Thursday, October 1, 2009

அணுவளவும் பயமில்லை

கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து மீற்றர் தூரத்திலொரு பெரிய வட்டம் நிலத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்த நீல நிற வட்டத்துக்குள்ளே அதை விடச் சிறிய ஒரு மஞ்சள் நிற வட்டம். அந்த மஞ்சள் வட்டத்துக்குள்ளே சிவப்பு நிற மிகச் சிறிய வட்டம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குத் தரப்படும் பொருளை கடப்பாறையால் அள்ளி, பத்து மீற்றர் தொலைவில் இருக்கும் அந்த வட்டத்தை நோக்கி எறியவேண்டும். அப் பொருள் போய் விழும் இடத்தினைப் பொறுத்து உங்கள் போட்டி ஆரம்பமாகும்.

        அப் பொருள் நீல நிறப் பெரிய வட்டத்துக்குள் விழுந்தால், ஒரு தட்டு நிறைய உங்களுக்குத் தரப்படும் முழு உணவினை சற்றும் மிச்சம் வைக்காமல் நீங்கள் உண்ணவேண்டும். மஞ்சள் நிற வட்டத்துக்குள் விழுந்தால் அதே உணவின் சிறிய பகுதியை உண்டால் போதும். சிவப்பு நிற வட்டத்துக்குள் விழுந்தால் உண்ணவே தேவையின்றி நீங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடுத்த சுற்றுக்குப் போக உங்களுக்குச் சவாலாக இருக்கும் அந்த உணவைப்பற்றிச் சொல்லவில்லையே. அந்த உணவுதான், நான் முன்னர் சொன்ன பல நாட்களுக்கு முன்னர் செத்த விலங்கின், வீச்சத்தோடு புழு வடியும் குடல் பகுதி.

        இது போன்ற பல போட்டிகளில் தேர்ச்சி பெற்று, இச் சுற்றுக்கு ஆறு இளம்பெண்கள் வந்திருந்தார்கள். முதல் பெண் எறிந்த பொருள் நீல வட்டத்துக்குள் விழுந்தது. முகம் அஷ்டகோணலாகிப் போக, பார்க்கும் என்னையும் அறுவெறுக்க வைத்தபடி அவர் வேறு வழியின்றி அந்தக் குடல்பகுதியை உண்ணத் தொடங்கினார். உதடுகளில் தொங்கிக் கொண்டு புழுக்கள் நெளிந்தன. உணவு, தொண்டையைத் தாண்டிப் போகும் பொழுதெல்லாம் வாந்தி வருவது போலச் சத்தமிட்டார். இரு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே போட்டிக்கு வந்திருந்த சக பெண்களும் மூக்கோடு வாயையும் இறுகப் பொத்தியபடி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் சாப்பிட்டு முடித்து, நடுவரால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றாரென அறியக் கிடைத்ததும் அந்த இடத்தின் ஒரு மூலைக்குப் போய் சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுக்கத் தொடங்கினார். அடுத்த பெண் எறிந்ததும் நீல வட்டத்துக்குள் விழுந்தது. அவர் தன்னால் இதனை உண்ணமுடியாதெனச் சொல்லி போட்டியை விட்டும் விலகிப் போனார். அடுத்தடுத்த பெண்கள் எறிந்ததுவும் நீல நிற வட்டத்துக்குள் விழுந்து, அதே உணவு உண்ணக் கொடுக்கப்பட்டது. மூக்கைப் பிடித்து ஒக்காளித்தபடி உண்டவர்கள், வெற்றி அறிவிப்பு வந்ததும் உடனே போய் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அன்று மதியம் சோறு இறங்கவில்லை.

        இன்னுமொரு சுற்று இப்படி. செத்த விலங்குகளின் உடல்கள் ஒரு அறைக்குள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதன் உடலிலிருந்து விழுந்த புழுக்கள் தரையெங்கும் நெளிகின்றன. மேலாடையில்லாமல் வெற்றுடம்போடு அந்தத் தரையில் ஊர்ந்துபோகவேண்டும். பிறகு அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய உருளையான பாத்திரத்தின் அடி ஆழத்தில் இருக்கும் சாவியை எடுக்க வேண்டும். அந்த ஆழமான பாத்திரம் முழுவதுமாக இறந்த விலங்குகளின் கொழுப்புக்களாலும், கழிவுகளாலும் நிரம்பி வழிபவை. அதனுள்ளேதான் அந்தச் சாவி ஒளிந்திருக்கிறது. அதற்குள் தலையோடு மூழ்கித் தேடி சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் பின் அறையின் ஒரு மூலையில் உறைந்த பனிக்கட்டியிருக்கும் பெட்டியைத் திறக்கவேண்டும். அந்தப் பனிக்கட்டியை விரல்களால் குடைந்து அதன் மத்தியில் இருக்கும் இன்னுமொரு சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் போய் அதன் மூலம் வாசல் கதவைத் திறந்தால் அந்த அறையை விட்டும் வெளியே வரலாம். இவ்வளவையும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்துமுடித்தால் அடுத்த சுற்றுக்கும் போகலாம்.

        இந்தப் போட்டியில் இது போலப் பல சுற்றுக்கள். விஷத் தேள்களை உடலில் ஊர்ந்துசெல்ல விட வேண்டும். பாம்புகளோடு, கொடிய விலங்குகளோடு ஒரு சிறு பெட்டிக்குள் இருந்து காட்டவேண்டும். கரப்பான் பூச்சி, சிலந்தி போன்ற சிறு பிராணிகளை தயங்காமல் உயிரோடு உண்டு காட்டவேண்டும். எந்தவித மறுப்பும் சொல்லாமல் சாக்கடைக்குள் இறங்கிக் காட்டவேண்டும். அவர்கள் சொல்லும் உயரமான இடங்களிலிருந்து குதித்துக் காட்டவேண்டும். நிர்வாணமாக தெருவில் நடந்துசெல்ல வேண்டும். கண்கள் கட்டப்பட்ட, முடி திருத்துபவர்களிடம் தைரியமாகத் தலையைக் கொடுக்கவேண்டும். பல இளைஞர்களும் , யுவதிகளும் பின்வாங்காமல் இவற்றையெல்லாம் செய்துகாட்டுகிறார்கள். காரணம் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் மற்றும் பிரபலம் !

        நான் மேற்சொன்னவையெல்லாம் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று தனது பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் செய்த  Fear Factor தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சில பகுதிகள் மட்டுமே. அதே போன்ற நிகழ்ச்சியொன்றை நேற்று விஜய் டீவியிலும் பார்த்தேன். நிகழ்ச்சியின் தலைப்பு 'அணுவளவும் பயமில்லை'.  'காபி வித் அனு' நிகழ்ச்சி நடத்தும் அனு ஹாசனின் நிகழ்ச்சியென்பதால் 'அனுவளவும் பயமில்லை' எனத் தலைப்போ என்று இத் தலைப்பை மீண்டும் மீண்டும் கவனித்தேன். நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது.

முதற்கட்டமாக பிரபலமான ஏழு தொலைக்காட்சி நடிகைகளை அழைத்து வந்து அவர்களுக்கு போலிஸ் பயிற்சிமுறையின் போது கொடுக்கப்படும் சில கட்டப் பயிற்சிகளைச் செய்யச் சொன்னார் அனு. உயரமான இடத்தில் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் ஊர்ந்து செல்லல், கம்பி வளையங்களில் ஏறி, இறங்குதல் போன்றவற்றைச் செய்தார்கள் அப் பெண்கள். அடுத்து ஒரு உயரமான சுவற்றிலிருந்து கயிற்றில் தொங்கிப் போய் எதிர்ப்புறத்திலிருந்த அடுத்த உயரமான சுவரில் உட்காரவேண்டும். இரு நடிகைகள் இதில் கீழே விழுந்து, காலிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு, காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்ட அந்த இரு நடிகைகளையும் தமது தொடர்களுக்காக ஒப்பந்தம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிறு கலங்கியபடி பார்த்திருந்திருப்பார்கள். மீதி நடிகைகள் இன்னும் பல சாகசங்களைச் செய்து, பாம்புப் பெட்டிக்குள் கைகளை விட்டுக் காட்டி, அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியோ எதிர்வரும் காலங்களில் விஜய் டீவியின் அமெரிக்க உத்திகளால், பார்வையாளர் எண்ணிக்கை இன்னுமின்னும் அதிகரித்து, அவர்களது பணப்பெட்டி நிறையப் போவது மட்டும் உறுதி.

        அனு ஹாசன் மற்றும் விஜய் டீவிக்கு இரண்டு கோரிக்கைகள். எப்படியும் அடுத்தடுத்த காலங்களில் நான் மேற்சொன்னபடி அமெரிக்கத் தரத்துக்கு இந் நிகழ்ச்சியும் வந்துவிடும். அடுத்த போட்டிகளின் போதாவது ஒரு மருத்துவரையும், ஆம்புலன்ஸ் வண்டியையும் அருகிலேயே வைத்திருங்கள். கலந்து கொள்பவர்கள் அந்தரத்தில், உயரத்தில் கால்கள் உதற நீங்கள் சொல்லும் சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது 'இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள்?', 'அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?' என ஒலிவாங்கியைக் கொடுத்து, அவர்களிடம் அபத்தமான கேள்விகளைக் கேட்காதீர்கள். அத்தோடு இனிமேலாவது, கலந்துகொண்டவர்களுக்கு இப் பயிற்சிகளைச் செய்து காட்டிய போலீஸாருக்குத் தொப்பை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயிற்சியாளர்களைப் பார்க்கும்போதும் இவ்வளவு சாகசமான பயிற்சிகளைச் செய்துமா இந்தளவு பருத்த தொப்பை வந்திருக்கிறதென ஆச்சரியமாக இருக்கிறது. முடிந்தால், கொஞ்சமாவது சமூகப்பற்று இருந்தால் இந் நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள். தொலைக்காட்சி பார்த்து, எல்லாவற்றையும் செய்துபார்க்கும் பல குழந்தைகளின், சிறுவர் சிறுமிகளின் உயிர்கள் காப்பாற்றப்படட்டும். அவர்களுக்குத்தான் உண்மையில் அணுவளவும் பயமில்லை பாருங்கள்.

        இது போன்ற சாகசங்களை, வீர தீரச் செயல்களை எல்லாம் இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் பார்க்கவேண்டும் என்றில்லை. கடந்த ஜூலை மாத இறுதியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துக்கருகே பலவிதமான பயங்கர ஆயுதங்களோடு பஸ்ஸுக்குள் ஏறி பயணிகளிடம் தம் வீரதீரம் காட்டிய கல்லூரி மாணவர்களை நேரில் பார்த்துத் தெறித்தோடிய மக்களுக்கு இந்தத் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தந்துவிடாது. அதுபோலவே கடந்த அதே ஜூலை மாதத்தில் பீகாரின் தலைநகரம் பாட்னாவில், பொது இடத்தில் எல்லோரும் பார்த்திருக்க 22 வயதுப் பெண்ணொருவரை ஆடைகள் கிழித்து அசிங்கப்படுத்தி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் எல்லோரும் பார்க்க ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தி, வீதியில் வைத்து ஒரு கும்பல் மானபங்கப்படுத்திய கொடூரக் காட்சியைக் கண்டவர்களுக்கு மேற்படி சாகச நிகழ்ச்சிகள் பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.

        இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த வெறித் தாண்டவத்தைச் செய்தியாக்கி விற்றுப் பணம் பார்க்கும் ஆர்வம் அவர்களை வழி நடத்திய அளவு கூட மனிதாபிமானம் அவர்களை வழி நடத்தவில்லை. இந் நிகழ்வில் பொதுமக்களும் சூழ நின்று ஏதோ சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதுபோல அந்த அநீதமிழைக்கும் கும்பலுக்கெதிராக எதுவுமே செய்யாமல் பார்த்திருந்தது கூட மிகவும் வேதனைக்குரியது. பொதுமக்களை விடுவோம். போலிஸ்காரர்களே இந் நிகழ்வின்போது அருகிலிருந்திருப்பின் அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்திருப்பர் எனத் தோன்றுகிறது. முன்பு இவர்கள் வேடிக்கை பார்த்த அழகை சென்னை, அம்பத்தூர் சட்டக் கல்லூரி மோதலில் நாம்தான் கண்டிருக்கிறோமே.

        சட்டக் கல்லூரி கலவரத்தின் போதே, அரசும் போலிஸும் இதுபோன்ற கல்லூரி மாணவர்களின் வெறித்தனமான வன்முறைகளுக்கெதிராக ஏதேனும் உயர்மட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தால், எழும்பூர் இரயில் நிலைய அட்டகாசம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கல்லூரி மாணவர்கள் மேல் பெரிய அளவில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியம் இருக்கும் காரணத்தால் அவர்கள் மேலும் மேலும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். அதிரடிச் சண்டைக் காட்சிகளோடும், வெட்டுக் குத்துக்களோடும் எடுக்கப்படும் சினிமாக்கள் அவர்களது இள ரத்தங்களைத் தூண்டிவிடுகின்றன. எதிர்காலம் குறித்த அச்சங்களெதுவுமின்றி தம்மை, எல்லாம் வல்ல கதாநாயகர்களாகச் சித்தரித்துக் கொண்டு மோதல்களில் இறங்கிவிடுகிறார்கள். இப்பொழுதாவது இதற்கொரு சட்டம் கொண்டுவரப்படட்டும். இல்லாவிட்டால் காவல்துறையைச் சிரிப்புப் போலிஸாக மட்டுமே கண்டு வளரும் கல்லூரி மாணவர்களிடம் சட்டங்கள், தண்டனைகள் குறித்து கேட்கப்படுமிடத்து இப்படிச் சொல்லுவார்கள். 'அணுவளவும் பயமில்லை'.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை

26 comments:

buruhani said...

நல்ல தரமான விமர்சனம் வாழ்த்துக்கள் நண்பரே

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'அணுவளவும் பயமில்லை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 08:48:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/120105

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

சீதாலக்ஷ்மி said...

உன் சிந்தனையின் உய்ரம் எவரெஸ்டைத் தொடுகின்றது
நம்பிக்கை நட்சத்திரம் தெரிகின்றது
கடைசி மூச்சு நிற்கும் வரை மனிதன் நம்பிக்கையில்
தொங்கிக் கொண்டிருப்பான்

நடராஜன் கல்பட்டு said...

அன்பு ரிஷான் ஷரீஃப் அவர்களே,

சிந்தனையைத் தூண்டும் சிறந்த கட்டுரை. ஆனால் ஒன்று தொந்தி இல்லாத போலீஸ் காரரை இந்தியாவில் எதிர்பார்ப்பது ரொம்பவே அதிகம்.

தமிழன் வேணு said...

உங்களது கட்டுரையின் சாராம்சமென்று நான் கீழ்க்கண்டவற்றை உணர்கிறேன்.

1. ஊடகங்களுக்குப் பொறுப்பில்லை.
2. அரசு இயந்திரங்களுக்குக் கடமையுணர்ச்சியில்லை.
3. பொதுமக்களுக்கு சமூக அக்கறையில்லை

இதில் மூன்றாவதாகச் சொன்னதை நம்மால் மாற்ற முயன்றால், முதல் இரண்டும் காணாமல் போய்விடும். ஆனால், பொதுமக்களுக்கு சமூக அக்கறை எப்படி,எங்கிருந்து வரும்?

இந்த உலகத்தில் அடுத்தவனுக்கு உதவப்போனால், அதற்குக் கிடைக்கிற பட்டங்கள் என்னென்ன தெரியுமா? "அதிகப்பிரசங்கி,""கொழுப்பெடுத்தவன்," "கிறுக்கன்,"

உங்கள் வயதில் எனக்கும் இது மாதிரியெல்லாம் தோன்றியதுண்டு. அண்மைக்காலம் வரைக்கும் கூட,"ஐயோ,நம் குழந்தைகள் காலத்திலாவது உலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்தால் பரவாயில்லையே,"என்று எண்ணியதுண்டு. ஆனால், இப்போது கிடையாது.

ஒவ்வொரு நாளும் மனிதன் மனிதனை ஏதோ ஒரு விதத்தில் வஞ்சிக்கிற அக்கிரமத்தைப் பார்த்துக்கொண்டு, என் வண்டிக்கு விபத்து ஏற்படாமல் இருந்தால் போதுமென்ற பாதுகாப்பு உணர்ச்சியோடு நான் என் வழியே போகத் தொடங்கி வெகுநாளாகிவிட்டது.

ஒரு மனிதனுக்கு வயிற்றுப்பசி,குடும்பப்பொறுப்பு,சொந்தக்கடமைகள் என்பவை இருக்கும்போது, அதையும் மீறி சமூக அக்கறை கொள்வது எல்லாராலும் இயலக்கூடிய விஷயம் அல்ல. அப்படிச் செய்கிறவனுக்குக் கிடைக்கிற பட்டங்கள், அவன் அனுபவிக்கிற துயரங்கள், அவன் தாண்டிச்செல்ல வேண்டிய நெருப்புக்கள், அவன் அவ்வப்போது துடைத்துக்கொள்ள வேண்டிய அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதையெல்லாம் பவிசாக ஒரு போர்வை போர்த்திக்கொண்டு செய்கிற பாசாங்கு எல்லாருக்கும் வராது. எதார்த்தவாதி பொதுஜனவிரோதி- என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரிந்திருக்கிறது.

சட்டக்கல்லூரி மாணவர்களின் அத்துமீறலைச் சகித்துக்கொண்டவர்களுக்கும், பீஹாரில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அந்த எதார்த்தம் புரிந்திருக்கிறது. எவனாவது கத்தியை எடுத்து வயிற்றில் சொருகினால், நாளை இதே முச்சந்தியில் என் பெண்டாட்டி, பிள்ளைகள் பிச்சையெடுக்க வந்து நிற்பார்கள் என்ற பயம் அவனது இரத்ததில் கலந்திருக்கிறது. பணபலம், ஆள்பலம்,உடல்பலம் இல்லாத பலவீனமானவர்களுக்கு ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வீடு திரும்புகிற வீரச்செயல் செய்வதற்கே துணிச்சல் இல்லாமல் இருக்கிறது.

நம்மையும் உள்ளடக்கிய சமூகம் தான் இது. ஆனால், சந்தர்ப்பம் வரும்போது அது நம்மை விலக்கி விட்டு விடும். தன்னந்தனியனாய் தத்திங்கிணத்தோம் போடுகிற நந்தவனத்து ஆண்டிகளைக் கேளுங்கள்! சமூக அக்கறை அவர்களுக்குக் கொடுத்த சன்மானம் என்னவென்று சொல்வார்கள்.

எனக்கு - ஒவ்வொரு அணுவிலும் அச்சமுண்டு ரிஷான்! சமூகமாவது மண்ணாங்கட்டியாவது.

நஜீபா அக்தர் said...

எதிர்காலத்தில் சட்டங்களை இயற்றவும், இயற்றப்பட்ட சட்டங்களை நிறைவேற்றவும் பொறுப்பினை ஏற்க வேண்டிய ஒரு சமுதாயம், முளைப்பதற்குள்ளேயே தனது விபரீத விளைச்சலைக் காட்டுகிறபோது, விரக்தியோன்று தவிர வேறு இல்லை.

துரை said...

அன்பின் ரிஷான்

அதற்கு முதலில் “ அனுஅளவும் பயமில்லை” என்றுதான் வைத்திருந்தார்கள் :)

தேனுஷா said...

இதை எங்கண்ணா பார்ப்பாரு

எனக்குப் பிடிக்கலை ஓவரா பில்டப் பண்ணி காட்டுறாங்க

பீபி தான் எகிறும்

அவங்க அழுறதெல்லாம் தேவையா நமக்கு ?

விஷ்ணு said...

சிந்திக்கவேண்டிய விசயம் ..
பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே ...

கவிநா said...

"அணு அளவும் பயமில்லை" = "அணு அணுவும் பயமுறுத்துகிறது"

1. ஊடகங்களுக்குப் பொறுப்பில்லை.
2. அரசு இயந்திரங்களுக்குக் கடமையுணர்ச்சியில்லை.
3. பொதுமக்களுக்கு சமூக அக்கறையில்லை
இதை படிக்கும் யாரேனும் இந்த மூன்றில் ஏதாவதொன்றை உணர்ந்தாலும் அது உங்களுக்கு கிடைத்த வெற்றி... இந்த அவலங்களுக்கு கிடைக்கும் சவுக்கடி....
நன்றிகள்...

மேலும் உங்கள் சமூக அக்கறையை தொடர வேண்டி
கவிநா...

சாந்தி said...

எனக்கு பிடித்த நிகழ்ச்சியில் இதுவும் ஒண்ணு.. ( 8 வருடமாய் பார்க்கிறேன்..)

நான் ரசிப்பது வீர சாகசங்களை மட்டுமே.. மற்ற அருவருக்கத்தக்கவை பார்க்க முடியாதவையே.

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடத்துவதும் நன்றாய் இருக்கும்.

ஆனால் இவையெல்லாம் வெளிநாட்டில் தகுந்த பாதுகாப்போடு உபகரணங்களோடு நடக்கும்..

சென்னையில் எப்படின்னு தெரியலை.

கலைஞர் டிவியில் தில் தில் மனதில் நிகழ்ச்சியும் சாகச நிகழ்ச்சிதான்..சிலவை பார்க்கலாம் சிலது தவிர்க்கலாம்..

தமிழன் வேணு said...

இதோ இன்னொரு இடைச்செருகல்!

"உதய்"என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று சென்ற வாரம், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தொழிலாளர் மேம்பாட்டுத்துறை மற்றும் தேசீய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் ஆகியவர்களிடம் ஒரு புகார் அளித்துள்ளது.

இதன் விளைவாக, என்.டி.டிவி-இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற "பதி பத்னி அவுர் வோஹ்" என்ற நிகழ்ச்சிக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறுகிற ஜோடிகள், யாரோ பெற்ற குழந்தைகளைப் பராமரிக்க வேண்டுமாம். இது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியென்ற குரல் எழும்பியிருக்கிறது.

"ஒரு தொடர் எடுப்பதற்காக, குழந்தைகளைத் துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது," என்று அமைச்சர் கூறியிருக்கிறார். "அந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் இந்நிகழ்ச்சியின் போது பார்த்துக்கொண்டிருந்தாலுமே, ஒரு குழந்தையை அதன் பெற்றோர் தவிர இன்னொரு ஜோடியிடம் ஒப்படைப்பதை ஒப்புக்கொள்ள முடியாது."


இது குறித்து ஆவன செய்ய தகவல் ஒளிபரப்புத்துறைக்குத் தகவல் அனுப்பியுள்ளதாக குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.

"Baby Borrowers" என்ற நிகழ்ச்சியைத் தழுவி தயாரிக்கப்படுகிற இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு பற்றி விளக்குகிறார்களாம்.


பேஷ் பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! அமெரிக்காவைப் பார்த்து சூடு போட்டு போட்டே....! போகப் போக இன்னும் என்னென்னத்தை கைமாத்துவாங்களோ தெரியலியே?

வேந்தன் அரசு said...

//இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை//

ஊடகவியலார் எல்லா இடங்களிலும்தான் இருப்பார்கள். நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதை நிறுத்திவிட்டு கொடுமைகளை தவிர்க்க போனால் அவர்களுக்கு யார் கூலி கொடுப்பார்கள். வேலைக்கு அமர்த்துவார்கள்? யார் பணிமேல் அனுப்புவார்கள்?

M.Rishan Shareef said...

அன்பின் Buruhani,

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழச் செய்கிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Aren said...

நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிடுங்கப்பா!!!

மன்மதன் said...

//நான் வரவில்லை இந்த ஆட்டத்திற்கு. என்னை விட்டுவிடுங்கப்பா!!! //

அதெப்படி.. மன்றத்தில் ‘ஆரென் அளவும் பயமில்லை’ என்ற நிகழ்ச்சி பண்ணலாம்னு இருக்கோம்..அதிலே ‘சம்பள கவரை மனைவிக்கு தெரியாமல் மறைத்து வைக்கிற போட்டி, ‘மனைவி அடிக்கும் போது லாவகமாக எஸ்கேப் ஆகும் போட்டி’னு நிறைய வைக்கலாம்னு இருக்கோம்.. இப்படி எஸ்கேப் ஆகறீங்களே..:)

மன்மதன் said...

//நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது//

கவலைப்பட வேண்டாம்.. அந்தளவுக்கெல்லாம் போகாது.. இப்பவே இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் இறங்கி விட்டது என கேள்விப்பட்டேன்.

அக்*ஷய் குமாரின் ‘கிலாடியோன் கா ..’ நிகழ்ச்சி நிறைய செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.. அதன் கூட கம்பேர் பண்ணும் போது இது வெறும் பச்சாதான்...

Aren said...

‘மனைவி அடிக்கும் போது லாவகமாக எஸ்கேப் ஆகும் போட்டி’னு :D
இதில் நான் குறைந்தது டாப் 5*ல் வருவதுவதற்கு சான்ஸ் இருக்கு

இளந்தமிழ்ச் செல்வன் said...

//இதில் நான் குறைந்தது டாப் 5*ல் வருவதுவதற்கு சான்ஸ் இருக்கு//
என்னங்க ஆரென் இப்பிடி ஏமாத்துறீங்க. நீங்கதான் முதலிடம் என்று நினைத்தோம்.....!!!!!!!

ஏமாற்றத்துடன்.....

ஆ.ஜெயஸ்ரீ said...

நண்பர் சொல்வது போல தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே நமது எதிர்காலத்தை பயமுறுத்துகிறது . உங்களுக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. பெண்கள் வன்முறையில் பீகார் எப்போதும் முன் நிற்கிறது .அங்கு ஆட்சி நடத்துபவர்களால் இதை தடுக்க முடியாதா?

M.Rishan Shareef said...

அன்பின் Aren, மன்மதன், இளந்தமிழ்ச் செல்வன், ஆ.ஜெயஸ்ரீ,

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே !

@ மன்மதன் : //கவலைப்பட வேண்டாம்.. அந்தளவுக்கெல்லாம் போகாது.. இப்பவே இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் இறங்கி விட்டது என கேள்விப்பட்டேன்.

அக்*ஷய் குமாரின் ‘கிலாடியோன் கா ..’ நிகழ்ச்சி நிறைய செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.. அதன் கூட கம்பேர் பண்ணும் போது இது வெறும் பச்சாதான்...//

அப்படியே இந் நிகழ்ச்சி இல்லாமல் போனால் நல்லது.

@ ஜெயஸ்ரீ : //நண்பர் சொல்வது போல தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே நமது எதிர்காலத்தை பயமுறுத்துகிறது . உங்களுக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு. பெண்கள் வன்முறையில் பீகார் எப்போதும் முன் நிற்கிறது .அங்கு ஆட்சி நடத்துபவர்களால் இதை தடுக்க முடியாதா?//

நிச்சயமாக முடியும். இடம்பெறும் வன்முறைகளில் ஆட்சியாளர்களுக்கு பங்கும் வருமானமும் இருக்கும்பொழுது எதற்குத் தடுக்கப்போகிறார்கள் சகோதரி? :(

பால்ராஜ் said...

தப்பித் தவறிக்கூட ஸ்க்ரீனில் வந்து விட்டால் உடனே ரிமோட் கண்ட்ரோல் எடுத்து விடுவது வழக்கம்.

மேமன்கவி பக்கம் said...

நண்பரே!

உங்கள் விமர்சனம் நன்று. அத்துடன் இன்றொரு சிந்தனையும் தோன்றியது. ஊடகங்களில் ஒளி-ஒலிப்பரப்படும் இத்தகைய நிகழ்ச்சியிட்ட பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே வேளை ஊடகங்களின் இத்தகைய புனைவுகள் மீது மட்டுமல்ல, நிஜங்களையிட்ட ஊடகங்களின் புனைவுகளை பற்றியும், ஆழமாக நாம் பேசும் பொழுதுதான், ஊடகங்கள் பெண்கள் புரியும் சாகஸங்களை காட்டுவதற்கான அரசியலையும், பெண்கள் மீதான அராஜங்களை சாகஸங்களாக பார்க்கும் ஊடகங்களின் அரசியலையும்
நாம் இனங்காணக்கூடியதாக இருக்கும்.

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் பால்ராஜ் !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மேமன்கவி,

//நண்பரே!

உங்கள் விமர்சனம் நன்று. அத்துடன் இன்றொரு சிந்தனையும் தோன்றியது. ஊடகங்களில் ஒளி-ஒலிப்பரப்படும் இத்தகைய நிகழ்ச்சியிட்ட பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே வேளை ஊடகங்களின் இத்தகைய புனைவுகள் மீது மட்டுமல்ல, நிஜங்களையிட்ட ஊடகங்களின் புனைவுகளை பற்றியும், ஆழமாக நாம் பேசும் பொழுதுதான், ஊடகங்கள் பெண்கள் புரியும் சாகஸங்களை காட்டுவதற்கான அரசியலையும், பெண்கள் மீதான அராஜங்களை சாகஸங்களாக பார்க்கும் ஊடகங்களின் அரசியலையும்
நாம் இனங்காணக்கூடியதாக இருக்கும்.//

நிச்சயமாக !
மிக மிகச் சரியான கருத்து.
இன்றும் ஊடகங்களுக்கு பெண்கள்தான் போகப் பொருள்.
அது வெளிப்படையாகக் காட்டமுடியாவண்ணம் இவ்வாறான சாகசங்களால் மூடி மறைக்கப்படுகிறது அல்லவா?

உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Arivumalar said...

இதை படிக்கும்போதே தலைய சுத்துது.எப்படிதான் பார்த்தீங்களோ shareef!