Thursday, September 1, 2016

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்
அம்மாவின் ரகசியம்
(குறுநாவல்)
சுநேத்ரா கருணநாயக
தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் அம்மாவின் ரகசியம். சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப்படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத தி சிறீலங்கா றிப்போர்ட்டர் பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

அம்மாவின் ரகசியம் ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.

முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், அம்மாவின் ரகசியமும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.

இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.

இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.


நன்றி
# எழுத்தாளர் தேவகாந்தன் #வல்மை இதழ்

Thursday, August 11, 2016

வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் !       எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை எந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கண்ட மனிதனொருவனும், காணத் துடிக்கும் மனிதனொருவனும் எக் கட்டத்தில் ஒன்றாக இணைகிறார்கள்? எது அவர்களிடையே ஒரு ஒற்றுமையாகக் காணப்படுகிறது? எது அவர்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரியும்போது வலியை ஏற்படுத்துகிறது? போன்ற கேள்விகளை நம்மிடம் விட்டுவிட்டு முடிகிறது 'ஜிபோரோ (The Way Home - வீட்டிற்கான வழியில்)' எனும் கொரிய தேசத்துத் திரைப்படம்.
  
        நகரத்திலிருந்து புறப்பட்டு ஒடுங்கி வளைந்து செல்லும் ஒரு மலைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பேரூந்தினுள்ளே கதாநாயகனான ஏழு வயதுச் சிறுவனும் அவனது தாயும் அமர்ந்து உரையாடும் காட்சியினூடு திரைப்படம் தொடங்குகிறது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த சிறுவன், தான் முதன்முதலாக சந்திக்கப் போகும் தனது கிராமத்து அம்மம்மா பற்றி தாயிடம் கேட்கிறான். அவள் செவிடா, ஊமையா, பயங்கரவாதியா போன்ற கேள்விகள் அவனது மனதுக்குள்ளே சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்க அவற்றையே தாயிடம் வினவுகிறான். அவள் பதிலளிப்பதில்லை. பேரூந்தினுள்ளே அக் கிராமத்து பாமர மக்களின் வளர்ப்புப் பிராணிகளோடு அவர்களது உரையாடல்களும் கூட சிறுவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அவன் எப்போதும் தனது கையடக்க விளையாட்டுக் கருவியை இயக்கி விளையாடிக் கொண்டேயிருக்கிறான்.

          நகரங்களில் தனிமைப்படுத்தப்படும் சிறுவர்களுக்கென பெரும்பாலும் விளையாட்டுக் கருவிகளே பொழுதுபோக்கச் செய்யும் முக்கிய சாதனங்களாக அமைகின்றன. ஓடி விளையாடவென வெளியில் செல்ல அனுமதியில்லை. வீட்டுக்குள்ளேயும், ஒரு அறைக்குள்ளேயும் முடங்கச் செய்யப்படும் சிறுவர்கள் தமது இழப்புக்களுக்கு வடிகாலாக விளையாட்டுப் பொருட்களிடமும் தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்களிடமும் சரணடைந்து விடுகின்றனர். அவர்களது தனித்த வாழ்வில் அன்பைக் காட்டவோ, அன்பைப் பற்றிப் போதிக்கவோ எவரும், எதுவும் இருப்பதில்லை. இவ்வாறான நிலையில் விளையாட்டுப் பொருட்களிடமும், கடைகளில் வாங்கும் துரித உணவுகளிலும் தனித்து வாழ்ந்த சிறுவனொருவன், தனது தாயின் தொழில் நிமித்தம் காரணமாக எந்த வசதிகளுமற்ற மலைக் கிராமமொன்றில் தனது பாட்டியுடன் ஒரு மாத காலம் ஒன்றாகத் தங்க நேர்ந்தால் என்னவாகுமென்பதை மிகவும் உணர்வுபூர்வமாகச் சொல்கிறது திரைப்படம்.

          மலைக் கிராமத்தின் ஒரேயொரு பேருந்துத் தரிப்பிடத்தில் தாயையும், மகனையும் இறக்கிவிட்டுச் செல்லும் சிறிய ரக பேரூந்து நகர்ந்ததும் அக் கிராமம் பிடிக்கவில்லையென மகன் தாயுடன் வர மறுக்கிறான். தாய் அவனை அடித்து அழைத்துச் செல்கிறாள். நூலான்படைகள் தொங்கி, பூச்சிகள் ஊர்ந்து திரியும், உடைந்து விழ அண்மித்திருக்கும் பாட்டியின் குடிசை சிறுவனுக்கு அறுவெறுப்பூட்டுகிறது. அவன் பாட்டியின் கிழிந்திருக்கும் ஒரேயொரு பாதணியில் சிறுநீர் கழிப்பதன் மூலம் தனது வெறுப்பினை வெளிப்படுத்துகிறான். வாயோரங்களில் சுருக்கத்தோடு, அனுபவங்கள் கண்டு வாடி உலர்ந்து போன பாட்டி அன்பாக தலையை தடவி விடுவதைக் கூட அவன் விரும்பவில்லை. முதியவளுக்கான சில பரிசுப் பொருட்களை மகள் எடுத்து வந்திருக்கிறாள். அத்தோடு தனது மகனுக்கான நொறுக்குத் தீனிகளையும், இனிப்புக்களையும் கூட அங்கு கொடுத்து விட்டு, மகள் அங்கிருந்து புறப்படுகிறாள். கூன் விழுந்த  ஊமைப் பாட்டியிடம் தனித்து விடப்படும் சிறுவன் என்னவாகிறான்?

          முதியவள் தன்னைத் தொடும் போதெல்லாம், கல்லை எடுத்து அடிக்க ஓங்கும் சிறுவன், அவளை செவிடு, ஊமையெனவும் திட்டுகிறான். அவள் உணவாகக் கொடுப்பவற்றை உதாசீனம் செய்துவிட்டு தனது தாய் விட்டுச் சென்ற நொறுக்குத் தீனிகளையே உணவாகக் கொள்கிறான். தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த விளையாட்டுப் பொருட்களோடு விளையாடி அலுத்துப் போன சிறுவன் ஊர் பார்த்துவரச் செல்கிறான். அம் மலைக் கிராமம் எந்தவொரு சுவாரஸ்யத்தையும் அவனில் ஏற்படுத்தவில்லை. சுற்றி வர ஓரிரு ஒற்றையடிப் பாதைகளோடு எங்கும் பழமையும், பூரணமுமற்ற குடிசை வீடுகளே இருக்கின்றன. அவன் சலிப்புறுகிறான்.

          சிறுவர்களது உள்ளங்கள் மிகவும் விசித்திரமானவை. அவை வித்தியாசங்களையும் மாற்றங்களையும் எளிதில் உணர்பவை. பல விடயங்களில் அவர்களுக்கு ஏற்படும் ஐயங்கள் அவர்களைத் தேட வைத்து தெளிவுபடச் செய்கின்றன. தொந்தரவெனச் சொன்னபடியே பாட்டி தையல் வேலைக்குப் பயன்படுத்தும் கையூசிக்கு நூல் கோர்த்துக் கொடுக்கும் சிறுவன், கரப்பான் பூச்சியைக் கண்டு அலறுகிறான். பாட்டி எந்தவித பூச்சிகொல்லிகளினதும் உதவியற்று சர்வ சாதாரணமாக அதனைப் பிடித்து வெளியே எறியும்போது ஆச்சரியமுறுகிறான். அவன், தனது ஒரே பொழுதுபோக்கு விளையாட்டுக் கருவியின் பேட்டரிகள் தீர்ந்துபோனதும் திகைத்துப் போகிறான். பேட்டரி கேட்டும், அதற்கான பணம் கேட்டும் பாட்டியிடம் சண்டை போடுகிறான். கோபத்தில் பாட்டியின் பொருட்களை உடைக்கிறான். பாதணிகளை ஒளித்து வைக்கிறான். தன்னாலியன்ற கொடுமைகளை பாட்டிக்குச் செய்கிறான்.

          பாட்டி உறங்கும்போது அவளது கொண்டையில் முடிந்திருக்கும் ஒரு கொண்டை ஊசியைத் திருடும் சிறுவன், அதனை எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடுகிறான். கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரேயொரு கடையில் அவனுக்கான பேட்டரிகள் இல்லை. அக் கடைக்குச் சொந்தக்காரி, நகரத்துக்குச் செல்லும் வழியைக் காட்டிக் கொடுக்கிறாள். நகரத்திலும் அவனது விளையாட்டுக் கருவிக்குப் பொருத்தமான பேட்டரிகள் இல்லை. ஏமாற்றத்தோடு கிராமத்துக்கு வரும் சிறுவன் பாதை தவறித் திணறி விசும்புகிறான்.

          பாட்டியின் அன்பு மொழிகளற்றது. அவளது பொறுமையும் எல்லையற்றது. அவள் சைகைகளாலேயே எல்லாவற்றையும் கேட்கிறாள். தன்னைத் தொடக் கூட விடாத சிறுவனிடம் உணவாக என்ன வேண்டுமென அவள் வினவும்போது அவன் 'பிட்ஸா, ஹம்பர்கர், கெந்துகி சிக்கன்' தனக்கு வேண்டுமெனக் கேட்கிறான். இவை எவை பற்றியும் அறியாத முதியவள் அவன் சொன்னதையும், சித்திரத்தில் காட்டியதையும் வைத்து, கிழங்குகளை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஒரு கோழியை வாங்கி வந்து அவளுக்குத் தெரிந்த விதத்தில் சமைத்துக் கொடுக்கிறாள். அது, தான் கேட்ட 'கெந்துகி சிக்கன்' அல்லவெனக் கூறி சிறுவன் அழுகிறான். பின்னர் தனக்கெதுவும் வேண்டாமெனக் கூறிப் படுத்துக் கொள்ளும் சிறுவன், நள்ளிரவில் பசிக்க, எழுந்து அனைத்தையும் உண்கிறான். காலையிலெழுந்து பார்ப்பவன் பாட்டி, குளிர் காய்ச்சலால் நடுங்குவதைக் கண்டு தனது போர்வையை எடுத்துப் போர்த்தி விடுவதோடு, தான் திருடிய கொண்டை ஊசியை அவளது கொண்டையில் சூடி விடுகிறான். பின்னர் தனக்குத் தெரிந்த விதத்தில் அவளுக்கு உணவையும் பரிமாறுகிறான்.

          இவ்வளவு காலமும் தான் வெறுப்போடு பார்த்து வந்த பாட்டியின் மீது அன்பும் கருணையும் கொள்ளச் செய்தது எது? சிறுவன் பாட்டிக்குச் செய்த சங்கடங்கள் ஏராளமென்ற போதிலும், பாமரப் பாட்டியின் பொறுமை அவனுக்கு பல பாடங்களைக் கற்பித்திருக்கின்றன. அவை எந்தவொரு சர்வ கலாசாலைகளிலும் கற்பிக்கப்பட முடியாதவை. அனுபவமும், அமைதியும், பொறுமையும், தன்னலமற்ற சேவையும் மாத்திரமே கற்பிக்கக் கூடியவை.

          நகரத்துச் சந்தைக்கு சிறுவனை அழைத்துச் செல்லும் மூதாட்டி, தர்ப்பூசணிகளையும், கிழங்குகளையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சிறுவனுக்கு சப்பாத்துக்களையும், அவன் விரும்பிய உணவு வகைகளையும் வாங்கிக் கொடுக்கிறாள். தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் சிறுவனுக்காகச் செலவழித்த முதியவள், அவனை மட்டும் பேரூந்திலேற்றி கிராமத்துக்கு அனுப்பி விட்டு, மலைப்பாதை நெடுகவும் கூன் முதுகோடு நடந்து கிராமத்துக்கு வருகிறாள். கிராமத்துப் பேரூந்துத் தரிப்பிடத்தில் வந்திறங்கி பாட்டிக்காகக் காத்திருக்கும் சில மணித்தியாலங்களில் பாட்டியின்றிய தனிமையின் வலியை சிறுவன் வெகுவாக உணர்கிறான். பாட்டி விளையாட்டுக் கருவிக்கு பேட்டரிகள் வாங்குவதற்காக பணம் கொடுக்கும்போது அழுகிறான்.

        தன்னைத் திரும்பவும் நகரத்துக்கு அழைத்துச் செல்ல தான் வரப் போவதாக அவனது அம்மா அனுப்பிய கடிதம் கிடைத்ததும், அவன் கவலையடைகிறான். எழுதப் படிக்கத் தெரியாத மூதாட்டிக்காக தபாலட்டைகளில் அவன் பல கடிதங்களையும் சித்திரங்களையும் வரைந்து வைக்கிறான். பாட்டி சுகவீனமுற்றிருக்கும் போது எதனைத் தனக்கு அனுப்ப வேண்டும்? பாட்டி தன்னைப் பார்க்க விரும்பும்போது எதனை அனுப்ப வேண்டும் எனச் சொல்லிக் கொடுப்பதோடு அந்த எழுத்துக்களை எழுதவும் கற்பிக்கிறான். பாட்டிக்கு சுகவீனமென்றால் தான் உடனே விரைந்து வருவதாகவும் வாக்களிக்கிறான். பாட்டியைப் பிரியப் போவதையெண்ணி வேதனையுடன் அழும் அவன் நள்ளிரவில் எழுந்து பல ஊசிகளில் நூலைக் கோர்த்து அவளுக்காக வைக்கிறான். பிரியப் போகும் வேதனையில் இரவு முழுவதும் உறங்காதிருந்த சிறுவன், தன்னைக் கூட்டிச் செல்ல வரும் தாயுடன், மனம் நிறைய மிகுந்த வலியோடு புறப்படுகிறான். சிறுவன் கொடுத்த தனக்குப் ப்ரியமான பட அட்டையோடு தனித்துவிடப்படும் மூதாட்டி கிராமத்தின் இலையுதிர் மரங்களிடையே நடக்கும் காட்சியோடு நிறைவுறுகிறது திரைப்படம்.

         இத் திரைப்படத்தை எல்லா பாட்டிமார்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறுகிறார் திரைப்படத்தின் இயக்குனர் 'லீ ஜ்யொங் ஹெயாங்'. 2002 ஆம் ஆண்டு கொரியாவில் வெளிவந்து பல சர்வதேச திரைப்படங்களில் பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது இத் திரைப்படம். கொரிய திரைப்பட விழாக்களிலெல்லாம் வெற்றியைச் சூடி வந்த இத் திரைப்படம் இப் பெண் இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் பல பாராட்டுக்களையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது. அதிலும் சிறந்த திரைப்படத்துக்கும், சிறந்த திரைக்கதைக்குமான ஆஸ்கார் விருது இத் திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது திரைப்படத்தின் கதாநாயகியாக மூதாட்டி 'கிம் எல் பூன்' நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட இல்லை எனினும் பார்ப்பவர்கள் அனைவரையும் தன் பக்கம் நடிப்பின் மூலம் ஈர்த்து விடுகிறார். சிறுவனாக நடித்திருக்கும் 'யு செங் ஹோ'வின் முதல் திரைப்படம் இதுதான். இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இச் சிறுவனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்துள்ளது.

          சிறுவன் வழி தவறித் திணறி அழும்போது தனது சைக்கிளில் கூட்டிக் கொண்டு வந்து விடும் முதியவரும், சிறுவனை மாடு முட்ட வரும்போது முன்னே பாய்ந்து காப்பாற்றும் அயல் வீட்டுச் சிறுவனும், பாட்டியின் பேரனுக்காக சில இனிப்புக்களை இலவசமாகக் கொடுக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணும், தனது கிராமத்திலுள்ள ஒரு வயதான நோயாளிக்கு தனக்குக் கிடைத்த பெறுமதியான பரிசுப் பொருட்களையெல்லாம் அன்பளிப்பாகக் கொடுக்கும் பாட்டியும் கிராமத்து வெள்ளந்தித்தனத்தையும், பாசாங்கும் சுயநலமுமற்ற பாசத்தையும் பிரதிபலிக்கின்றனர்.

          திரைப்படமானது, அழகானதொரு கிராமத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதன் பரப்புக்கள் குறுகியவை என்றபோதிலும், சிறந்த ஒளிப்பதிவானது, அக் கிராமத்தில் வாழ்ந்த அனுபவமொன்றை பார்வையாளர்களிடம் விட்டுச் செல்கிறது. படத்தில் அதிகளவு சம்பாஷணைகள் இல்லை. மௌனங்கள் பல கருத்துக்களை பார்வையாளர்களிடம் விதைத்து விடுகின்றன. அவை தெளிந்தவை. அவரவர் உணர்வுகளில் சலனங்களை ஏற்படுத்தாமல் வந்து செல்லும் பின்னணி இசையும், மலைக் கிராமத்தின் இயற்கை ஒலிகளும் மிக அருமையாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. 
மிகவும் தைரியமாக எழுபத்தைந்து வயது மூதாட்டியை கதாநாயகியாகவும், ஏழு வயதுச் சிறுவனை கதாநாயகனாகவும் நடிக்க வைத்து ஒரு காலப் பதிவைச் செய்திருக்கிறார் இயக்குனர்.


         திரைப்படத்தைப் பார்க்கும் அனைவரையும் இத் திரைப்படமானது தனது பால்ய காலங்களை மீட்டிப் பார்க்கச் செய்யும். குடும்பத்தில் மூத்தவர்களின் அரவணைப்பும், அன்பும் எப்போதுமே திகட்டாதவை. அவை சுயநலமற்றவை. எப்பொழுதும் யாசிக்கச் செய்பவை. எக் காலத்திலும் மனமெங்கும் வியாபித்து நிற்பவை. குழந்தைப் பருவத்தினருக்கு இந்த அன்பும், அரவணைப்பும் அயராது கிடைக்கும்போது அவை குழந்தைகளை நற்பிரஜைகளாக உருவாக்கிவிடும். இந் நவீன காலத்தில் நாம் இதனை இழந்துகொண்டிருக்கிறோம். மூத்தவர்களின் அன்பைப் புறக்கணித்து அல்லது அவர்களுடன் உறவாட நேரமற்று ஒதுங்கிச் செல்லும் நாகரீகப் போக்கு, வளரும் சந்ததியை வெகுவாகப் பாதிக்கிறது. அவ்வாறு தனித்து வளரும் குழந்தைகள் சுயநலத்தோடும், மனிதர்களைப் புறக்கணித்து நவீன கருவிகளோடு நேசம் கொள்ளும் போக்கும் தற்போது அதிகளவில் காணப்படுகிறது. நமக்குக் கிடைத்த இனிமையான பால்ய காலம் ஒருபோதும் எமது சந்ததிக்குக் கிடைக்கப் போவதில்லை. அவை மாற்றமுற்றுக் கொண்டேயிருக்கும். ஆனால் அன்பும், பாசப் பரிமாற்றங்களும், அரவணைப்புக்களும் ஒருபோதும் மாறாதவை. வற்றாதவோர் நீரூற்றைப் போல அவை குழந்தைகளுக்கு எப்பொழுதும் தொடர்ச்சியாகக் கிடைக்கச் செய்யவேண்டும். அது மாத்திரமே ஒவ்வொரு சந்ததியையும் அன்பினால் தலைநிமிரச் செய்யும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - ஆக்காட்டி, எதுவரை, பேசாமொழி, வல்லமை, பதிவுகள், காற்றுவெளி