Wednesday, December 2, 2009

தத்ரூப வியாபாரிகள்

        ஒரு பெரிய கடைக்குள் யாருமறியாமல் திருடவென நுழைகிறீர்கள். உள்ளே இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அவை இயங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கிறீர்கள். பூட்டப்பட்டிருக்கும் சாதாரண வீடொன்றுக்குள் பூட்டை உடைத்துச் சாமான்களை அள்ளிப் போவதைப்போல வெகு இயல்பாக அக் கடையிலும் பொருட்களை அள்ளியெடுப்பீர்களா? மாட்டீர்கள். காரணம் உங்களை உற்றுக் கவனிக்க ஆளிருக்கும்போது நீங்கள் எப்பொழுதும் இயல்பாக இருக்கமாட்டீர்கள். ஏதோ ஒன்று உங்களை உற்று நோக்கும்போது உங்கள் இயல்பு தொலைந்துவிடுகிறது. அவ்வாறு இயல்பு தொலைந்து, போலியாக யதார்த்த வண்ணம் பூசப்பட்ட ஆனால் இயல்பானதெனச் சொல்லிக் கொள்பவைதான் இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனேகமான 'ரியாலிட்டி ஷோ'க்கள்.

        அண்மையில் இவ்வாறான ரியாலிட்டி ஷோ மூலம் தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டார் இந்திய நடிகை ராக்கி சாவந்த். பதினாறு இளைஞர்கள், ராக்கியை மணக்கவென முன்வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பல போட்டிகள், பரீட்சைகள் வைத்து, ராக்கி இறுதியில் அதிலொருவரைத் தேர்ந்தெடுத்தார். ராக்கி சொல்லும் அனைத்தையும் செய்யக் காத்திருந்த இளைஞர்களைச் சூழவும் எப்பொழுதும் கேமராக்கள் மின்னிக் கொண்டிருக்கையில் இதனை ரியாலிட்டி ஷோ எனச் சொல்வது சரியில்லை. ஆனால் அப்படித்தான் சொல்கிறது என்டிடிவி. அதுதான் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து, தொடர்ந்தும் ஒளிபரப்பி, நிறைய பணத்தையும் கண்டு, ராக்கிக்கு ஒரு துணையையும் தேடிக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்ட தொலைக்காட்சி சேவை.

        எப்பொழுதும் கேமராவுக்காக, அலங்காரம் மின்னும் முகங்களுக்குள் இயல்பான மனித வெளிப்பாடுகள் ஒளிந்துகொள்கின்றன. அதிலும் இது போன்றதொரு நிகழ்ச்சிக்காக, சுற்றிவர கேமராக்கள் சுழல, எப்படியும் சில நாட்களில் பல்லாயிரம் மக்கள் நம்மைப் பார்ப்பார்கள் என்ற உணர்வோடு ராக்கியைக் கவர்ந்திடத் தயாராகிய இளைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் குறைகளை, பாசாங்குகளை மறைத்து, கேமராவுக்குத் தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும்படி, மிகவும் நல்லவர்களாக, திறமைசாலிகளாக வளையவந்தனர். இதில் எங்கிருக்கிறது யதார்த்தம்? இது முழுக்க முழுக்க நாடகம். கதை, வசனம் இல்லாமல் ஒவ்வொருவரும் நடிக்கவைக்கப்படுகிறார்கள். அவ்வளவே. அவர்களில் பலரும் தங்களைச் சூழ எந்தக் கேமராவும் இல்லாத அன்றாட  சாதாரண வாழ்க்கையின் போது இயல்பானதொரு வேற்றுமுகத்தைக் காட்டக் கூடும். எனவே பொதுவாகவே இவ்வாறான நிகழ்ச்சியின் மூலம் நல்ல துணையைக் கண்டடைவது என்பது சாத்தியமற்ற ஒன்று.

      
        'நாங்கள் இவ்வாறான ரியாலிட்டி ஷோக்களில் யதார்த்தத்தைக் காண்கிறோம்' என அந் நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் பலரும் சொல்லக் கூடும். இந் நிகழ்ச்சிகள் எல்லாமே கேமரா கவர்ந்துகொண்ட எல்லாக் காட்சிகளையுமே உலகுக்குக் காட்டிவிடுவதில்லை. இத்தனை வாரங்களுக்கென அவை செதுக்கப்படுகின்றன. அப்படிச் செதுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் அங்கங்களில் கூட சம்பந்தப்பட்டவர்களின் அழுகைகளுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தொடுவதன் மூலமே இந்த 'ஷோ'க்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதனை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டுமென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி காட்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இதில் ரியாலிட்டி, யதார்த்தம், தத்ரூபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

        பொதுவாகவே எல்லா மனிதர்களும், இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள். அதிலும் தாம் பார்த்து, ரசிக்கும் மனிதர்களின் அந்தரங்கங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் அவர்களைப் பெரிதும் கவரக்கூடியவை. பலரிடமும் அது பற்றி திரும்பத் திரும்ப பேச வைக்கக் கூடியவை. அந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் இந் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இயக்குனரால் இயக்கப்பட்டு, நடிக நடிகைகள் கிளிசரின் உதவியால் அழுது வழியும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு மத்தியில், தாங்களறிந்த பிரபலங்கள் பொது மேடைகளில் 'தத்ரூபமாக'க் கண்ணீர் சிந்துவதைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களாலேயே இந் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் அழுகைக்காட்சிகள் எப்படி அவற்றின் வெற்றிக்கு வழி காட்டியதோ, அது போலவே நடிகர் சிம்புவின் அழுகை 'ஜோடி நம்பர் 1' பக்கமும், தேர்வு பெறாத குழந்தைகளின் அழுகை 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' பக்கமும், நடிகை சாண்ட்ராவின் அழுகை 'அணுவளவும் பயமில்லை' பக்கமும்,  'மானாட மயிலாட', 'ஓடி விளையாடு பாப்பா', இன்னும் பல 'யதார்த்த' நிகழ்ச்சிகளின் அழுகைகள் அந் நிகழ்ச்சிகளின் பக்கமும் பொது மக்களை ஈர்த்து அவற்றின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

        எனவே உருக்கமான காட்சிகளால் உருவாக்கப்படும் இந் நிகழ்ச்சிகள் பலவும் ரியாலிட்டி என்ற பெயரில் இடம்பெறும் போலி நாடகங்கள். இவற்றுக்காக பார்வையாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்து விலைபோகிறார்கள். ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நடிகை ராக்கி சாவந்தினதும், பொது மக்களில் ஒரு இளைஞரினதும் முழு வாழ்க்கையையுமே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்மானித்ததைப் போல பொதுமக்களையும், அவர்கள் அறிந்த பிரபலங்களையும் பலிகடாக்களாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளமைத்து, பணம் ஈட்டி, இலாபம் பார்க்கும் இந்தத் தொலைக்காட்சிச்  சேவைகளனைத்துமே தத்ரூப வியாபாரிகளன்றி வேறென்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# புகலி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை



27 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு ரிஷான்,
தொலைக்காட்சி சேனல்கள் தங்களுடைய வியாபார உத்திக்காக ஆபாசத்தையும் இத்தகைய அருவெருப்புகளையும் கடைச்சரக்காக்கி காலங்கள் பல உருண்டோடி விட்டன. இத்தகைய சேனல்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே இந்த மாதிரி புரோகிராம்களை புறக்கணித்தலே இவற்றை ஒழிப்பதற்கான வழி. ஆனால் இந்த மாதிரி புரோகிராம்களுக்கு தான் நல்ல ரேட்டிங் இருக்கின்றது. இவை ஒழிவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஊதுகிற சங்கை ஊதியிருக்கிறீர்கள். ஒரு சிலராவது கேட்டு திருந்தினால் சரிதான்.

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'தத்ரூப வியாபாரிகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd December 2009 05:08:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/146925

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஹாய் அரும்பாவூர் said...

அன்பு ரிஷான்,
தொலைக்காட்சி சேனல்கள் தங்களுடைய வியாபார உத்திக்காக ஆபாசத்தையும் இத்தகைய அருவெருப்புகளையும் கடைச்சரக்காக்கி காலங்கள் பல உருண்டோடி விட்டன. இத்தகைய சேனல்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை
i'll followe the word

ஹாய் அரும்பாவூர் said...

அன்பு ரிஷான்,
தொலைக்காட்சி சேனல்கள் தங்களுடைய வியாபார உத்திக்காக ஆபாசத்தையும் இத்தகைய அருவெருப்புகளையும் கடைச்சரக்காக்கி காலங்கள் பல உருண்டோடி விட்டன. இத்தகைய சேனல்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை
good article for this time

விஜி said...

மிகச்சரியாகச்சொன்னீர்கள் ரிஷான். பலகாலம் பழக்கிக்கொண்ட பின்னரும் சிலரின் முழுமையான முகம் நமக்குச்சரிவரத்தெரிவதில்லை. அப்படியிருக்க...இப்படி ஒரு மணமகனைத்தேர்ந்தெடுத்து!!!!!!!!!!!!!!!...என்னமோ போங்கப்பா' என்றிருக்கிறது..

வேற என்னத்தைச்சொல்ல?

மிகச்சரியான வசனக்கோர்வை. சொல்ல வந்த கருத்துக்கு முழுமையான பலம் சேர்த்தன உங்கள் எழுத்துக்கள் ரிஷான்.

நரேஷ் said...

சார்,

உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எதை எடுத்தாலும் குத்தம் சொல்றது...

கையில ரிமோட் இருந்தா மாத்திக்க வேண்டியதுதானே!!! அதை விட்டு இப்படியெல்லாம் எழுதிகிட்டு!!! :))))))))))

கென் said...

//சார்,

உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எதை எடுத்தாலும் குத்தம் சொல்றது...

கையில ரிமோட் இருந்தா மாத்திக்க வேண்டியதுதானே!!! அதை விட்டு இப்படியெல்லாம் எழுதிகிட்டு!!! :))))))))))//

:) ரிபீட்டு

விஜி said...

நரேஷ்,

தப்பினையும் சுட்டிக்காட்டத்தானே வேண்டும்?!...

நரேஷ் said...

//நரேஷ்,

தப்பினையும் சுட்டிக்காட்டத்தானே வேண்டும்?!...//

அட நீங்க வேறங்க!!!

உலகத்துலியே தப்பை தட்டிக் கேக்குற மாதிரி பெரிய தப்பு எதுவும் இல்லை!!!

எப்புடியும் இது மாதிரி பின்னூட்டம் வரும்...அதான் முன்னோட்டமா நானே போட்டுட்டேன்...

விஜி said...

நீங்க ரொமவே உஷார் தான் நரேஷ்.:)


விசுவின் அரட்டை அரங்கம் (சன் தொ.கா) பற்றியும் இப்படி ஒரு கட்டுரை வந்திருந்தது.....அதில் பங்குபற்றிய சிலரே அதைப்பற்றிச்சொன்னபோது...எல்லாமே நாடகம் என்றுதான் எண்ண வைத்தது...

சாந்தி said...

// பொதுவாகவே எல்லா மனிதர்களும், இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள். அதிலும் தாம் பார்த்து, ரசிக்கும் மனிதர்களின் அந்தரங்கங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் அவர்களைப் பெரிதும் கவரக்கூடியவை. பலரிடமும் அது பற்றி திரும்பத் திரும்ப பேச வைக்கக் கூடியவை. அந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் இந் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.//



இதுதான் விஷயம் ...

இதைத்தாண்டிதான் மனிதன் வெற்றிபெற வேண்டியிருக்கும்...

திவாகர் said...

ரிஷான்!

நல்ல கருத்துள்ள படைப்பு இது!

நீங்கள் இதை வாராவாரம் திருப்பி திருப்பிப் போடலாம். யாராவது சிலராவது மாற சந்தர்ப்பம் உண்டு.
உண்மையில் மெகா சீரியலை விட மிக மோசமான நிலையில் போய்க் கொண்டிருக்கின்றன் இந்த ரியாலிடி ஷோ'க்கள்.

ஏற்கனவே தொல்லைக்காட்சியில் ஆங்கிலம் எப்படி ஆக்கிரமித்துவிட்டது என்பதை எழுதியிருந்தீர்கள். அது உண்மைதான். நேற்று திரைப்படப்பாடல் போட்டி விஜய் டி.வி.யில் போட்டிருந்தார்கள். நல்ல சங்கீதப் பாடல்களாக பாடிக் கொண்டிருந்தார்கள் மழலைகள். ஆனால் பதில் சொல்லும் நீதிபதியாக வந்த நித்யஸ்ரீ அவர்கள் தமிழையே மறந்துவிட்டவர் போல பேசியதுதான் வருத்தமளித்தது. மற்றவர்களுக்காவது டி.வி காரர்கள் இப்படிப் பேசவேண்டும் இப்படி நடக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கலாம். ஆனால் பிரபலங்களுக்கு அவ்வித கண்டிப்புகள் இல்லை. பிரபலங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாத பின்னணியில் அவர்கள் தமிழில் பேசி ஆதரிக்கவேண்டும்.

தேகி said...

இதைவிட கொடுமை நகைச்சுவைனு சொல்லி ரோட்ல போறவங்கல பயப்பட வச்சு அதை
காட்றாங்க..!!
:(

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் arumbavur ,

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

தமிழன் வேணு said...

//அவ்வாறு இயல்பு தொலைந்து, போலியாக யதார்த்த வண்ணம் பூசப்பட்ட ஆனால் இயல்பானதெனச் சொல்லிக் கொள்பவைதான் இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனேகமான 'ரியாலிட்டி ஷோ'க்கள்.//


அடுத்தவன் வீட்டுக்குள்ளே எட்டிப்பார்க்கிற அற்பகுணத்தை, voyeurism என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி சல்லி சேர்க்கிற சமாச்சாரம். :-)



//அண்மையில் இவ்வாறான ரியாலிட்டி ஷோ மூலம் தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டார் இந்திய நடிகை ராக்கி சாவந்த். //


தயவு செய்து, ராக்கி சாவந்தையெல்லாம் ஹிந்தி நடிகையென்ற பட்டியலில் சேர்க்காதீர்கள். மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தான் என்பதை வாழ்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிற இது போன்ற மூஞ்சிகளை ’அயிட்டம் கேர்ள்,’ என்று சொல்வது கூட அசிங்கம். ஒரு காலத்தில் ஹெலன், பிந்து, ஜெயஸ்ரீ.டி, அருணா இரானி போன்ற ’அயிட்டம் கேர்ள்’கள் கலக்கிய இந்தித் திரைப்பட உலகத்திற்கு இப்படியொரு சோதனையா? :-(((


//பதினாறு இளைஞர்கள், ராக்கியை மணக்கவென முன்வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பல போட்டிகள், பரீட்சைகள் வைத்து, ராக்கி இறுதியில் அதிலொருவரைத் தேர்ந்தெடுத்தார். //


இதற்கு வந்திருந்த மொத்த விண்ணப்பங்கள் எத்தனை தெரியுமா? ஏறக்குறைய நாற்பதாயிரம்.

மிர்ஸா காலிப் கூறியதாக வட இந்தியாவில் ஒரு பழமொழி கூறுவார்கள்:

"துனியா மே மூர்க்கோன் கீ கமீ நஹீ ஹை
ஏக் மரே தோ ஹஜார் பைதா ஹோத்தே ஹை"

(உலகத்தில் மடையர்களுக்குப் பஞ்சமேயில்லை. ஒருவன் செத்தால் ஆயிரம் பேர் பிறப்பார்கள்.)



// பார்வையாளர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டுமென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி காட்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இதில் ரியாலிட்டி, யதார்த்தம், தத்ரூபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.//


அதே! கொஞ்சம் நிகழ்ச்சி சுவாரசியம் குறைவது போலிருந்தால், எவனையாவது அல்லது எவளையாவது அழ வைத்து பரபரப்பு ஏற்படுத்த வேண்டியது தான். :-))

// இன்னும் பல 'யதார்த்த' நிகழ்ச்சிகளின் அழுகைகள் அந் நிகழ்ச்சிகளின் பக்கமும் பொது மக்களை ஈர்த்து அவற்றின் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்கின்றன.//


சுருக்கமாக, வாழ்க்கை என்பது அழுது கொண்டிருப்பது அல்லது பிறரின் அழுகையை ரசிப்பது என்ற உலகமகா தத்துவத்தை எல்லாரும் பறையறிந்து அறிவிக்கிறார்கள்.


//ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நடிகை ராக்கி சாவந்தினதும், பொது மக்களில் ஒரு இளைஞரினதும் முழு வாழ்க்கையையுமே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்மானித்ததைப் போல பொதுமக்களையும், அவர்கள் அறிந்த பிரபலங்களையும் பலிகடாக்களாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளமைத்து, பணம் ஈட்டி, இலாபம் பார்க்கும் இந்தத் தொலைக்காட்சிச் சேவைகளனைத்துமே தத்ரூப வியாபாரிகளன்றி வேறென்ன?//


என்ன? இவ்வளவு விஸ்தாரமாகக் காட்டி, ராக்கி தேர்ந்தெடுத்த அந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபரை இப்போது ராக்கி திருமணம் செய்து கொள்ளப்போவதில்லையாம். அதையும் எழுதியிருக்கலாமே?

இதையடுத்து பிரமோத் மகாஜனின் மகனும் இதே மாதிரி சுயம்வரம் நடத்தப்போகிறாராம். அதற்கும், பெண் கைதிகள் உட்பட பலர் விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார்களாம்.

ஜெய் ஹோ!

M.Rishan Shareef said...

அன்பின் வேணு ஐயா,

//அடுத்தவன் வீட்டுக்குள்ளே எட்டிப்பார்க்கிற அற்பகுணத்தை, voyeurism என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி சல்லி சேர்க்கிற சமாச்சாரம். :-)//


ஆமாம். அதுதான் பார்வையாளரை அதிகப்படுத்துகிறது. :(

//தயவு செய்து, ராக்கி சாவந்தையெல்லாம் ஹிந்தி நடிகையென்ற பட்டியலில் சேர்க்காதீர்கள். மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தான் என்பதை வாழ்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிற இது போன்ற மூஞ்சிகளை ’அயிட்டம் கேர்ள்,’ என்று சொல்வது கூட அசிங்கம். ஒரு காலத்தில் ஹெலன், பிந்து, ஜெயஸ்ரீ.டி, அருணா இரானி போன்ற ’அயிட்டம் கேர்ள்’கள் கலக்கிய இந்தித் திரைப்பட உலகத்திற்கு இப்படியொரு சோதனையா? :-(((//


:))
எவ்வளவு விஷயங்கள் விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள். :)
// இதற்கு வந்திருந்த மொத்த விண்ணப்பங்கள் எத்தனை தெரியுமா? ஏறக்குறைய நாற்பதாயிரம்.

மிர்ஸா காலிப் கூறியதாக வட இந்தியாவில் ஒரு பழமொழி கூறுவார்கள்:

"துனியா மே மூர்க்கோன் கீ கமீ நஹீ ஹை
ஏக் மரே தோ ஹஜார் பைதா ஹோத்தே ஹை"

(உலகத்தில் மடையர்களுக்குப் பஞ்சமேயில்லை. ஒருவன் செத்தால் ஆயிரம் பேர் பிறப்பார்கள்.)//


அதே தான். ஆனால் பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்க்கும்போது. :(

// சுருக்கமாக, வாழ்க்கை என்பது அழுது கொண்டிருப்பது அல்லது பிறரின் அழுகையை ரசிப்பது என்ற உலகமகா தத்துவத்தை எல்லாரும் பறையறிந்து அறிவிக்கிறார்கள்.//


ஆமாம் வேணு ஐயா..சிறு குழந்தைகள் தங்கள் அழுகையின் மூலம் பிறரது கவனத்தை ஈர்ப்பதுபோல இவர்களும் பிறரது கவனத்தைக் கவரவென்று அழுது தொலைக்கிறார்கள். :(

//என்ன? இவ்வளவு விஸ்தாரமாகக் காட்டி, ராக்கி தேர்ந்தெடுத்த அந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபரை இப்போது ராக்கி திருமணம் செய்து கொள்ளப்போவதில்லையாம். அதையும் எழுதியிருக்கலாமே?//


திருமணம் செய்துகொள்ளப் போவதில்லையாமா? இந்தத் தகவல் எனக்குப் புதிது. எல்லாம் ஒரு நாடகம்.


//இதையடுத்து பிரமோத் மகாஜனின் மகனும் இதே மாதிரி சுயம்வரம் நடத்தப்போகிறாராம். அதற்கும், பெண் கைதிகள் உட்பட பலர் விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார்களாம்.//


ஆமாம்.. இந்த விடயம் கேள்விப்பட்டேன்.
அந்தக் கலாச்சாரம் அவர்களோடு போகட்டும். தமிழ்நாட்டுக்குள் ஊடுருவாமல் இருந்தால் சரி.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//மிகச்சரியாகச்சொன்னீர்கள் ரிஷான். பலகாலம் பழக்கிக்கொண்ட பின்னரும் சிலரின் முழுமையான முகம் நமக்குச்சரிவரத்தெரிவதில்லை. அப்படியிருக்க...இப்படி ஒரு மணமகனைத்தேர்ந்தெடுத்து!!!!!!!!!!!!!!!...என்னமோ போங்கப்பா' என்றிருக்கிறது..

வேற என்னத்தைச்சொல்ல?//


ஆமாம் தோழி. யாரெனத் தெரியாத ஒருவரை நம்பி, தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்படைப்பதைப் போல முட்டாள்தனம் வேறேதுமில்லை.


//மிகச்சரியான வசனக்கோர்வை. சொல்ல வந்த கருத்துக்கு முழுமையான பலம் சேர்த்தன உங்கள் எழுத்துக்கள் ரிஷான்.//


:)
நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் நரேஷ்,


//சார்,

உங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எதை எடுத்தாலும் குத்தம் சொல்றது...//


:))
குற்றம் கண்டால் சொல்லத்தானே வேண்டும் நண்பா? :))


//கையில ரிமோட் இருந்தா மாத்திக்க வேண்டியதுதானே!!! அதை விட்டு இப்படியெல்லாம் எழுதிகிட்டு!!! :))))))))))//


:)))
இனியும் எழுதுவேன்.. :)

கருத்துக்கு நன்றி நண்பா :))

M.Rishan Shareef said...

அன்பின் கென்,
கருத்துக்கு நன்றி நண்பா :))

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,



// பொதுவாகவே எல்லா மனிதர்களும், இன்னொருவரின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்க்கும் ஆசை கொண்டவர்கள். அதிலும் தாம் பார்த்து, ரசிக்கும் மனிதர்களின் அந்தரங்கங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் அவர்களைப் பெரிதும் கவரக்கூடியவை. பலரிடமும் அது பற்றி திரும்பத் திரும்ப பேச வைக்கக் கூடியவை. அந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் இந் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.



இதுதான் விஷயம் ...

இதைத்தாண்டிதான் மனிதன் வெற்றிபெற வேண்டியிருக்கும்...//


ஆமாம். நிச்சயமாக அக்கா.
கருத்துக்கு நன்றி அக்கா !

