Monday, February 27, 2023

சர்வதேசத்துக்குக் கடனாளியாகப் பிறந்து கொண்டிருக்கும் இலங்கைக் குழந்தைகள் - எம்.ரிஷான் ஷெரீப் நேர்காணல்

இந்தியாவிலிருந்து வெளிவரும் 'மக்கள் குரல்' பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலின் முழுமையான வடிவம்.




1. இலங்கையின் தற்போதைய நிலைமை எப்படியிருக்கிறது?

    வரலாற்றில் ஒருபோதும் காணப்படாத அளவுக்கு ஒரு பாரிய நெருக்கடியை தற்போது இலங்கையில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு, அனைத்திலுமான விலைவாசி அதிகரிப்புகள், ஒரு நாளைக்கு ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலான மின்சாரத் தடை போன்ற பலவற்றால் மக்கள் தினந்தோறும் மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து கொண்டே போகிறது. இலங்கை மத்திய வங்கியின் டாலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் மற்றும் காகிதக் கொள்வனவுகள் இடைநின்று போயுள்ளன. இதனால் பரீட்சைத் தாள்களை அச்சிட காகிதங்கள் இல்லாமல் அரசாங்கப் பரீட்சைகள் பலவும் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இவ்வாறான காகிதத் தட்டுப்பாடுகள், மின்சாரத் தடை, புகையிரத மற்றும் பேரூந்துக் கட்டணங்களின் அதிகரிப்புகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத்தான் பெரிதும் பாதிக்கின்றன.

  பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது நாட்டவர்களுக்கு, தற்போது இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நாட்டவர்களும், ரஷ்யா, உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளும்தான் வழமையாக இலங்கைக்கு அதிகளவில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களது வருகை நின்று போயுள்ளமையால், சுற்றுலாத் துறை வருமானத்தில் தங்கியிருக்கும் இலங்கைக்கு பொருளாதாரத்தில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

    இலங்கையில் வசிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த மக்கள் படகுகள் மூலமாக இந்தியாவுக்கு அகதிகளாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை பதவியேற்ற ஜனாதிபதிகளில், நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத, ஒரு படுதோல்வி கண்ட ஜனாதிபதியாக மக்கள் தற்போதைய ஜனாதிபதியைக் காண்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்‌ஷவை நாட்டு மக்கள் எந்தளவு வெறுக்கிறார்கள் என்றால், நாட்டின் பல இடங்களிலும் Go Home Gota என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைத் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி மக்கள் இரவு பகலாக தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இப்போதும் #GoHomeGota எனும் கோஷம் முன்னணியில் இருக்கிறது. தாம் நம்பி வாக்களித்துத் தலைவர்களாக ஆக்கியவர்களே தமக்கெதிராக சதி செய்வதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஆட்சியிலுள்ள கட்சியின் அமைச்சர்களைத் தெருவில் சந்திக்க நேர்ந்தால் மக்கள் அவர்களைத் தாக்க முற்படுகிறார்கள். தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளில் ஏற்படும் சச்சரவுகளையும், மோதல்களையும், வாக்குவாதங்களையும் தவிர்ப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தினரை அங்கு குவித்திருக்கிறது. இராணுவம் தமக்குத் தேவையான ஆட்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் மாத்திரம் எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் போது பொது மக்களால் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதுள்ளது. இன்று வரை எரிவாயு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பட்டினியோடு நீண்ட வரிசைகளில் காத்திருந்த பொதுமக்கள் நால்வர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள். நெருக்கடி காரணமாக பல மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை ஒரு புரட்சிக்கும், போராட்டத்துக்குமான சந்தர்ப்பமாகக் காணப்படுகிறது.


2. விலைவாசி உயர்வால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எவை?


