Monday, February 27, 2023

சர்வதேசத்துக்குக் கடனாளியாகப் பிறந்து கொண்டிருக்கும் இலங்கைக் குழந்தைகள் - எம்.ரிஷான் ஷெரீப் நேர்காணல்

இந்தியாவிலிருந்து வெளிவரும் 'மக்கள் குரல்' பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணலின் முழுமையான வடிவம்.




1. இலங்கையின் தற்போதைய நிலைமை எப்படியிருக்கிறது?

    வரலாற்றில் ஒருபோதும் காணப்படாத அளவுக்கு ஒரு பாரிய நெருக்கடியை தற்போது இலங்கையில் வசிக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அத்தியாவசிய உணவுகள், மருந்துகள், எரிபொருட்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு, அனைத்திலுமான விலைவாசி அதிகரிப்புகள், ஒரு நாளைக்கு ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலான மின்சாரத் தடை போன்ற பலவற்றால் மக்கள் தினந்தோறும் மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து கொண்டே போகிறது. இலங்கை மத்திய வங்கியின் டாலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் மற்றும் காகிதக் கொள்வனவுகள் இடைநின்று போயுள்ளன. இதனால் பரீட்சைத் தாள்களை அச்சிட காகிதங்கள் இல்லாமல் அரசாங்கப் பரீட்சைகள் பலவும் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இவ்வாறான காகிதத் தட்டுப்பாடுகள், மின்சாரத் தடை, புகையிரத மற்றும் பேரூந்துக் கட்டணங்களின் அதிகரிப்புகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத்தான் பெரிதும் பாதிக்கின்றன.

  பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது நாட்டவர்களுக்கு, தற்போது இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நாட்டவர்களும், ரஷ்யா, உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளும்தான் வழமையாக இலங்கைக்கு அதிகளவில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களது வருகை நின்று போயுள்ளமையால், சுற்றுலாத் துறை வருமானத்தில் தங்கியிருக்கும் இலங்கைக்கு பொருளாதாரத்தில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

    இலங்கையில் வசிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த மக்கள் படகுகள் மூலமாக இந்தியாவுக்கு அகதிகளாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை பதவியேற்ற ஜனாதிபதிகளில், நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத, ஒரு படுதோல்வி கண்ட ஜனாதிபதியாக மக்கள் தற்போதைய ஜனாதிபதியைக் காண்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்‌ஷவை நாட்டு மக்கள் எந்தளவு வெறுக்கிறார்கள் என்றால், நாட்டின் பல இடங்களிலும் Go Home Gota என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவைத் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி மக்கள் இரவு பகலாக தெருவிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இப்போதும் #GoHomeGota எனும் கோஷம் முன்னணியில் இருக்கிறது. தாம் நம்பி வாக்களித்துத் தலைவர்களாக ஆக்கியவர்களே தமக்கெதிராக சதி செய்வதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஆட்சியிலுள்ள கட்சியின் அமைச்சர்களைத் தெருவில் சந்திக்க நேர்ந்தால் மக்கள் அவர்களைத் தாக்க முற்படுகிறார்கள். தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளில் ஏற்படும் சச்சரவுகளையும், மோதல்களையும், வாக்குவாதங்களையும் தவிர்ப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தினரை அங்கு குவித்திருக்கிறது. இராணுவம் தமக்குத் தேவையான ஆட்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் மாத்திரம் எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் போது பொது மக்களால் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதுள்ளது. இன்று வரை எரிவாயு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பட்டினியோடு நீண்ட வரிசைகளில் காத்திருந்த பொதுமக்கள் நால்வர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்கள். நெருக்கடி காரணமாக பல மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை ஒரு புரட்சிக்கும், போராட்டத்துக்குமான சந்தர்ப்பமாகக் காணப்படுகிறது.


2. விலைவாசி உயர்வால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எவை?


    இலங்கையின் விலைவாசி அதிகரிப்பென்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த மாதம் 177/= ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை இன்று 283/= ரூபாயாக அதிகரித்துள்ளது. மருந்துகள் அனைத்தினதும் விலை 29% ஆல் அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 4299/= ரூபாயாகக் காணப்படுகிறது. சீமெந்து உட்பட கட்டுமானப் பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவிருக்கின்றன. சமைப்பதற்கான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக பல உணவகங்களும், ஹோட்டல்களும், பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன. திறந்திருப்பவைகளும் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்கின்றன. எனவே மக்கள் அனைவரும் வேலையிழப்புக்கும், சமைத்த உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கும், விலையேற்றத்துக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

        அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால், அரிசி, பருப்பு, பால் மாவு, தேங்காய், கோதுமை மாவு, வெங்காயம், தேங்காயெண்ணெய், மீன், கருவாடு, முட்டை, கோழியிறைச்சி, பாண் (பிரட்), சீனி, உருளைக்கிழங்கு, காய்கறி வகைகள் போன்ற அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் பல மடங்குகளால் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக கணினிகள், மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள், விளையாட்டுச் சாதனங்கள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மா சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனை சாதனங்கள், சுகாதாரப் பொருட்கள், இறப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், பயணப் பைகள், நில விரிப்புகள், ஆடைகள், செருப்புகள், செரமிக் மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற 367 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்துள்ளது.

    உணவுப் பொருட்களும், எரிபொருட்களும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானவை, இல்லையா? பெற்றோலும், டீசலும் இல்லாமல் நாட்டில் போக்குவரத்துகள் எவையும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. தொழிற்சாலைகள் பலவும் முடங்கிப் போயிருக்கின்றன. மீனவர்களுக்கு கடலுக்குப் போக முடியவில்லை. விவசாய இயந்திரங்களை இயக்க முடியாதுள்ளது. சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், விலை அதிகரிப்பாலும் அந்தத் தொழிற்துறையில் உள்ளவர்கள் பலரதும் பணிகள் முடங்கிப் போயிருக்கின்றன. இவ்வாறான நிலைமைகள் மக்களை வருமானத்துக்கு வழியில்லாதவர்களாக்கி மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அல்லவா? அதுதான் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

    சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் இல்லை. எரிவாயு சிலிண்டர் இல்லை. பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் இல்லை. எனவே இப் பொருட்கள் தமது ஊரிலோ, அருகிலுள்ள நகரங்களிலோ கிடைக்கின்றன என்ற தகவல்கள் கேள்விப்பட்டால் அவை தேவைப்படும் மக்கள் பல கிலோமீற்றர்கள் அலைந்து அவற்றைத் தேடி பல மணித்தியாலங்கள் பட்டினியோடு வரிசைகளில் காத்திருக்கிறார்கள். எவ்வளவு காத்திருந்த போதிலும் இறுதியில் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருப்பதுதான் அநேகமாக நிகழும். இன்று வரை அவ்வாறு வரிசைகளில் காத்திருந்த நால்வர் அவ்விடங்களிலேயே மயங்கி வீழ்ந்து இறந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உணவுப் பொருட்களும் இல்லை, அவற்றை வாங்கப் பணமும் இல்லை என்ற நிலைமையில் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் போன கவலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மின்சாரத் தடை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தின் காரணமாக உடனடி சிகிச்சைக்கு வழியில்லாமலும் மரணங்கள் ஏற்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


3. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என்ன?


    தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், டாலர் பற்றாக்குறைக்கும் ஒரு காரணமாக ரஷ்யா – உக்ரைன் போரைக் குறிப்பிடலாம். இலங்கையிடமிருந்து தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான நாடுகளாக ரஷ்யாவும், உக்ரைனும் இருக்கின்றன. இவற்றுக்கிடையிலான மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கிய நாடாக இலங்கை உள்ளது. இந்தப் போரின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்து வந்த அந்நிய செலாவணி வருமானம் தடைப்பட்டுள்ளது.

    அடுத்ததாக, நாட்டுக்கு எவ்வளவுதான் வருமானம் வந்த போதிலும், இலங்கை அரசியலானது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்கள் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இது இந்த நெருக்கடிக்கான பிரதான அம்சம் ஆகும். உண்மையில், பாரிய ஊழல், மக்களின் வரிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தல், உழைக்கும் மக்களைச் சுரண்டுதல் ஆகியவையே இந்த நெருக்கடியின் வேர்களாக உள்ளன எனலாம். அரசாங்கத்தால் விவசாயிகளுக்கான உர மானியம் ரத்து செய்யப்பட்டதை உணவு நெருக்கடியின் அடிப்படையாகக் குறிப்பிடலாம். அதுவரை காலமும் முந்தைய அரசாங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானியம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு வருட காலத்துக்குள் நிறுத்தப்பட்டதும் விவசாயிகள் நிர்க்கதி நிலைமைக்கு ஆளானார்கள். அவ்வேளையில் உரத் தட்டுப்பாடும் ஏற்பட விவசாய உற்பத்திகள் பாரிய அளவில் வீழ்ச்சி காணத் தொடங்கின. விவசாயிகள், விற்பனையாளர்கள் எனப் பலரும் விவசாயம் மூலமாகக் கிடைத்து வந்த தமது வருமானத்தை இழக்கத் தொடங்கியதோடு வேறு தொழில்களை நாடிச் சென்றார்கள். இவ்வாறாக படிப்படியாக உணவு நெருக்கடி மக்களின் மீது திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனாவும் இலங்கையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது.


4. கொரோனா கால நெருக்கடி பொருளாதார சரிவுக்கு காரணம் என்று சொல்லாமா?

    அதையும் ஒரு காரணியாகக் குறிப்பிடலாம் என்றாலும், அது மாத்திரம்தான் பொருளாதார சரிவுக்குக் காரணம் என்று கூற முடியாது. தைக்கப்பட்ட ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் கிடைக்கும் அந்நியச் செலாவணி மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றின் மூலமாகத்தான் இலங்கைக்கு பிரதான வருமானங்கள் கிடைத்து வருகின்றன. கொரோனா பரவியதோடு இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது அறவே நின்று போயின. அவர்களுக்கான நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் போன்றவை காலியாகின. அவற்றில் பணி புரிந்தவர்களுக்கு வேலைகள் இல்லாமல் போயின. கொரோனா பரவலோடு ஆடைத் தொழிற்சாலைகள், தேயிலை உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதோடு வருமானமும், அவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு வேலைகளும் இல்லாமல் போயின. உலகம் முழுவதும் கொரோனா பரவியதால் வெளிநாட்டு வேலைகளுக்கு இலங்கையர் செல்வது நின்று போனது. வெளிநாடுகளில் பணி புரிந்து வந்தவர்களும் வேலைகளையிழந்து இலங்கைக்கு திரும்ப வேண்டி வந்தது. இதனால் இலங்கைக்குக் கிடைத்து வந்த அந்நியச் செலாவணி வருமானமும் இல்லாமல் போனது. இவ்வாறாக ஒரு சங்கிலித் தொடர் போல கொரோனா இலங்கையில் பெருமளவில் பரவத் தொடங்கியதும் வருமானம் வரக் கூடிய அனைத்து வழிகளும் முடங்கிப் போயின. டாலர் வருமானமும் வெகுவாகக் குறைந்தது. இலங்கையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், இவையனைத்தும் மீண்டும் பழைய நிலைமைக்கு இன்னும் திரும்பவில்லை.


5. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளாரே... இது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகுமா?


    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கடந்த பதினாறாம் திகதி தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்துக்கு வர அவருக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருக்கிறது என்பதுதான் இந்தப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி பெறாமல், நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையின் பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்துள்ள போதிலும், ‘சர்வதேச நாணய நிதியம்’ எனப்படுவது ஒரு ஏகாதிபத்தியப் பிடி என்றுதான் ராஜபக்‌ஷேக்கள் (ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ) கருதி வந்தார்கள். என்றாலும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போயுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்தியாவிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி கோரும் அளவுக்கு அவர்களுக்கு புத்தி வந்துள்ளது.

    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து, எடுத்துக் கூறிய போதே உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏன் எடுக்கவில்லை என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஜனாதிபதியின் நிர்வாகத் திறனின்மை இதில் தெளிவாகப் புலப்படுகிறது, இல்லையா? ஒரு நாட்டை ஆளுவது என்பது எளிதான விடயமல்ல. தேர்ந்த அறிவும், ஆட்சி செய்வது தொடர்பான கொள்கைகளின் நுட்பமான தன்மையைப் புரிந்து கொள்ளும் திறனும் ஒரு ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். இவை தற்போதைய ஜனாதிபதியிடம் காணப்படவில்லை என்பதுதான் பிரதான குறைபாடு. டாலர் தட்டுப்பாடும், அந்நியச் செலாவணி வருமானம் தடைபடுதலும் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே ஜனாதிபதி பொருளாதார வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு ஏதாவது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை இந்தளவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்காது.

    சர்வதேச நாணய நிதியத்திடம் இவ்வளவு காலமும் போகாதிருந்ததால் டாலருக்கெதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியைத் தக்க வைத்துக் கொள்ள தற்போது இலங்கை மத்திய வங்கி பெரிதும் போராட வேண்டியிருக்கிறது. டாலர் பற்றாக்குறை ஏற்படும்போது ரூபாயின் பெறுமதி குறைவடைவது இயல்பு. கடந்த வாரம் வரைக்கும் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 200 ரூபாயாகவும், சந்தையில் 250 ரூபாயாகவும் இருந்தது. ஆகவே அந்நியச் செலாவணி வருமானம் நேராக மத்திய வங்கிக்குச் செல்லாமல் வெளிச் சந்தைகளிலேயே பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற போது 7 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது ஒரு பில்லியன் கூட இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. அவர் பதவியேற்ற போது 180 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் பெறுமதி இன்று 283 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறான நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்பது நல்ல விடயமாகும். கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது என்பது இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பலமாக அமையும். அவ்வாறே அரசாங்க நிதியை சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய வேண்டியது அத்தியாவசியம். சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பதினோராம் திகதி நடைபெறவிருக்கிறது. இலங்கையானது வருமானத்துக்கேற்ப செலவு செய்யும், வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரம் கடன் வாங்கும் ஒரு நாடாக மாற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை ஆலோசனை அவ்வாறுதான் அமைந்திருக்கிறது.


6. இதனை இலங்கையின் ஏனைய அரசியல் கட்சிகள் எவ்வாறு அணுகுகின்றன? அவை சரியான திசையில் பயணிக்கின்றனவா?


    இலங்கையில் பிரதான எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டும் உள்ளன. இவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்று சேர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளைக் கொழும்பில் நடத்தின. மீண்டும் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ பெரும் வெற்றியைப் பெற்றதுவும், சஜித் பிரேமதாச படுதோல்வியைச் சந்தித்ததுவும் நிகழ்ந்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுதான் நடைபெறவிருக்கிறது. நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த மோசமான நெருக்கடிக்குத் தீர்வு கண்டு விட்டுத்தான் 2025 ஆம் ஆண்டிலேயே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி கட்சியோ ஜனாதிபதி ஆசனத்துக்கு ஆசைப்படாமல் பாராளுமன்றத்தில் தனது ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஒரு பலமான கட்சியாக உருவெடுக்கவே விரும்புகிறது.


    பொதுமக்களுக்கு தமது உரிமைகளைக் கோரி தெருவிலிறங்க ஒரு தைரியத்தை ஏற்படுத்தியதுதான் இந்த இரண்டு கட்சிகளும் மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளால் விளைந்த ஒரே நன்மை என்று கூறலாம். உண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு கிடைத்தாயிற்று என்று கூறலாம். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மாத்திரமல்லாமல் எவருக்கும் இலங்கை நாட்டை மீட்டெடுப்பது சிரமமில்லை. இந்தக் கட்சிகளில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷே இதுவரை செய்த முட்டாள்தனமான காரியங்களைச் செய்யாமலிருந்தாலே நாடு இது போன்ற மேலுமொரு நெருக்கடிக்குத் தள்ளப்படாமலிருக்கும். அவர் இலங்கையைப் படுகுழிக்குள் தள்ள எடுத்த நடவடிக்கைகளை மீண்டும் எவரும் செய்யாமலிருந்தாலே போதும். கோத்தாபய ராஜபக்‌ஷவே கூட ஒழுங்கான முறையில் தனது குடும்ப விவகாரங்களையும், அரசியல் விவகாரங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நிர்வாகம் செய்தால் சில மாதங்களிலேயே இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து நாடு மீண்டு விடும்.

7. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தனியார் மயத்தை நோக்கி நகர்ந்ததன் விளைவு என்று சொல்லலாமா?


    அதுவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்‌ஷ குடும்பத்தில் பலரும் (மஹிந்த ராஜபக்‌ஷ, கோத்தாபய ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பலர்) இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்காகச் செலவழிக்கும் பணம் சொந்தப் பணம் அல்ல என்பதையும், அவை ஊழல் மற்றும் பல்வேறு தரகுக் கூலிகளால் கிடைக்கும் பணம் என்பதையும் பலரும் அறிவார்கள். எனவே தனியார் மயப்படுத்துவதன் மூலமும், வீதி அபிவிருத்தி எனும் பெயரில் பல்வேறு நாடுகளுக்கு கட்டுமானப் பணிகளுக்காக நாட்டின் பல பகுதிகளை ஒதுக்கிக் கொடுப்பதாலும் கிடைக்கும் தரகுக் கூலிகளால் அவர்கள் தமது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொள்கிறார்கள். நாட்டின் வருமானம் குறைந்து போய் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.


8. இலங்கை அரசு இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்கிறது? அரசின் நடைமுறை மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா?


    உண்மையில் ஏற்புடையதாக இல்லவே இல்லை. காரணம், அரசாங்கத்திடம் சாதாரண பொதுமக்களுக்கு சார்பாகவும், ஆதரவாகவும் எதுவுமே இல்லை. உதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் வரி விலக்கப்பட்ட வாகன உரிமங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர்கள் தாம் விரும்பிய வாகனத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அவற்றுக்கு வரி விதிக்கப்படாது. ஐந்து வருட காலத்துக்கு அவற்றை வேறு எவருக்கும் விற்க முடியாது. அந்த உரிமத்தை மற்றுமொருவருக்கு விற்பது சட்ட விரோதமானது. ஆனால் அந்த சட்ட விரோத நடவடிக்கை இலங்கையில் பகிரங்கமாக நடக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் அந்த உரிமத்தை விற்று மில்லியன் கணக்கான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பாரிய ஊழலை இதுவரை காலம் அரசாங்கம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. தற்போதுதான் ஜனாதிபதி இந்த வாகன உரிமத்தை இடைநிறுத்தியுள்ளார். இவ்வாறான ஊழல்களும் இந்த நெருக்கடிக்கு ஒரு காரணம். இவ்வாறாக இலங்கை அரசியலில் பாரிய ஊழல், மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவழித்தல், உழைக்கும் மக்களை சுரண்டுதல் ஆகியவை பகிரங்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வரிப் பணங்கள் என்ற பெயரில் அரசாங்கமானது மக்களை அதிகளவில் சுரண்டிக் கொண்டேயிருக்கிறது.

    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால் நாட்டுமக்கள் தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலப்பகுதியில்தான் இதுவரை தெரியாதிருந்த பலதும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளன. பண மோசடி ஊழல்கள் பற்றிய நிறைய விடயங்கள் உள்ளன. சுருக்கமாக இரண்டைக் கூறுகிறேன். இலங்கை மக்கள் வங்கி ஒரு வருட காலத்தில் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கு சமமான தொகையை அரசாங்கத்துடன் தொடர்புடைய இருவர் சீனி கொள்வனவு ஊழல் மூலமாக குறுகிய காலத்தில் ஈட்டியிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கைது செய்து சிறையிலடைத்தாரா என்றால் அதுதான் இல்லை. அவரது ஆட்சியில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் ‘இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு’ மூலமாகத் தொடுக்கப்பட்டிருந்த ஊழல் மற்றும் மோசடி சம்பந்தமான 38 வழக்குகள் அரசாங்கத் தலையீடுகளின் காரணமாக மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை விசாரிக்கப்படவேயில்லை.

    உண்மையில் இலங்கையில் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் குழந்தையொன்று கூட சர்வதேசத்துக்குக் கடனாளியாகத்தான் பிறக்கும் நிலைமை இன்று உருவாகியிருக்கிறது. இவ்வாறான நிலைமையில் அன்றாடம் விலைவாசிகளை ஏற்றி நாட்டு மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்குதல், சர்வதேசத்தில் அதிகூடிய வரி விதிப்புகளுக்கு உள்ளாகுதல், சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் கடனாளிகளாக இருத்தல் போன்ற அரசின் நடைமுறை செயற்பாடுகள் எவையும் மக்களுக்கு ஏற்புடையதாகவே இல்லை.


9. பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு இதற்கு தீர்வாகுமா?


    அரசாங்கம் விரைவில் மக்களுக்காக ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த பொதுமக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும்விதமாகத்தான் அரசாங்கம் 367 பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு எனும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கணினிகள், மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், இசைக்கருவிகள், விளையாட்டுச் சாதனங்கள், இறைச்சி, மீன், பால், சாக்லெட், மா சார்ந்த தயாரிப்புகள், பழங்கள், துரித உணவுகள், மதுபான வகைகள், சிகரெட் மற்றும் புகையிலைத் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனை சாதனங்கள், சுகாதாரப் பொருட்கள், இறப்பர் மற்றும் தோல் சார்ந்த தயாரிப்புகள், பயணப் பைகள், நில விரிப்புகள், ஆடைகள், செருப்புகள், செரமிக் மற்றும் கண்ணாடி சார்ந்த தயாரிப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு மின் உபகரணங்கள், தளபாடங்கள் போன்றவை அவற்றுள் அடங்கும் சில பொருட்களாகும்.

    இந்த இறக்குமதித் தடையோடு இலங்கையில் கைபேசிகளின் விலையும் முப்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கமானது மேலுள்ள பொருட்களை அத்தியாவசியமற்ற பொருட்களாகக் கருதிய போதிலும், இந்த நவீன உலகில் இவற்றுள் கணினியும், கைபேசியும் அத்தியாவசியப் பொருட்களாக எப்பொழுதோ மாறியாயிற்று. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டாண்டு காலமாக, கொரோனா உக்கிரமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலப் பகுதியில் கணினி மற்றும் கைபேசி வழியாகத்தான் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். இப்போதும் பெரும்பாலான வகுப்புகள் நிகழ்நிலை மூலமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், மக்களின் அத்தியாவசியமான பொருட்களாக மாறியிருக்கும் மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும்போது நாட்டில் ஏற்கெனவே உள்ள இந்தப் பொருட்களின் விலை பெறுமளவு உயர்கிறது. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாதிக்கும்.

    இந்த நிலைமையையும், தட்டுப்பாடுகளையும் சீரமைக்க இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு செயற்திட்டமும் இருப்பதை இதுவரை காண முடியவில்லை. மக்களை இந்தளவு கஷ்டத்துக்குள் தள்ளினால் எப்படி வாழ்வது என்பதுதான் பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. மக்கள் மீது சுமத்தியிருக்கும் இந்த நெருக்கடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக மக்களுக்கு அறியத் தர வேண்டும் என்றபோதிலும், அவ்வாறான ஒன்று இதுவரை நடக்கவேயில்லை.

    திடீரென்று இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நாட்டுக்குள் ஏற்கெனவே இருந்த இந்தப் பொருட்களின் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் ரமழான் மாத நோன்பு தொடங்கவிருக்கும் இந்தக் காலத்தில் பேரீச்சம்பழ இறக்குமதியைத் தடை செய்ததோடு நானூறு ரூபாயாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம்பழம் ஆயிரம் ரூபாவைக் கடந்திருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை ஒரு பழம் இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு இந்த நெருக்கடியை மேலும் உக்கிரமாக்கவே செய்கிறது.


10. இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு அணுகுகின்றன? உதவிகள் ஏதாவது செய்வதற்கு முன் வந்துள்ளனவா? குறிப்பாக சீனா போன்ற நாடுகள்?


    இலங்கை ஏற்கெனவே பங்களாதேஷ் உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கும் கடன்பட்ட ஒரு நாடாக உள்ளதோடு, வட்டியைக் கூட திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நிலையில் காணப்படுகிறது. எனவே எவ்வாறு அந்த நாடுகளிடம் மீண்டும் மீண்டும் கடன்களை எதிர்பார்க்க முடியும்? என்றாலும் இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க அரசாங்கமானது, பல்வேறு நாடுகளிடம் உதவி கோரிய போது இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை இந்தியா வழங்கியது. கடந்த டிசம்பர் மாதமும் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜயசங்கரையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துக் கலந்துரையாடியதில் ஒரு தொகை டாலர்கள் நிதியுதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா நிதியுதவி வழங்கியதற்குப் பிற்பாடு இப்போது சீனாவும் இந்த நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க உதவ ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்பே இலங்கை அரசு கோரியிருந்த 2.5 பில்லியன் டாலர் கடன் கோரிக்கையைத் தாம் இப்போது பரிசீலித்து வருவதாக சீனா அறியத் தந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிடமும் 200 மில்லியன் கடனை இலங்கை கோரியிருக்கிறது.

11. உங்களை போன்ற சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் வழிகள் எவை?


    இலங்கையின் அமைவு, அதிலுள்ள இயற்கை வளங்கள், மனித வளங்கள் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே வேறெந்த நாட்டையும் தங்கியிருக்காமல் தன்னிறைவுப் பொருளாதாரத்தை இலங்கையால் அடைய முடியும். இந்த நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும், தலைவர்களும் தமக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பாதுகாப்பதையோ, அதிகரிப்பதையோ பற்றி மாத்திரம் சிந்திக்காமல் உண்மையிலேயே தேவைப்படும் தீர்வுகள் பற்றி சிந்திக்க முற்பட வேண்டும். இப்போதுள்ள நெருக்கடியான நிலைமையில் ஏதேனுமொரு புரட்சியின்றி இலங்கையை இலகுவாக மீட்டெடுக்க முடியாதென்றே தோன்றுகிறது. அரசுக்குச் சொந்தமான அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் விலையேற்றங்களின் மூலம் பொது மக்களைச் சுரண்டுவதை எதிர்த்து அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் மக்கள் புரட்சியாக அது இருக்க வேண்டும். அவ்வாறு மக்களால் உருவாக்கப்படும் அரசாங்கம் ஆனது ஒரு புதிய அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும். மேலும் நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பையும், அவசரகால திருத்தங்களையும் முன்மொழிய சமூக மற்றும் இனங்கள் உட்பட அனைத்து அடையாளங்களின் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பரந்த அமைப்பை நியமிக்க வேண்டும். அனைத்து ஆயுதப் படைகளும் அரசின் தலைமையின் கீழ் அமைதி காக்கும் படைகளாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

    கடந்த காலங்களில் நாட்டிலிருந்து தரகுக் கூலி பெற்று ஊழல் செய்த முந்தைய ஜனாதிபதிகள் முதல் அமைச்சர்கள், செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மோசடியாக சம்பாதித்த சகல வியாபாரிகள் என பாரபட்சம் பாராமல் அனைவரினதும் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கம் உடனடியாகவும், தற்காலிகமாகவும் கையகப்படுத்த வேண்டும்.

    அத்தோடு சர்வதேச சமூகத்துடனான உறவுகளை மறுசீரமைப்பதற்கு வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும். இந்தியாவுடனான உறவுகள், குறிப்பாக அதிகார சமநிலையோடு நேர்மையாக பலப்படுத்தப்பட வேண்டும். தனியாருக்கு விற்கப்பட்ட வருமானம் தரக் கூடிய அரசாங்கச் சொத்துகள் மீண்டும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

    மக்கள் மீதான அரசாங்க வரி விதிப்புகள் நேர்மையானதும் ஒழுங்கானதுமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். அவ்வாறே நாட்டுக்குள் தேவையற்ற பொருட்கள் ஊடுருவுவதையும் தடுக்க வேண்டும். சர்வதேச சந்தையுடன் போட்டியிடக் கூடிய அளவில் உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டும். இவையனைத்தையும் இலங்கையின் மாற்று அரசியலுக்கான எண்ணக்கருக்களாகக் கருதலாம். அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும்.

24.03.2022

நன்றி - மக்கள் குரல் நாளேடு
_________________________


எம். ரிஷான் ஷெரீப் – இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு – mrishansh@gmail.com

Monday, February 5, 2018

கஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்


கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல் 


     நான்கு தசாப்த காலங்களாக இலங்கை பத்திரிகைகளில் சிங்கள மொழியில் கவிதைகளை எழுதி புகழ்பெற்றிருக்கும் கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடின் நவீன கவிதையை புதிய  பாதையில் கொண்டு செல்லும் கவிஞர்களில் முக்கியமான ஒருவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், எளியவர்களுக்காகவும் தனது எழுத்தின் மூலமாக சேவைகளை ஆற்றி வரும் இவர், அம் மக்களின் குரலை உயர் பீடத்திலிருப்பவர்களிடத்திலும் கவிதைகள் மூலமாகக் கொண்டு செல்கின்றார்.

     சொந்தமாக ஒரு இருப்பிடமற்று தெருவோரத்தில் படுத்துறங்கும் இக் கவிஞர் சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாமே ஏழை மக்களின் துயரத்தைப் பாடுபவை. ஏழைகளுக்காகப் பேசுபவை. இங்கு இக் கவிதைகளைப் போலவே முக்கியமானதாக எனக்குத் தோன்றுவது இக் கவிஞரின் பின்னணி. குடை திருத்துபவர்கள், சப்பாத்து தைப்பவர்கள், மரமேறுபவர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள், யாசகர்கள் என எல்லோருமே நாம் தினந்தோறும் காணும் நம் அயலில் இருப்பவர்கள்தான். அவர்களுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயத்திலும் இயற்கை, இலக்கியம் குறித்த ஈடுபாடுகளும் நேசமும் இருக்கக் கூடும் என்பதையும் எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?

     கவிஞர் தர்மசிறி பெனடிக்கின் கவிதைகள் தினந்தோறும் சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கின்றன. அனைத்துமே ஏழை மக்களின், கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கைத் துயரத்தைப் பாடுபவை. ஆனால் எழுதும் அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்ப முகவரி குறிப்பிடவேனும் அவருக்கென ஒரு இருப்பிடம் இல்லை. கடந்த வருட இறுதியில் அவரது ரசிகர்களால், பத்திரிகைகளில் பிரசுரமான அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதற்கு அவர் கொடுத்த தலைப்புஅம்மா, வா போகலாம்’. அவர் இக் கவிதைத் தொகுப்புக்கு எழுதியுள்ள குறிப்பைக் கீழே தருகிறேன்.


    வெட்கத்தை விடவும் நேசமானது, நெகிழ்வுத்தன்மை மிக்கதென உங்களிடம் முணுமுணுக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விடவும், நீங்கள் காண நேர்பவை குறித்து ஆழமாகச் சிந்தித்து தீர்மானிப்பீர்களென எண்ணுகிறேன். அம்மா இன்று இல்லை. அவள் எரிந்து சாம்பலாகிப் போன மயானத்தில் இன்னும் வாடிய பூக்களில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன். வெறுங்கையோடு உங்களிடம் இந்தக் கவிதைகளையும், இதயத்தையும் சமர்ப்பிக்கிறேன். உங்கள் கண்ணீர்ப் பாத்திரத்தை எனது நுரையீரலின் மீது வைத்து குளிர்விப்பீர்களென எனக்குத் தெரியும்.”


 
     இத் தொகுப்புக்கு முன்னுரைகளை எழுதியிருப்பது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். பின்னட்டைக் குறிப்பை எழுதியிருப்பவர் அவரது ரசிகையான ஒரு தெருவோர ஏழை விலைமாதுவான சுனீதா குமாரி. பின்னட்டைக் குறிப்பு இப்படிச் சொல்கிறது.


    ஒரு நாள், ஹலாவத பிரதேச விடுதியொன்றில் ஒருவருடன் படுக்கவென கட்டிலில் பத்திரிகைத் தாளொன்றை விரித்த போது, அந்தப் பத்திரிகையில்பரத்தைப் பெண்ணுக்குஎனும் கவிதை இருந்ததைக் கண்டேன். அப்போது எனக்கு வயது இருபத்தாறு. என்னுடன் படுக்கத் தயாரான நபருக்கு ஐம்பத்தாறு வயது. படுப்பதை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்து விட்டு, நான் அந்தக் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.”


     இந்தக் குறிப்பைப் பாருங்கள். இதை எழுதியிருப்பவர் தெருவோரத்தில் வெற்றிலை,பாக்கு விற்கும் ஒரு வயதான தாயொருத்தியான எலிஸ் ரணவக.


    கவிதை என்றால் அது இதயத்தை உருகச் செய்ய வேண்டும். குருதி நரம்புகள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணிமைகள் துடிக்குமெனில் நான் உணரும் வகையில் அக் கவிதை என்னை எழுப்பி விட்டதாகக் கொள்வேன். இந்தப் பிள்ளையின் கவிதைகளை நான் வாசிப்பது இன்று நேற்றல்ல. இவர் பழகுவதும், வாழ்வதும் எம்மைப் போன்ற ஏழைகளோடுதான். அதனால்தான் எனக்கு இவரது கவிதைகளை மிகவும் பிடித்திருக்கிறது. நான் தினந்தோறும் பத்திரிகை வாங்குவேன். வெற்றிலை பாக்கு விற்று வரும் பணத்தில் பத்திரிகை வாங்கி அக் கவிதைகளை வாசித்து ரசிப்பேன். இவரது கவி வரிகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல நெஞ்சில் உணர்வேன். என்னைப் போலவே இந்தப் பிள்ளைக்கும் தெருவோரத்தில் நின்று வெற்றிலை, பாக்கு, இளநீர் விற்ற அனுபவமிருக்கும். அனுபவங்களிருப்பதனாலேயே இந்தப் பிள்ளையின் கரங்களால் எழுதப்படும் வரிகளில் ஏதாவதொரு வலியுமிருக்கும். இவர் எனக்குக் காட்டிய கைப்பிரதிகளில் இரண்டாயிரம் கவிதைகளாவது இருக்கும். நிறைய சிகரெட் புகைப்பார். மரித்துப் போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் இப்பொழுதெல்லாம் இவருக்கு சிகரெட் விற்பதில்லை. பைபிளை வைக்கும் மேசை மீது கவிதைத் தொகுப்பையும் வைக்க என்னைப் பழக்கியது இந்தப் பிள்ளைதான்.”


     இலங்கை முழுவதும் பிரபலமான, கூலித் தொழிலாளியான இந்தக் கவிஞரை நேர்காணலுக்காகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அம்மாவின் புகைப்படத்தை எப்பொழுதும் கூடவே வைத்திருக்கிறார். பெனடிக் எனும் அம்மா வழிப் பெயரையே தனது பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் உரையாடுகையில் சொல்லப்பட்ட, அம்மாவும் அவரும் மட்டுமே வாழ்ந்த அந்த வாழ்க்கைப் போராட்டம், மிகுந்த மன அழுத்தத்தைத் தரவல்லது. சிங்கள மொழியில் உரையாடப்பட்ட அந்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து இங்கு தந்திருக்கிறேன். சம காலத்தில் சிங்கள மொழிக் கவிஞர் ஒருவருடனான நீண்டதொரு நேர்காணலாக அமையும் இந்த உரையாடலில் பங்கேற்றவர்கள் திரு.லஹிரு கிதலகம மற்றும் திரு.சங்க ரம்புக்வெல்ல ஆகியோர்.

கேள்வி - நீங்கள் வாழ்க்கையை உணரவும், உணர்த்தவும் கவிதையைத் தேர்ந்தெடுத்தது எதனால்?

பதில் - எனது வாழ்க்கையே ஒரு குறுக்கெழுத்துப் புதிர் போலத்தான். அதனை எப்படித்தான் நிரப்பிக் கொண்டு போனாலும் இறுதியில் நிரப்பவே முடியாதவாறு விடைகளேதுமற்ற கட்டங்கள் சில மீதமாகும். வாழ்க்கையில் அநேகமானவற்றை நான் நிரப்பியது அதாவது விடைகளைத் தேடிக் கொண்டது கவிதைகளினாலோ சிறுகதைகளினாலோதான். எனது தோழர் புரட்சிக் கவி சந்திரகுமார விக்ரமரத்ன. அவரதும் எனதும் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவ்வளவு வித்தியாசங்கள் இருக்காது. வித்தியாசமாக இருப்பது அவர் புரட்சிகர குணங்களால் நிரம்பியவர் என்பதே. அப்படிப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் கீழ்மட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் எமது ஜீவிதத்தைக் குறித்து எழுதினோம். நாங்கள் சந்தித்த துயரங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகள், வறுமை குறித்து நாங்கள் எழுதினோம். அவை மனிதர்களின் ஓலங்களாகவோ போராட்டக் குரல்களாகவோ மாத்திரமாக இருக்கக் கூடும். பார்த்தால் அவை கவிதைகளாகி விட்டிருந்தன. சமூகத்தில் பொய்யானது குளிர்வித்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த சூடான உண்மைகளை அந்த இடங்களிலிருந்து எடுத்து நாங்கள் மக்களுக்குச் சொன்னோம். பார்த்தால் அவை சிறுகதைகளாகவோ கட்டுரைகளாகவோ ஆகி விட்டிருந்தன. இன்றும் கூட நான் எழுதுவது எனது ஜீவிதத்தையும், அனுபவங்களையும்தான். பார்த்தால் அவை சமூகத்துடன் பிணைந்திருக்கின்றன.

     அதனால்தான் எனக்கு தேர்ந்தெடுத்த, ஒரே இலக்கான ஊடகம் என்று ஒன்று இல்லை. நான் வழமை போலவே சாதாரணமாக எழுதிச் செல்கிறேன். அதனை வாசிக்கும் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல அவை பச்சைக் கவிதைகள். எனினும் அவ்வாறு எழுதுவதில் எனக்கென்று ஒரு இலக்கு இருக்கிறது. நிறுத்துமிடம் இல்லாவிட்டாலும், காட்சிகளுடன் பிணைந்த இலக்கொன்று இருக்கிறது. உள்ளத்தை ஊடறுத்துத் துளைக்கும் கதைகளால் பிறக்கும் அக் கவிதைகளுள் ஏழை மக்களின், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின், அடக்குமுறைக்குள்ளானவர்களின் இதயத் துடிப்புக்கள் பின்னப்பட்டிருக்கின்றன. அதனால் வெளிப்படையாக ஏழை மக்களுக்காகவே நான் எழுதுகிறேன். காரணம், அவர்களது குரலை வெகுதொலைவுக்குக் கொண்டு செல்ல ஒலிபெருக்கிகள் இல்லை.

     முன்பு எனது கவிதையொன்று பத்திரிகையில் பிரசுமானால் முதலில் என்னை அழைப்பது ஒரு கவிஞராக இருக்கும். கூறவே மகிழ்ச்சி தரும் அந்த நடைமுறையை நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். இன்றும் கூட என்னைப் புரிந்துகொள்ள எவராலும் முடியாது. இப்பொழுது எனது கவிதையொன்று பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதைக் கண்டால் முதன்முதலில் என்னை அழைப்பது தூர மலைக் கிராமமொன்றில், தோட்டத் தொழிலாளராக சமையலறை கழுவும் ஒரு இளைஞன். குடைகள் திருத்தும், சாவி வெட்டும், சப்பாத்து தைக்கும் ஏழை வாசகரொருவர். தெருவில் பிச்சையெடுக்கும் கடவுள். ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் சகோதரியொருத்தி. தேங்காய் பறிக்கும் ஏழை இளைஞன் ஒருவன். விலைமாது சகோதரியொருத்தி. தெரு சுத்திகரிக்கும் தாயொருத்தி, சுமை தூக்கும் சகோதரனொருவன், அல்லது குப்பை அள்ளும், வடிகான்களைக் கழுவும் சகோதரனொருவன். நான் கவிதையால் சம்பாதித்த பெரும் சொத்துக்கள் என்றால் இந்த ஏழை மக்கள் மாத்திரம்தான். நான் பழகுவதுவும் இவர்களுடன்தான்.  சமூகத்தில் இவர்களுக்கென யாருமேயில்லை. இவர்களது வாழ்க்கை மற்றும் துயரங்கள் குறித்து கதைப்பதற்குக் கூட சமூக மக்கள் கூச்சப்படுகிறார்கள். இவர்களது ஜீவிதங்களோடு தோளில் கை இட்டு உரையாடுவதற்கு சமூக மக்கள் அறுவெறுப்படைகிறார்கள். இவர்கள் மிகவும் அசுத்தமானவர்களென பரிசுத்தமான இச் சமூகம் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறான அவதூறுகளைச் சுமக்கும் மக்களுக்காகவே எனது கவிதைகள் முன்நிற்கின்றன.

கேள்வி - பல தசாப்த காலங்களாக எழுதி வரும் உங்களது கவிதையின் பிறப்பு எப்படி உருவானது?

பதில் - எனது தந்தை இராணுவத்தில் உயரதிகாரி ஒருவர். ஐந்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தை, அம்மாவையும், என்னையும் கை விட்டுச் சென்று இன்னுமொரு திருமணம் செய்து கொண்டார். ஐந்தாம் வகுப்புக்கான பௌத்த சமயப் பாடப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறிச் சென்ற தந்தை, முஸ்லிம் தாயொருத்தியை சித்தி என அழைக்கும் நிர்ப்பந்தத்தை எனக்கு உண்டாக்கினார். தந்தை, எனது அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்திருந்த மோதிரத்தை அம்மா என்னுடனே சென்று புதிய மணமக்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வந்தார். ஏனெனில் அதன் உரிமை அம்மாவுக்கு இருக்கவில்லை. அதாவது எனது தந்தை, அம்மாவை சட்ட ரீதியாகத் திருமணம் முடித்திருக்கவில்லை. இன்றும் கூட எனது பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரில்லை. அம்மாவின் குலப் பெயரே எனது பெயருடன் சேர்ந்து வருகிறது. அதனால் நான் 'தகப்பன் பெயரறியாதவன்' என்றே அழைக்கப்பட்டேன். அதுதான் எனது முதல் பெயர். அந்தப் பெயரை நான் மிகவும் நேசிக்கிறேன். கண்ணீர் வளையங்கள் அதனால்தான்.

     தந்தை விட்டுச் சென்றதும் அம்மாவும், நானும் மிகவும் கையறு நிலைக்கு ஆளானோம். அம்மா அக் காலங்களில் ஒரு கௌரவமான பேரழகி. அவ்வாறே ஒரு நோயாளி. அம்மாவுக்கு எழுத வாசிக்கத் தெரியவில்லை. அம்மா படித்திருந்தால் சிலவேளை இன்று நீங்கள் கவிதைகளினூடு காணும் நான் பிறந்திருக்க மாட்டேனே. ஆகவே அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்தாள். அம்மா கூலி வேலைகள் செய்தாள். அன்னாசித் தோட்டங்களில் வேலைக்குச் சென்றாள். தும்பு ஆலைகளில் வேலை செய்தாள். கள் விற்றாள். கள் வாங்க வந்த சிலர் அம்மாவின் மார்பைத் தொட முயன்றனர். அவர்களை நான் தேங்காய்த் துருவி கொண்டு தாக்கியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

     அம்மா ஒருபோதும் அவளது ஆடையை அவிழ்க்கவில்லை. எவ்வளவுதான் ஏழை என்றபோதும், வறுமை ஆட்கொண்ட போதும் அம்மாவின் ஆடையிலிருந்த வெண்ணிறப் பூக்கள் உதிரவோ, வாடவோ அவள் இடம்கொடுக்கவில்லை. நான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு படித்து எப்போதும் வகுப்பில் முதலாம் மாணவனாக வந்தேன். நிறைய புத்தகங்கள் வாசித்தேன். சோவியட் சஞ்சிகைகளே அக் காலத்தில் நிறைய வாசிக்கக் கிடைத்தன. எனவே சிறு வயதிலேயே லெனினைக் குறித்தும், மார்க்ஸைக் குறித்தும் வாசித்தேன்.

     அந் நாட்களில் என்னிடமிருந்தது ஒரே ஒரு ஆடைதான். எல்லா இடங்களுக்குமே பள்ளிக்கூடச் சீருடையைத்தான் அணிந்தேன். சுமித்ரா ஆசிரியைதான் எனக்கு பௌத்த மத பாடத்தைப் போதித்தவர். அவர் நான் கல்வி கற்க நிறைய உதவிகள் செய்தார். ஆடைகள் வாங்கிக் கொடுத்தார். அதற்கு மேலதிகமாக தேவையான பென்சில், பேனை, அப்பியாசக் கொப்பிகள் வாங்கவென, நான் தினந்தோறும் விடிகாலைகளில் கிராமத்திலிருந்த வீடுகளுக்குச் சென்று தென்னை மரங்களேறி தேங்காய் பறித்துக் கொடுத்தேன். பிறகு பள்ளிக்கூடத்துக்குப் போவேன். மரமேறுவதற்காக அம்மா என்னைத் திட்டிய நாட்கள் அநேகம். அவ்வாறே அம்மாவும் நானும் பட்டினியோடு இருந்த நாட்களும் அநேகமானவை. எனினும் எவ்வாறோ நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். நான் பாடசாலையில் எனது மேசை, கதிரையை ஏனைய மாணவர்களிடமிருந்து தள்ளி வைத்தே அமர்ந்திருந்தேன். மரமேறுவதால் என்னிடமிருந்து எழும் மரங்களின் வாடை யாரையும் நெருங்க விடுவதில்லை.

     எனது பள்ளிக்கூடத் தோழி நிஷாமணி. தும்பு ஆலையொன்றில் கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில்தான் அவள் படித்து வந்தாள். அவளிடம் தேங்காய் மட்டை வாடையடிக்கிறதெனக் கூறி அவளையும் என்னருகே அமர வைத்தனர். எப்போதும் வகுப்பில் சிறந்த புள்ளிகளெடுத்ததில் முதலாமிடம், மர வாடையடிக்கும் எனக்கு. இரண்டாமிடம் மட்டை வாடையடிக்கும் நிஷாமணிக்கு. வாசனை ரோசாப் பூவும், பிச்சிப் பூக்கள் நான்கைந்தும் என அக் காலத்தில்தான் எனது கவிதை பிறந்தது. எனது முதலாவது கவிதை ஆழமான அரசியல் காரணங்கள் குறித்து எழுதப்பட்டது. அது பத்திரிகையில் பிரசுரமானதும் மொத்த பள்ளிக்கூடமுமே விழித்துக் கொண்டது. பள்ளிக்கூட அதிபருக்கு, ஆறாம் வகுப்பு மாணவன் எழுதிய கவிதையை உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

     ஒரு நாள், எமது பள்ளிக்கூடத்தில் சிங்கள மொழியைக் கற்பித்த தமிழ் ஆசிரியர், மாணவர்கள் எல்லோரும் வளர்ந்து பெரியவர்களாக ஆனதும் என்னவாக விரும்புகிறீர்களென எல்லோரிடமும் கேட்டார். நிறையப் பேர் மருத்துவர்கள், பொறியியலாளர்களாக ஆகப் போவதாகக் கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே நிறையப் பேர் இன்று அவ்வாறு ஆகியிருக்கிறார்கள். என்னிடமும் ஆசிரியர் அதே கேள்வியைக் கேட்டார். எல்லோருமே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான்மனிதன்ஆகப் போவதாக ஆசிரியரிடம் கூறினேன். என்னையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்நீ எப்போதாவது, உன் நல்ல மனதின் காரணமாக மிகவும் ஏழையாகவும், உணர்வுபூர்வமான மனிதனாகவும் இருப்பாய்என்று எதிர்வுகூறினார். அன்றைய எதிர்வுகூறல் இன்று நிஜமாகியிருக்கிறது. நான் ஒருமனிதன்என உங்களுக்குத் தெரியும். எனினும் பரம ஏழை.

கேள்வி - நீங்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை வாழும் கூலித் தொழிலாளி. இந்தக் கடினமான ஜீவிதத்தினுள்ளிருந்து எவ்வாறு உங்களால் மென்மையான கவிதைகளை எழுத முடிகிறது?

பதில் - எனக்கு இருப்பது சுகமான வாழ்க்கையல்ல. கடினமான வாழ்க்கைதான். அதனுள்ளிருந்துதான் இம் மென்மையான, உணர்வுபூர்வமான கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்தக் கவிதைகள் வேதனையைப் பகரக் கூடும். நான் உணரும், என்னை நோகச் செய்பவற்றை நான் எழுதுகிறேன். மக்களின் துயரங்களை, வேதனைகளை நான் நன்கறிவேன். ஏனெனில் நான் துன்பங்களை அனுபவிக்கும், வறுமைத் துயரில் முற்றிலும் ஆழ்ந்த ஒரு மனிதன் என்பதனால் எனது வாழ்க்கையும் மக்களின் துன்பங்களை எழுதும்படியே என்னை வற்புறுத்துகிறது. எனது பொறுப்பும் அதுதான். குரலற்ற மனிதர்களுக்காக பேனையை நகர்த்துவதற்கே நான் பிறந்திருக்கிறேன் எனக் கருதுகிறேன். அதனால்தான் நான் வறுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள், அநீதங்கள், அக்கிரமங்கள் மற்றும் அடக்குமுறைகளை பலமாக எதிர்த்து எழுதி வருகிறேன். இங்கு எனது வாழ்க்கை இரண்டாம்பட்சமாகிறது. எனது மக்களுக்காக என்னால் அதைச் செய்ய முடிகிறது. அநேகமாக எனது கவிதைகள் இந்தக் கருக்களைக் கொண்டிருப்பதனால்தான் உங்களைக் கவருவதாக இருக்கக் கூடும். உண்மையில் எனது கவிதைகள் பாதிக்கப்பட்டவனின் துயரத்தை நான் உணரத் தொடங்கிய நாளிலிருந்துதான் ஆரம்பித்தன எனக் கூறுவதே சரி.

கேள்வி - இவ்வளவு காலமாக ஏன் தொகுப்பொன்றை வெளியிடவில்லை?

பதில் - எழுதுவதைத் தவிர அவற்றைப் புத்தகமாக்கும் அளவுக்கு அவசியமிருக்கவில்லை. நான் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்துமே பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. அவையும் தொலைந்து விட்டன. நான் பத்திரப்படுத்தவுமில்லை. இப்பொழுது அண்மையில் எழுதிய கவிதைகளை மட்டும் ஒரு புத்தகத்தில் ஒட்டி வருகிறேன். நூலாக வெளியிடாததால் எனது கவிதைகள் குறித்து உரையாடல்கள் எவையும் நிகழவுமில்லை. சிலவேளை உரையாடப்பட வேண்டிய கவிதைகளை நான் எழுதாமல் இருந்திருக்கக் கூடும்.

     அநேகமாக நான் கவிதைகள் எழுதுவது சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மனிதர்களுக்காகத்தான். அந்தத் துயரத்துக்குள்ளான மக்கள் என்னை வாசிக்கிறார்கள். அந்த விருதுகள் எனக்குப் போதுமானவை. அவர்கள் நடுத்தெருவில் வைத்து என்னை முத்தமிடுகிறார்கள். எனக்கு அந்த அன்பு போதும். நாங்கள் ஒன்றுகூடி நகரசபை குப்பை வண்டியில் அமர்ந்து சாயத் தேநீர் அருந்துகிறோம். அந்த உரையாடல் மாத்திரம் போதும்.

கேள்வி - வாழ்க்கையை, கவிதையோடு மையப்படுத்தியது எவ்வாறு?

பதில் - இழப்புக்களின் மீதுதான் எனது வாழ்க்கை கட்டப்பட்டிருக்கிறது. தந்தை எம்மைக் கைவிட்டுச் சென்றதன் பிறகு நாம் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தோட்ட உரிமையாளர்கள் எம்மைத் துரத்தினார்கள். வாடகைப் பணத்தைச் செலுத்த எம்மிடம் வழியிருக்கவில்லை. நானும், அம்மாவும் அம்மாவின் ஊரான நாகொல்லாகொட எனும் ஊருக்கு வந்தோம். பிறகு பொலிதீனால் கூடாரம் அமைத்து நானும் அம்மாவும் அதில் வசித்தோம். அங்கிருந்தும் எம்மை நடுத்தெருவுக்குத் துரத்திய அன்றுதான் நான் உயர்தரத்துக்கு சித்தியடைந்திருந்தேன். பிறகு விறகுக் கொட்டிலொன்றில் தங்கியிருந்தவாறு உயர்தரம் கற்க பாடசாலைக்குச் சென்று வந்தேன். உயர்தரம் படித்த காலத்தில் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியோடு இணைந்து பணிபுரிந்தேன். எனவே கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் சிறைச்சாலைகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும், புணருத்தாபன முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலையானேன். அதன்பிறகும் நான் மக்களுக்காக வதைக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. மிகவும் இடர் நிறைந்த சந்தர்ப்பங்களிலும் நான் எனது கடமையை நிறைவேற்றினேன். என்னை அவ்வாறு செய்ய எனது வாழ்க்கையே நிர்ப்பந்தித்தது. நான் நிறைய தொழில்களைச் செய்திருக்கிறேன். அவ்வாறே நிறைய தொழில்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறேன். சில காலம் இராணுவத்தின் பொறியியல் பிரிவில் பணி புரிந்தேன். பிறகு என்றோ இடதுசாரிக் கட்சியில் இணைந்திருந்தேன் எனக் கூறி என்னைப் பணியிலிருந்து நீக்கி விட்டார்கள். நான் பத்திரிகைகளில் எழுதியவையும் அதற்குக் காரணமாக அமைந்தன. எனக்குரியவற்றை இழக்க நேரிடுகின்றன என்பதற்காக நான் உண்மைகளை எழுதாமலிருக்கவில்லை.

     நான் ஊடகவியலாளராக சில மாத காலங்கள் பணி புரிந்தேன். பாராளுமன்ற நிருபராக வேலை செய்தேன். அணிந்து செல்ல நல்ல ஆடைகளும், சப்பாத்தும் இல்லாத காரணத்தால் முதலாவது சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் முன்பே வேலையிலிருந்து நின்று விட வேண்டியிருந்தது. பிறகு 'மாஸ்' எனும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சமையலறை பாத்திரங்களைக் கழுவினேன். நான் அந் நாட்களில் 'மார்க்ஸ் கூறிய உரிமைகளைப் பெற்றுத் தாருங்கள்' என பத்திரிகையொன்றில் கட்டுரையொன்றை எழுதினேன். அதைப் பார்த்து விட்டு, ஆடைத் தொழிற்சாலை முகாமையாளர் என்னை வெளியே துரத்தி விட்டார். இவ்வாறான விடயங்களோடுதான் வாழ்க்கை, கவிதையோடு மையப்படுகிறது.

கேள்வி - வறுமையிலிருந்து கவிதைகள் பிறப்பது எதனால்?

பதில் - நிஜத்தில் நான் மிகவும் வறியவன். ஏழைகள் கவிதைகளையும், படைப்புக்களையும் இதயத்திலிருந்துதான் நிர்மாணிக்கிறார்கள். செல்வந்தர்களும், மத்தியதர வகுப்பினரும் தலையைப் பாவித்து கவிதைகளை எழுதுகிறார்கள். நாங்கள் அனுபவத்தால் எழுதுபவற்றை சிலர் வெறுமனே தொட்டுப் பார்த்து எழுதுகிறார்கள். இக் கவிஞர்கள் உலகத்தில் இருக்கும் ஒரேயொரு பிச்சைக்காரன் நான்தான். நீங்கள் என்னைப் பற்றி விசாரித்துப் பார்த்தால் அதனைக் கண்டுகொள்வீர்கள். என்னிடம் எதுவுமே இல்லை. என்னிடம் மறைக்கவோ, கூச்சப்படவோ எந்த விடயங்களும் இல்லை.

     வெட்கம், செல்வந்தர்களின் ஆயுதம். நான் நானேதான். தனி நபர் என்பதனால் நான் எனக்கு மாத்திரம்தான் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. பரிதாபகரமான துயர் நிறைந்த வாழ்க்கையைத்தான் நான் அனுபவித்தேன். அந்த அனுபவங்கள்தான் என்னிடமிருந்து கரை சேருகின்றன. அதனால்தான் நான் எனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாதிருக்கிறேன். எனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், என்னால் மனசாட்சியோடு ஒன்றிணைந்து, துயருறும் எனது பரம்பரையைக் குறித்து எழுத முடியாமல் போகும். சௌபாக்கியமாக வாழ்ந்து கொண்டு, துயர வாழ்க்கை குறித்து எழுத நான் விரும்பவில்லை. அது கவிதையுமில்லை.


கேள்வி - உங்கள் கவிதைகளில் காணக் கூடிய ஒரு சிறப்பு, நீங்கள் பாவிக்கும் கவிதை மொழி. உவமை, புனைவு வாக்கியங்களைப் பாவிக்காமல் அன்றாட வாழ்க்கையில் பாவிக்கும் சொற்களைக் கொண்டு கவிதைகளை எழுதி விடுகிறீர்கள்?

பதில் - அநேகமாக நான் எனது கவிதைகளில் உவமை, புனைவுகளைப் பாவிப்பதில்லை. எனது கவிதைகள் பேராசிரியர், அறிஞர்களுக்கானவையல்ல. சாதாரண பொதுமக்களுக்கானவை. பொதுமக்களுக்கென எழுதும்போது, விஷேடமாக ஏழை மக்களுக்காக எழுதும்போது அவர்கள் அறிந்த, உணர்ந்த, அவர்களுக்குப் புரியக் கூடிய மொழியிலேயே எழுத வேண்டும். சாதாரண மக்களுக்கு பல கவிதைகள் விளங்காமலிருப்பதனாலேயே அவை அவர்களை ஈர்ப்பதில்லை. அதனை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் நான் ஆயிரக்கணக்கில் கவிதைகளை எழுதியிருக்கிறேன். இதனால் பழங்கால இலக்கியங்கள் நமக்கு அவசியமற்றவை என நான் கூற வரவில்லை. அதிலும் எமது வேர் இருக்கிறது. எனினும் சமூகத்தை மாற்ற எமக்கென காலோசிதமான நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் இருக்கின்றன. அதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனது கவிதைகள் மக்களுக்குப் புரிவதும், அவர்கள் அவற்றை உணர்வதுவும் அதனால்தான்.

     ஒருவன் யதார்த்தமான கவிதையொன்றை எழுத அவன் அதனை அனுபவித்திருக்க  வேண்டும். அவ்வாறே அக் கவிதையை வாசிப்பவனும் இழப்புக்களைச் சந்தித்திருக்க வேண்டும். அரசியல்வாதிகள் புண்ணியத்தில் நம் இருவருக்குமே அந்த அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கை அரசியல் தாழ்ந்ததும், தரம் குறைந்ததுமான அரசியல். ஏமாற்றும் அரசியல். அங்கு இம் மாயையை விளக்க பொருத்தமான வாக்கியத்தை அல்லது சரியான மொழியைப் பாவிக்க வேண்டும். இங்கு நான் பாதிக்கப்பட்டவனின் மொழியையே தேர்ந்தெடுக்கிறேன். ஆகவேதான் மொழிச் சிக்கல்கள் எனக்குத் தோன்றவில்லை. வாசிப்பவருக்கு நான் எழுதுவது புரிந்ததா? அவர் அதனை உணர்ந்தாரா? என்பதே எனக்குத் தேவையாக இருக்கிறது.

கேள்வி - அநேகமான உங்கள் கவிதைகளில் துயரத்தைச் சுருக்கமாகக் கூற நிறைய இடமெடுத்துக் கொள்கிறீர்கள். காரணமென்ன?

பதில் - எனது கவிதைகளில் துயரங்கள்தான் அநேகமிருக்கும். இந் நாட்டை எடுத்துக் கொண்டோமானால் நான்கில் மூன்று பங்கு மக்கள் கஷ்டத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் பாடுபடுவதில்தான், சௌபாக்கியமாக வாழ்பவர்கள் சிலரும் உருவாகியிருக்கிறார்கள். ஆகவே நான் எழுத வேண்டியது என்னுடன் நிறையப் பேர் இருக்கும்கஷ்டப்படும் மக்கள்எனும் பிரிவிலிருந்துதான். எனவேதான் எனது அநேகமான கவிதைகளில் மக்களின் துயரங்களும், வேதனைகளும், கஷ்டங்களும் இருக்கின்றன. சௌபாக்கியங்கள் குறித்து எழுதும் எண்ணம் எனக்கில்லை. நான் சுக வாழ்க்கையை அனுபவித்ததில்லை. கஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன்.


கேள்வி - அவ்வாறு கிறுக்கப்படும் கவிதைகள் உங்களிடமிருந்து பிறந்ததற்குப் பிற்பாடு அவற்றை சமூகத்திடம் எய்து விட்டு நீங்கள் ஓரமாகி விடுகிறீர்கள், நீங்கள் உங்கள் கவிதைகளின் பின்னாலிருந்து, உங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ளவோ, கவிதைகள் மக்களைப் போய்ச் சேரவோ நீங்கள் உங்கள்  கவிதைகளைத் தட்டிக் கொடுப்பதில்லை. ஏன்?

பதில் - எனது கவிதைகள் புகழ் பெற வேண்டும், சேகரிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படும் இடத்தில் நான் இல்லை. எனது கவிதைகளுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாடும் எனக்கில்லை. மக்களிடம் போய் விடு என எனது கவிதைகளைப் பின்னாலிருந்து தள்ளிவிடுவதுமில்லை. எனினும் இந் நாட்டு மக்கள் எனது கவிதைகளைப் பறித்துக் கொள்கிறார்கள். நான் எழுதி முடிக்கும்வரை காத்திருப்பதில்லை. மக்கள் எந்தளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். என்னை நடுத்தெருவில் வைத்துக் கட்டிப்பிடித்து அணைத்து மக்கள் என்னிடம் அதைச் சொல்கிறார்கள். நான் அவர்களுடன் சேர்ந்தழுது இச் சமூக நடைமுறையை மாற்றத் தேவையான போராட்டத்துக்கான ஸ்வரத்தைத் தேடுகிறேன். அதைத்தான் செய்ய வேண்டுமென நான் நினைக்கிறேன். எந்தவொரு கலைஞனுக்கும் இந்த நிலைப்பாடுதான் இருக்க வேண்டும். எனக்கு காசு பணம் தேவையில்லை. வருடக்கணக்காக எனக்கு உணவளித்து, இருக்க இடம்கொடுத்துப் பராமரித்தது இந்த ஏழை மக்கள்தான். அதனால் அவர்களது துயர வாழ்க்கைக்கு நானும் பொறுப்பு கூற வேண்டும். அவர்களை இந் நரகத்திலிருந்து மீட்க வேண்டும். அது எனது கடமை. எனவே எனது கவிதைகள் பிரபலமடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை. என்னை வாசிக்கிறார்கள். எதனால் அது என எனக்குத் தெரியும். நீங்களும் ஏன் அது என புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி - நீங்கள் துயருரும் மனிதர்களின் உணர்வுகளைத் தொடுகிறீர்கள். வேறு விதமாகச் சொன்னால் அவர்களது ஆன்மாக்களே உங்கள் கவிதைகளில் பதியப்படுகின்றன. நீங்கள் சொல்வதைப் போல அது கண்ணீர்த் துளிகளில் உருவான கண்ணீர்ச் சிற்பம். இன்னலுக்குள்ளான பொதுமக்கள் உங்கள் படைப்புக்களினால் மேலும் மேலும் மானசீகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என நான் கூறினால்?

பதில் - எனது கவிதைகளினால் துன்பத்திலுள்ள ஒருவருக்கு மேலும் துயரம் உண்டாகும் எனும் விடயத்தை நான் மறுப்பதற்கில்லை. மக்கள் ஆழமாக உறைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் உணர்வு மரத்துப் போயிருக்கிறார்கள். இன்றைய முதலாளித்துவத்தில் அவர்கள் சிலையெனச் சமைந்திருக்கிறார்கள். முதலில் நான் அவர்களது சுவாசத்தை உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும். மரத்துப் போயிருக்கும் அவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும். அவர்களது சுரப்பிகள், நரம்புகள் சீராக வேலை செய்தால் அவர்களது மூளையும் ஒழுங்காக வேலை செய்யும். மக்கள் மூளையைப் பாவித்து வேலை செய்கிறார்களா என்பது இன்று கேலிக்குரிய விடயமாக இருக்கிறது. அது தேர்தல்களின் போது எமக்கு நன்றாகத் தெளிவாகிறது. பொதுமக்கள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்புபவர்களின் ஊழல்களையும் அவர்களது மோசமான நடவடிக்கைகளையும் பாருங்கள். வியப்பாக இருக்கிறது அல்லவா? அறுவெறுப்பாக இருக்கிறது அல்லவா? அவை நாகரீகமற்றவை அல்லவா? ஆகவே இதிலிருந்து மக்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என அவர்களுக்கே தெரியவில்லை என்பது புரிகிறது. நாம் அவர்களை விழிக்கச் செய்ய வேண்டும். அவர்களுக்குத் தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டும். அது இந்த இரும்புக்கடையில் இரும்பு வெட்டுபவனுக்கு, சீமெந்து மூடை சுமப்பவனுக்கு சிரமமாகத்தான் இருக்கிறது. எனினும் நான் இதைச் செய்வேன். நான் அதன் நான்கில் மூன்று பங்கைச் செய்து முடித்து விட்டேன். கருங்கற்களையுடைக்கும் பாறைக் கிடங்குகளில், இரும்புக்கடைகளில், பட்டறைகளில் தொழில் புரிந்து நான் செய்வது அதைத்தான். கவிதைகள் எழுதும் ஒருவரால் செய்ய முடிந்ததையெல்லாம் நான் செய்கிறேன். அதனால் மக்கள் எனது கவிதைகளால் கவலைப்படுவார்கள் என்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை.

கேள்வி - ஒரு கவிஞருக்கு திறமையும், வாழ்வியல் அனுபவங்களும், பயிற்சிகளும் போல கற்பனைத் திறனும் எவ்வளவு முக்கியமானது சக மனிதருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க?

பதில் - சக மனிதருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க கற்பனைத் திறனும் மிகவும் முக்கியமானதுதான். நான் கவிதையை ஒரு முறைதான் எழுதுவேன். பிறகு சொற்களை மாற்றுவதோ, செதுக்குவதோ, நீக்குவதோ எதுவுமில்லை. எழுதியது எனது உணர்வைத் தொடுகிறதா எனப் பார்ப்பேன். எழுதும்போதே அதன் கரு என்னவென்று மனதின் ஆழத்தில் பதிந்திருப்பேன். எனது கவிதைகள் எழுதப்படுவது தலையிலிருந்தோ, வயிற்றிலிருந்தோ அல்ல. இதயத்திலிருந்து நேரடியாகப் பிறக்கின்றன அவை. கற்பனைத் திறன் எனக்குள்ளே அதுவாகவே ஊற்றெடுக்கிறது. கவிதையொன்றை எழுதத் தொடங்கியதும் அதற்குத் தேவையான ஆவேசம் எனது நெஞ்சைத் தாக்கும். அதன் காரணமென்னவென எனக்குத் தெரியாது. அதற்கு நீங்கள் திறமையெனப் பெயரிடக் கூடும். ஆனால் அது திறமையல்ல. தெளிவாகச் சொல்வதானால்அழிந்து போதல்’.

கேள்வி - அவ்வாறாக கட்டியெழுப்பப்படும் அல்லது தானாக உருவாகும் கற்பனைத் திறனானது, மக்களுக்கு புரிந்துகொள்ளச் சிரமமாக இருக்கிறதென்றால், சக மனிதர்களது தோல்விக்கான பொறுப்பில் பாதி கவிஞர் மீதும் விழுகிறது அல்லவா? ஏனெனில் இலக்கியத்திலோ, கவிதையிலோ கவிஞராகிய உங்களுக்குரிய சமூகப் பொறுப்பை நீங்கள் சரியான முறையில் செய்யாததன் காரணத்தினாலேயே இந் நிலைமை உருவாகியிருக்கிறதென நான் கூறினால், அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் - உண்மையில் நிறைய விடயங்களைக் கிரகித்துக் கொள்ள மக்களால் முடியவில்லைதான். காரணம் கவிதை எழுதும் பாங்கு, கருப்பொருள் ஒவ்வொரு கவிஞருக்கும் வித்தியாசமானவை. கவிஞர்களுக்கென சில எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடும். சிலர் பிரபலமாக வேண்டுமென கவிதைகள் எழுதக் கூடும். சிலர் தனித்துத் தெரிய வேண்டுமென கவிதைகள் எழுதக் கூடும். சிலர் கவிதைகளால் யாப்புக்கள் இயற்றக் கூடும். அரசர்களைத் துதி பாடக் கூடும். வாயிற்காப்போர்களையும், அமைச்சர்களையும் வணங்கக் கூடும்.

     நாங்கள் கவிதைகளை எழுதுவது எதற்காக என்பதையும் யாருக்காக என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் கவிதையானது தனது உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. கவிதையின் கழுத்தை நெரித்தது எமது மக்களேதான். எனினும் ஆத்மாவினுள்ளிருந்து கவிதைக்கு உயிர் வாயு வழங்கப்பட்டது. அதற்காக அநேகமான புதிய கவிஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். எனினும் அந்த நன்றியானது, மனிதர்கள் உணர்ந்து கொள்ள, அவர்களுக்கு விளங்கும்படி கவிதை எழுதியவர்களுக்கு மாத்திரமே. மக்களது அபிலாசைகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை விடுவிக்கக் கூடிய புதிய இலக்குகளைக் குறித்து அல்லது அதற்கான வழிகள் உள்ளடங்கிய படைப்புக்களை எழுதுங்கள். அதுதான் கவிஞர்களுடைய பொறுப்பு. முன்னெப்போதையும் விட இன்று கவிதையானது உயிர்ப்போடு எழுந்து நிற்கிறது. இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென நினைக்கிறேன்.


கேள்வி - கலாசாரம், மதம், சாதி மற்றும் பாலினம் போன்ற காரணங்களினால் கவிஞர்கள் சுதந்திரமாக தாம் நினைத்ததையெல்லாம் எழுத முடியாத நிலைமை காணப்படுகிறது அல்லவா? கவிஞர்கள் சுய தணிக்கை எனும் வரையறைக்குள்ளிருந்தே தமது படைப்புக்களை வெளியிட வேண்டியிருக்கிறதல்லவா தற்காலத்தில்?


பதில் - கவிதையானது கலாசாரத்துக்கோ பண்பாட்டுக்கோ இணங்க வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. எதை எழுதியேனும், இம் மக்களை அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் படுகுழியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லப்படும் அளவுக்கு கவிதைகளில் எழுதப்படுவதில்லையே?!

     எனது கவிதைகள் பச்சை பச்சையான வெளிப்படையான கவிதைகள். காத்திரமான இலக்கியப் புனைவுகளுடனான கவிதைகளை என்னால் எழுத முடியாமலில்லை. நான் அவ்வாறான கவிதைகளையும் எழுதியிருக்கிறேன். அவ்வாறான கவிதை பிரசுரமான நாளில், என்னைச் சுற்றியிருக்கும் எளிய மனிதர்கள் ஏனைய நாட்களைப் போலல்லாது என்னை விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். அக் கவிதை அவர்களுக்குப் புரியவில்லை என்பதே காரணம். அவ்வாறான அனுபவங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறேன். இச் சம்பிரதாயத்தை உடைக்க அல்லது மக்களுக்குப் புரிய வைக்க பச்சையாக எழுத வேண்டும் என்பது இப்பொழுது எனக்குப் புரிந்திருக்கிறது. இது மக்கள் மீதுள்ள நேசபூர்வமான நடவடிக்கையேயன்றி, இலக்கிய ஆர்வலரின் செயற்பாடல்ல. எனக்குத் தேவையாக இருப்பதெல்லாம் எவ்வாறாயினும் துயருற்றுக் கொண்டிருக்கும் எனது மக்களை அக் கஷ்டங்களிலிருந்து மீட்பது மாத்திரமே. அதற்காகத்தான் நான் முன்நிற்கிறேன். அதனால் என்னைத் திட்டலாம், விமர்சிக்கலாம், கல்லால் அடிக்கலாம். நான் அந்தக் கல்லை எடுத்து திரும்ப உங்களை நோக்கி எறிய மாட்டேன். ஏனெனில், எனக்கென ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. எவ்வளவு கீழ்த்தரமான செயல்களையும் தாங்கிக் கொண்டு நான் அக் கடமையை செய்ய வேண்டும். அதனோடு நான் பிணைந்திருக்கிறேன். அதற்காக நான் இழப்பது எதுவாயினும், அது வாழ்க்கையாகவே இருப்பினும் சரி. நான் எனது பங்கை பூர்த்தி செய்வேன்.


கேள்வி - கவிஞர் ஒருவர் என்ற வகையில் காதலை, எப்படிப் பார்க்கிறீர்கள்?  கற்பனைவாதியாக அல்லது யதார்த்தவாதியாக?

பதில் - நான் காதலை, நேசத்தை யதார்த்தவாதியாகவே பார்க்கிறேன். நான் நேசிப்பது சதைகளையல்ல, உள்ளங்களை. நேசத்தை, பொதுவாகவே நான் வகைப்படுத்துகிறேன். ஒதுக்கப்பட்டவர்களையே நேசிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குத்தான் நேசமும், சந்தோஷமும், ஆறுதலும் மிகவும் தொலைவில் இருப்பவை. மக்கள் நேசிக்க வேண்டும். மக்கள், மக்களை யதார்த்தவாதிகளாக, உண்மையாகவே நேசிப்பார்களானால் சமூகம் இந்தளவுக்கு அசுத்தமாக இருக்கப் போவதில்லை. நான் தமிழர்களை நேசிக்கிறேன், இஸ்லாமியர்களை நேசிக்கிறேன், சிங்களவர்களை நேசிக்கிறேன். நேசத்தை வகைப்படுத்தும் ரேகை என்னிடமில்லை. என்னிடம் இருப்பது ஒரே நெஞ்சு. அதில் ஒரே ஒரு இதயம். அது எப்போதும் மாற்றமேயில்லாது உலகை நேசித்துக் கொண்டேயிருக்கிறது. விஷேடமாக ஒடுக்கப்பட்டவர்களை.

கேள்வி - பிரிவின் வேதனையையும், காதலைப் போல நேசிக்க கவிஞர் ஒருவரால் முடியுமா?

பதில் - மிகவும் உணர்வுபூர்வமான கேள்வியொன்றை நீங்கள் கேட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மிக ஆழமான கேள்வி. என்னை நார் நாராய்க் கிழிக்கும் கேள்வியொன்றை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் பிரிவின் வேதனையையே காதலைப் போல நேசிக்கும் ஒருவன். எனது மனைவி என்னை விட்டுச் சென்று வெகு காலமாகிறது. இப்பொழுது அவள் அவளது கூட்டை உறுதியாகவும், பலமாகவும் கட்டியெழுப்பியிருக்கக் கூடும். இவ்வாறாக யதார்த்த வாழ்வியலில் அவள் ஒரு முடிவைத் தேடிக் கொண்டு விட்டாள். நான் அந்த முடிவுக்கு எதிராக நிற்கப் போவதில்லை. நான் அவளை வெறுக்கப் போவதில்லை. காரணம் நான் அவளை நேசிக்கிறேன் என்பதனால். எப்போதாவது ஒரு நாள், அவள் ஏழெட்டுக் குழந்தைகளோடு, கர்ப்பிணியாகத் திரும்பி வந்தால் கூட நான் அவளை புதிய மணப்பெண் போலவே ஏற்றுக் கொள்வேன். நான் கவிதைகளை எழுதுபவன். உலகை நேசிப்பவன். மிகவும் உணர்வுபூர்வமானவன். எனது கவிதை அங்கேதான் இருக்கிறது. நேசத்தை வேறு எக் காரணங்களைக் கொண்டும் மதிப்பிட முடியாது. அது ஒரு உணர்வு. எனக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு பெண் மருத்துவர், அவருடன் இணைந்து வாழ வரும்படி விஸா அனுப்பியிருந்தார். இருபத்தெட்டு வயதான இளம் பெண்ணொருத்தி. எனக்கு நாற்பத்தெட்டு வயதுகளாகின்றன. யதார்த்தத்தை மறந்து, நேசத்தில் கிறங்கி அப்படிச் சென்று விட நான் குருடனில்லை. நான் என் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமிருக்கின்றன. வேதனையையும் நேசிக்கும் எமது கவிதைகள் உங்களை நோகடிக்கின்றன அல்லவா? நாங்கள் வேதனையையும் தளராது நேசிக்கிறோம். நாங்கள் தளர வேண்டியதில்லை. ஏனெனில் நாங்கள் போர்க்களத்துக்கு செல்லவிருக்கும் மக்கள். நெஞ்சு தளர்ந்தால் போர்க் கொடி கீழே விழுந்துவிடும்.


கேள்வி - நாம் காதலிலிருந்து அரசியலின் பக்கம் பார்வையைச் செலுத்துவோம். நீங்கள் இடதுசாரி அரசியலோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். தற்கால இலங்கையில் இடதுசாரி அரசியலானது பலவீனமானதாக இருக்கிறது. இந் நிலைப்பாட்டில் நீங்கள் எவ்விடத்தில் இருக்கிறீர்கள்?

பதில் - நீங்கள் கூறுவதைப் போல இடதுசாரி செயற்பாடுகள் ஓரளவு பின் தங்கியிருக்கக் கூடும். அந்தளவுக்கு முதலாளித்துவ பொருளாதார முறைமையானது மக்களை விழுங்கியிருக்கிறது. நாங்கள் புதியதொரு இலக்கைத் தேட வேண்டியிருக்கிறது. அது ஆயுதங்களைக் கொண்டல்ல. கலைகளின் மூலமாக. எழுத்து உள்ளடங்கிய கலை என்பது மிகவும் அழகான, உணர்வுபூர்வமான ஒன்று. எமக்கு, எமது நாட்டு மக்களை அடிப்படையிலிருந்தே உணர வேண்டியிருக்கிறது. அவர்கள் இயந்திரங்களைப் போலவே செயற்படுகிறார்கள். வேலை செய்கிறார்கள். வீட்டுக்கு வருகிறார்கள். உறங்குகிறார்கள். வாசிக்கக் கூட அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. மானிடத் தொடர்பாடல்கள் விலகிச் சென்று விட்டிருக்கின்றன. இவ்வாறாக முதலாளித்துவ ஆதிக்கமானது அவர்களைக் கொன்று போட்டாயிற்று. இடதுசாரி அரசியலுக்கு இருக்கும் பொறுப்புக்கள் அநேகம். இப்படி வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கலாகாது. நிஜமான கலைஞர்களுக்கு, தம்மை நேசிக்கும் மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலுமா? என்னால் முடியாது. மக்களுக்கு இவ் விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். இடதுசாரி அரசியலானது, இன்னும் உறுதியாக நிலைப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிலும் பயனற்றுப் போய்விடும். பார்வையற்ற, செவிட்டூமை மக்களாக இலங்கை அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். இப்போது கூட, தற்போதுள்ள நிலைமைக்கு நாம்தான் பொறுப்பு கூற வேண்டும். இடதுசாரி அரசியலானது, உயிர்பெற்று எழ வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நான் இன்றும் இருக்கிறேன்.


கேள்வி - இலங்கை மக்களில் அநேகமானோர், தற்காலத்திலும் கூட மீசை வைத்திருக்கும், கம்பீரமான ஒருவரையே நாட்டின் ஜனாதிபதியாக ஆக்க முன்வருகிறார்கள். அரச ஆட்சியிலுள்ள வெற்றி, தோல்வி எவ்வாறாயினும், மக்களுக்குத் தேவையாக இருப்பது பார்வைக்கு அழகான ஒரு உடற்கட்டுள்ள உருவமும், சர்வாதிகார ஆட்சி முறைமையும்தான். ஏன் மக்கள் அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, ஜனநாயகவாத ஆட்சியமைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

பதில் - அரசியல் ரீதியில் இலங்கை மக்கள் விழிப்புணர்வுடையவர்களாக இல்லை. அதனை நான் புதிதாக விபரிக்க வேண்டியதில்லை. திரை நட்சத்திரங்களும், கொலைகாரர்களும், மாட்டுத் திருடர்களும் தேர்தலில் நின்ற தேசமிது. சற்றும் சிந்தித்துப் பார்க்காது அவர்கள் அனைவருக்குமே தேர்தலில் தம் வாக்குகளையிட்ட மக்கள் உள்ள தேசமிது. அதனால்தான் நான் ஆரம்பத்திலேயே மக்களை விழிப்புணர்வுக்குள்ளாக்க வேண்டுமெனக் கூறினேன். அதைத்தான் இடதுசாரி அரசியல் செயற்பாடுகள் செய்ய வேண்டும். இலங்கையில் வாக்காளர்கள் பரம்பரையாக வருபவர்கள். பெற்றோர் ஒரு கட்சியைச் சார்ந்தவராக இருந்தால், அவர்களது மகனும், மகளும் கூட அதே கட்சி. தாத்தாவும், பாட்டியும் ஒரு கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களது வழித் தோன்றல்களான கடைசிப் பேரனும், பேத்தியும் கூட அதே கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஒழுங்கான ஆட்சிமுறைக்கு, நேர்மையான அரசியல்வாதிக்கு இப் போட்டியில் இடமில்லை. இந் நிலைப்பாடானது கேவலமானதும், பரிதாபத்துக்குரியதுமாகும். இந் நிலைமையை மாற்ற மக்களை அறிவுறுத்த வேண்டும். எழுத்து உள்ளிட்ட கலைகளால் அதனைச் செய்ய முடியும். கலைஞர்களும், அறிஞர்களும் இதனை உணர வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு எதிர்காலமென்ற ஒன்று இல்லை.


கேள்வி - இனவாதம் எனப்படுவது தற்கால அரசியலில் தவிர்க்கவே இயலாதவொரு அங்கம் என்பது இன்று இலங்கையில் நடைபெறும் சம்பவங்களினூடாகத் தெளிவாகிறது. ஒரு புறத்தில் மக்கள் இனவாத உணர்வுகளோடு கையை ஓங்குகிறார்கள். மறுபுறத்தில் இன்னுமொரு பிரிவினர், அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டி கையை உயர்த்துகிறார்கள். இந் நிலைமையில் அமைதி என்பது இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?

பதில் -தமிழனேயானாலும், அவனொரு வீரனென்றால் ஆட்சியைக் கொடுத்து விடுஎன நந்தா அக்கா கூறியதை நான் கேட்டிருக்கிறேன். நான் மக்களின் மத்தியிலிருந்து கொண்டு மக்களுக்காக கவிதைகளை எழுதுபவன். அம் மக்களை நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. தமிழர், சிங்களவர், முஸ்லிம், பறங்கியர் என எல்லோருமே ஒரே சதையும், குருதியும் கொண்ட மக்கள். நான் இதையே செறிவாகச் சொன்னால் மக்களுக்குப் புரியாது. எமது இரத்தம் ஒரே நிறம். நாங்கள் இலங்கையர்கள். நாங்கள் ஒருவரையொருவர் கொன்றழிக்கத் தேவையில்லை. நாங்கள் செத்துப் போய்விடுவோம். ஆட்சியாளர்கள் மது அருந்திக் கொண்டாடுவார்கள். நாங்கள் அவ்வாறு ஏமாறத் தேவையில்லை.


     சிங்கள, தமிழ், முஸ்லிம் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது ஜீவிதங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். எமக்குத் தேவையான தீர்வு தமிழ் மக்களிடம் இருக்கக் கூடும். முஸ்லிம் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களுக்காக நாம் ஒன்றிணையலாம். தமிழ், முஸ்லிம் மக்கள் எமது சகோதர மனிதர்கள். அவர்களது இதயத் துடிப்பும் எம்மைப் போன்றதேதான். எம் அனைவரதும் நெஞ்சத்திலிருந்து எழும் பறையோசைக்கு நாம் பதில் தேட வேண்டும். எமக்கு அமைதி அவசியமானது. ஏனைய இனத்தவரின் அமைதியான வாழ்க்கைக்கு நாம்தான் பொறுப்பு கூற வேண்டும். அவர்கள் யாருமில்லாமல் வாழ்ந்து விட என்னால் முடியாது. காரணம் நான் இவர்கள் அனைவருக்காகவும் கவிதைகளை எழுதுபவன். தனது இனத்துக்காகப் போராடுபவன் மாவீரன். அப்படிப் பார்க்கையில் எனக்கு தோழர் விஜேவீரவும் மாவீரன்தான். போராளி பிரபாகரனும் மாவீரன்தான். கவிதைகள் எழுதும் ஒருவனால் இனவாதியாக ஆக முடியாது. ஜாதிபேதம் பார்க்க முடியாது. அவன் அனைத்து மக்களுக்காகவும் முன் நிற்க வேண்டியவன்.

mrishanshareef@gmail.com
--------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - காலச்சுவடு (ஆகஸ்ட் 2017) இதழ், இனியொரு இதழ், 'பிரதிபிம்பம்' தினகரன் வாரமஞ்சரி