Monday, August 21, 2017

பிணங்களை அறுப்பவளின் கதை – எம்.ரிஷான் ஷெரீப்



வெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம்
கருமையை உடுத்தும் நாளொன்று
மரணம் பரவியிருக்கும் பூமியில்
மழைத் துளி விழும் கணமொன்று

இந்த வாழ்க்கைப் பயணத்தின்
ஓரிடத்தில் தரிக்க நேர்ந்த ஜீவிதங்களின் நகர்வில்
சுவாசிக்கும், விம்மும், சிரிக்கும்
ஓசை கேட்கும் எல்லைக்கு வா

ஒரு நாளில்
ஒரு காலைவேளையில்
அல்லது ஓரிரவில்
வந்து போக வா

வாழ்க்கை என்பது
இன்னுமொரு மழைத் துளி மாத்திரமே என
உனக்குத் தோன்றும்

வரண்டு வெடித்த விசாலமான பூமி
கண்ணிமைக்காது முத்தமிடக் காத்திருக்கும்
மழைத் துளியொன்றுக்கான ஒரு நொடி
அது வாழ்க்கை


     எந்த மனிதனும் செய்வதற்கு ப்ரியம் காட்டாத தொழில்களெனப் பல உலகத்தில் இருக்கின்றன. ஏமாற்றத் தேவையிராதது. சுய உழைப்பு அதிகமிருக்கக் கூடியது. உடனடி இலாபம் தரக் கூடியது. இப்படிப் பல காரணங்கள் இருந்தபோதிலும் சில தொழில்களை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. எனினும், அவ்வாறான தொழில்களும் கூட யாராலாவது செய்யப்பட்டே ஆக வேண்டும். இல்லாவிடில் உலகம் நாறிப் போய்விடும் என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், சமூகத்தில் பலரால் இவ்வாறான தொழில்களைச் செய்வதன் காரணமாக வெறுக்கப்படுகின்றவர்கள், உலகில் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
 

     அவ்வாறான தொழிலொன்றைச் செய்யுமொருத்தியின் கதைதான் 'நிகினி வெஸ்ஸ (ஆகஸ்ட் தூறல்)' எனும் சிங்களத் திரைப்படமாகியிருக்கிறது. வரண்ட பிரதேசக் கிராமமொன்றில் வேறுவழியின்றி தந்தையின் தொழிலைப் பின்பற்றிச் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் முதிர்கன்னியொருத்தியின் நடைமுறை வாழ்க்கையை மிக யதார்த்தமாகச் சித்தரிக்க முற்பட்டிருக்கிறது 'ஒருபோதும் நிலத்தை முத்தமிடாத மழை' என பின்குறிப்பிடப்பட்டிருக்கும் இத் திரைப்படம்.


     இரத்தக் கறைகளைக் கழுவிக் கழுவி அழுக்கடைந்திருக்கும் வெண்களிப் பாத்திரத்தில் சிந்தும் குழாய் நீரில், கழிவுகள் படிந்திருக்கும் கையுறைகளைக் கழுவும் காட்சியின் பின்னணியில் ஒரு பெண் விசித்தழும் ஓசையோடு படம் ஆரம்பிக்கிறது. அடுத்த காட்சியில் பிணமேற்றிச் செல்லும் பழைய வாகனத்தின் சாரதி ஆசனத்திலொரு பெண் அமர்ந்து வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறாள். அருகில் அவளது வயது முதிர்ந்த தாய். வாகனத்தின் ஆசனங்கள் அகற்றப்பட்ட பிற்பகுதியில் பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கிறார் அவளது தந்தை. தந்தை இறந்த பிறகு அவரது உள்ளுடல்பாகங்களை அகற்றி அலங்கரிக்கும் நிலைமை எவருக்கும் வருவதை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், அதனை அவள் அழாமலே செய்கிறாள். எல்லாம் முடிந்த பிறகு அழுகிறாள். அவர் செய்து வந்த தொழிலைப் பொறுப்பேற்கிறாள்.


     இவ்வாறாக ஆஸ்பத்திரிகளில் சடலங்களாக ஒப்படைக்கப்படும் பிணங்களைப் பொறுப்பேற்று, அதன் உள்ளுடல் பாகங்களை அகற்றித் தைத்து, அலங்கரித்து, அதன் உறவினர்களிடம் ஒப்படைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் தனது திரைப்படத்தின் கதை நாயகியாக்கியிருக்கிறார் இயக்குனர். அவளுக்கு உதவியாளாகக் கடமையாற்றும் இருபது வயதுகளிலுள்ள ஒரு இளைஞன் மற்றும் மத்திம வயதிலுள்ள ஒரு கட்டிட வரைகலைஞர் ஆகிய மூவரும்தான் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.


     திருமண வயதைத் தாண்டிய தனது மகள் சோமலதாவுக்கு பத்திரிகைகளில் வரன் தேடும் சராசரித் தாயின் நிலைப்பாடு, தனக்குப் பின் தனது மகளுக்குத் துணை யார் என்ற கேள்வியை எஞ்சச் செய்கிறது. தகுந்த வரன்களுக்கு அவள் விண்ணப்பிக்க, வரும் பதில் கடிதங்களை சோமலதா நிராகரிக்கிறாள். பிணங்களை அறுத்து அலங்கரிப்பதைத் தொழிலாகக் கொண்டவளுக்குள்ளும், திருமணம் முடிக்க நேர்ந்தாலும் தான் தொழிலை விடப் போவதில்லையென உறுதியாகச் சொல்பவளுக்குள்ளும் ஒரு கனவு இருக்கிறது. 


    அது, தனது கிராமத்து மக்களுக்காக மயானத்தில் மின்சாரம் மூலமாக பிணங்களை எரிக்கும் கட்டிடமொன்றைத் தனது செலவில் நிறுவுவது. அதற்கான கட்டிடத்தை ஒரு கட்டிட வரைகலைஞர் வரைந்து கொடுக்கிறார். நோயாளியான அக் கட்டிட வரைகலைஞர் மீது அவளுக்குள் எழும் ஒரு தலைக் காதலை ஒரு மெல்லிய புகையென திரைப்படம் முழுவதும் ஊடாடிச் செல்ல வைத்து இறுதிக் காட்சியில் அக் காதலே எதிர்பாராத முடிவுக்கு அவளை இட்டுச் செல்வதை நேர்த்தியாக அணுகியிருக்கிறது திரைப்படம்.

     இதற்கிடையில் யாருமற்ற அநாதையென நிற்கும் ஒரு இளம்பெண்ணைக் காதலிக்கும், உதவியாளான இளைஞன் குறித்துத் தெரிய வரும்போது, அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் சோமலதா, பின்னர் அந்த இளம்பெண்ணினதும், அவளது குழந்தையினதும் பிணங்களை அறுத்து அலங்கரிப்பது அதிர்ச்சியுறச் செய்கிறது. அந்த இளைஞனுக்கும், சோமலதாவுக்குமிடையில் நேசமோ, நட்போ இருப்பதாக படத்தில் எந்தக் காட்சியிலும் காட்டப்படவில்லை. எனினும் படத்தின் இறுதிக் காட்சி திரையில் உறைந்து ஓயும்போது அந்த இளைஞன் அவளை யாருக்கும் சொல்லாமலேயே உள்ளூர நேசித்திருக்கும் விதம் திரைப்படத்தை நிமிர்த்தியிருக்கிறது எனலாம்.

     வாழ்வின் சில கணங்களில் நாம் யாரையுமே நம்பாத, நம்ப முடியாத சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்போம். நிர்ப்பந்தங்கள், நெருக்கடிகள், பலவந்தங்கள், வற்புறுத்தல்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்றன இம் மாதிரியான நிலைப்பாடுகளுக்குள் எம்மைத் தள்ளி விட்டிருக்கும். அவற்றோடு காலமும் நகர்ந்து கொண்டேயிருக்கும். காலம் தரும் முதிர்ச்சியான மனநிலை பல தீர்மானங்களுக்கு மனிதனை எளிதாகத் தள்ளி விடுகின்றது. அத் தீர்மானங்கள் சம்பந்தப்பட்டவரது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்து விடக் கூடியவை. அது அவரை உயர்த்தவும் கூடும். அதல பாதாளத்துக்கு வீழ்த்திவிடவும் கூடும். ஆனால் சில கட்டாயமான சந்தர்ப்பங்களில் அம் முடிவுகளை எடுக்கவே வேண்டியிருக்கும்.