    இலங்கையின் விலைவாசி அதிகரிப்பென்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த மாதம் 177/= ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை இன்று 283/= ரூபாயாக அதிகரித்துள்ளது. மருந்துகள் அனைத்தினதும் விலை 29% ஆல் அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 4299/= ரூபாயாகக் காணப்படுகிறது. சீமெந்து உட்பட கட்டுமானப் பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவிருக்கின்றன. சமைப்பதற்கான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக பல உணவகங்களும், ஹோட்டல்களும், பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன. திறந்திருப்பவைகளும் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்கின்றன. எனவே மக்கள் அனைவரும் வேலையிழப்புக்கும், சமைத்த உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கும், விலையேற்றத்துக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

        அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால், அரிசி, பருப்பு, பால் மாவு, தேங்காய், கோதுமை மாவு, வெங்காயம், தேங்காயெண்ணெய், மீன், கருவாடு, முட்டை, கோழியிறைச்சி, பாண் (பிரட்), சீனி, உருளைக்கிழங்கு, காய்கறி வகைகள் போன்ற அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் பல மடங்குகளால் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக கணினிகள், மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள், விளையாட்டுச் சாதனங்கள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மா சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனை சாதனங்கள், சுகாதாரப் பொருட்கள், இறப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், பயணப் பைகள், நில விரிப்புகள், ஆடைகள், செருப்புகள், செரமிக் மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற 367 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்துள்ளது.

    உணவுப் பொருட்களும், எரிபொருட்களும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானவை, இல்லையா? பெற்றோலும், டீசலும் இல்லாமல் நாட்டில் போக்குவரத்துகள் எவையும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. தொழிற்சாலைகள் பலவும் முடங்கிப் போயிருக்கின்றன. மீனவர்களுக்கு கடலுக்குப் போக முடியவில்லை. விவசாய இயந்திரங்களை இயக்க முடியாதுள்ளது. சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், விலை அதிகரிப்பாலும் அந்தத் தொழிற்துறையில் உள்ளவர்கள் பலரதும் பணிகள் முடங்கிப் போயிருக்கின்றன. இவ்வாறான நிலைமைகள் மக்களை வருமானத்துக்கு வழியில்லாதவர்களாக்கி மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அல்லவா? அதுதான் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

    சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் இல்லை. எரிவாயு சிலிண்டர் இல்லை. பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் இல்லை. எனவே இப் பொருட்கள் தமது ஊரிலோ, அருகிலுள்ள நகரங்களிலோ கிடைக்கின்றன என்ற தகவல்கள் கேள்விப்பட்டால் அவை தேவைப்படும் மக்கள் பல கிலோமீற்றர்கள் அலைந்து அவற்றைத் தேடி பல மணித்தியாலங்கள் பட்டினியோடு வரிசைகளில் காத்திருக்கிறார்கள். எவ்வளவு காத்திருந்த போதிலும் இறுதியில் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருப்பதுதான் அநேகமாக நிகழும். இன்று வரை அவ்வாறு வரிசைகளில் காத்திருந்த நால்வர் அவ்விடங்களிலேயே மயங்கி வீழ்ந்து இறந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உணவுப் பொருட்களும் இல்லை, அவற்றை வாங்கப் பணமும் இல்லை என்ற நிலைமையில் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் போன கவலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மின்சாரத் தடை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக உடனடி சிகிச்சைக்கு வழியில்லாமலும் மரணங்கள் ஏற்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


3. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என்ன?


    தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், டாலர் பற்றாக்குறைக்கும் ஒரு காரணமாக ரஷ்யா – உக்ரைன் போரைக் குறிப்பிடலாம். இலங்கையிடமிருந்து தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான நாடுகளாக ரஷ்யாவும், உக்ரைனும் இருக்கின்றன. இவற்றுக்கிடையிலான மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கிய நாடாக இலங்கை உள்ளது. இந்தப் போரின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்து வந்த அந்நிய செலாவணி வருமானம் தடைப்பட்டுள்ளது.