பூங்குழலி said...

இவை எல்லாமே மாறுபட்ட தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே ..இவற்றில் எதுவும் ரியாலிடி ஷோக்கள் இல்லை ...எல்லாமே முன்னே நிச்சயிக்கப்பட்டப் படியே நடத்தப்படுகின்றன

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் திவாகர்,

//ரிஷான்!

நல்ல கருத்துள்ள படைப்பு இது!

நீங்கள் இதை வாராவாரம் திருப்பி திருப்பிப் போடலாம். யாராவது சிலராவது மாற சந்தர்ப்பம் உண்டு.
உண்மையில் மெகா சீரியலை விட மிக மோசமான நிலையில் போய்க் கொண்டிருக்கின்றன் இந்த ரியாலிடி ஷோ'க்கள்.//


ஆமாம்..நிச்சயமாக நண்பரே.
சிறுவர்களுக்கு ஒவ்வாத பலதும்கூட இந் நிகழ்ச்சி வழியே வீட்டுக்குள் வந்துவிடுகின்றன.


//ஏற்கனவே தொல்லைக்காட்சியில் ஆங்கிலம் எப்படி ஆக்கிரமித்துவிட்டது என்பதை எழுதியிருந்தீர்கள். அது உண்மைதான். நேற்று திரைப்படப்பாடல் போட்டி விஜய் டி.வி.யில் போட்டிருந்தார்கள். நல்ல சங்கீதப் பாடல்களாக பாடிக் கொண்டிருந்தார்கள் மழலைகள். ஆனால் பதில் சொல்லும் நீதிபதியாக வந்த நித்யஸ்ரீ அவர்கள் தமிழையே மறந்துவிட்டவர் போல பேசியதுதான் வருத்தமளித்தது. மற்றவர்களுக்காவது டி.வி காரர்கள் இப்படிப் பேசவேண்டும் இப்படி நடக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கலாம். ஆனால் பிரபலங்களுக்கு அவ்வித கண்டிப்புகள் இல்லை. பிரபலங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாத பின்னணியில் அவர்கள் தமிழில் பேசி ஆதரிக்கவேண்டும்.//


ஆமாம்..ஆனால் தமிழுக்கு அந்த ஆதரவு இல்லை.
தமிழ் மொழியை நன்றாக அறிந்தவர்கள் கூட இவ்வாறான நிகழ்ச்சிகளில் தமிழைக் குதப்பி, ஆங்கிலத்தை உமிழ்கிறார்கள். :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//இவை எல்லாமே மாறுபட்ட தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே ..இவற்றில் எதுவும் ரியாலிடி ஷோக்கள் இல்லை ...எல்லாமே முன்னே நிச்சயிக்கப்பட்டப் படியே நடத்தப்படுகின்றன//


ஆமாம்.
அனைத்துமே பார்வையாளர்களை ஏமாற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தைக் கொழுக்கச் செய்யும் நாடகங்கள். :((

கருத்துக்கு நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் தேகி,

//இதைவிட கொடுமை நகைச்சுவைனு சொல்லி ரோட்ல போறவங்கல பயப்பட வச்சு அதை
காட்றாங்க..!!
:(//


ஆமாம். தெருவில் செல்லும் ஒவ்வொரு பொதுமகனும் அக் கணத்தில் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள். அவர்களிடையில் திடீரென அதிர்வை ஏற்படுத்தி, அதை உலகம் முழுக்க வேடிக்கை காட்டுகிறார்கள். :((

கருத்துக்கு நன்றி நண்பா !

N.Prasath said...

yes rishan me too hate dis kind of trend. it is impossibe to bring an end to dis kind of programs unless people avoid watching them

M.Rishan Shareef said...

அன்பின் வெங்கட் பிரசாத்,

//yes rishan me too hate dis kind of trend. it is impossibe to bring an end to dis kind of programs unless people avoid watching them//

ஆமாம் நண்பா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !