Tuesday, January 9, 2018

‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு குறித்த நூலாய்வு - எழுத்தாளர் மேமன்கவி

     உலக மொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியப் படைப்புக்களை சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 1970 ஆண்டுகளின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம்.

     சமீபத்தில் சமகால நவீன சிங்களக் கவிஞர்கள் பத்துப் பேரின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக இறுதி மணித்தியாலம்எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு இக் காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத் தொகுப்பில் அடங்கியிருக்கும் கவிதைகள் அனைத்தும் நேரடியாக சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


    இத் தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வதானால், இத் தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் அனைவரும் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல், மேலும் இனம், மதம், சாதி, மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இக் கவிஞர்கள் இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

     இத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதங்களிலும் சிறப்பு பெறுகின்றன.

     முதலாவது, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக் கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல், தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன்  மொழிபெயர்த்திருப்பது என்பதை ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன்.

     இரண்டாவது, அக் கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்களம் - தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக் கருத்து போர் காலச் சூழலில், உயிர் -உடைமை இழப்பு, காணாமல் போனவர்கள், விதவைகள், அனாதைகள்   போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அத்தகைய கவிதைகள் இத் தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

     ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரை மேலும் பல பிரச்சினைகள் பற்றி அவை சார்ந்த அனுபவங்களைக் கொண்டு சிங்களக் கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.  1977 ஆம் ஆண்டின் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் பற்றியெல்லாம் கலைத்துவமாகவும், தர்க்கபூர்வமாவும் சிங்கள நவீன கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது  இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.

     அத்தோடு பெண்ணியம் சார்ந்த குரலையும், அழகாகவும், ஆழமாகவும் நுண்ணிய முறையில் சிங்களக் கவிதைகள் பேசியிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் வகையிலான கவிதைகளும் இத் தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. இத்தகைய பல அனுபவங்களை வெளிப்படுத்தும் சிங்களம் மற்றும் தமிழ் சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றை நாம் வாசித்திருப்பினும், அந்த அனுபவங்கள் தரும் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கவிதைகளில் வாசிக்கின்ற பொழுது, சிலிர்ப்பான ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு ஆளாக்கப்பட்டு, அப் பிரச்சினைகளைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

     சம கால நவீன சிங்களக் கவிதையின் போக்கையும், வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இத் தொகுப்பு தந்திருக்கிறது. இத் தொகுப்பில் அமைந்துள்ள வீச்சு மிக்க ஒவ்வொரு கவிதைகளைப் பற்றியும்  தனித்தனியாகவும் விரிவாகவும் பேசலாம். பேச வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் விரிவஞ்சி இரண்டு கவிதைகளைப் பற்றி அதுவும் சுருக்கமாகப் பேசலாம் என நினைக்கிறேன்.

     ஒன்று, இத் தொகுப்பில் அமைந்துள்ள தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் 'அயல்வாசி' எனும் கவிதை. இக் கவிதை இரு மொழி சமூகத்தின் இடையிலான உறவாடல், இருப்பு நிலை பற்றியெல்லாம் பேசுகிறது. ஒரு சிங்களப் பெண்ணின் குரலில் வெளிப்படும் இக் கவிதை இப்படித் தொடங்குகிறது.

நுரை நிறக் கண்களுடைய ரகு

ஆழப் புதைந்த விழிகள்

     எனத் தொடங்கி இடையில்,

பணம் வேண்டாமெனச் சொன்ன மாதம்

வாங்கி வந்தான் ரகு

சிறு வண்ணப் பூக்களிட்ட சேலையொன்றையும்

நிறைய வளையல்களையும்



சேலை உடுக்கத் தெரியாதென்றதும்

அணிவித்து விட்ட ரகு

அழகு பார்த்தான் வளையல்களையுமிட்டு

'பொட்டு?’ நான் கேட்டேன்.

‘இல்லாவிட்டாலும் பரவாயில்லை’

என்றான் ரகு

     என நகரும் அக் கவிதை இப்படி முடிகிறது

பிறக்கக் காத்திருந்த குழந்தையின் தந்தை

தோடம்பழ பெட்டியினைத் தலையில் வைத்தபடி

அன்றாட உழைப்புக்காக நடந்து கொண்டிருக்கையில்

புறக்கோட்டையில் வெடித்த குண்டில்

மரித்துப் போன நாளன்று

துயருற்ற அளவுக்கு

கவலை தோன்றியது

இறுதியாக ரகு

என்னைப் பார்த்தபோது.

     இக் கவிதை என்ன பேசியது? எதைப் பற்றிப் பேசியது? என்ற கேள்விகளுக்கு உதாரணமாகக் காட்டிய மேற்குறித்த வரிகள் பதில் அளிக்கின்றன.

