Thursday, September 1, 2016

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்




























அம்மாவின் ரகசியம்
(குறுநாவல்)
சுநேத்ரா கருணநாயக
தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்

வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் அம்மாவின் ரகசியம். சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப்படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத தி சிறீலங்கா றிப்போர்ட்டர் பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

அம்மாவின் ரகசியம் ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.

முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், அம்மாவின் ரகசியமும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.

இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.

இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.


நன்றி
# எழுத்தாளர் தேவகாந்தன் #வல்மை இதழ்

0 comments: