Tuesday, May 9, 2017

சித்திரவதைக்குள்ளானவரின் வாக்குமூலம்


எழுத்தாளர் அஜித் பெரகும் ஜெயசிங்ஹவுடனான நேர்காணல்

 - எம். ரிஷான் ஷெரீப்


     ‘பெரா’ என்றழைக்கப்படும் அஜித் பெரகும் ஜயசிங்ஹ ஒரு எழுத்தாளர், வலைப்பதிவாளர், சமூக செயற்பாட்டாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். சமூகத்தில் நாம் அனுபவித்திராத, அனுபவிக்க விரும்பாத அனுபவங்கள் பலவற்றைக் கொண்டவர் அவர்.


   
இலங்கையில் ‘எளியகந்த’ எனும் பிரதேசத்திலிருந்த சித்திரவதை முகாமைக் குறித்த உரையாடல், எழுத்தாளர் ரோஹித முணசிங்ஹ எழுதிய 'எளியகந்த சித்திரவதை முகாம்' எனும் தொகுப்பினூடாகத்தான் ஆரம்பித்தது. ‘K point’ என்றும், ‘எளியகந்த சித்திரவதை முகாம்’ என்றும் அழைக்கப்படுவது, எமது சமூகமானது ஒரு காலத்தில் பயணித்த இருண்ட யுகத்தினை அத்தாட்சிப்படுத்தும் ஒரு இடமாகும். இந்த இருண்ட யுகத்தினைத் தோற்றுவித்த அரசியல்வாதிகளைப் போலவே கலைஞர்களாலும் நடத்தப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை. அதனால், எளியகந்த சித்திரவதை முகாம் உருவானதற்கான காரணத்தை இராணுவத்தின் மீதோ, போராளிகள் மீதோ சுமத்தி விட்டு, விடுதலையடைந்து விட முடியாது.

     அஜித் பெரகும் ஜயசிங்ஹ எளியகந்த சித்திரவதை முகாமில் கைதியாக இருந்தவர். அவர் எளியகந்த வதை முகாமில் ஒரு வருடமும், ஒரு மாதமும், ஒரு நாளும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இதைத் தவிர அவர் வேறு பல சித்திரவதை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டவர். அம் முகாம்களிலும் அவர் மிகவும் பயங்கரமான விடயங்களுக்கு முகம் கொடுத்துள்ளார்.

     ஹெட்டியாவல சித்திரவதை முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஜித், அம் முகாமிலிருந்த ஒரு சார்ஜனைக் குறித்துக் குறிப்பிடுகிறார். அந்த சார்ஜன், பாடல்களைக் கேட்கும் போது நடனமாடுவார். ஆனால் மிகத் திறமையாக கத்தியால் கைதிகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் அவர். ஒரு தடவை எளியகந்தையில் வைத்து புதிய இராணுவ வீரனொருவன், கைதிகள் இருவரைத் தாக்கி, மண்வெட்டியால் தலைகளைக் கழுத்திலிருந்து வேறாக்கி, ஒரு தலையை வேலியின் மறுபக்கம் வீசி எறிந்து விட்டு, அஜித்திடம் அதனைத் தேடி எடுத்துக் கொண்டு வரும்படி பணித்திருக்கிறான். இந்த இராணுவ வீரன் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞன்.

     எளியகந்த சித்திரவதை முகாமானது, இலங்கை இராணுவத்தின் பொறுப்பிலேயே இருந்தது. அஜித் எளியகந்த வதை முகாமிலிருந்த ஆரம்ப காலத்தில், அம் முகாமுக்குப் பொறுப்பாக இருந்த நான்காவது பீரங்கிப் படைப் பிரிவின் தளபதி, பின்னொரு காலத்தில் சிரேஷ்ட பதவிக்கு தரமுயர்த்தப்பட்டதை அவர் நினைவுகூர்கிறார். அவர்தான் அஜித்தின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்தவர். அவர் அம் முகாமிற்குப் பொறுப்பாக இருந்த காலத்திலும் அங்கு பயங்கரமான சித்திரவதைகள் நடைபெற்ற போதிலும் படுகொலைகள் எவையும் இடம்பெறவில்லை. 1989 ஆண்டின் நடுப்பகுதியில் அவர் கம்பஹ பிரதேச புலனாய்வுப் பிரிவுக்கு இடம் மாற்றம் பெற்று சென்று விட்ட தகவலை அறியக் கிடைத்தது. மாத்தறை மாவட்ட புலனாய்வுப் படைப் பிரிவுக்குப் பொறுப்பாக, முன்பு கம்பஹ புலனாய்வுப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த குழு வந்ததன் பிறகுதான் அங்கு பாரியதொரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. அந்தக் குழுவினர் சற்று மந்த புத்திக்காரர்களைப் போல, தயை தாட்சண்யமின்றி சித்திரவதைகளையும், படுகொலைகளையும் நிகழ்த்தியவாறு, இலங்கையின் இடதுசாரி அமைப்பை (JVP – மக்கள் விடுதலை முன்னணி) அழிப்பதில் முன் நின்றதைப் பற்றி அஜித் கூறுகிறார். இக் காலத்தில் மாத்தறை தொடர்பாடல் அதிகாரியாக இருந்தவர் பிரிகேடியர் ஸ்ரீ பீரிஸ் என்பதாக அஜித்தின் நினைவிலிருக்கிறது.


     எளியந்தை சித்திரவதை முகாமின் தலைவராக இருந்தவர், இரண்டாம் லெஃப்டினன்ட் நிமல் சில்வா. அவ்வாறே சார்ஜன் திஸாநாயக்க, பொம்பர்டியர் செனவிரத்ன, லான்ஸ் பொம்பர்டியர் அமரஸ்ரீ, சிறில், கித்ஸ்ரீ, ஹரிஸ்சந்திர, விக்ரமசிங்ஹ, உதயஸ்ரீ, நந்த ஸ்ரீ, தயாரத்ன ஆகியோரும் அவரது ஞாபகத்தில் தரித்திருக்கின்றனர்.


     எளியகந்த வதை முகாமும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் இங்கு தரப்பட்டுள்ள நேர்காணலை மேற்கொண்ட வைத்தியர் ருவன் எம்.ஜயதுங்கவினது கவனத்தில் கொண்டு வரப்பட்டிருந்தனர். மனநல சிகிச்சைக்காக 2002 ஆம் வருடம் சிறப்பு மன நல மருத்துவர் நீல் பெர்ணாண்டோவினால் இவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண படைவீரன் XX2, 1988-1989 காலப்பகுதியில் எளியகந்த சித்திரவதை முகாமில், கைதிகளை விசாரணைக்கு உட்படுத்துபவனாகவும், சித்திரவதை செய்பவனாகவும் பணியாற்றியவன். கைதிகளை உடல்ரீதியாகத் துன்புறுத்தித் தாக்குதல், எரியும் பொருட்களால் அவர்களுக்குச் சூடு வைத்தல், அதியுச்ச வேதனை எழும் விதமாக அவர்களது மர்ம உறுப்புக்களை மேசை இழுப்பறைகளில் அடைத்து மூடுதல், சில வேளைகளில் மரண தண்டனையை நிறைவேற்றுதல் போன்றவை அவனால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மனநல சிகிச்சை மற்றும் முழுமையான சிகிச்சை முறைகளின் பின்னர் அவன் ‘பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் சீர்கேடு’ (PTSD) எனும் வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.


     இச் சாதாரண படை வீரன் XX2 தனிமை, கனவில் பயந்தெழுதல், பீதி, பார்வைக் குறைபாடு குறித்த கருத்துக்கள், மாய உருவங்களைக் காணுதல் மற்றும் கவலைப்படும் விதமான பல நோய் அடையாளங்களுடன் காணப்பட்டான். சித்திரவதை முகாம் அனுபவங்களை மறப்பதற்காக அவன் மதுபாவனைப் பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகியிருந்தான். இவ்வாறாக சித்திரவதை என்பது அதற்கு ஆட்படுத்தப்படுபவருக்கு மாத்திரமல்லாது சித்திரவதை செய்பவனுக்கும் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடிய, இரு புறமும் வெட்டக் கூடிய வாளாகும். சித்திரவதைகளைச் செய்யும் அனேகர் பல தரப்பட்ட மன நோய்களில் சிக்குண்டவர்கள்.


     வைத்தியரின் கூற்றுக்கிணங்க அஜித் சித்திரவதைகளுக்குள்ளான போதும் பாரதூரமான பக்க விளைவுகளிலிருந்து விடுபட்டு வெற்றிகரமாக சமூகத்துடன் இணைந்து கொண்டுள்ள நபர்களில் ஒருவர். அவர் தனது எழுத்து எனும் கலையின் மூலமாக தன்னைச் சுற்றியிருந்த இரும்பு வளையத்தை உடைத்தெறிந்த ஒருவராகத் தோன்றுகிறது. அவ்வாறே அவர் தனது பிள்ளைகள் மீது அளவற்ற அன்பைக் காட்டுகிறார். அவருக்குள்ளிருந்த மனிதன் பிரபலமானார். அதனால் எளியகந்த சித்திரவதை முகாமுக்கு அஜித்தை அழித்து விட முடியவில்லை.

     எளியகந்த, ‘K Point’ சித்திரவதை முகாம் மற்றும் சித்திரவதைகள் குறித்து எழுத்தாளர் அஜித் பெரகும் ஜயசிங்ஹவுடன் வைத்தியர் ருவன் எம்.ஜயதுங்க நிகழ்த்திய விரிவான உரையாடல் கீழே தரப்படுகிறது.

கேள்வி - போராளி ஒருவராக ஆக, சமூகப் பின்னணி உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்?

பதில் - ஒரு புரட்சியை உருவாக்கும் அரசியல் காய்ச்சலே என்னை அதிகமாகத் தாக்கியது. ரஷ்ய இலக்கியங்களை வாசித்ததன் பிறகு அது எனக்குள் தோன்றியது. ஆழமான அரசியல் தொகுப்புக்களை வாசிக்க அவ்வளவாக ஆர்வமிருக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் எளிமையான வகுப்புக்கள் மற்றும் எளிமையான விதத்தில் எதிர்ப்பு அரசியல் எண்ணக் கருக்களை விளம்பரப்படுத்திய ஊடகங்கள், ஆழமற்ற சமூக வாழ்க்கை யதார்த்தத்தினைப் பிரச்சாரப்படுத்திய இலக்கியவாதிகள், பாடலாசிரியர்கள், பாடகர், பாடகிகள் ஆகியோரால் பரப்பப்பட்ட மாய எண்ணக் கருக்களுடன் எனது ரஷ்ய இலக்கியங்களினூடு கட்டியெழுப்பப்பட்ட புதிய உலகம் குறித்த கனவு விம்பம் பொருந்தியது.

     பெயர்ப் பட்டியலோடு சொல்வதாயின் ரோஹண விஜேவீர, மாதுளுவாவே சோபித ஹிமி, சுனில் மாதவ பிரேமதிலக, சுனில் ஆரியரத்ன, நந்தா மாலினி, குணதாஸ அமரசேகர போன்றவர்கள் ஒரு பரம்பரைக்கே மறுலோகம் செல்ல வழி காட்டியவர்கள் எனத் தோன்றுகிறது. தனக்கே தெளிவில்லாத அரசியல் எண்ணக் கருக்களைப் பிரச்சாரம் செய்து, ஏனையவர்களை ஆள் சேர்ப்பவர்கள் இறுதியில் தானும் பலியாகி, மற்றவர்களையும் பலி கொடுத்து விடுகின்றனர். போராட்டத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை சம்பந்தமான பொறுப்புக்களிலிருந்து அந்தப் போராட்டத்தில் பங்குபற்றி உயிர் பிழைத்தவர்களால் ஒருபோதும் விடுபட முடியாது. நான் இன்றும் கூட ஒரு போராளிதான். ஆனால் நான் இன்று சமூகத்தை மாற்றப் போராடும் விதம் வேறு மாதிரியானது. நான் இதனை ஒருபோதும் கைவிட மாட்டேன். ஏனெனில், என்னுடன் ஒன்றாகப் போராடி இடையில் வீழ்ந்த மனிதர்களுக்காக நான் இவ்வாறு போராடுவதை நிறுத்திவிட, எனக்கு உரிமையில்லை.

கேள்வி - 1988 - 1989 காலப்பகுதியில் உங்கள் வாழ்க்கை எப்படியிருந்தது?

பதில் - 1984 ஆம் ஆண்டளவில் நான் மக்கள் விடுதலை முன்னணி (JVP)யில் இருந்தேன். மிக விரைவாகவே, அப்போது நான் படித்துக் கொண்டிருந்த சிறப்புப் பொறியியல் அடிப்படைப் பாடநெறி வகுப்புக்களைத் தவிர்த்து விட்டு JVP அரசியலில் அதிகமாக ஈடுபட்டேன். JVP பத்திரிகைகளை பங்கிட்டுக் கொண்டிருந்தது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, அவசர காலச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலையானதன் பின்னர், JVP இயக்க அரசியலில் நிரந்தரமாக இணைந்து செயல்பட்டேன். அது 1986 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில். அதற்குப் பிறகு JVP மாணவர் பிரிவிலும், அரசியல் பிரிவிலும் கடமையாற்றினேன். இறுதியாக மாத்தறை மாவட்டத்தின் பிரச்சாரக் காரியதரிசியாகவும், வலயக் காரியதரிசியாகவும் வேலை செய்தேன்.

கேள்வி - நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டீர்கள்?

பதில் - மாத்தறையில் வைத்து, இரவு உறங்குவதற்காக இடமொன்றைத் தேடிச் சென்றபோது, வயல்வெளியினூடாகச் சென்ற பாதையொன்றில் வைத்து, வழி காட்டியவர்களின் தவறொன்றினால் இராணுவத்தின் கொமாண்டோ படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டேன்.

கேள்வி - முதலாவதாக உங்களை விசாரணை செய்தவரை நினைவிருக்கிறதா?

பதில் - நினைவிருக்கிறது. புதிதாக படையில் இணைந்த இரண்டாம் லுதினன்ட் அதிகாரி ஒருவர். அது விசாரணை அல்ல. ஒரு குழுவாக இணைந்து வெறுமனே தாக்குவது மாத்திரமே.


    இரண்டாவதாக விசாரணை செய்த லுதினன்ட் அதிகாரி, பிற்காலத்தில் மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமொன்றை கடல் வழியாகக் கைப்பற்றும் நடவடிக்கையொன்றின் போது, விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, கப்பலிலேயே மரணித்ததாகவும், பின்னர் சக படையினரால் அவரது சடலமானது கடலில் வீசியெறியப்பட்டதாகவும் அறியக் கிடைத்தது. அவர் என்னை மனிதாபிமானத்தோடு நடத்தினார். எளியகந்த சித்திரவதை முகாமுக்கு என்னை ஒப்படைக்கும்வரை அவரது சார்ஜன்ட் அல்லாது வேறெவரும் என்னைத் தாக்கவில்லை.


    நான் எளியகந்தவில் இருக்கும்போதும் சில மாதங்களுக்கு ஒரு தடவை அவர் அங்கு வருகை தரும் வேளைகளில் என்னிடம் நலம் விசாரிப்பார். அந்தப் படைக்குழுவிலிருந்த மாத்தறை பகுதியைச் சேர்ந்த சார்ஜண்ட் ஒருவர் நான் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில் இடைக்கிடையே வந்து என்னைத் தூக்கி நிலத்தில் அடிப்பார். அவர் நிறையத் தடவைகள் அவ்வாறு என்னைத் தூக்கி நிலத்தில் அடித்திருக்கிறார். இந்த சார்ஜண்ட் பிற்காலத்தில் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததாகவும், அவரது சடலம் கூடக் கிடைக்கவில்லை எனவும் அறியக் கிடைத்தது.


கேள்வி - விசாரணைகளின் போது அவர்கள் பயன்படுத்திய வழிமுறைகள் யாவை?

பதில் - குண்டாந்தடிகளால் மிகப் பலமாகத் தாக்குவதையே அதிகளவில் செய்தார்கள். அதற்கு மேலதிகமாக எளியகந்தயில் வைத்து எனது ஒரு காதின் செவிப்பறை வெடிக்குமளவு அடித்தார்கள். அந்தக் காதிலிருந்து நீண்ட நாட்கள் சீழ் வடிந்து கொண்டேயிருந்தது.

     நான் மத்திய தரத் தலைவனொருவனாக அறியப்பட்டிருந்ததனாலும், என்னுடன் கைது செய்யப்பட்ட இன்னுமொரு தலைவன் இராணுவத்துடன் இணைந்து கொண்டதாலும் நான் மிக ஆழமாகச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை. எனினும், அவன் மக்கள் விடுதலை முன்னணி (JVP) குறித்த பெறுமதியற்ற தகவல்களை இராணுவத்துடன் பகிர்ந்து கொண்டானேயன்றி யாரையும் காட்டிக் கொடுத்ததாக நான் கேள்விப்படவில்லை. அவனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அதனால் அவன் என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் தெரிவித்திருந்தான்.


    நான் கைது செய்யப்பட்ட போது (1989 மே) அவசர காலச் சட்டம் இடப்பட்டிருக்கவில்லை என்பதாலும், வெறுமனே என்னையும் என்னுடன் கைது செய்யப்பட்ட ஏனையவர்களையும் தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாலும், மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த ஒரு பல்கலைக்கழக மாணவத் தலைவன் விடுதலை செய்யப்பட்டதனாலும், அவனது தலையீட்டின் காரணமாக எம் மீது வழக்கு பதியப்படாதிருந்ததனாலும், அக் காலப்பகுதியில் மாத்தறை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேப்டன் ரத்னாயக, அதிகமாக சித்திரவதைகளைச் செய்பவர் ஒருவரல்ல என்பதனாலும், இக் காலப்பகுதியில் எளியகந்தயில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் கொஞ்சம் பேர் என்பதனாலும் அங்கு அப்போது அந்தளவு மோசமான நிலைமை இருக்கவில்லை. எனினும், அவரும் அவரது குழுவினரும் இடம் மாற்றம் பெற்றுச் சென்ற பிறகு எளியகந்தையின் நிலைமை மாறியது. அது அனேக மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்கவும், படுகொலை செய்வதற்காகவும், இன்னுமொரு முகாமுக்கு மாற்றும் வரையில் தடுத்து நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் பாவிக்கப்பட்டது.

கேள்வி - எளியகந்தவுக்கு நீங்கள் எப்போது கொண்டு செல்லப்பட்டீர்கள்?

பதில் - 1989 மே 28 அன்று

கேள்வி - எளியகந்தையில் உங்கள் அனுபவங்கள் எவை?

பதில் - அது முறையான விசாரணைகள் நடைபெற்ற இடமல்ல. மனிதர்களை கூட்டாக சித்திரவதைக்குட்படுத்துதல், தாக்குதல்கள் மூலம் மனிதர்களைப் படுகொலை செய்தல் மற்றும் கொலை செய்யப்படாதவர்களை இன்னுமொரு முகாமுக்கு அனுப்பி வைக்கும் வரையில் சிறைப்படுத்தி வைத்திருத்தல் ஆகியவையே அங்கு நடைபெற்றன.

    அங்கு சிறைக்கைதிகளைத் தடுத்து நிறுத்தி வைப்பதிலும் எந்த ஒழுங்கும் இருக்கவில்லை. அம்மை நோய் தாக்கிய நோயாளிகள் 70, 80 பேரளவில் ஒரே இடத்தில் இருந்தார்கள். வயிற்றோட்ட நோய் பீடித்த நோயாளிகள் வெட்ட வெளியில் கழிப்பறைக் குழியினருகில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். நோயாளிகள் எத்தனை பேராயினும் அனைவருமே அப் பன்னிரண்டு அடி நீளமான சங்கிலியாலே பிணைக்கப்பட்டிருந்தார்கள். சிலர் எவ்வித சிகிச்சையும் இல்லாத காரணத்தால் வயிற்றோட்டத்தாலேயே மரணித்தார்கள். முகாமுக்கு மாத்தறை கோட்டையிலிருந்து உணவு கொண்டு வரப் பாவிக்கப்பட்ட மஞ்சள் நிற வாகனத்திலேயே இரவில் அச் சடலங்களைக் கொண்டு சென்றனர். பிற்காலத்தில் அங்கு மரணித்த சடலங்களை கழிப்பறைக் குழிக்கருகே இருந்த மற்றுமொரு குழியிலிட்டு எரித்தனர்.


கேள்வி - எளியகந்தையிலிருந்த அதிகாரிகளை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பதில் - நினைவிருக்கிறது. எனினும், அவர்களும் எம்மைப் போன்ற மனிதர்களாதலால், அவர்களுக்கு எதிரான விசாரணைகள் போன்றவற்றால் பயனிருக்குமென எனக்குத் தோன்றவில்லை. அவர்களும் எம்மைப் போலவே இப் பிரச்சினையில் வேறுவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.


கேள்வி - நீங்கள் எளியகந்தையில் இருந்தபோது எம் மாதிரியான சித்திரவதைகள் அங்கு பயன்படுத்தப்பட்டன?

பதில் - இரு கை பெருவிரல்களில் மாத்திரம் உடலைத் தொங்கவிடல், பொலிதீன் பை சிலவற்றைச் சேகரித்து அதனுள் பெற்றோல் ஊற்றி, அதனுள் தலையை நுழைத்து, மூச்சடைக்கும்வரை வைத்திருத்தல், ஒரே  கணத்தில் மயங்கி விழும்படியாக கழுத்தின் பின்பக்கம் தடியால் தாக்குதல், தலையை தண்ணீர் தாங்கிக்குள் அமிழ்த்திப் பிடித்திருத்தல், தொடர்ச்சியாகத் தாக்குதல், அதிகக் களைப்பால் மரணிக்கும்வரை உடற்பயிற்சிகளைச் செய்ய வைத்தல், மலசலம் கழிக்கச் செல்ல அனுமதி வழங்காதிருத்தல், உணவுண்ண நேரம் கொடுக்காமல், சில கணங்களுக்குள் மொத்த ஆகாரத்தையும் விழுங்கச் செய்தல், உணவுண்ணும்போது தடிகளால் தாக்குதல், ஒருவர் மேல் ஒருவரை படிப்படியாக ஏற்றி மிதித்தல், கழிப்பறைக் குழிக்குள் நீண்ட காலமாக மறைத்து வைத்தல், மலைப்பாம்பை உடம்பிலோ, சிறைக்கைதியிருக்கும் கழிப்பறையிலோ இட்டு அச்சுறுத்துதல், எவருடனும் கதைக்க இடமளிக்காதிருத்தல், மாதக்கணக்கில் கண்களைக் கட்டி வைத்தல், எப்போதுமே கை, கால்களுக்கு விலங்கிட்டு வைத்திருத்தல் போன்றவை. 
     ஹெட்டியாவல முகாமின் லுதினன்ட் புதுவிதமான சித்திரவதையைப் பயன்படுத்தினார். சிலுவையிலறைதல் எனச் சொல்லப்பட்ட இம் முறையின் பிரகாரம், இரண்டு பாக்கு மரங்களில் செய்யப்பட்ட சிலுவையில் சிறைக் கைதிகளை நாட்கணக்கில் தொங்க விட்டிருந்தார். அச் சிறைக் கைதிகளின் கைகள் மாதக்கணக்கில் செயலற்றுப் போயிருந்தன. அவர்களால் உணவை அள்ளி வாயருகே கொண்டு செல்லக் கூட முடியவில்லை. சிறைக் கைதிகள் எல்லோருமே இவையனைத்து சித்திரவதைகளுக்கும் ஒரே சமயத்தில் உள்ளாக்கப்படவில்லை.


கேள்வி - நீங்கள் எப்படி விடுதலையடைந்தீர்கள்?

பதில் - 1990 இல் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இராணுவ முகாம் மூடப்பட்டது. நான் அப்போது வீரவில முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தேன். காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட நாற்பது பேரை விடுதலை செய்து, பின்னர் கடத்திக் கொண்டு சென்று கொன்று போட்டிருந்தனர். என்னையும் ஆரம்பத்தில் காவல்துறையிடம் ஒப்படைக்கக் கட்டளையிடப்பட்டிருந்த போதும், எனது வேண்டுகோளுக்கிணங்க அங்கிருந்த அதிகாரிகளான கித்ஸ்ரீயும் தயாரத்னவும் எனக்கு வீரவிலவுக்குச் செல்ல இடமளித்ததால் எனது உயிர் பிழைத்தது. எனினும், இந்த தயாரத்னதான் அந்த மண்வெட்டியால் வெட்டி உடலிலிருந்து வேறாக்கிய தலையை வேலியின் அப்புறம் வீசி விட்டு, என்னிடம் அதைக் கொண்டு வருமாறு பணித்த கொலைகாரன்.

     வீரவிலயிலிருந்து பொல்கொல்ல, சேதவத்த விகாரை, கொடிகமுவ விகாரை, பொல்கஸ்ஓவிட தியான நிலையம் போன்ற புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருந்து புனர்வாழ்வுப் பிரிவு காரியாலயத்தினூடாக 1993 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டேன்.

கேள்வி - சித்திரவதைகள் பாரிய உள நெருக்கடியை ஏற்படுத்தியபோதும், உங்களை சமூகத்தோடு ஒன்றிணைய உதவி புரிந்தவை எவை?

பதில் - விஷேட உதவிகளெதுவும் இருக்கவில்லை. அப் புணர்வாழ்வு வேலைத் திட்டங்களிலும் யாதொரு உதவியும் கிட்டவில்லை. பொல்கொல்லையில் வரைகலைஞர் பாடநெறியைக் கற்றேன். எனினும் வீரவிலயில் நாங்கள் அதை விடவும் சிறந்த கல்வி மற்றும் கலாசார வேலைத் திட்டங்களை எமது ஏற்பாட்டில் நடத்தினோம். நான் நிறையப் பேருக்கு ஆங்கிலம் கற்பித்தேன். அகராதி கூடத் தெரியாமல் சிறைப்படுத்தப்பட்டிருந்த மாத்தறை, ஹம்பந்தோட்டை மாவட்ட இளைஞர்கள் அநேகர் எழுதவும், வாசிக்கவும் கற்றுக் கொண்டது நாங்கள் முன்னெடுத்த அவ் வேலைத்திட்டங்களில்தான்.

     வீரவிலையில் நான் 'இப்பொழுது கழுத்தில் வாள் வைக்கப்பட்டுள்ளது' எனும் நீண்ட நாடகமொன்றையும், குறும் நாடகங்கள் பலவற்றையும் தயாரித்தேன். ‘வண்ணத்துப்பூச்சி யாப்பு’ எனும் ஒரு நீண்ட காவியத்தை எழுதினேன். அதனை உள்ளே கை மாற்றிக் கை மாற்றி வாசித்தார்கள். அச்சுப் பதிப்பாக வெளியிடவில்லை. அத்தோடு 'சாம்பலின் அகத் தீ' எனும் தலைப்பில் எழுதிய நாவலை முகாமிலிருந்த காலப்பகுதியில் 1992 ஆம் ஆண்டு 'திவயின' பத்திரிகை நடத்திய நாவல் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து நாவல்களுக்குள் இருந்த போதும், அதற்கு முதலாவதோ, இரண்டாவதோ, மூன்றாவதோ இடம் கிடைக்கவில்லை. எனவே அதுவும் பதிப்பிக்கப்படவில்லை. எனது முதல் மொழிபெயர்ப்பான ஜூல்ஸ் வர்னின் 'எண்பது தினங்களில் உலகத்தைச் சுற்றி' எனும் புத்தகத்தை சற்று எளிய வடிவில் மொழிபெயர்த்ததும் வீரவிலயில் வைத்துத்தான்.

     அங்கு வைத்து சில மாதங்கள் முயற்சித்து, நான் கலைத் துறையில் உயர்தரப் பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். நான் தேர்ந்தெடுத்தது எனக்குப் பிடித்த பாடங்களான சிங்கள மொழி, ஆங்கில இலக்கியம், அரசியல் விஞ்ஞானம் மற்றும் நாடகக் கலை என்பனவாகும். பரீட்சைக்கு பத்து தினங்கள் முன்பாக நான் பெலவத்த இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான் முகம் கொடுக்க நேர்ந்த விசாரணைகளின் காரணமாக பரீட்சைக்குப் படிப்பதைக் கைவிட நேர்ந்தது. கலைப் பிரிவில், பல்கலைக்கழகம் நுழையத் தேவையான மதிப்பெண்ணை விடவும் மூன்று புள்ளிகளே எனக்குக் குறைவாக இருந்தது.

     இவ்வாறாக வாழ்க்கையின் சவால்களுக்கு முகம்கொடுத்தவாறு தனியாகவே மெதுமெதுவாக சமூகவயப்பட்டேன். விடுதலையாகி சில காலத்தினுள்ளே போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியடைந்து ஆங்கில ஆசிரியராக, ஆசிரியப் பணியில் இணையக் கிடைத்ததுவும், பதவிய எனும் பிறிதொரு பிரதேசத்துக்கு பணி புரியச் சென்றதுவும், புதியதொரு சமூகத்துடன் கலந்துறவாட முடிந்ததுவும், புதிய நண்பர்கள் கிடைத்ததுவும், மக்கள் விடுதலை முன்னணி (JVP) அரசியலிலிருந்து முற்றுமுழுதாகத் தூரமானதுவும் சமூகவயப்படுதலை இலகுவாக்கின.

கேள்வி - சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ‘பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் சீர்கேடு’ (PTSD) போன்ற நோய்களுக்கு ஆளான போதும், நீங்கள் சமூகத்தில் செயற்பாட்டாளராக உற்சாகமாக இயங்குவதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

பதில் - பதவிய எனும் பிரதேசத்தில் சந்தித்த நண்பர்களுடன் ஆரம்பித்த புதிய ஜீவிதமும், பாடசாலை மாணவர்களுடன் கழித்த சுறுசுறுப்பான காலமும் அவற்றுள் முக்கியமானவை. தோழிகளுடன் பழகக் கிடைத்தமையும் அவர்களது சிநேகம் கிடைத்தமையும் கூட முக்கிய காரணிகளாகக் கருதத் தக்கவை. நான் நேசித்த எல்லோருடனுமே நீண்ட தூரம் பயணிக்கக் கிடைக்கவில்லை. எனவே எனக்கு திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கத் தேவையாக இருந்தது. திருமணம் முடிக்கத் தகுதியான காதலியொருத்தியைத் தேடினேன். இறுதியில் எனக்கு நல்லதொரு மனைவி வாய்த்தார். இன்று வரை என்னுடனிருக்கும் அவருக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

கேள்வி - எளியகந்த குறித்து இன்று என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - அது ஜீவிதத்தில் ஒருபோதும் மறக்க முடியாத மிக மோசமான  கனவொன்றைப் போன்றதொரு காலம். எனினும் அது வாழ்க்கை குறித்ததொரு ஆழமான அனுபவம் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்தது. மிருகத்தனத்துக்கு நெருக்கமான ஆரம்ப கட்டத்தில் மனிதர்களின் நடவடிக்கையானது, சாதாரண சமூகத்திலுள்ளவர்களது நடவடிக்கைகளை விடவும் முற்றுமுழுதாக மாறுபட்டது. எனினும் இறுதியில் பார்த்தால் சித்திரவதை செய்தவர்களும் கூட இரத்தத்தாலும், சதையாலும் ஆன மனிதர்கள்தான்.

     எளியகந்த சித்திரவதைக் கூடத்தில் சித்திரவதை செய்தவர்கள் ஓரிருவர் பிற்காலத்தில், அவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு விடுதலையான 'மக்கள் விடுதலை முன்னணி இயக்க' சிறைக்கைதிகளின் சகோதரிகளையே திருமணம் செய்து கொண்டனர். அந்தக் குடும்பங்கள் அப் பிரதேசங்களில் 'மக்கள் விடுதலை முன்னணி'யின் தீவிர செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடையவை. அத் தீவிர செயற்பாட்டாளர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். எனினும், அந்தக் குடும்பங்களின் பெண்கள் பிற்காலத்தில் அந்தக் கொலைகாரர்களையே திருமணம் செய்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை எவ்வாறு கழிந்தது என எனக்குத் தெரியவில்லை.

கேள்வி - எதிர்கால சந்ததிக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் - ஆழமற்ற இடதுசாரி அரசியல், இன வாதம், மதவாதம் போன்றவை ஒரே தரத்தைச் சேர்ந்த சமூகக் கலகங்கள். ஆட்சிக்காக குறுக்குவழியைத் தேடுபவர்கள் தமது இலட்சியத்தை எட்ட, தீப் பற்ற வைக்கப் பாவிக்கும் வைக்கோல்கள்தான் இளைஞர்கள்.

     இலங்கையில் மூன்று இளைஞர் பரம்பரைகள், இப் போலியான விடுதலை மற்றும் இனவாத யுத்தத்தினால் மிகப் பெருமளவில் உயிர்களை இழந்திருக்கின்றன. அந்த இளைஞர்கள் உயிரோடு இருந்திருந்தால், அவர்களது திறமைகளை மிகவும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தியிருந்தால், எமக்கு இன்னும் அருமையான உலகமொன்றில் வாழக் கிடைத்திருக்கும். அதனால் இளைஞர்களை இம் மாதிரியான குருட்டுத்தனமான, பிற்போக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க நடவடிக்கையெடுப்பது இச் சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். அவ்வாறே, இளைஞர்களுக்கு அரசியலில், தீர்மானிக்கும் செயற்பாடுகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்க பொதுவான சந்தர்ப்பங்களை வழங்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தமது சக்தியை தமக்கும், சமூகத்தின் நலனுக்கும் பயனளிக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தவும், மகிழ்ச்சியாக வாழவும் இடமளிக்க வேண்டும். அவர்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - அம்ருதா இதழ், மார்ச் 2017