    அடுத்ததாக, நாட்டுக்கு எவ்வளவுதான் வருமானம் வந்த போதிலும், இலங்கை அரசியலானது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்கள் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இது இந்த நெருக்கடிக்கான பிரதான அம்சம் ஆகும். உண்மையில், பாரிய ஊழல், மக்களின் வரிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தல், உழைக்கும் மக்களைச் சுரண்டுதல் ஆகியவையே இந்த நெருக்கடியின் வேர்களாக உள்ளன எனலாம். அரசாங்கத்தால் விவசாயிகளுக்கான உர மானியம் ரத்து செய்யப்பட்டதை உணவு நெருக்கடியின் அடிப்படையாகக் குறிப்பிடலாம். அதுவரை காலமும் முந்தைய அரசாங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானியம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு வருட காலத்துக்குள் நிறுத்தப்பட்டதும் விவசாயிகள் நிர்க்கதி நிலைமைக்கு ஆளானார்கள். அவ்வேளையில் உரத் தட்டுப்பாடும் ஏற்பட விவசாய உற்பத்திகள் பாரிய அளவில் வீழ்ச்சி காணத் தொடங்கின. விவசாயிகள், விற்பனையாளர்கள் எனப் பலரும் விவசாயம் மூலமாகக் கிடைத்து வந்த தமது வருமானத்தை இழக்கத் தொடங்கியதோடு வேறு தொழில்களை நாடிச் சென்றார்கள். இவ்வாறாக படிப்படியாக உணவு நெருக்கடி மக்களின் மீது திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனாவும் இலங்கையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது.


4. கொரோனா கால நெருக்கடி பொருளாதார சரிவுக்கு காரணம் என்று சொல்லாமா?

    அதையும் ஒரு காரணியாகக் குறிப்பிடலாம் என்றாலும், அது மாத்திரம்தான் பொருளாதார சரிவுக்குக் காரணம் என்று கூற முடியாது. தைக்கப்பட்ட ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் கிடைக்கும் அந்நியச் செலாவணி மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றின் மூலமாகத்தான் இலங்கைக்கு பிரதான வருமானங்கள் கிடைத்து வருகின்றன. கொரோனா பரவியதோடு இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது அறவே நின்று போயின. அவர்களுக்கான நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் போன்றவை காலியாகின. அவற்றில் பணி புரிந்தவர்களுக்கு வேலைகள் இல்லாமல் போயின. கொரோனா பரவலோடு ஆடைத் தொழிற்சாலைகள், தேயிலை உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதோடு வருமானமும், அவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு வேலைகளும் இல்லாமல் போயின. உலகம் முழுவதும் கொரோனா பரவியதால் வெளிநாட்டு வேலைகளுக்கு இலங்கையர் செல்வது நின்று போனது. வெளிநாடுகளில் பணி புரிந்து வந்தவர்களும் வேலைகளையிழந்து இலங்கைக்கு திரும்ப வேண்டி வந்தது. இதனால் இலங்கைக்குக் கிடைத்து வந்த அந்நியச் செலாவணி வருமானமும் இல்லாமல் போனது. இவ்வாறாக ஒரு சங்கிலித் தொடர் போல கொரோனா இலங்கையில் பெருமளவில் பரவத் தொடங்கியதும் வருமானம் வரக் கூடிய அனைத்து வழிகளும் முடங்கிப் போயின. டாலர் வருமானமும் வெகுவாகக் குறைந்தது. இலங்கையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், இவையனைத்தும் மீண்டும் பழைய நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை.


5. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளாரே... இது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகுமா?


    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கடந்த பதினாறாம் திகதி தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்துக்கு வர அவருக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருக்கிறது என்பதுதான் இந்தப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி பெறாமல், நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையின் பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்துள்ள போதிலும், ‘சர்வதேச நாணய நிதியம்’ எனப்படுவது ஒரு ஏகாதிபத்தியப் பிடி என்றுதான் ராஜபக்‌ஷேக்கள் (ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ) கருதி வந்தார்கள். என்றாலும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போயுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்தியாவிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி கோரும் அளவுக்கு அவர்களுக்கு புத்தி வந்துள்ளது.

    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து, எடுத்துக் கூறிய போதே உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏன் எடுக்கவில்லை என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஜனாதிபதியின் நிர்வாகத் திறனின்மை இதில் தெளிவாகப் புலப்படுகிறது, இல்லையா? ஒரு நாட்டை ஆளுவது என்பது எளிதான விடயமல்ல. தேர்ந்த அறிவும், ஆட்சி செய்வது தொடர்பான கொள்கைகளின் நுட்பமான தன்மையைப் புரிந்து கொள்ளும் திறனும் ஒரு ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். இவை தற்போதைய ஜனாதிபதியிடம் காணப்படவில்லை என்பதுதான் பிரதான குறைபாடு. டாலர் தட்டுப்பாடும், அந்நியச் செலாவணி வருமானம் தடைபடுதலும் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே ஜனாதிபதி பொருளாதார வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு ஏதாவது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை இந்தளவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்காது.

    சர்வதேச நாணய நிதியத்திடம் இவ்வளவு காலமும் போகாதிருந்ததால் டாலருக்கெதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியைத் தக்க வைத்துக் கொள்ள தற்போது இலங்கை மத்திய வங்கி பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. டாலர் பற்றாக்குறை ஏற்படும்போது ரூபாயின் பெறுமதி குறைவடைவது இயல்பு. கடந்த வாரம் வரைக்கும் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 200 ரூபாயாகவும், சந்தையில் 250 ரூபாயாகவும் இருந்தது. ஆகவே அந்நியச் செலாவணி வருமானம் நேராக மத்திய வங்கிக்குச் செல்லாமல் வெளிச் சந்தைகளிலேயே பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற போது 7 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது ஒரு பில்லியன் கூட இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. அவர் பதவியேற்ற போது 180 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் பெறுமதி இன்று 283 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறான நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்பது நல்ல விடயமாகும். கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது என்பது இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பலமாக அமையும். அவ்வாறே அரசாங்க நிதியை சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய வேண்டியது அத்தியாவசியம். சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பதினோராம் திகதி நடைபெறவிருக்கிறது. இலங்கையானது வருமானத்துக்கேற்ப செலவு செய்யும், வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரம் கடன் வாங்கும் ஒரு நாடாக மாற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை ஆலோசனை அவ்வாறுதான் அமைந்திருக்கிறது.


6. இதனை இலங்கையின் ஏனைய அரசியல் கட்சிகள் எவ்வாறு அணுகுகின்றன? அவை சரியான திசையில் பயணிக்கின்றனவா?


    இலங்கையில் பிரதான எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டும் உள்ளன. இவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்று சேர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளைக் கொழும்பில் நடத்தின. மீண்டும் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பெரும் வெற்றியைப் பெற்றதுவும், சஜித் பிரேமதாச படுதோல்வியைச் சந்தித்ததுவும் நிகழ்ந்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுதான் நடைபெறவிருக்கிறது. நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த மோசமான நெருக்கடிக்குத் தீர்வு கண்டு விட்டுத்தான் 2025 ஆம் ஆண்டிலேயே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி கட்சியோ ஜனாதிபதி ஆசனத்துக்கு ஆசைப்படாமல் பாராளுமன்றத்தில் தனது ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒரு பலமான கட்சியாக உருவெடுக்கவே விரும்புகிறது.


    பொதுமக்களுக்கு தமது உரிமைகளைக் கோரி தெருவிலிறங்க ஒரு தைரியத்தை ஏற்படுத்தியதுதான் இந்த இரண்டு கட்சிகளும் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளால் விளைந்த ஒரே நன்மை என்று கூறலாம். உண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு கிடைத்தாயிற்று என்று கூறலாம். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மாத்திரமல்லாமல் எவருக்கும் இலங்கை நாட்டை மீட்டெடுப்பது சிரமமில்லை. இந்தக் கட்சிகளில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷே இதுவரை செய்த முட்டாள்தனமான காரியங்களைச் செய்யாமலிருந்தாலே நாடு இது போன்ற மேலுமொரு நெருக்கடிக்குத் தள்ளப்படாமலிருக்கும். அவர் இலங்கையைப் படுகுழிக்குள் தள்ள எடுத்த நடவடிக்கைகளை மீண்டும் எவரும் செய்யாமலிருந்தாலே போதும். கோத்தாபய ராஜபக்‌ஷவே கூட ஒழுங்கான முறையில் தனது குடும்ப விவகாரங்களையும், அரசியல் விவகாரங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நிர்வாகம் செய்தால் சில மாதங்களிலேயே இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து நாடு மீண்டு விடும்.

7. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தனியார் மயத்தை நோக்கி நகர்ந்ததன் விளைவு என்று சொல்லலாமா?


    அதுவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்‌ஷ குடும்பத்தில் பலரும் (மஹிந்த ராஜபக்‌ஷ, கோத்தாபய ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பலர்) இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்காகச் செலவழிக்கும் பணம் சொந்தப் பணம் அல்ல என்பதையும், அவை ஊழல் மற்றும் பல்வேறு தரகுக் கூலிகளால் கிடைக்கும் பணம் என்பதையும் பலரும் அறிவார்கள். எனவே தனியார் மயப்படுத்துவதன் மூலமும், வீதி அபிவிருத்தி எனும் பெயரில் பல்வேறு நாடுகளுக்கு கட்டுமானப் பணிகளுக்காக நாட்டின் பல பகுதிகளை ஒதுக்கிக் கொடுப்பதாலும் கிடைக்கும் தரகுக் கூலிகளால் அவர்கள் தமது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொள்கிறார்கள். நாட்டின் வருமானம் குறைந்து போய் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.


8. இலங்கை அரசு இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்கிறது? அரசின் நடைமுறை மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா?


    உண்மையில் ஏற்புடையதாக இல்லவே இல்லை. காரணம், அரசாங்கத்திடம் சாதாரண பொதுமக்களுக்கு சார்பாகவும், ஆதரவாகவும் எதுவுமே இல்லை. உதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் வரி விலக்கப்பட்ட வாகன உரிமங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர்கள் தாம் விரும்பிய வாகனத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அவற்றுக்கு வரி விதிக்கப்படாது. ஐந்து வருட காலத்துக்கு அவற்றை வேறு எவருக்கும் விற்க முடியாது. அந்த உரிமத்தை மற்றுமொருவருக்கு விற்பது சட்ட விரோதமானது. ஆனால் அந்த சட்ட விரோத நடவடிக்கை இலங்கையில் பகிரங்கமாக நடக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் அந்த உரிமத்தை விற்று மில்லியன் கணக்கான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பாரிய ஊழலை இதுவரை காலம் அரசாங்கம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. தற்போதுதான் ஜனாதிபதி இந்த வாகன உரிமத்தை இடைநிறுத்தியுள்ளார். இவ்வாறான ஊழல்களும் இந்த நெருக்கடிக்கு ஒரு காரணம். இவ்வாறாக இலங்கை அரசியலில் பாரிய ஊழல், மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவழித்தல், உழைக்கும் மக்களை சுரண்டுதல் ஆகியவை பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வரிப் பணங்கள் என்ற பெயரில் அரசாங்கமானது மக்களை அதிகளவில் சுரண்டிக் கொண்டேயிருக்கிறது.

    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால் நாட்டுமக்கள் தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலப்பகுதியில்தான் இதுவரை தெரியாதிருந்த பலதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளன. பண மோசடி ஊழல்கள் பற்றிய நிறைய விடயங்கள் உள்ளன. சுருக்கமாக இரண்டைக் கூறுகிறேன். இலங்கை மக்கள் வங்கி ஒரு வருட காலத்தில் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கு சமமான தொகையை அரசாங்கத்துடன் தொடர்புடைய இருவர் சீனி கொள்வனவு ஊழல் மூலமாக குறுகிய காலத்தில் ஈட்டியிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கைது செய்து சிறையிலடைத்தாரா என்றால் அதுதான் இல்லை. அவரது ஆட்சியில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் ‘இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு’ மூலமாகத் தொடுக்கப்பட்டிருந்த ஊழல் மற்றும் மோசடி சம்பந்தமான 38 வழக்குகள் அரசாங்கத் தலையீடுகளின் காரணமாக மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை விசாரிக்கப்படவேயில்லை.

    உண்மையில் இலங்கையில் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் குழந்தையொன்று கூட சர்வதேசத்துக்குக் கடனாளியாகத்தான் பிறக்கும் நிலைமை இன்று உருவாகியிருக்கிறது. இவ்வாறான நிலைமையில் அன்றாடம் விலைவாசிகளை ஏற்றி நாட்டு மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்குதல், சர்வதேசத்தில் அதிகூடிய வரி விதிப்புகளுக்கு உள்ளாகுதல், சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் கடனாளிகளாக இருத்தல் போன்ற அரசின் நடைமுறை செயற்பாடுகள் எவையும் மக்களுக்கு ஏற்புடையதாகவே இல்லை.


9. பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு இதற்கு தீர்வாகுமா?


    அரசாங்கம் விரைவில் மக்களுக்காக ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த பொதுமக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும்விதமாகத்தான் அரசாங்கம் 367 பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு எனும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கணினிகள், மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள், விளையாட்டுச் சாதனங்கள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மா சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனை சாதனங்கள், சுகாதாரப் பொருட்கள், இறப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், பயணப் பைகள், நில விரிப்புகள், ஆடைகள், செருப்புகள், செரமிக் மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள் போன்றவை அவற்றுள் அடங்கும் சில பொருட்களாகும்.

    இந்த இறக்குமதித் தடையோடு இலங்கையில் கைபேசிகளின் விலையும் முப்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கமானது மேலுள்ள பொருட்களை அத்தியாவசியமற்ற பொருட்களாகக் கருதிய போதிலும், இந்த நவீன உலகில் இவற்றுள் கணினியும், கைபேசியும் அத்தியாவசியப் பொருட்களாக எப்பொழுதோ மாறியாயிற்று. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டாண்டு காலமாக, கொரோனா உக்கிரமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலப் பகுதியில் கணினி மற்றும் கைபேசி வழியாகத்தான் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். இப்போதும் பெரும்பாலான வகுப்புகள் நிகழ்நிலை மூலமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், மக்களின் அத்தியாவசியமான பொருட்களாக மாறியிருக்கும் மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும்போது நாட்டில் ஏற்கெனவே உள்ள இந்தப் பொருட்களின் விலை பெறுமளவு உயர்கிறது. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாதிக்கும்.

    இந்த நிலைமையையும், தட்டுப்பாடுகளையும் சீரமைக்க இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு செயற்திட்டமும் இருப்பதை இதுவரை காண முடியவில்லை. மக்களை இந்தளவு கஷ்டத்துக்குள் தள்ளினால் எப்படி வாழ்வது என்பதுதான் பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. மக்கள் மீது சுமத்தியிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக மக்களுக்கு அறியத் தர வேண்டும் என்றபோதிலும், அவ்வாறான ஒன்று இதுவரை நடக்கவேயில்லை.

    திடீரென்று இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நாட்டுக்குள் ஏற்கெனவே இருந்த இந்தப் பொருட்களின் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் ரமழான் மாத நோன்பு தொடங்கவிருக்கும் இந்தக் காலத்தில் பேரீச்சம்பழ இறக்குமதியைத் தடை செய்ததோடு நானூறு ரூபாயாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம்பழம் ஆயிரம் ரூபாவைக் கடந்திருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை ஒரு பழம் இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு இந்த நெருக்கடியை மேலும் உக்கிரமாக்கவே செய்கிறது.


10. இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு அணுகுகின்றன? உதவிகள் ஏதாவது செய்வதற்கு முன் வந்துள்ளனவா? குறிப்பாக சீனா போன்ற நாடுகள்?


    இலங்கை ஏற்கெனவே பங்களாதேஷ் உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கும் கடன்பட்ட ஒரு நாடாக உள்ளதோடு, வட்டியைக் கூட திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நிலையில் காணப்படுகிறது. எனவே எவ்வாறு அந்த நாடுகளிடம் மீண்டும் மீண்டும் கடன்களை எதிர்பார்க்க முடியும்? என்றாலும் இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க அரசாங்கமானது, பல்வேறு நாடுகளிடம் உதவி கோரிய போது இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை இந்தியா வழங்கியது. கடந்த டிசம்பர் மாதமும் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜயசங்கரையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துக் கலந்துரையாடியதில் ஒரு தொகை டாலர்கள் நிதியுதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா நிதியுதவி வழங்கியதற்குப் பிற்பாடு இப்போது சீனாவும் இந்த நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க உதவ ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்பே இலங்கை அரசு கோரியிருந்த 2.5 பில்லியன் டாலர் கடன் கோரிக்கையைத் தாம் இப்போது பரிசீலித்து வருவதாக சீனா அறியத் தந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிடமும் 200 மில்லியன் கடனை இலங்கை கோரியிருக்கிறது.

11. உங்களை போன்ற சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் வழிகள் எவை?


    இலங்கையின் அமைவு, அதிலுள்ள இயற்கை வளங்கள், மனித வளங்கள் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே வேறெந்த நாட்டையும் தங்கியிருக்காமல் தன்னிறைவுப் பொருளாதாரத்தை இலங்கையால் அடைய முடியும். இந்த நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும், தலைவர்களும் தமக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பாதுகாப்பதையோ, அதிகரிப்பதையோ பற்றி மாத்திரம் சிந்திக்காமல் உண்மையிலேயே தேவைப்படும் தீர்வுகள் பற்றி சிந்திக்க முற்பட வேண்டும். இப்போதுள்ள நெருக்கடியான நிலைமையில் ஏதேனுமொரு புரட்சியின்றி இலங்கையை இலகுவாக மீட்டெடுக்க முடியாதென்றே தோன்றுகிறது. அரசுக்குச் சொந்தமான அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் விலையேற்றங்களின் மூலம் பொது மக்களைச் சுரண்டுவதை எதிர்த்து அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் மக்கள் புரட்சியாக அது இருக்க வேண்டும். அவ்வாறு மக்களால் உருவாக்கப்படும் அரசாங்கம் ஆனது ஒரு புதிய அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும். மேலும் நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பையும், அவசரகால திருத்தங்களையும் முன்மொழிய சமூக மற்றும் இனங்கள் உட்பட அனைத்து அடையாளங்களின் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பரந்த அமைப்பை நியமிக்க வேண்டும். அனைத்து ஆயுதப் படைகளும் அரசின் தலைமையின் கீழ் அமைதி காக்கும் படைகளாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

    கடந்த காலங்களில் நாட்டிலிருந்து தரகுக் கூலி பெற்று ஊழல் செய்த முந்தைய ஜனாதிபதிகள் முதல் அமைச்சர்கள், செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மோசடியாக சம்பாதித்த சகல வியாபாரிகள் என பாரபட்சம் பாராமல் அனைவரினதும் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கம் உடனடியாகவும், தற்காலிகமாகவும் கையகப்படுத்த வேண்டும்.

    அத்தோடு சர்வதேச சமூகத்துடனான உறவுகளை மறுசீரமைப்பதற்கு வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும். இந்தியாவுடனான உறவுகள், குறிப்பாக அதிகார சமநிலையோடு நேர்மையாக பலப்படுத்தப்பட வேண்டும். தனியாருக்கு விற்கப்பட்ட வருமானம் தரக் கூடிய அரசாங்கச் சொத்துகள் மீண்டும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

    மக்கள் மீதான அரசாங்க வரி விதிப்புகள் நேர்மையானதும் ஒழுங்கானதுமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். அவ்வாறே நாட்டுக்குள் தேவையற்ற பொருட்கள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டும். சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடிய அளவில் உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டும். இவையனைத்தையும் இலங்கையின் மாற்று அரசியலுக்கான எண்ணக்கருக்களாகக் கருதலாம். அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும்.

24.03.2022

நன்றி - மக்கள் குரல் நாளேடு
_________________________


எம். ரிஷான் ஷெரீப் – இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு – mrishansh@gmail.com

0 comments: