எழுத்தாளர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களால்
'வல்லமை 2014' சிறப்புப் பரிசினை வென்ற எனது புத்தக மதிப்புரை
ஆசிரியர் - சண்முகம்
பக்கம்: 304
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________
தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை
என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு.
அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச்
சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட
வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள்
எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை.
அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை
வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த
அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச்
சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.
பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து
வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும்,
அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும்,
அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும்,
நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும்
எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும்
தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும்
ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக
அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு
எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும்,
கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின்
தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது
எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல்
அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும்,
அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு
சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது.
'சயாம் மரண ரயில்' - எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது.
தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும்
மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச்
சொல்லலாம்.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# வல்லமை இதழ்
# அம்ருதா இதழ்
# எதுவரை
# இனியொரு
# வல்லமை இதழ்
# அம்ருதா இதழ்
# எதுவரை
# இனியொரு