     வெறி பிடித்த காட்டு யானை வந்து தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டுமென, பரந்து விரிந்த மாபெரும் குளக்கரைக்கு நள்ளிரவில் வந்து காத்திருக்கும் சோமலதாவுக்குள் ஆண்கள் மீது கடும் வெறுப்பும், ஆண்கள் எல்லோருமே மிகவும் மோசமானவர்கள் என்ற நிலைப்பாடும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தனது இலட்சியக் கட்டிடத்தை நேர்மையான முறையில் கட்டுவதற்காக அவள் அக் கிராமத்தில் சந்திக்க நேரும் ஆண்கள் எல்லோருமே அவளிடமிருந்து ஏதேனுமொரு பிரதிபலனை எதிர்பார்ப்பது அவளை அம் முடிவுக்குள் தள்ளியிருக்கிறது.


     பிணங்களை அவளிடம் ஒப்படைக்க இலஞ்சமாகப் பணம் கேட்கும் வைத்தியசாலை சிற்றூழியன், வைத்தியர், கட்டிடம் கட்ட அனுமதிக்கும் கடிதமொன்றைத் தர அவளையே கேட்கும் கிராமத்துத் தலைவன், கட்டி முடிக்கப்படும் கட்டிடத்தைத் திறந்து வைப்பதோடு அதன் அடிக்கல்லில் தனது பெயரைப் போட வேண்டுமெனக் கூறும் அரசியல்வாதி, அவளை வாழ விட மாட்டேனென சதா மிரட்டிக் கொண்டேயிருக்கும் சக சவப்பெட்டிக் கடை முதலாளி என அவள் சார்ந்திருக்க நேரும் ஆண்களெல்லோருமே அவளது மனநிலையில், விரோதிகளாகவே இருக்கிறார்கள்.


     இந் நிலையில்தான் கரப்பான்பூச்சி, சிறு கொசுவுக்குக் கூடப் பயந்து அலறும் கட்டிட வரைகலைஞன் மீது அவளுக்கு ஒருதலைக் காதல் வருகிறது. அவனால் அவளுக்கு மாத்திரமன்றி, எவருக்குமே எந்தப் பாதிப்பும் இல்லை எனும் அளவுக்கு அவன் நல்லவன் எனத் தெளிவாக அவள் உணரும் சந்தர்ப்பத்தில் தனது காதலை அவனிடம் சொல்லத் துணிகிறாள். அதனால் அவளுக்கு நிகழ்வதென்ன என்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.

     மிகவும் பிரபலமாக இருக்கும் எந்த நடிகையும் ஏற்கத் துணியாத கதாபாத்திரமான சோமலதா எனும் கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார் திரைப்படத்தின் கதாநாயகி சாந்தனி செனவிரத்ன. கிராமத்துப் பெண்களுக்கேயுரிய முக பாவனைகளும், தன்னம்பிக்கையும், தைரியமும் மிளிரும் உடல்மொழியுமாக திரைப்படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார். திரைப்படத்தில் இவர் வராத காட்சிகளை எண்ணிச் சொல்லிவிடலாம் எனும்படியாக படம் முழுவதும் முழுமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு, கடந்த வருடம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா'வில் இத் திரைப்படத்தில் நடித்தமைக்காக 'சிறந்த நடிகை'க்கான விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

     கதாநாயகிக்கு நேர்மாறாக திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் பிமல் ஜெயகொடி, படத்தின் சில காட்சிகளில் மாத்திரமே வருகிறார் எனினும் படத்தின் திசையைத் தீர்மானிப்பவர் இவர்தான் எனலாம். இன்னுமொரு பிரதான கதாபாத்திரத்தில் பிணத்தின் பாகங்களைப் புதைக்கும் இளைஞனாக நடித்திருக்கும் ஜகத் மனுவர்ணவின் பாத்திரப்படைப்பு மிகவும் யதார்த்தமானது. காட்டு யானைத் தாக்குதலில், தனது ப்ரியத்துக்குரிய கர்ப்பிணி மனைவி மரணமுறுகையில் இவரது ஓலமும், மௌனமும் கூட துயரத்தை உரைப்பது சிறப்பு.


     திரைப்படமானது, இலங்கையில் காடுகளை அண்மித்து இருக்கும் வரண்ட கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையான காட்டு யானைத் தாக்குதல்கள் குறித்தும் மௌனமாக தனது பார்வையை முன் வைத்திருக்கிறது எனலாம். திரைப்படத்தின் கதையம்சத்தோடு மேற்படி பிரச்சினையானது, தொடர்ச்சியாக திரைப்படம் முழுவதும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் ஆபத்துக்களைச் சொல்கிறது. எனினும் ஒரு யானை கூட இறுதி வரை காட்டப்படவேயில்லை. இவ்வாறாக மரணத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களுடனான கதையை எழுதி, அதனைத் திரைப்படமாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இலங்கையின் இளம் இயக்குனர்களில் ஒருவரான அருண ஜயவர்தன.

     இலங்கை, களனி பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். இவரது முதலாவது திரைப்பட முயற்சியே இதுவாகும். தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, 2011 ஆம் ஆண்டில் இத் திரைப்பட வேலைகளை ஆரம்பித்த இவர் 2012 ஆம் ஆண்டில் திரைப்படத்தைப் பூர்த்தி செய்து வெளியிட்டிருக்கிறார். 112 நிமிடங்கள் ஓடக் கூடிய இத் திரைப்படத்துக்கு மிகப் பொருத்தமாகவும் ஆழமாகவும் இசை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் நதீக குருகே.


     2012 ஆம் ஆண்டு சிங்கப்பூர், பூஸான், மும்பாய், கேரளா, துபாய் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் இத் திரைப்படமும் திரையிடப்பட்டதோடு, இத் திரைப்படத்துக்கு '2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசியத் திரைப்படம்' எனும் விருது பிரான்ஸில் நடைபெற்ற 'வெஸ்ஸோல் ஆசியத் திரைப்பட விழா'வில் கிடைத்தது. அத்தோடு அதே திரைப்பட விழாவில் 'NETPAC' விருதும் இத் திரைப்படத்துக்கே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


     உலகில் மரணம் மாத்திரமே சிறந்த வியாபாரம் எனக் கூற முயலும் திரைப்படத்தின் முடிவானது எவருமே எதிர்பாராதது. இது ஏன் இவ்வாறு நடந்தது என்ற கேள்வியை கவலையோடு பார்வையாளர்கள் மீது திணிக்கிறது. நாம் மிகவும் நேசித்த ஒருவரால் மாத்திரமே நமது வாழ்க்கையின் திருப்பங்களையும், முடிவுகளையும் தீர்மானிக்க முடியும். வஞ்சிக்கும் சினேகங்கள் உலகில் பல உள்ளன. ஒரு நேர்கோட்டில் செல்லும் நமது வாழ்க்கையில் குறுக்கிட்டு அதன் பாதையை மாற்றவும், திசை திருப்பவும் அவை முயலும். பலவீனமான இதயங்கள் அச் சாகசங்களினால் ஏமாந்துவிடுகின்றன. வாழ்க்கையை இடைநடுவே நிறுத்திக் கொள்கின்றன, வரண்டு வெடித்த நிலத்தில் விழும் ஒரு துளி மழை உடனடியாகக் காணாமல் போய்விடுவதைப் போல !

- எம். ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - பேசாமொழி இதழ், ஊடறு இதழ்

0 comments: