Tuesday, January 20, 2015

பிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப்

'நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன்' 

          கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரைகத்தாரிலுள்ள தோஹா திரைப்படக் கல்லூரியானதுபிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியை கத்தாருக்கு வரவழைத்திருந்ததுமத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது முதல் திரைப்பயணம் இதுவெனக் கூறலாம்தோஹா திரைப்படக் கல்லூரியானது இதனை ஒரு விழா போலவே கொண்டாடியது. 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை அவரது திரைப்படங்களையும்குறுந் திரைப்படங்களையும்ஆவணத் திரைப்படங்களையும் தொடர்ச்சியாகத் திரையிட்டதுஅது மாத்திரமல்லாதுதிரைப்படங்களைக் காண வந்திருந்தவர்களையும் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியோடு நேரடியாக உரையாட ஏற்பாடு செய்திருந்தது.



இவ் விழாவில் 13 ஆம் திகதிஇவரது Where is the Friend’s House? (Khaneye doust Kodjast?), Bread and Alley (Nan va Koutcheh), Break time (Zangu-e tafrih), Experience (Tajrobeh) ஆகிய திரைப்படங்களும், 14 ஆம் திகதி, The Traveller (Mossafer),Taste of Cherry (Ta’m e Guilass), 15 ஆம் திகதி Like Someone in Love (Like Someone in Love), 16 ஆம் திகதி Ten (Ten), 18 ஆம் திகதி Five (Five), 19 ஆம் திகதி Close-up (Nema-ye Nazdik), 20 ஆம் திகதி Shirin (Shirin), Certified Copy (Copie Conforme), 21 ஆம் திகதி The Wind Will Carry Us (Bad ma ra khahad bord), ABC Africa (ABC Africa) ஆகிய திரைப்படங்களும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

          இந் நிகழ்வுகள் கத்தாரிலுள்ள இஸ்லாமியக் கலைகள் நூதனசாலைக் காட்சியரங்கத்தில் நடைபெற்றனஎல்லாத் தினங்களிலுமே நிரம்பி வழிந்த திரைப்பட ரசிகர்களின் கூட்டத்தினால் இக் காட்சியரங்கின் அருகாமைத் தெருக்களிலெல்லாம் வாகன நெரிசல்களைக் காண முடிந்ததுஆசனங்கள் கிடைக்காது திரும்பிச் சென்ற ரசிகர்களுக்காக இடைப்பட்ட நாட்களில் சில திரைப்படங்கள் திரும்பவும் காண்பிக்கப்பட்டன.

          ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் 1940 ஆம் ஆண்டுஜூன் 22 ஆம் திகதி பிறந்த இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமிசர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்திரைக்கதையாசிரியர்தயாரிப்பாளர்புகைப்படக் கலைஞர்ஓவியர்கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர்தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த இவர் ஒரு வரைகலை நிபுணராகத் தனது பணியை ஆரம்பித்திருக்கிறார்சர்வதேசத் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் Palme d’Or விருதினை வென்ற முதல் ஈரானியத் திரைப்படமான ‘Taste of Cherry’ (1997) எனும் திரைப்படத்தை இயக்கிய பெருமை இவரைச் சேர்கிறது.



          இதுவரையில் 40 இற்கும் அதிகமான திரைப்படங்களையும் குறுந் திரைப்படங்களையும் இயக்கியுள்ளதற்போது 73 வயதாகும் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் சர்வதேசத் திரைப்பட விருதுகள் பல வென்ற திரைப்படங்களைப் பற்றிய கேள்விகளோடுஅவரது இயக்கம்நடிகர்கள் தேர்வுகதைக்களங்கள் பற்றிய பல கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாகவும்தெளிவாகவும் பதிலளித்திருக்கிறார்ஒரு நண்பனோடு உரையாடுவதைப் போல மனதுக்கு நெருக்கமாக உணரும் உரையாடலை அவர் அளித்திருக்கிறார்அவரது திரைப்படங்களைப் போல.


          இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி தனது படைப்புக்கள் இத் திரைப்பட நிகழ்வில் கால வரிசைப்படி அல்லது தான் எடுத்த ஒழுங்கு வரிசைப்படி திரையிடப்பட்டால் சிறப்பாக இருக்குமென எண்ணியிருக்கிறார்ஆனால் இங்கு அவ்வாறிருக்கவில்லைஅவர் நாம் இதுவரையில் பார்த்திராத அவரது குறும்படங்களையும் எடுத்து வந்திருந்தார்அத்தோடு அவர் அவற்றைத்தான் தனது முழு நீளத் திரைப்படங்களை விடவும் நெருக்கமாக உணர்கிறார்.


கேள்வி : நான் அறிந்தவரையில்பல திரைப்பட இயக்குநர்களைப்  
பொறுத்தவரையில் குறுந்திரைப்படங்கள்முழு நீளத் திரைப்படங்களிற்கான  
வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் விண்ணப்பங்கள் எனலாம் 
ஆனால் முழு நீளத் திரைப்படங்களிலேயே நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் 
சர்வதேசமே உங்களைக் கொண்டாடுகிறதுஉங்களுக்கு குறுந்திரைப்படங்கள் மீது  
இன்னுமென்ன மோகம் அல்லது ஈர்ப்பு?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : ஒரு முழு நீளத் திரைப்படம் எனும்போது அதனை நீங்கள் விற்க வேண்டியிருக்கும்ஆகவே அது உங்களுடையதாக இருப்பினும்அதனை நீங்கள் அந்நியமானதாகவும் உணர்வீர்கள்ஆனால் குறும்படங்கள் அப்படியல்லஅவை எப்பொழுதும் முழுமையாக உங்களுடையவையேநான் எப்பொழுதும் முழு நீளத் திரைப்படங்களை இயக்கும்போதே குறும்படங்களை உருவாக்கவும் நேரத்தை எடுத்துக் கொள்வேன்முழுநீளத் திரைப்படங்களுக்கு அப்பால் அவை மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தர வல்லவைமனதுக்கு நெருக்கமானவைஉதாரணத்துக்கு எனது இந்தக் குறுந்திரைப்படத்தைப் பாருங்கள்.


          தொடர்ந்து இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் விருப்பத்தின் பேரில் அவரது முதல் குறுந்திரைப்படமான Roads (சாலைகள்திரையிடப்பட்டதுஇது 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படம்சாலைகள் மற்றும் பாதைகளின் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தை ஒரு அழகும் நேசமுமிக்க தியானத்தின் வழியே சொல்கிறது இந்தக் குறுந் திரைப்படம்ஹிரோஷிமாவின் 50 ஆவது ஆண்டு நினைவையொட்டி 'Roads' குறுந்திரைப்படம் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கேள்வி - குறுந்திரைப்பட உருவாக்கத்தின் போதான உங்கள் எண்ணக் கரு மற்றும் கற்பனாசக்தி பற்றிக் கூறுங்கள்அதற்கு ஏதாவது அளவுகோல் உண்டாஅல்லது அதன்பாட்டில் விட்டுவிடுவீர்களா?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : கவிதை இல்லாமல் உங்களால் வாழ முடியுமென எனக்குத் தோன்றவில்லைகவிதைகளை இன்னுமொருவரிடம் வாசித்துக் காட்டுவதற்காக மனனமாக்குவதல்லாமல்அவற்றை ஆழ் மனதோடு ஒன்றி ஆழமாக வாசிக்கும்போதுதான் அவற்றில் நம்மை நாமே உணர முடியும் அல்லவா?


          அதுபோல  கட்டுப்பாடுகள்விதிமுறைகள் ஏதுமில்லையென்ற போதிலும் கூடநீங்கள் எப்பொழுதும் ஒரு திட்டத்தோடும்எங்கேஎப்படி நீங்கள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடும்தான் ஒரு வேலையை ஆரம்பிப்பீர்கள்ஆனால் வேலை நடந்துகொண்டிருக்கையில் இடையிடையே புதுப்புது எண்ணங்கள் அடிக்கடி வரும்குறுந் திரைப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் இல்லையெனும்போதுஉங்களால் உங்களது புதுப்புது எண்ணங்களைப் பின்பற்றவும் உடனடியாக செயற்படுத்திப் பார்க்கவும் தயங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை.


          நான் முழு நீளத் திரைப்படங்களினிடையே குறும்படங்களையும் இயக்குவதாகக் கூறியிருந்தேன் அல்லவாகுறுந்திரைப்படங்களுக்கிடையே நான் புகைப்படங்களையும் எடுக்கிறேன்இன்னுமொரு தடவை எனது பல புகைப்படங்களோடு நான் இங்கு வர விரும்புகிறேன்.


கேள்வி : நிச்சயமாக உங்களது புகைப்படங்கள் கூட ஒவ்வொரு கதைகளைச் சொல்லக் கூடும்புகைப்படங்களை எமக்குக் காட்ட விரும்புவதற்கான காரணம் என்ன?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : இது புகைப்படங்கள் மீதான எனது ஆர்வத்தைக் காட்டுகிறதுநான் வருடத்துக்கொரு முழுநீளத் திரைப்படத்தை இயக்குகிறேன்ஆனால் ஒவ்வொரு வாரமும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன்எனது புகைப்படங்கள் குறித்துச் சொல்வதென்றால்அப் புகைப்படங்களிலுள்ள இயற்கையின் அழகு மட்டுமே இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறதுஇவற்றை நான் ஈரானிலா அல்லது வேறெங்காவது எடுத்தேனா என்பது எனக்கு இப்பொழுது நினைவிலில்லை.

          நீங்கள் தினந்தோறும் புகைப்படங்களை எடுக்க வேண்டும்அவை உங்களுக்குக் கூர்ந்து கவனிக்கக் கற்பித்துதிறமைகளை வளர்த்துதிரைப்பட இயக்குனராக உங்களை பரிணாமிக்கச் செய்யும்அத்தோடு இயக்குனராவதற்கு அசையும்படங்களும் அவசியமானவைதான்ஒரு மோசமான தொலைக்காட்சியாவது அருகில் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

   இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமிபுகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தபோது அவர் விலைகுறைவான கேமராவையே பயன்படுத்தியிருக்கிறார்எனவே அவர் காண்பித்த அவரது  அருமையான புகைப்படங்கள் பலகாலப்போக்கில் நிறம் மங்கிப் போயிருந்தன.

கேள்வி - குறுந்திரைப்படங்கள்முழு நீளத் திரைப்படங்கள் ஆகிய இரண்டு  
திரைப்படங்களையும் இயக்கிய அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள் 
உங்களைப் பொறுத்தவரையில் ஆவணத் திரைப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்கள்இவையிரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் எவையெனக் கருதுகிறீர்கள்?

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி - ஆவணத் திரைப்படங்களுக்கும்மிகச் சிறந்த முழு நீளத் திரைப்படங்களுக்குமிடையே எந்த வித்தியாசங்களுமில்லைஇவையிரண்டுமே வாழ்க்கையின் ஆவணங்களேஒரு சிறந்த திரைப்படத்துக்கான எனது வரைவிலக்கணமானதுஅது எம்மை அடுத்தவருக்கு வெளிப்படுத்தும்எமக்கு அடுத்தவரைப் பற்றித் தெரிவிக்கும்எமக்கு எம்மையே வெளிப்படுத்தும்.

கேள்வி : உங்களது முதல் முழுநீளத் திரைப்படத்தை உருவாக்க ஏன் உங்களுக்கு அவ்வளவு நீண்ட காலம் எடுத்தது?

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : எனது குறுந் திரைப்படங்களைத் தாண்டி முழு நீளத் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என  எனக்கு ஒருபோதும் ஈடுபாடு இருந்ததில்லைநான் ஒரு போதும் திரைப்படக் கல்லூரிகளில் பயின்றதில்லையாருக்கும் உதவி இயக்குனராகவும் இருந்த அனுபவம் இல்லைநான் எனது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டேன்எனது பாணியானதுஒரு திரைப்படப் பாணியல்லஇது வாழ்க்கை.

          இப்பொழுது உங்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் அநேகமான ஈரானியத் திரைப்படங்கள் ஹாலிவுட் திரைப்படங்களின் சாயலைக் கொண்டிருக்கக் கூடும்இன்று எமது இளம் இயக்குனர்கள் அவர்களது தனி வழியிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

          முதல் தலைமுறை இயக்குனர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டார்கள்இரண்டாம் தலைமுறை இயக்குனர்கள் அத் திரைப்படங்களைப் பார்த்து அவற்றிலுள்ள வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டார்கள்மூன்றாம் தலைமுறை இயக்குனர்கள் திரைப்படங்களையோவாழ்க்கையையோஅவர்களுக்கு எவையெல்லாம் சாத்தியமானதாக இருக்கின்றதென்றோ பார்ப்பதில்லைஅவர்கள் பார்ப்பதெல்லாம் அட்டவணைகளை அல்லது பட்டியல்களை மாத்திரமே.

          நவீன தொழில்நுட்பங்களுக்கு நான் ஒருபோதும் எதிரானவனல்லநான் கணினிமயப்படுத்தப்பட்ட ஒரு குறுந்திரைப்படத்துக்காக ஐந்து மாதங்கள் வேலை செய்திருக்கிறேன்நவீன தொழில்நுட்பங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் எல்லாமும் தங்கியிருக்கின்றனதாம் பாவிக்கும் நவீன தொழில்நுட்பங்களுக்கான விளம்பரங்களாக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதைத்தான் நான் எதிர்க்கிறேன்எனது திரைப்படங்களில் அதனை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்.

கேள்வி - உலகில் உங்களை எல்லோருக்கும் பிடித்திருக்கிறதுஉங்களுக்குப் பிடித்த இயக்குனர் ஒருவரைக் குறிப்பிடச் சொன்னால் யாரைக் கூறுவீர்கள்?




இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : எனக்கு மிகப் பிடித்த திரைப்பட இயக்குனர்கள் உலகில் பலர் உள்ளனர்உதாரணத்துக்கு அவர்களில் ஒருவரை நான் குறிப்பிட வேண்டும் எனில் நான் குறிப்பிட விரும்புபவர் பூஸ்டர் கீற்றன் (Buster Keaton).

          தொடர்ந்து 'Where is the Friend's house?' (நண்பனின் வீடு எங்கே இருக்கிறது?) திரைப்படம் திரையிடப்பட்டதுதனது திரைப்படத்தை முதன்முதலாகப் பார்ப்பதைப் போன்ற குதூகலத்தோடு அவர் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கேள்வி : இத் திரைப்படத்தை நீங்கள் மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்உங்களுக்கு இத் திரைப்படத்தோடு விஷேடமான தொடர்பு அல்லது நெருக்கம்  ஏதேனும் இருக்கிறதா?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : எனது எல்லாத் திரைப்படங்களுடனும் எனக்கு விஷேடமான தொடர்புகள் உண்டு  எனினும் அவை எல்லாமும் என்னுடையவையல்லஒரு தடவை என்னுடைய திரைப்படமொன்றை நான் பூர்த்தி செய்துவிட்டேனென்றால் அதற்குப் பிறகு அது என்னுடையதல்ல.

          திரைப்படங்கள் சிறுவர்களைப் போன்றவைஅவர்கள் ஒரு தடவை தமது உலகைத் தாண்டிசமூகத்துக்குள் பிரவேசித்துதமது விதிப்படி பயணிக்கத் தொடங்கிவிட்டார்களெனில்அதன் பிறகு அவர்களை உருவாக்கியவர்கள் மீது தங்கியிருப்பதானது குறைந்துகொண்டே செல்லும்.

கேள்வி : இந்தத் திரைப்படம் என் மனதையும் மிகவும் பாதித்துவிட்டதுதிரைப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பு மிகவும் இயல்பானதாக இருப்பதோடு நாம் நேரில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வையும் தருகிறதுஇந்தத் திரைப்படத்திலுள்ளவர்கள் தொழில்முறை நடிகர்களாஅல்லது சாதாரண மனிதர்களை நடிக்க வைத்தீர்களா?

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : யாருமே தொழில்முறை நடிகர்களல்லஅவர்கள் இதற்கு முன்பு ஒரு திரைப்படத்தைக் கூடப் பார்த்ததில்லைகாரணம் இவர்கள் அனைவரும் கஷ்டப் பிரதேசங்களில் வாழ்ந்து வருபவர்கள்அவ்வாறே இத் திரைப்படத்திலும் அவர்கள் நடிக்கவில்லைவாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

          உண்மையில் வளர்ந்தவர்களுடன் வேலை செய்வதுசிறுவர்களுடன் வேலை செய்வதைக் காட்டிலும் மிகவும் இலகுவானதுபடப்பிடிப்பின் போதுஒரு ஐஸ்கிறீம் வண்டிசிறுவர்களது பார்வையில் பட்டுவிட்டதென்றால் ஒரு இடைவேளை அவர்களுக்குக்  கண்டிப்பாகத் தேவைப்படும்திரைப்படத்தில் இந்தச் சிறுவர்கள்நான் எதிர்பார்த்ததை விடவும் மிகக் கூர்மையான உணர்வுகளைப் பிரதிபலித்ததையிட்டு நானும்எனது திரைப்படக் குழுவினரும் இன்றும் கூட சில சமயங்களில் ஆச்சரியப்படுகிறோம்இவ்வாறான அதிசயங்கள் ஒருமுறையே நடக்கும்.

கேள்வி : இந்தத் திரைப்படத்தில் எல்லோரையும் மிகவும் கவர்ந்தவர்கள் சிறுவர்கள் இருவர்மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தச் சிறுவர்களை எங்கு கண்டுபிடித்தீர்கள்?



இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : நான் இத் திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக சிறுவர்களைத் தேடியபோதுபிரதான அம்சமாக நான் நோக்கியது கவலையையாகும்அதாவது பிரதான கதாபாத்திரத்தின் முகத்திலேயே ஒரு கவலை இருக்க வேண்டும்அதாவது கவலை பிரதிபலித்துக் கொண்டேஇருக்கும் முகத்தோடு அவன் இருக்க வேண்டும்அத்தோடு அவன் கவலைப்படக் கூடியவனாகவும் இருக்க வேண்டும் எனக் கருதினேன்.

          இவ்வாறாக நான் தேடிக் கொண்டிருந்த போதுஒரு பள்ளிவாசல் உடைக்கப்படுவதை மிகுந்த வேதனையோடுகவலை செறிந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சிறுவனை நான் ஒரு தடவை கண்ணுற்றேன்இந்தச் சிறுவன் தான் எனது பிரதான கதாபாத்திரமென அப்பொழுதே நான் தீர்மானித்துவிட்டேன்.

          இரண்டாவது சிறுவன் ரொட்டி வாங்க வரிசையில் காத்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்மிகுந்த சுவாரசியமானவனாகவும்சுறுசுறுப்பானவனாகவும் இருந்தான்அவனது வீட்டுக்குச் சென்றுஅவனுடன் ஒரு சகோதரனைப் போல நெருக்கமாகித்தான் அவனை இத் திரைப்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைக்க முடிந்தது.

          என் மூலமாக தங்களது நடிப்பு கூர்மை பெற்றதென என்னுடன் பணியாற்றிய இளம் நடிகர்களும்திறமை வாய்ந்த வளர்ந்த நடிகர்களும் பின்னர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்உண்மையில் உங்களால் ஒருபோதும் ஒரு நடிகனை மாற்ற முடியாதுஅவர்கள் யாரென்று நீங்கள் கற்று ஏற்றுக் கொண்டுஅவர்களை அந்த வழியிலேயே பயன்படுத்துவதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

கேள்வி - சர்வதேச ரீதியில் உங்கள் திரைப்படங்கள் கொண்டாடப்பட உங்கள்  
திரைக்கதைகளும் முக்கிய காரணமாக உள்ளதை மறுக்க முடியாதுஅதைப் பற்றிக் கூறுங்கள்.

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான திரைப்படமே உலகளாவியது என நான் நினைக்கிறேன்நீங்கள் உங்கள் திரைக்கதையை சிறந்த முறையில் எழுதிவிட்டீர்களெனில்அதனை நீங்கள் உலகில் எவ்விடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும்எவ்விடத்திலும் திரைப்படமாக்கிவிட முடியும்.

          எனது திரைக்கதையொன்றை நடிகை ஜூலியட் பினோச் (Juliette Binoche) வாசித்தபோதுஅவரும் அவரது துணைவரும் அவர்களது வாழ்க்கையையும்அனுபவங்களையும்  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக நினைத்தார்களாம்ஆனால் அத் திரைக்கதையானது எனது அனுபவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதியதுஈரான் வாழ்க்கைக்கும்ஒரு பிரான்ஸ் தேச நடிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்ஆனால் எங்கோ எல்லாமும் இணைந்தே இருக்கிறது.

          விமானத்தில் வரும்போது எனக்கு முன்னாலிருந்த திரையில் பதினொரு திரைப்படங்களைப் பார்க்க முடியுமாக இருந்ததுஅவற்றில் பதினொரு திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருந்தனஎன்னைப் பொறுத்தவரையில் அவற்றுள் ஒன்று மாத்திரமே உண்மையான திரைப்படம்அதுவும் கறுப்பு வெள்ளையில் இருந்ததுஅதனை யாரெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களென சுற்றி வரப் பார்த்தேன்அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



       உண்மையில் திரைப்படங்களுக்கான எண்ணக்கருக்களுக்கு எவ்விதச் சூத்திரங்களும் இல்லைஎனக்கு ஏதாவது எண்ணக் கரு தோன்றுமிடத்துமாதக்கணக்கில் அதைத் தாண்டி வெளியே வர முடியாதவிடத்துஇப்பொழுது இது எழுதப்பட வேண்டிய ஒன்றுதான் எனத் தீர்மானிப்பேன்.

கேள்வி - உங்களது திரைப்படங்களின் மீது நீங்கள் எம்மாதிரியான கருதுகோள்களைக் கொண்டிருக்கிறீர்கள்படப்பிடிப்புக்காக அழகான இடங்களை எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்?

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : எனது ரசனைகளை பார்வையாளர்கள் மீது வலிந்து சுமத்துவதாக எப்பொழுதும் நான் கருதுவதால்எனது திரைப்படங்களில் நாடகத்தன்மையைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன்ஆனால் பார்வையாளர்களது அனுதாபமே எனது குறிக்கோள் எனக் கொள்ளலாம்.

          அவ்வாறே 'படப்பிடிப்புக்கான அழகான இடம் எதுஎன்பதற்கு எப்பொழுதுமே என்னால் ஒரு விளக்கத்தைக் கொடுக்க முடியாதுள்ளதுஅழகு எல்லா இடங்களிலும் இருக்கிறதுபசுமைப் பிரதேசங்களில்பாலைவனங்களில் இப்படி எல்லா இடங்களிலும் உள்ளதுஉங்களது கதையானதுகதாபாத்திரங்களுக்கும் இடத்துக்கும் நெருக்கமானது எனில் எந்த முயற்சியும் இல்லாமலும் கூட அழகு தானாக வெளிப்பட்டுவிடும்.

கேள்வி - அவ்வாறே உங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் காட்சியமைப்புக்கள் மற்றும் கேமரா கோணங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.

இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : காட்சிகள் எப்பொழுதுமே சொற்களை முந்திவிடுகின்றனஉதாரணமாக நீங்கள் ஒரு நபரை நினைக்குமிடத்துஅவரது உருவம் முதலில் தோன்றும்பிறகே வார்த்தைகள்எனவே தொலைவுக்காட்சிகளை (Long shots) வைப்பது எனக்குப் பிடித்தமானதுஏனெனில் அதன் மூலமாக பார்வையாளர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறோம்.



          உங்கள் கேமரா ஷாட்களை ஒரு வாகனத்தின் கியர்களென எண்ணிக் கொள்ளுங்கள்உங்களுக்கு எவ்வளவு தூரத்துக்கு வேண்டுமானாலும்எந்த கியரையும் பாவித்து நீங்கள் விரும்பியபடி பயணிக்கலாம்நீங்கள் என்ன உணர்கிறீர்களோ அதனைச் செய்யுங்கள்அது நிச்சயம் அழகானதாக ஆகும்.


          நீங்கள் முன்பே உங்கள் மனதுக்குள் திரைப்படக்காட்சிகளைச் செதுக்கி விட்டீர்களானால்எந்தக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய வேண்டுமென்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்அதன்பிறகு செதுக்குவது (Editing) என்பது உண்மையிலேயே இலகுவானது.


கேள்வி - திரைக்கதையோடுதிரைப்படத்தில் பயன்படுத்தப்படும் இசையும் கூட மக்களிடையே ஆதிக்கம் செலுத்துகிறது அல்லவா
இக் காலத்தில் எனக்கு நெருக்கமான திரைப்படங்கள் அனேகமாக  
பலத்த இசையினையும் பாடல்களையும் கொண்டிருப்பதை என்னால்  
மறுக்க முடியாதுஇசை இல்லாமல் திரைப்படங்களை வெளியிட்டால்  
அதனை ஒரு ஆவணப் படமாக மக்கள் எண்ண வாய்ப்பிருக்கிறது எனும்  
கருதுகோளை நான் அறிந்த பல இயக்குனர்கள் கொண்டிருக்கிறார்கள் 
திரைப்படங்களில் இசை பற்றிய உங்கள் கருத்து என்ன?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : இசையானது திரைப்படங்களில் உணர்ச்சிகளையும்உணர்வுகளையும் தூண்டவே பயன்படுத்தப்படுகின்றனஎனது திரைப்படம் சார்ந்த உறவுக்கும்புரிதலுக்கும் எதிரானதாக அதை நான் கருதுகிறேன்.

திரைப்பட இயக்குனர் ஒருவரால் தனது திரைப்படத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரேயொரு அம்சம் இசையாகும்ஆகவே இயக்குனர் இசையை தனது திரைப்படத்தோடு பொருந்தச் செய்வது கட்டாயமானது.


          என்னைப் பொறுத்தவரையில் திரைப்படங்களில் அதிகமாக இசை பாவிக்கப்படுவதென்பதுதிரைப்பட இயக்குனரின் பலவீனத்தையே சித்தரிக்கிறதுநீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைத் தாண்டி திரைப்படங்களில் வேறெந்த விதிமுறைகளும் இருப்பதாக நான் நம்பவில்லைஅவ்வாறான இயக்குனர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் 'மற்றவர்கள் மதிக்காமல் போனாலும் கூட உங்கள் உணர்வுகளை நீங்கள் நம்புங்கள்'.


          தொடர்ந்துதலைப்பிடப்படாத அவரது குறுந்திரைப்படமொன்றைத்   
திரையிட்டுக் காட்டுகிறார்தண்ணீர்தான் பின்னணிதண்ணீரின் ஓசை மாத்திரமே  
இசையாகக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : இப்பொழுது நாம் பார்த்த குறுந்திரைப்படமானதுஒரு பயிற்சிப் பட்டறையின் விளைவாகும்எனக்கு நானே கற்பித்துக் கொள்ளும்போது நான் எப்பொழுதுமே ஒரு குறுந்திரைப்படத்தை எடுத்துவிடுவேன்இத் திரைப்படத்தில் தண்ணீர்தான் பின்னணிஇவ்வாறு என்னால் செய்யப்பட்ட வேலைகளுக்கு மாத்திரமே நான் பொறுப்பானவன்சமூகத்தின் சில நடைமுறைகளுக்கும்விளக்கங்களுக்கும் நான் பொறுப்பில்லை.


          உதாரணத்துக்கு எனது Sea Eggs (கடல் முட்டைகள்அவ்வாறான ஒரு குறுந்திரைப்படம்அதில் வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்தான தத்துவங்கள் நிறைந்திருப்பதாக அத் திரைப்படம் பலராலும் விளங்கிக் கொள்ளப்பட்டதுஇன்றும் பலரும் அவ்வாறுதான் கூறுகிறார்கள்ஆனால் ஒரு திரைப்படத்துக்கான எண்ணக்கரு எனக்குள் தோன்ற ஆரம்பித்த உடனேயே அதற்கான காட்சிகளும் அதனைத் தொடர்ந்து எனக்குள்ளே வர ஆரம்பிக்கும். Sea Eggs நிச்சயமாக அவ்வாறாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் மாத்திரமே.


கேள்வி - இப்பொழுது என்னென்ன திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்அல்லது எடுக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : என்னிடம் இப்பொழுது  முழுமையாக எழுதப்பட்ட ஐந்து திரைக்கதைகள்திரைப்படமாக்கப்படத் தயாராக உள்ளன. 'இவையெல்லாம் திரைப்படங்களாக்கப்பட வேண்டுமா?' என என்னையே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்இதற்கு முன்பு ஒருபோதும் என்னை நானே இவ்வாறு கேட்டதில்லை.

        என்னால் எடுக்கப்பட்ட எனது திரைப்படங்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 'ஷிரின்' (Shirin) தான் எனது மிகச் சிறந்த திரைப்படமென நான் உணர்கிறேன்நான் எனது மிகச் சிறந்த திரைப்படத்தைத் தந்ததன் பிற்பாடுமேலும் திரைப்படங்களை உருவாக்குவதில் என்ன பயனிருக்கப் போகிறது?


          15 வருடங்களாக என்னால் எனது திரைப்படங்களை எனது நாட்டில் திரையிட்டுக் காட்ட முடியவில்லைஆனால் என்னால் எனது நாட்டைத்  தாண்டி வாழவும் முடியவில்லைநான் அங்கு உறங்குவதிலேயே மகிழ்ச்சியடைகிறேன்.


கேள்வி : சர்வதேச ரீதியில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கு  
ஈரானியத் திரைப்படங்களைப் புகழ்ந்து பரிந்துரைக்கிறார்கள்ஈரானியத் திரைப்படத் துறையின் இந்த அபார வளர்ச்சிக்கு எவை முக்கியமான காரணிகளாக அமைகின்றன?


இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி : என்னுடன் வேலை பார்த்த மாணவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்வதானால்அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர்களாகவும்உண்மையானவர்களாகவும்நேர்மையானவர்களாகவும் இருப்பதை நான் கண்டேன்இப்பொழுதும் அவர்களது உழைப்பைக் காண நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.


          அத்தோடு ஈரானின் ஓவியக் கலைகள்திரைப்படங்களிலும் பின்னணியில் வேலை செய்வதை ஒரு காரணமாகக் கொள்ளலாம்எவ்வாறாயினும் இக் காலத்தில்இந் நவீன யுகத்தில் அநேகமான குறுகிய வழிமுறைகள் உள்ளபோதிலும்ஒருவர் திரைப்படத்தை எடுக்க முன்புதனது திரைப்படத்தில் எவற்றைக் காட்சிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிப்பது முக்கியமானது 
ஈரானில் அப்படித்தான் செய்கிறார்கள்அங்கு 60 ஆண்டுகளுக்கும் முன்பு கூட திரைப்படம் இருந்திருக்கிறதுபுரட்சிக்கு முன்பும் பின்பும் ஈரானிய சினிமாவானதுகாட்சிகளும்நடிகர்களும் மாறிய போதிலும் கூடஅதன் தனி வழியையே பின் தொடர்ந்து செல்கிறதுஇதுதான் அதற்குரிய வழி.


          ஈரானியத் திரைப்படங்கள் உலகளாவிய ரீதியில் கவனம் பெறுவதற்கு அவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகளும் இன்னுமொரு காரணமென நான் நினைக்கிறேன்கலாசாரம் எமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கிறதுஆனால் நாம் ஒவ்வொருவரும் பிறந்து வளரும்போது எமக்கென்று தனிப்பட்டதும் ஆழமானதுமான அடையாளமொன்று வந்துவிடுகிறதுஎனவே உணர்ச்சிகளையும்உணர்வுகளையும் கையாளும் ஒழுக்கத்தின் திசைகாட்டியாக சினிமா செயற்படுகிறது என நாம் ஒருபோதும்  எதிர்பார்க்கக் கூடாது.


          நான் எப்பொழுதுமே காட்சியொன்றோடு ஆரம்பித்துவிடுவேன்ஆனால் அதன்பிறகு எனது ஆர்வம் சூழ்நிலைகளைச் சுற்றிவரும்போதுஅந்தக் கணத்தை எது உருவாக்குகிறது?ஒப்புமை அல்லது நல்லிணக்கம் இரண்டுமே நீடித்த உணர்வுகளல்லவர்ணனைகளையும்விபரிப்புக்களையும் இன்னும் நீடிக்கச் செய்யவும்விபரிக்கவும் அனுமதிக்கும் முரண்பாடுகள் அவற்றிலேயே உள்ளனஆகவே நல்லிணக்கத்தின் உச்ச நிலையை அடைய முரண்பாடு அவசியமானது.

          பணத்தை அடிப்படையாக கொண்ட ஒரு துறையில் கூட பொருளாதார தடைகள் பயனுள்ளதாக அமைய முடியும்ஆனால் நீங்கள் பசியும்நம்பிக்கையுமுள்ள மக்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியதிருக்கும்ஆகவே கட்டுப்பாடுகள்தடைகள் எப்பொழுதும் பிரயோசனமானவையென்றுதான் நான் கருதுகிறேன்ஏனெனில் உங்களால் எது செய்யப்படக் கூடாதென உங்களுக்கு முன்பே தெரிந்துவிடும்.

          ஈரானில் எங்களுக்குத் தீவிரமான தணிக்கைமுறைகள் உண்டுஆனால் அவை எவையும் உண்மையில் எம்மை நிறுத்திவைக்காதுவிஷேடமாக சொல்வதானால் இப்பொழுதுள்ள நவீன தொழில்நுட்பங்கள்சிறிய கேமராக்கள் போன்றன எமக்கு இன்னும் இலகுவாக உள்ளன.

          ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில்அந் நேரத்தினை எந்தச் சோர்வும் அலுப்புமில்லாமல் உங்களால் கடந்துபோக முடியுமென்றால் அத் திரைப்படம் வெற்றியடைந்துவிட்டது என்று அர்த்தம்சில சமயங்களில் நான் ஒரு படத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பணயக் கைதியைப் போல சிறைப்பட்டிருப்பதாக உணர்வேன்அத் திரைப்படம் முடிந்ததும்தான் விடுதலை பெற்று விடுவேன்அவ்வாறான திரைப்படங்களும் உலகத்தில் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# காலச்சுவடு இதழ் 169, ஜனவரி 2014
# பேசாமொழி
# விடிவெள்ளி வார இதழ், 15.07.2016, 22.07.2016
# மற்றும் இந் நேர்காணலை வெளியிட்ட அனைத்து இதழ்கள், இணையத்தளங்களுக்கும்