Tuesday, September 1, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !


        அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

        மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

        இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

        இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

        தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

        போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

        'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

        போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

        குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்நன்றி - உயிர்மை