Thursday, October 12, 2017

மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை



     ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான 'பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)' திரைப்படம் பேசுகிறது. 

அழகற்ற சிறுமியாக உள்ளதனால் பாடசாலையின் நாடகப் போட்டியில் பிரதான கதாபாத்திரம் நிராகரிக்கப்படும் சிறுமி கௌதமி, பின்னாட்களில் என்னவாகிறாள் என்பதனை அவளுடனேயே பயணிக்கச் செய்து திரைப்படத்தின் மூலம் சித்தரித்து முடிக்கும்போது நம் மத்தியில் இவ்வாறான கௌதமிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கவலையும், வருத்தமும் மேலோங்கவே செய்கிறது.

சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.

கௌதமி ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு யுவதி. அவள் தனது சக தோழிகள் இருவருடனும் ஒரு வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறாள். சக தோழிகளில் ஒருத்தி மிகவும் அழகானவள் என்பதோடு அவளுக்கு ஒரு காதலனும் இருக்கிறான். கௌதமியின் அவலட்சணமான தோற்றம் அவளை, இலங்கை கடற்படையில் பணிபுரியும் அழகி மங்களாவின் காதலனுக்கு தூது கொண்டு செல்லுமொருத்தியாக மாற்றி விட்டிருக்கிறது. பொதுவாக படையினர் தங்கியிருக்கும் இராணுவ முகாம்களுக்கு இளம்பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் நிலையில் கௌதமி எவ்வித அச்சமுமின்றி எந் நேரத்திலும் சென்று வரக் கூடியவளாக இருக்கிறாள். மங்களாவின் காதலன் உயரமாகவும் கட்டுமஸ்தானவனாகவும் அழகி மீது பேரன்பு கொண்டவனாகவும் இருப்பதனால் அவன் மீது கௌதமிக்கு ஒருதலையாக காதல் ஏற்படுகிறது.

தனது சக தோழிக்கும் அவளது காதலுக்கும் துரோகமிழைக்கும் கௌதமி, அவளது காதலனுடன் பலவந்தமாக இணைவதன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் அழகியின் காதலன் தற்கொலைக்கு முயல்கிறான். அவனது கவலையுணர்ந்த சக படையினர் கௌதமியைக் கடத்திச் சென்று கருவைக் கலைத்துவிடும்படி மிரட்டுகிறார்கள். மீண்டு வரும் கௌதமி, இலங்கையில் வறள் பிரதேசக் காடொன்றுக்குள் வசிக்கும் தனது தூரத்து உறவினரைத் தேடிச் சென்று, மாதக் கணக்கில் அவர்களுடன் தங்கி சேனை விவசாயம் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கிருந்து தனது ஊருக்கு வரும் வழியில் குழந்தையை புகையிரத நிலையத்தில் விட்டு வருகிறாள். தனது ஊருக்கு வந்தவள் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்கிறாள். ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வரும் அவள் இன்னுமொருவரைத் திருமணம் செய்து வாழ்கிறாள். இவர்களது வாழ்வில் திரும்பவும் மங்களாவும் அவளது காதலனும் நுழைகிறார்கள். காதலன் தனது குழந்தையைக் கேட்டு கௌதமியிடம் வந்து நிற்கிறான். இதன் பிறகு என்னவாயிற்று என்பதைத்தான் திரைப்படம் சொல்கிறது.

சாதாரணமாக தெருவில் செல்லும் எந்த இளைஞர்களுமே திரும்பிக் கூடப் பார்க்காத கௌதமிக்குள்ளும் உள்ள காதல் உணர்வுகள் மிகவும் நுட்பமாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது அவலட்சணமான தோற்றத்தின் காரணமாக எழும் சக சமூகத்தின் நடைமுறைகளால் தாழ்வு மனப்பான்மைக்கும், உள்மனக் குமைச்சலுக்கும் ஆளாகும் கௌதமி மிக இரகசியமாகச் செய்யும் குற்றங்கள் எளிதில் மன்னிக்க முடியாதவையாக இருப்பினும், பார்வையாளர்களிடத்தில் அவை ஒரு நியாயத்தையும் சொல்பவையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் சிறப்பு.

இலங்கையில் பெரும்பான்மையான சமூகத்தினால் பின்பற்றப்படும் பௌத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மூன்று பெண்களைக் கொண்டு கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே. பாசம், காமம், வன்மம் ஆகிய மூன்று உணர்வுகளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வேறுபடும் புள்ளி எதுவென திரைப்படத்தின் மூலமாகக் காண முயற்சித்திருக்கிறார்.

இதனாலேயே 2003 ஆம் ஆண்டு திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையிலும், ஒரு தசாப்தம் கடந்த நிலையில் 2015 வரையும் இத் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருடங்களாக தனது படைப்பினை வெளிப்படுத்த இயலாது பிரசவ வேதனையை ஒத்த வலியை சுமந்தலையும் இயக்குனரின் வலி மிகவும் வலியது. அது ஏனைய திரைப்படங்களை இயக்க இன்றுவரையும் அவருக்கு தடையாக அமைந்திருக்கிறது.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கௌதமியின் கதாபாத்திரத்தை எந்தப் பிரதான நடிகையுமே ஏற்று நடிக்கத் தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் கதையினைக் கேட்ட மாத்திரத்திலேயே அக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, திரைக்கதை எழுதுவதில் பங்குகொண்டு அதனைச் செம்மைப்படுத்தி, மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பல விருதுகளை வென்ற நடிகை கௌசல்யா பெர்ணாண்டோ. இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக இலங்கையின் ‘சிறந்த நடிகைக்கான விருது’ இவருக்குக் கிடைத்தது. அவ்வாறே 2016 ஆம் ஆண்டுக்கான ’SAARC’ சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ‘சிறந்த நடிகை விருது’ இவருக்குக் கிடைத்தது. தற்பொழுது பல்கலைப்பழக பேராசிரியராகக் கடமையாற்றி வரும் இவர் சர்வதேச ரீதியில் விருதுகள் பல வென்ற திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

மங்களா எனும் அழகியின் கதாபாத்திரத்தை பிரபல நடிகை டிலானி அபேவர்தனவும் அவளது காதலன் கதாபாத்திரத்தை இலங்கை ரக்பி அணியின் விளையாட்டு வீரர் துமிந்த டி சில்வாவும் ஏற்று நடித்திருக்கின்றனர். அத்தோடு திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரங்களிலும் கூட சிங்களத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகையர்களான தர்மசிறி பண்டாரநாயக்க, ஐராங்கனி சேரசிங்க, வீணா ஜயகொடி, சாந்தனி செனவிரத்ன, ப்ரியங்கா சமரவீர, சந்திரா களுஆரச்சி, லியோனி கொத்தலாவல போன்றோர் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பௌத்த சமூகத்திலுள்ள இளைய சமுதாயத்தினரின் அக, புறச் சிக்கல்களைப் பேசும் இத் திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நடைபெற்ற 33 ஆவது ரொட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அது அங்கிருந்த பல்வேறு தேசங்களையும் சேர்ந்த திரையுலக முக்கியஸ்தர்களது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அத்தோடு விழாவின் கௌரவ விருதான டைகர் விருதிற்கும் இத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் பின்னணியானது இலங்கையின் கிராமப்புறங்களிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களது காதல், காமம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை பல சந்தர்ப்ப சூழ்நிலைச் சிக்கல்களோடு பொருத்தி, அரசியல், சமூகக் கோட்பாடுகளின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது. சமூகம், அரசியல் என இரு மட்டங்களிலும் வகைப்படுத்தக் கூடுமான இத் திரைப்படத்தின் அத்திவாரம் பௌத்தவியலாக அமைந்திருக்கிறது.

பௌத்த நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படமானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘HONOLULU’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புனைவுத் திரைப்படத்துக்கான விருதினை வென்றது. இலங்கை அரசை ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும்படியாக, பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தையெடுத்து, அதனைத் தான் பிறந்த மண்ணில் திரையிட்டுக் காட்டமுடியாத மனவேதனையை அகத்தில் புதைத்தபடி பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசியராகக் கடமை புரியும் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது திரைப்படம் குறித்து இவ்வாறு கூறுகிறார். 

'தமது காதல் வாழ்க்கை நொறுங்கிப் போனதன் காரணமாக தீய வழியில் செல்லும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது கனவுலகம் சிதைந்த பின்னர் நிஜ வாழ்க்கையைச் சந்திக்கும் தைரியம் அவர்களிடமில்லை. ஒருவகையில் இத் திரைப்படம் அவர்களது நடைமுறை வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கையானது எவ்வளவுதான் இன்னல்களுக்குள் உள்ளபோதிலும், எல்லாவற்றையும் விட மிகவும் பெறுமதியானது வாழ்வதுதான் என நான் இத் திரைப்படத்தின் மூலம் கூற விரும்புகிறேன்'.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - பேசாமொழி, பிரதிபிம்பம், வல்லமை

Sunday, October 1, 2017

தளிர்களுக்கான திரை - எம்.ரிஷான் ஷெரீப்




 
மக்கு எழுத்தறிவித்தவரை எத்தனை பேர் தினந்தோறும் நினைத்துப் பார்க்கிறோம்? நாம் எழுத, வாசிக்கப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எம்மைச் சார்ந்தவர்கள் எமக்கு எழுத்தறிவித்ததாலேயே இதனை வாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? நம் அயலில், நம் ஊரில், நமது தேசத்தில், உலகில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது? எத்தனையோ நபர்களினது ஜீவிதங்களில் கல்விக்கான ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கும் எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டாமல் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேலோங்கியிருப்பதையும், அவையே அவர்களது நடத்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதையும் தினமும் கேள்விப்படுகிறோம். அவ்வாறான ஒரு அநாதைச் சிறுவன்தான் அமிரோ. யுத்தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த அவனுக்காக அவர்கள் மிச்சம் வைத்துப் போனது அவனது பெயர் மட்டும்தான்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுவன் அமிரோ, பிற நகரமொன்றின் கடற்கரைப் பிரதேசமொன்றில்  சிதிலமடைந்து புறக்கணிக்கப்பட்ட கப்பலைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறான். ஜீவனோபாயமாக குப்பைகளில் கிடக்கும் இரும்புப் பொருட்களைத் தேடியெடுத்து விற்கிறான். போத்தல்களைப் பொறுக்கி விற்கும் சக சிறுவனொருவன் அவனிடம் கப்பல்களிலிருந்து கடலில் எறியப்படும் போத்தல்களைப் பொறுக்கி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் எனக் கூறி கடலுக்கு அழைத்துச் செல்கிறான். அத் தொழிலுக்கு வில்லங்கம் ஒரு சுறா மூலம் வருகிறது. அவர்கள் போத்தல்களைச் சேகரிக்கும் கடற்பகுதியில் சுறாவின் நடமாட்டத்தைக் கண்டதால் வேறு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிறகு கடற்கரைக்கு வரும் பெரிய பனிக்கட்டிகளைப் போராடி  வாங்கி, அவற்றைக் குளிர் நீராக்கி, குவளையில் நிரப்பி கூவி விற்கிறான். அதுவும் நிரந்தரமில்லை எனப் புலப்பட, சக சிறுவனின் சிபாரிசில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தளமொன்றில் அவர்களது  சப்பாத்துக்களைத் துடைத்துவிடும் வேலை கிடைக்கிறது. அதில் ஓரளவு வருமானம் வந்த போதிலும் திரும்பவும் ஒரு தவறான குற்றச் சாட்டினால் அந்த வேலையும் பறிபோகிறது. இனி அவனுக்காக உதவ யாருமில்லை. எனில், அவனது எதிர்காலம் முழுவதற்குமாக அவனுக்கு உதவப் போவது எது?

சிறுவர்களது உலகம் விசித்திரமானது. அது மாயலோகமும், யதார்த்தமும் கலந்தது. அவர்களது பார்வையில் அனைத்தும் புதிதாய்த் தெரியும். பின்னாட்களில் அனுபவங்கள் கற்றுத் தரப் போகும் படிப்பினைகள் குறித்து எந்தக் கவலைகளுமற்று சுற்றித் திரியும் பருவத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள். காலமும், நேரமும், சூழலும் குறித்த எந்தக் கவலையுமின்றி சுற்றித் திரியலாம். விளையாடிக் கொண்டிருக்கலாம். அதிலும் கட்டுப்படுத்த யாருமின்றி சுயமாய் வளரும் சிறுவர்களது வாழ்க்கையில் இச் சுதந்திரமும், விளையாட்டுக்களும் சர்வ சாதாரணமானவை.

அமிரோவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கடலில் வரும் ஒரு வெண்ணிறக் கப்பலைக் கண்டு வியக்கிறான். தெருவில் செல்லும் ஒரு முதியவனையும், அவனுடன் செல்லும் நோயால் துன்புறும் பெண்ணையும், இன்னும் ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலின் துணையுடன் செல்லும் ஒருவனையும் கண்டு அனுதாபமுறுகிறான். தன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு பணம் தராமல் ஏமாற்றிச் செல்பவனைத் துரத்திச் சென்று பிடித்து, தண்ணீருக்குரிய பணத்தினை வாங்கிக் கொண்டு புன்னகைக்கிறான். தன்னிடமிருந்து பெரிய பனிக்கட்டிப் பாளத்தைப் பறித்துக் கொண்டு ஓடுபவர்களை விரட்டிச் சென்று அவர்களிடமிருந்து அதை மீளப் பெற்று வெற்றியில் திளைத்து, திருடனை நோக்கிப் பழித்துக் காட்டுகிறான். தனக்குத் திருட்டுப் பட்டம் சுமத்தி, தனது தொழில் போகக் காரணமாக இருந்த வெள்ளையனோடு சண்டை போடுகிறான். புத்தகக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விட்டிருக்கும் புத்தகங்களை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறான். தனது சிறிய இருப்பிடத்தில் கோழிக் குஞ்சொன்றைக் கொஞ்சி வளர்க்கிறான்.

அவனது வசிப்பிடத்துக்கருகில் இருக்கும் பிற நாட்டவரொருவரின் வீட்டில் ஒரு விமானம் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் அதைப் பார்த்து பரவசத்தில் திளைப்பவனுக்கு, விமானங்கள் மேல் ஆசை வந்து விடுகிறது. திருட்டுத்தனமாகச் சென்று அதைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறான். புத்தகக் கடைகளில் தொங்க வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் விமானங்களின் படங்களிட்ட புத்தகங்களை வாங்கி வந்து விமானங்களின் படங்கள் பார்த்து ரசிக்கிறான். புத்தகங்களை மேலும் மேலும் வாங்குகிறான்.

நிறைய வெளிநாட்டுப் புத்தகங்கள் வாங்கிறாயே? உனக்கு வெளிநாட்டு பாஷைகள் கூடத் தெரியுமா?’

இல்லை..நான் அவற்றை அவற்றிலுள்ள படங்களுக்காக வாங்குறேன்

நீ வாசிக்க விரும்புகிறாயென்றால், என்னிடம் ஃபார்ஸி மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அவை விலையும் குறைவு.’

எனக்கு வாசிக்கத் தெரியாது.’

உன்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோருக்குமே வாசிக்கத் தெரியுமே.’

புத்தகக் கடைக்காரனுடனான மேற்படி சம்பாஷணையைத் தொடர்ந்து, வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தையும் கடற்கரையில் வைத்து ஆவேசத்தோடு, துண்டு துண்டாய்க் கிழித்தெறிகிறான் அமிரோ.

நான் வாசிக்கணும்.. நான் எழுதப் படிக்கணும்ஏன் என்னால் முடியாது.. ஏன் என்னால் முடியாது?’ எனக் கேட்டுக் கத்துகிறான்.

ஏன் அவனால் முடியாது? அவன், அருகிலிருக்கும் பாடசாலையொன்றுக்குச் சென்று அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான். அந்தப் பள்ளிக்கூட அதிபர் அவனைப் பார்த்து, அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்ள, முதலாம் வகுப்பில் சேர வேண்டும் என்றும் அந்த வயதை அவன் தாண்டி விட்டான் என்றும் கூறுகிறார். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சுயமாக வந்திருக்கும் அவனை மாலை நேர வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார். அவனுக்கு அரிச்சுவடி எழுத்துக்கள் மனனமிடச் சிரமமாக இருக்கின்றன. ஆனால் அவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும் அவனை அரிச்சுவடியை மனனமிட்டு அவ்வெழுத்துக்களை ஒரே மூச்சில் கூற வைக்கின்றன.

ஒருவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும், திறமையும், நேர்மையும், அடிப்படைக் கல்வியும்தான் அவனது வெற்றிகளுக்குக் காரணமாகின்றன என்பதை விளக்கும் ஈரானியச் சிறுவர் படம்தான் ‘The Runner (Davandeh)’.  தனது திரைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள ஈரானியத் திரைப்பட இயக்குனர் அமிர் நாத்ரியின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இத் திரைப்படமானது, ஈரானியச் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதும், முழு சர்வதேசத்தையுமே தன் பக்கம் ஈர்த்த யதார்த்தத் திரைப்படங்களில் ஒன்று என்றும் தயங்காது குறிப்பிடலாம்.

அண்மைய தசாப்தங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஈரானிய சிறுவர் திரைப்படங்களின் வழிகாட்டியாக இத் திரைப்படத்தைக் கருதலாம். யதார்த்தம், அப்பாவித்தனமும் நேர்மையும் வெளிப்படும் குழந்தைகளின் பார்வையினூடாக சமூக நடைமுறைகளைக் கூறுதல், எளிய வாழ்க்கை முறை, சமூக ஏற்றத் தாழ்வுகளை பட்டவர்த்தனமாக்கல், முழுத் திரைப்படத்தையும் குழந்தையின் தோளில் ஏற்றி வைத்து திரைப்படத்தை நகர்த்திச் செல்லல், குழந்தைகளின் வாழ்க்கையை வளர்ந்தோருக்கான பாடமாக்கல் என அனைத்துக்கும் முன்னுதாரணமாகக் குறிப்பிடக் கூடிய திரைப்படமாக இத் திரைப்படத்தையே குறிப்பிட வேண்டுமென சர்வதேச திரையியலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சிறுவர் திரைப்படத்தின் தாக்கம் சர்வதேசத்தையே பேச வைத்திருக்கிறது எனில், அத் திரைப்படத்தின் கருவும், எடுத்துக் கொண்ட விடயத்தை திறம்படச் சொன்ன விதமும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் மனிதர்களின் இயல்பான நடிப்பும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதன்றி வேறேது?

திரைப்படத்தின் தலைப்பே ஒரு ஓட்ட வீரனின் இலக்கைக் குறிப்பிடுகிறது. திரைப்படத்திலும் கதையின் நாயகனான சிறுவன் அமிரோ மூச்சு வாங்க வாங்க வேகமாக ஓடிக் கொண்டேயிருக்கிறான். சக சிறுவர்களுடனான பந்தய ஓட்டங்கள், பணம் தராமல் சைக்கிளில் விரைந்து செல்பவனைத் துரத்திச் சென்று பிடிக்கும் ஓட்டம், விரைந்து செல்லும் புகையிரத்தை இரயில் தண்டவாளத்திலேயே ஓடித் தொட்டு விடும் ஓட்டம் எனப் பல ஓட்டங்கள் திரைப்படத்தில் வியாபித்து, சிறுவர் உலகின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகின்றன. அந்த ஓட்டங்களே, ஊக்குவிக்க யாருமின்றியிருக்கும் அவனுக்கு எதிராக பூதாகரமாகத் தோன்றும் கல்விச் சமூகத்தில் அவனையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் நம்பிக்கையும் அவனுக்குள் தூண்டுகின்றன.

த் திரைப்படத்தைப் போலவே ஒரு சிறுமியின் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் இன்னுமொரு ஈரானியத் திரைப்படம்ஹயாத்’. ஈரானியக் கிராமமொன்றில் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வரும் 12 வயதுச் சிறுமி ஹயாத், பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அப் பரீட்சையில் சித்தியடைந்தாலே அவளுக்கு மேலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவள் மிகுந்த ஊக்கத்தோடு பரீட்சைக்குத் தயாராகிறாள். பரீட்சையன்று விடிகாலையில் அவளது தந்தை கடும் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். தந்தையைக் கவனிக்க தாயும் செல்ல வேண்டிய நிலைமையில், அவர்களது கைக் குழந்தையை ஹயாத்திடம் விட்டு விட்டு அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்கிறார்கள். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்தபடி அன்று அவள் பரீட்சையை எவ்வாறு எழுதினாள் எனும் ஒரு நாள் அனுபவத்தைத் திரைப்படமாக்கி, அதன் மூலமாக ஈரானிய சமூகத்தில் பெண் கல்வியின் அத்தியாவசியத்தை பகிரங்கமாக எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் குலாம் ரெஸா ரம்ஸானி.

‘The Runner’ திரைப்படம் வெளிவந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளி வந்த இத் திரைப்படத்துக்கும் பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு ஜூரி விருது (ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா 2005), சிறுவர் திரைப்பட ஜூரி விருது (இந்தியா கோல்டன் எலிபெண்ட் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (இஸ்த்தான்புல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா 2005), யூனிசெப் விருது (Centre International Du Film Pour L’enfance et la Jeunesse, IRAN UNICEF Award), சிறப்பு ஜூரி விருது (ஆர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்படவிழா 2005), சிறப்பு விருது (செக்குடியரசு திரைப்படவிழா 2005), (உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா 2005), (பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா 2005) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

பல போதனைகளைச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஹயாத் எனும் இத் திரைப்படத்தின் ஆரம்பம் முதற்கொண்டு சிறுமி ஹயாத்தைப் பீடித்துக் கொள்ளும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அவள் பரீட்சை எழுதப் போராடும் போராட்டமும், நெருக்கடியும் நம்மையும் திணறச் செய்கின்றன. அச் சிறுமியின் கல்விக்கான போராட்டம் அச் சிறுமியுடையது மாத்திரமேயல்ல. உலகம் முழுவதும் நிலைமை அவ்வாறுதான் இன்றும் இருக்கிறது. எவ்வளவுதான் நவீன மற்றும் நாகரீக மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பெண்களுக்கான கல்வி என்பது இன்றும் கூட இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகமுள்ள ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் அதிகமாக, இன்றும் அதனது தாக்கத்தை வெளிப்படையாகக் காணலாம்.

திரைப்படங்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பதற்கு அமைவாக ஈரானிய சமூகத்தில் புரட்சிக்கு முன்னும் பின்னும் சிறுவர்களுக்கான கல்வியின் அவசியத்தை விளக்கும் மேற்கூறப்பட்ட திரைப்படங்கள் அக் காலத்தில் பல சிறுவர்களது கல்விக்கு வழிகாட்டியாக அமைந்தவை. கல்விக்கு வழியின்றியும், புறக்கணிக்கப்பட்டும் வாழும் எத்தனை சிறுவர், சிறுமியர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்? எத்தனை பேருக்கு நம்மால் உதவ முடிந்திருக்கிறது?  வெறும் கேளிக்கைகளுக்காக திரைப்படம் எடுக்காமல், தமது படைப்புகள் மூலம் சமூகத்தை விழிப்புணர்வுக்குள்ளாக்கிய இத் திரைப்படங்களின் இயக்குனர்களை சர்வதேசமே பாராட்டுவது அதற்காகத்தான்.

சிறுவர்களுக்கான கல்வியின் தேவை குறித்த கருவைக் கொண்டு எடுக்கப்பட்டு, சர்வதேச விருதுகளை வென்ற இலங்கைத் திரைப்படம்விது  இன்னுமொரு குறிப்பிடத்தக்க சிறுவர் திரைப்படம் ஆகும். சமூகத்தில் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்படும், சேரியில் வசிக்கும் விலைமாது ஒருத்தியின் மகனான சிறுவன் விதுவை, அரசாங்கப் பாடசாலையொன்றில் சேர்த்து விட தாய் போராடும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் அஷோக ஹந்தகம எடுத்த இத் திரைப்படமும்கல்விதனி மனித உரிமைஎன்பதைப் பேசுகிறது.

ன்று சிறுவர் திரைப்படம் என்றாலே பிற மொழித் திரைப்படங்களையே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது. தமிழிலும் சிறுவர் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன அல்லவா எனக் கேட்பீர்கள். உண்மையில், அவ்வாறான முத்திரையோடு இதுவரை வெளி வந்துள்ளவை எவையும் சிறுவர் திரைப்படங்களே அல்ல. அவை சிறுவர்களை நாயகர்களாகக் காட்டி, வளர்ந்தவர்களுக்குப் பாடம் போதிக்க முற்படும் பெரியவர்களுக்கான திரைப்படங்கள் அல்லது பேய், பூத, அமானுஷ்யங்களைக் களமாகக் கொண்டு சிறுவர்களை ஈர்க்க முற்படும் மாயாஜால திரைப்படங்கள்.

உண்மையில் திரைப்படம் என்பது என்ன? நடிகர்கள் கண்ணாடியைப் பார்க்கிறார்கள். அக் கண்ணாடி முன் நின்று, அதே கண்ணாடியினூடாக பார்வையாளர்களாகிய நாம் அவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களைக் காட்டும் அக் கண்ணாடி அவர்களோடு எம்மைக் காட்டுவதில்லை. ஆகவே திரைப்படமானது, நிஜமான, யதார்த்தமற்ற ஒரு மாயத் திரை. எனினும் யதார்த்த வாழ்வியலை நமக்குச் சுட்டிக் காட்டி, படிப்பினைகளைக் கற்றுத் தரும், சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்கும் மிகத் திறன் வாய்ந்த ஊடகம்.

அந்த ஊடகத்தில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் பங்கு மிகவும்  முக்கியமானது. அவற்றை வெறுமனே பொழுதுபோக்குச் சித்திரங்களென ஒதுக்கி விட முடியாது. உலகத்தில் ஜனித்து, ஒரு தசாப்தம் மாத்திரமே கழிந்த நிலையில் சிறுவர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டங்களை சிறுவர்களின் தோளில் நின்று, அவர்களது பார்வையினூடு பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். அவ் வாழ்வியல் போராட்டங்களைப் பதிவாக்கி சர்வதேசம் முழுவதும் கொண்டு சேர்ப்பது மாத்திரமன்றி, அப் படைப்புகளின் மூலமாக சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதும் சாதாரணமானதல்ல. அவ்வாறான திரைப்படங்களையும், அதன் இயக்குனர்களையும் எப்போதுமே நாம் கொண்டாட வேண்டும்.

- எம். ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - பேசாமொழி, பிரதிபிம்பம் (தினகரன் வாரமஞ்சரி), தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வல்லமை