     அடுத்து இத் தொகுப்பில் அமைந்த கவிதையான  டீ. திலக பியதாஸவின் யுத்த களமொன்றின் இறுதிக் கணம் எனும் கவிதையைப் பற்றி பார்க்கலாம். இக் கவிதைக்கான முதல் வாசிப்பின் பொழுது உடனடியாக எனக்கு, புலம்பெயர் சூழலில் இயங்கும் ஈழத்தவரான ஆங்கிலத்தில் எழுதும் சுரேஷ் கனகராஜா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தலைப்பு 'கோப்ரல் பிரேமரத்னாவின் அஞ்சலிப்பா'. அக் கவிதை இறந்து போன ஒரு கோப்ரலுடன் ஒரு தமிழர் பேச, பியதாஸாவின் இக் கவிதை ஒரு இராணுவ வீரர் அவருடன் போரிடும் எதிரி படைவீரனைப் பற்றியும், அத் தருணத்தில் நிகழப் போகும்  மரணத்தைப் பற்றியும் சிந்திக்கும் வகையில் அமைகிறது.

     இக் கவிதையின் சில வரிகளை மாத்திரம் உதாரணம் காட்டினால் மட்டும், இக் கவிதை வெளிப்படுத்தும் மனோநிலையை முழுமையாக வெளிப்படுத்தியதாக இருக்காது என்பதனால் முழுக் கவிதையையும் இங்கே தருகிறேன்.

எனக்கு முன்னால்

என்னைக் குறிபார்த்தவாறு

ஆயுதமொன்றை  நீட்டியிருக்கும்

எதிரிப் படை வீரனை நோக்கி

நானொரு துப்பாக்கிக் குண்டை

விடுவிக்கவே வேண்டுமா?



அவ்வாறு நான் செய்யாதுவிடின்

துப்பாக்கி ரவையொன்று வரும்

என்னுடலைத் தேடி

துளைத்துச் செல்லும் முகமாக



ஆகவே வெற்றி அவனுக்கா, எனக்கா?

அவன் முந்திக் கொண்டால்

நாளைச் செல்லக் கூடும்

அவனது பெற்றோரைப் பார்த்து வர

அல்லது அவன் வரும் வரைக்கும்

கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்

மனைவி பிள்ளைகளிடம்.



அவ்வாறாயின், உடனடியாக

இந்த ஆயுதத்தை இயக்க வேண்டியது நானா?

அப்பொழுதுதான் எனக்கு நாளை

சம்பளத்தோடு சில மாதங்கள்

விடுமுறை கிடைக்கும்



செல்ல முடியும்

நான் வரும் வரை

கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்

பெற்றோர், மனைவி, பிள்ளைகளை

பார்த்து வர நாளை



ஆகவே முந்திக் கொள்ளும்

முதல் துப்பாக்கி ரவையில்

எழுதப்பட்டிருப்பது அவனது பெயரா

அல்லாதுவிடின் எனது பெயரா?

     இக் கவிதையில் எங்கும் இன அடையாளச் சொல்லாடல்கள் இல்லை என்ற வகையில் உலகப் பொதுவான போர் கலாசாரத்தின் இக்கட்டான தருணங்களைப் பேசுவதாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் சில சொல்லாடல்கள் மூலம் இக் கவிதையில் ஒலிக்கும் குரலுக்குரியவர் யார்  என்றும் அவர் முன்னால் நிற்கும் எதிரி படை வீரன் எவர் எனவும் தெரிய வரும்.

     ஆக, தமிழில் சிங்களக் கவிதைகள் படிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் இக் கவிதைகளைத் தமிழில்  தந்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பின் இம் முயற்சியானது, ஈழத்தில் சிங்கள மொழிக் கவிதைகளின் நேரடி மொழிபெயர்ப்பு முயற்சிகளில்  மிகக் கவனத்திற்குரிய முயற்சியாக இத் தொகுப்பு அமைகிறது.

     ஈழத்துக் கவிதை (கவனிக்க - ஈழத்துத் தமிழ்க் கவிதை மட்டுமல்ல) வளர்ச்சியினைப் பற்றி (இந்தியக் கவிதை என்றால் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளையும் இணைத்துப் பேசுவது மாதிரி) பேசுவதற்காகவும் இத் தொகுப்பு பயன்படும் என்பதோடு ஈழத்துக் கவிதை முயற்சிகளை (தமிழ் மட்டுமல்ல) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பு கவிதைகள் பயன்படும் என்று சொல்வதோடு, பயன்படவேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவாவாகவும் இருக்கிறது.

     இறுதியாக, தமிழக - ஈழத்து நவீன, பின்-நவீன கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்ல உத்தரவு.

கட்டாயமாக இத்தொகுப்பினை வாசியுங்கள்.’
- எழுத்தாளர் மேமன்கவி

நன்றி - 'பிரதிபிம்பம்' தினகரன் வாரமஞ்சரி, பதிவுகள் இணையத்தளம், வல்லமை, தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்

0 comments: