என்னவாயிற்று?

     திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஈரானியத் திரைப்பட உலகில் தவிர்க்கவும், மறக்கவும் முடியாத பெண் இயக்குனர்களில் ஒருவரான பௌரான் தெரக்ஷந்தே (Pouran Derakhshandeh). தற்பொழுது தனது 62 வயதில், இன்னுமொரு திரைப்படத்தை இயக்கி வரும் இவர், 2006 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் இந்த 'நித்திய குழந்தைகள்' (Eternal Children) எனும் திரைப்படமாகும். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், ஆய்வாளர் போன்ற பல முகங்களைக் கொண்ட இயக்குனர் பௌரானின் எட்டாவது திரைப்படமான இத் திரைப்படமானது, பல சர்வதேச திரைப்பட விழாக்களில், விருதுகளுக்காக முன்மொழியப்பட்டு இவரை ஒரு சிறந்த திரைப்பட இயக்குனராக உலகறியச் செய்தது. இத் திரைப்படம், 37 ஆவது ROSHD சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்காக தேர்வு செய்யப்பட்டதோடு, 21 ஆவது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சர்வதேச திரைப்பட விழாவான 'Golden Butterfly' விருது வழங்கும் விழாவில் மேலும் 6 விருதுகளைத் தனதாக்கிக் கொண்டது.

     எப்பொழுதும் குடும்பங்களையும், குழந்தைகளையும் மையப்படுத்தியே திரைப்படங்களை எடுத்து வரும் இந்த இயக்குனரின் இத் திரைப்படத்தின் கதாநாயகனாக, உண்மையிலேயே டௌன் நோய்க்கூட்டறிகுறி(Down Syndrome) நோயினால் பாதிக்கப்பட்ட நித்தியக் குழந்தையான அலி அஹ்மத் இஃபார் நடித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருது இதற்காக இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வாறான குழந்தைகளை ஓரிடத்தில் ஒரு கணம் அமைதியாக உட்கார வைத்திருப்பதே மிகவும் சிரமமான காரியமாக இருக்கையில், முழு திரைப்படத்தையும் இவரே கொண்டு செல்லும்விதமாக கதையை அமைத்திருப்பதுவும், இவரை மிக மிகச் சிறப்பாக நடிக்க வைத்திருப்பதுவும் இயக்குனரின் திறமையைப் பறைசாற்றுகிறது. அலியின் சகோதரன் இமானாக பிரபல ஈரானிய நடிகர் ஷாஹப் ஹுசைனியும், நெகாராக பிரபல ஈரானிய நடிகை இல்ஹாம் ஹமீதியும் நடித்திருக்கின்றனர். திரைப்படத்தின் பிற்பாதியில் சொற்பமாகவே வந்தாலும் போதைப் பொருள் விற்கும் பெண் ஸெதாராவாக நடித்து அசத்தியிருக்கிறார் நடிகை பேந்தே பஹ்ரம். அநாயாசமாக புகைப்பிடிப்பதுவும், கணவனை நோக்கிப் புறுபுறுத்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பதுவும், அலியிடம் மிகவும் பாசத்தோடும், பண்பாகவும் நடந்துகொள்வதுவும், அலியைப் பிரிந்து அழுவதுமென பல முகங்களை வெளிப்படுத்தி நடிக்க வேண்டியிருந்ததை மிகச் சிறப்பாகச் செய்து தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

     திரைப்படமானது, ஒரு குழந்தையை மையப்படுத்தி நகர்ந்தபோதிலும், ஆங்காங்கே காணப்படும் பல காட்சிகள் ஈரானிய அரசியலையும், உலக நிலைப்பாடுகளையும், சர்வதேச அளவில் மனித மனப்பாங்குகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. நெகார் தன்னைச் சுட வேண்டாமென அலியிடம் கெஞ்சும்போதும், காப்பாற்றச் சொல்லி அழும்போதும் வல்லரசுகளிடம் மாட்டிக் கொண்டு விளையாட்டு போல கொல்லப்படும் அப்பாவிகளை நினைவுறுத்துகிறார். பூங்காவில் அலி சுதந்திரமாக தென்றலை அனுபவிப்பதுவும், பூக்களிடம் கதைப்பதுவும் அவனுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்கான  வேட்கையை அடையாளப்படுத்துகிறது. வீதியில் அநாதரவோடு பட்டினியாகக் கிடக்கும் அலிக்கு ஒரு ஏழைப் பெண் தனது ரொட்டியில் பாதியை வழங்குவதுவும், ஒரு செல்வந்தக் கோமகன், தனது வாகனத்தைத் தொட்டதற்காக அலியைத் திட்டித் துரத்துவதுவும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், அதிகார மனப்பாங்குகளையும் சித்தரிக்கின்றன. இவ்வாறான பல காட்சிகளை மிக நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார் இயக்குனர்.

     எப்பொழுதுமே அன்பும், பராமரிப்பும், கருணையும் தேவைப்படும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கு, வளர்ந்தவர்களே இடையூறாக இருக்கின்றனர். பலரும் இதனைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. உடல் அளவில் பூரணமாக வளர்ந்திருப்பதைக் கொண்டு அவர்களை வழிநடத்துவதும், அவர்களது உள வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலையுறாது நடந்துகொள்வதும் பெரியவர்களிடையே விரவியிருக்கும் மனப்பாங்குகளெனச் சொல்லலாம். குழந்தை மனம் கொண்டவர்களது அக உலகுக்குள் நுழைந்து அவர்களை அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ந்த மனநிலைக்குக் கொண்டு வருவதே மிகத் தேவையானதாக இருக்கிறது. குழந்தை மனம் கொண்டவர்களது நேசத்தில் ஒருபோதும் வஞ்சங்களில்லை. அன்பு மட்டுமே பிரதானம். அன்புதான் எல்லாமும். இத் திரைப்படம் சொல்லும் பாடமும் அதுதான்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - பேசாமொழி, ஊடறு