அழகிய பெண்களின் படங்களை முகப்பில் சூடிக் கொள்ளாத, சினிமாக் கவர்ச்சி மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத, சிறு பிள்ளைகளுக்குக் கூட ஒரு நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துவிடக் கூடியதோர் பெறுமதியான பத்திரிகையாக நான் விடிவெள்ளியைக் காண்கிறேன். இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியரின் உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை மட்டுமே தாங்கி வரக் கூடிய ஊடகங்கள், அன்றும் இன்றும் நம் நாட்டில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. முஸ்லிம்களுக்கென்றொரு தனியானதொரு ஊடகம் அவசியமாக உள்ளதென்பது எம்மில் பலராலும் உணரப்பட்டுள்ள இவ்வேளையில், விடிவெள்ளியானது இச் சிறுபான்மை இனத்தவருக்காகவே வாராவாரம் தொடர்ந்தும் வெளிவருவது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.
இலங்கை, பல கலவரங்களைத் தொடர்ந்தும் கண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தின் கண்ணீர்ச் சொட்டொன்று எனச் சொல்லப்படக் கூடிய அளவுக்கு, இந் நாட்டு மக்களின் துயரானது, பலராலும் அறியப்பட்ட ஒன்று. கடந்த காலங்களிலும், இன்றும் அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் நம் சமூகம், தனது கருத்துக்களையும், உண்மை நிலவரங்களையும், தனது தேவைகளையும் பகிரங்கமாக வெளியே சொல்லிவிட முடியாது. அவ்வாறு சொன்னாலும் அவை, எல்லா ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலையிலும் இல்லை. தணிக்கை செய்து, அரசு சொல்லிக் கொடுப்பதை மட்டுமே மொழிந்து தள்ளும் நம் தேசத்துப் பத்திரிகைகளுக்கு மத்தியில் விடிவெள்ளியை, நிஜமான விடியலின் அறிகுறியுடனானதோர் ஊடகமாகவே எந்தவித மனக் கிலேசமுமின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது.
சமூகத்தின் அபிவிருத்தி சார்ந்த தகவல்களோடு, அநீதிகள் குறித்தும் தைரியமாக புகைப்படங்களையும் ஆதாரமாக வைத்து விடிவெள்ளியில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் அனைத்துமே வரலாற்றுச் சான்றாக சேகரித்து வைக்கப்பட வேண்டியன. உலகளாவிய ரீதியில் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாமிய சமூகம் சந்திக்க நேரும் விபரீதங்கள், இஸ்லாம் மார்க்கம், குர்ஆன், இஸ்லாமிய ஆடைகள், நமது இறுதித் தூதர் குறித்தான சித்திரங்கள் என அனைத்துமே மாற்று மதத்தவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் வேளைகளில், அவை குறித்த உண்மையான தகவல்களை நமது முஸ்லிம்களிடத்தில் கொண்டு சேர்ப்பது அவசியமாகிறது. அதனைச் செவ்வனே நிறைவேற்ற இன்று எத்தனை ஊடகங்கள் முன்வருகின்றன எனப் பார்த்தால், விடிவெள்ளிதான் முதலில் நிற்கிறது.
நமது மக்களிடையே வாசிக்கும் பழக்கமும், கட்டுரை, கவிதை, கதைகள், விமர்சனங்கள் எனத் தமது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் வெளிக் கொண்டு வருபவர்களும் அருகி வருவதைக் காணமுடிகிறது. மாற்று ஊடகங்களின் ஆதிக்கம், நாளுக்கு நாள் பெருகிவருகையில் பத்திரிகைகளை, சஞ்சிகைகளை வாசிப்பதென்பதுவும், அதற்கு எழுதுவதென்பதுவும் நம்மிடையே நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இன்று, தமது குழந்தைகளுக்கான இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்களுக்காக ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கும் பெற்றோர்கள் கூட, ஐம்பது ரூபாய்க்கும் குறைவான சிறுவர் பத்திரிகைகளை, சிறுவர் கதைப் புத்தகங்களை அவர்கள் வாசிக்கவென வாங்கிக் கொடுப்பதில்லை. வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதைக் குழந்தைகளின் பெற்றோர்களே புரிந்துகொள்ளாதவிடத்து, வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர்த்து வளரும் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனேதுமில்லை.
சிறு பிள்ளைகளுக்கு, பெரியவர்களான நாம் எதை எதைச் செய்ய சிறுவயதில் ஊக்கப்படுத்துகிறோமோ, அவற்றைத்தான் அவை வளர்ந்தும் செய்துகொண்டே இருக்கும். எனவே இப் பிள்ளைகள் தமது பதின்ம வயது முடியும் வரையில், மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப்படும் பாடசாலைப் புத்தகங்களோடு மட்டும் உறவாடிவிட்டு, பிற்காலத்தில் தமது கருத்துக்களை எடுத்துரைக்கத் தெரியாதவர்களாக, தமது எண்ணங்களை முழுமையாக வெளியிட முடியாதவர்களாக, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்தும், தன்னைச் சுற்றியும் இவ்வுலகிலும் அன்றாடம் என்னென்ன நடக்கின்றன என்பதைக் கூட அறியாதவர்களாக வளர்ந்து விடுகிறார்கள். இவ்வாறாக பின்னடைந்த சமூகமாக வளரும் சந்ததி பல ஆபத்துக்களை எதிர்நோக்குகிறது. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலாமையும், எல்லோரிடமும் ஏமாந்து போய்விடும் தன்மையும் இவர்களிடம் மிகைத்துவிடும் அபாயம் இதனாலேயே உருவாகிறது. தன்னம்பிக்கை அற்றவர்களாக, யாரேனும் சொல்வதை எந்தத் தர்க்கமும் சுய சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இவர்கள் மாறி விடுகின்றனர்.
எதையுமே வாசிக்கும் ஆர்வமற்ற பிள்ளைகளின் நிலை இவ்வாறெனில், வாசிக்கும் ஆர்வமுள்ள பிள்ளைகளின் நிலை நம் தேசத்தில் எவ்வாறிருக்கிறது? அவர்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான களம் எவ்வாறான செய்திகளை, அனுபவங்களைத் தாங்கி வருகிறது? நமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கிடைக்கும் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமது அனேகமான பக்கங்களை சினிமா குறித்த தகவல்களாலும், உலகின் அந்தரங்க அசிங்கங்களை வெளிப்படுத்தும் தகவல்களாலும், வீண்விளையாட்டுக்களாலுமே நிரப்பியிருக்கின்றன. இவ்வாறான பத்திரிகைகளை பிள்ளைகள் பார்ப்பதனால் அவர்களது மன உணர்வுகளும், ஆர்வங்களும், திறமைகளும் வழி தவறிப் போய்விடுகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை பிள்ளைகளிடத்தில் உருவாக்குவது எவ்வாறு? தமது கருத்துக்களைத் தாமே எழுத்துக்களின், ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்த அவர்களை ஊக்கப்படுத்துவது எவ்வாறு? அவர்களது ஆர்வங்களை, திறமைகளை வளரச் செய்வது எவ்வாறு?
நெடுங்காலமாக எனக்கிருந்து வந்த இம் மனக் குறையினை ஓரளவேனும் நீக்கியிருக்கிறது விடிவெள்ளியின் சிறுவர் பக்கம். அறிவார்ந்த தேடலை ஊக்குவிக்கும் குறுக்கெழுத்துப் போட்டியோடு, சிறுவர் குறிப்புக்கள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்களால் இப் பக்கம் நிறைந்திருக்கிறது. பிள்ளைகளின் வாசிப்பையும், ஓவியம் வரையும் திறமையையும், எழுத்தாற்றலையும் வளரச் செய்வதில் முன் நிற்கும் இப் பக்கத்துக்கு பெற்றோர்கள் தயக்கமேதுமின்றி தமது சிறுவர்களை எழுதச் சொல்லலாம். ஒரு சிறு குறையாக நான் இப் பக்கத்தில் காண்பது, கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் இடையில் காணப்படும் ஓவியங்களின் அளவே. இந்தச் சித்திரங்களின் அளவைச் சிறிதாக்கி, இப் பக்கத்தில் இப்பொழுதிருப்பதைப் போலவே இன்னும் இன்னும் சிறுவர்களிடமிருந்து வரும் ஆக்கங்களை அதிகரிக்கையில் இதன் பலன் இன்னும் அதிகமாகும். அவ்வாறே விடிவெள்ளியே ஒரு பொதுவான தலைப்பினைக் கொடுத்து மாணவர்களுக்கிடையிலான கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தி அவர்களை இன்னும் எழுத ஊக்குவிக்கலாம். இப் போட்டிகளின் மூலம் அவர்களிடம் தேடி வாசிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும்.
இதைப் போலவே எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கக் கூடிய களமாக விடிவெள்ளியின் இலக்கியப் பக்கமும், கட்டுரைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்களும் இருக்கின்றன. எழுதிப் பிரபலமானவர்களோடு, அனேகமாக நல்ல கட்டுரைகளையும், கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியதால் களம் கிடைத்த புதியவர்களையும் இப் பக்கத்தில் காணக் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றாக எழுதியும் இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கியவர்களென்பதனாலேயே பிரசுரிப்பதைத் தவிர்த்து, அவர்களது எழுத்துக்களை நிராகரித்து, எழுதியவர்களுக்கே தமது எழுத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயத்தைச் செய்யும் நமது தேசத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் மத்தியில், திறமையை மட்டுமே கண்டு, அப் படைப்புக்களைப் பிரசுரித்து புதியவர்களையும் ஊக்கப்படுத்தும் விடிவெள்ளியின் பணி பாராட்டத்தக்கது. இன்னும் இப் பக்கத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்களுக்கும் ஒரு களம் அமைத்துக் கொடுத்தால், மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்யும் ஆற்றலும், இன்னுமொரு மொழியைக் கற்கும் ஆர்வமும் நமது சமூகத்தினிடையே வளருமென்பதில் ஐயமில்லை.
தனது இணையத்தளம் மூலமாக உலகளாவிய ரீதியில் இலவசமாக, தமிழை வாசிக்கக் கூடிய அனைவராலும் பார்த்துப் பயன்பெறக் கூடிய விதத்தில், தான் கொண்டிருக்கும் பன்னிரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்தையும் வீணென்று ஒதுக்கிவிட முடியாத தரத்தில் உயர்ந்து நிற்கிறது விடிவெள்ளி. தாங்கிவரும் செய்திகளும், கட்டுரைகளும், படைப்புக்களும், புகைப்படங்களும், நிகழ்வுகளும் நமது சமூகத்தில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வரக் கூடியன. ஆகவே அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், வாசகர் கடிதங்களுக்காகவும் ஒரு சிறு பகுதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன். ஆண்டாண்டு காலமாகச் சிந்தித்து, பலரும் ஆலோசித்து இயற்றும் சட்டங்களாலும், அதிகாரங்களாலும், பலவந்தங்களாலும், நிர்ப்பந்தங்களாலும் செய்ய முடியாதவற்றை, சேவைகளை ஊடகங்களால் நொடிப் பொழுதில் செய்துவிடலாம். அவ்வாறானதொரு நேர்மையான ஊடகமாக விடிவெள்ளி தொடர்ந்தும் வெளிவர வாழ்த்துகிறேன். விடிவெள்ளி தொடர்ந்து நீடித்து நிலைத்து மின்னட்டும். மின்னும் இன்ஷா அல்லாஹ் !
- எம். ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# விடிவெள்ளி வார இதழ் 11.11.2010 (மூன்றாம் வருட சிறப்பிதழ்)
Tuesday, November 16, 2010
Home »
கவிதை விமர்சனங்கள்
,
சமூகம்
,
நிகழ்வுகள்
,
விடிவெள்ளி
,
விமர்சனம்
» விடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி !
0 comments:
Post a Comment