Wednesday, September 3, 2014

'With You, Without You' - திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்



            பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

            யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

            இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக  2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

கேள்வி - 'With You, Without You' திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் 'A Gentle Creature' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

பதில் - வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள்  கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

            இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய 'ஆண்மையை' விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

            பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர்  வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

கேள்வி - திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து  கிடைத்தது?

பதில் - இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

கேள்வி - இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

பதில் - இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

கேள்வி - இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

கேள்வி - இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

பதில் - திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

கேள்வி - நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?


பதில் - இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

கேள்வி - இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

பதில் - எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

            அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம்  ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.


- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ், ஜூலை - 2014
# வல்லமை இதழ் 
# இனியொரு இதழ்

Monday, March 3, 2014

எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்



எழுத்தாளர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களால் 
'வல்லமை 2014' சிறப்புப் பரிசினை வென்ற எனது புத்தக மதிப்புரை


நூல்  - சயாம் மரண ரயில் (நாவல்)
ஆசிரியர் - சண்முகம்
பக்கம்:  304  
விலை: ரூ. 150/-
வெளியீடு: தமிழோசை பதிப்பகம்
___________________________________________________________________________________________     
       தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.
           இன்றைய காலத்தில் 'சயாம் - மரண ரயில் பாதை'யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் 'சயாம் மரண ரயில்' நாவல்.

            பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.


            ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. 'சயாம் மரண ரயில்' - எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வல்லமை இதழ்
# அம்ருதா இதழ்
# எதுவரை
# இனியொரு

Wednesday, January 15, 2014

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'

பெண்மனதின் அரூப யுத்தம் 'அம்மாவின் ரகசியம்'
- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்

குறுநாவல் - அம்மாவின் ரகசியம்
ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - ரூ 55

            மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.

            'அம்மாவின் ரகசியம்' எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள 'உடவளவ' எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான 'ஜனதா விமுக்தி பெரமுன'விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.

            வறிய குடும்பமொன்றில் பிறந்த முத்துலதா, அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் உதயசிறியை திருமணம் செய்து கொள்கிறாள். முத்துலதா, உதயசிறியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வருவதற்கு, முத்துலதாவின் தாய் பேபிநோனா, அவளை ஒரு விளக்குமாறு கட்டை உடையும்வரை அடிக்க வேண்டியிருந்தது. பேபிநோனாவிற்கு, தன் மகளின் வாழ்க்கையும், தன் வாழ்க்கைபோல ஆகிவிடக்கூடாது எனும் அக்கறை. பாலம் கட்ட வந்தாலும், படம் வரைய வந்தாலும் ஊர்க் குமரிகளின் வாழ்க்கைகள் பல அவ்வாறு வருபவர்களிடம் பலியாகத் தவறுவது இல்லை என்பதை பேபிநோனா அனுபவம் வழி அறிந்திருக்கிறாள். கிராமங்களில் தம் காமத்தைத் தணிக்கத் தவறாத, நகர்ப்புற அரச உத்தியோகஸ்தர்களின் இந்தப் பண்பாட்டை அந்த ஒரு வரியிலேயே ஆழமாக பதித்திருக்கிறார் கதாசிரியை சுநேத்ரா ராஜகருணாநாயக.

            'உடவளவ' அமைதியான ஒரு கிராமம். சேனைப்பயிர்ச் செய்கை, இரத்தினச் சுரங்கங்களில் கூலி வேலை போன்றவற்றில் வறிய குடும்ப ஆண்கள் சிறுவயது முதலே இறங்கிவிடுகிறார்கள். பெண்கள் வசதி படைத்த வீடுகளில் பணிப்பெண்களாகவோ அல்லது தெருவோர உணவுக் கடைகளை நடத்துபவர்களாகவோ தம் வாழ்க்கைகளைக் கொண்டு செல்கிறார்கள். ஆறு கதிரைகளும், ஒரு மேசையும், ஒரு கண்ணாடி அலுமாரியும் எல்லாப் பெண்களினதும் கனவுகளிலும் இருக்கின்றன என்பதன் வழி அந்த அடித்தட்டு வர்க்கப் பெண்களின் கனவுகளின் உச்சம் என்ன என்பதை சுநேத்ரா தெளிவாக உணர்த்தி விடுகிறார். முத்துலதாவிற்குள்ளும் இக் கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குகிறாள். தான் தைத்துச் சம்பாதித்துச் சேகரித்த பணத்தில் அவள் மேலும் தையல் இயந்திரங்கள் வாங்க ஆசைப்படுகிறாள். தன் குடும்பத்தின் நிலை மாறவேண்டும் என எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் இலட்சியம் அவளிற்குள்ளும் உண்டு. அதிக பணம் கிடைக்கும் என தொப்பிகள்கூட தைத்து  விற்கிறாள். ஆனால், அவளது வாழ்க்கை நிலையில் பெரிதான மாற்றங்கள் எதையும் அவள் கண்டுவிடுவது இல்லை. முத்துலதாவின் கணவன் உதயசிறி கடினமான வேலைகளை செய்து பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நல்ல கணவன். நாட்டின் அரசியல் சூழல் குறித்த செய்திகளை வாசிக்கும் ஆர்வம் அவனுக்கு உண்டு. தலையில்லா உடல்கள் வீதிகளில் வீசப்படுவதும், டயர் அடுக்குகளினுள் மனிதர்கள் எரிக்கப்படுவதும், ஆறுகளில் உயிரற்ற சடலங்கள் மிதந்து வருவதும் என நாட்டின் நிலைமை சற்று பதட்டமாக இருக்கும் ஒரு காலத்திலேயே கதை நிகழ்கிறது. கணவன் உதயசிறியின் அரசியல் ஆர்வம் செய்திகளை வாசிப்பதுடன் திருப்தியுற்று விடும். அவன் எல்லை அவ்வளவே. பொலிஸைக் கண்டால்கூட விலகியே செல்பவன் அவன். ஆனால், உதயசிறி வீட்டில் இல்லாத ஒரு நாளில் அவனது தம்பியைத் தேடி அவன் வீட்டிற்கு இராணுவத்தினர் வருகிறார்கள். அந்தப் பொழுதில் இருந்து முத்துலதாவின் வாழ்க்கையானது அதன் வழமைநிலையை இழந்து போகிறது. தன் கணவனிற்குப் பதிலாக இராணுவ முகாம் செல்லும் முத்துலதா அங்கிருந்து திரும்புகையில் தன்னுடன் கூடவே ஒரு ரகசியத்தையும் எடுத்து வருபவள் ஆகிறாள்.

            முத்துலதா, உதயசிறி, பேபிநோனா போன்ற பாத்திரங்கள் வழியாக உடவளவயின் அன்றைய நிலையை வாசகனிடம் ஆர்ப்பாட்டங்களின்றி எடுத்துச் சொல்கிறார் சுநேத்ரா. அடித்தட்டு மக்கள், அரசாங்க ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், அதிகாரமிக்கவர்கள் ஆகியவர்களினூடாக நகரும் கதையானது, அடித்தட்டு மக்களின் குரலிலேயே பேசப்படுகிறது. இதன் பின்னணியில் அம் மக்களை திகில் அடையச் செய்து கொண்டிருக்கும் நாட்டின் நிலையும் கூடவே வருகிறது. தன் கணவனை இழந்த பின்பாகவும்கூட தன் மனதில் வாழும் அந்த ரகசியத்துடன் முத்துலதா தன் வாழ்க்கையை மாற்றப் போராடுபவளாகவே இருக்கிறாள். முத்துலதா தன் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்பதை வாழ்வின் துடிப்பாக கொண்ட பெண். இராணுவத்தினரை வெட்டிப் போட வேண்டும் எனும் கோபம் குடிவந்து அமர்ந்த பெண். இலங்கையில் வாழும் ஒரு அப்பாவிப் பெண்ணை இன மத பேதமின்றி அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. எல்லைகளைத் தாண்டி, உலகில் வாழ்ந்திருக்கும் வறிய அப்பாவி பெண்களையும் அவளால் பிரதிநிதித்துவம் செய்ய முடிகிறது. தம் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் எனும் முனைப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் வாழும் நிலை மாறும்வரையில் நாம் அவதானிப்பதே இல்லை.

            முத்துலதா, வீதியோர உணவகத்தினை நடாத்துகிறாள். அயல்நாடுகள் சென்று பணிப்பெண்ணாக பணிபுரிகிறாள். துபாய், சைப்பிரஸ், பிரான்ஸ், சீனா என அவள் வாழ் அனுபவங்கள் நீள்கின்றன. ஆனால் அவள் மனதில் உள்ள ரகசியம் ரகசியமாகவே இருக்கிறது. அதை அவள் யாரிடமும் கூறியது இல்லை. அயல்நாட்டில் பணிபுரிந்து, அவள் தனது வீட்டை அழகானதாகவும், உடவளவயிலேயே அற்புதமான பொருட்கள் நிறைந்ததாகவும் நிரப்பி தன் வாழ்க்கை நிலையை மாற்றியமைத்துவிட்ட பொழுதிலும் கூட அவளது ரகசியம் அவளிடமே இருக்கிறது. தனது வீடு எப்போதும் சுத்தமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் முத்துலதா முனைப்பாக இருக்கிறாள். சேற்றுக்காலுடன் தன் வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்கிறாள். வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்து தன் முற்றத்தை யாரும் அசிங்கப்படுத்த வேண்டாம் என்கிறாள். அவள் அகத்தில் வாழ்ந்திருக்கும் ரகசியத்திற்கு எதிரான தூய்மை கொண்டதாக முத்துலதா தன் புறத்தை பேணுவதில் அக்கறையாக இருக்கிறாள். தனித்து வாழும் பெண்கள் உள்ள ஒரு வீட்டில் அவள் ரகசியம் அவர்களை உயிருடன் புசிக்க விரும்பும் ஒரு அரக்கனாக  இருக்க முயல்கிறது. அவள் பிறர்க்கு விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவளின் வசதியான வாழ்க்கை நிலையும் ஊர் மக்களை துபாய்க்காரனிற்கும், சீனாக்காரனிற்கும் தூக்கிக் கொடுத்து கொண்டு வந்து கொட்டிய சொத்துதானே இது எனப் பேச வைக்கிறது. முத்துலதா அசையவில்லை. தன் மனதில் சுமையாக ஏறி அமர்ந்திருக்கும் ரகசியத்தை வெளியில் உரைத்தாள் இல்லை. ஆனாலும் ஒருநாள் முத்துலதா அழுத்திப் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவளாகவே வெளியே சொல்லும் சந்தர்ப்பம் அவளைத் தேடி தானாகவே வந்து சேர்கிறது.

            அலங்காரங்கள் ஏதுமற்ற, யதார்த்தம் நிறைந்த, எளிமையான எழுத்துக்கள்தான் சுநேத்ராவின் பலம். அவர் வாசகனை புதிர் நிறைந்த வரிகளால் வியக்க வைக்க முயல்வது இல்லை. மாறாக எளிமையின் ஆச்சர்யத்தில் பங்குகொள்ளச் செய்கிறார். இந்த எளிமையான கதையாடலே வாசகனை தயக்கமின்றி அவர் எழுத்துக்களுடன் இணக்கமாக்குகிறது. கதையை மொழிபெயர்த்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பும் கதையை சரளமான தமிழ் நடையில் செவ்வனே மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு துன்பத்தை சுற்றி நெய்யப்படும் அழுவாச்சி காவியமாகவோ, அல்லது ஒப்பாரி சங்கீதமாகவோ கதையை உருவாக்காது, மிகையுணர்ச்சிகளின் உதவிகளை நாடாது, பரபரப்புக்களை விலக்கி, மனித மனங்களின் இயக்கங்களுடனும், வாழ்வின் நிகழ்வுகளுடனும், சம்பவங்களுடனும் இயல்பான ஓட்டத்தில் பயணிக்கிறது சுநேத்ராவின் குறுநாவல்.

            அயல்வாழ் மக்களது வாழ்க்கைகளின் ஒரு சித்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை சுநேத்ராவின் கதை எமக்கு வழங்குகிறது. சுநேத்ரா சிங்கள மொழியில் பிரபலமான படைப்பாளி. பல தளங்களிலும் இயங்குபவர். அவரது குறுநாவலான இந்த 'அம்மாவின் ரகசிய'த்தின் மிக முக்கியமான தருணம் அதன் முடிவில் முத்துலதா கூறுவதாக அமையும் வரிகளில் இருக்கிறது. "இப்ப அழ வேணாம். அந்த நாட்கள்ல எனக்கு அழத் தேவையிருந்தது ஆனாலும் அழ முடியாமப் போச்சு. எனக்கு செத்துபோக வேண்டியிருந்தது ஆனாலும் நான் வாழ்ந்தேன்" இவ்வரிகளைக் கூறி முடித்த பின்பும்கூட வாழ்க்கையிடமிருந்து அற்புதங்கள் எதையும் எதிர்பார்த்துக் காத்திராத ஒரு பெண்ணாகவே முத்துலதா புன்னகைக்கிறாள். கதையைப் படித்து வரும் வாசகனை அதில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தம் சற்று உலுக்கிப் பார்க்கவே முயல்கிறது. இந்த உலகில் எத்தனை பெண்கள் இதே போன்ற வரிகளை தம் வாழ்வில் சொல்லியிருப்பார்கள், எத்தனை பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எத்தனை பெண்கள் சொல்லப் போகிறார்கள். இந்தப் புள்ளியில் உலகின் பெண்கள் அனைவரையும் சுநேத்ரா தொட்டு விடுகிறார்.

            பெண்கள், வாழ்வு தரும் அற்புதங்களிற்காக காத்திருப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தம் மனதின் ரகசியங்களோடு, அரூப யுத்தங்களை ஓயாது நிகழ்த்தியவாறே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரகசியம் தன்னை அடையாளம் காட்டும்போது பலவீனமாகி விடுகிறது. ஆனால் அதை காலம்காலமாக சுமந்து வந்தவர்கள் கனமற்றவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு, வாழ்க்கையின் சொற்கள் அவர்களிடம் தயக்கமின்றி பேச ஆரம்பிக்கின்றன வசந்தத்தின் பூக்களைப்போல.

நன்றி
எழுத்தாளர் ஷங்கர் ஆர்மன்ட்
# காலச்சுவடு இதழ் - 168, டிசம்பர் - 2013
# பதிவுகள்
# திண்ணை

Wednesday, January 1, 2014

ரகசியம் பேசுதல்

 ‘அம்மாவின் ரகசியம் நாவலுக்கான முன்னுரை
எழுத்தாளர் அம்பை

குறுநாவல் - அம்மாவின் ரகசியம்
ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - ரூ 55

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள்,  ஏன்,  எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.

இந்தக் குறுநாவலை எழுதியிருக்கும் சுனேத்ரா ராஜகருணாநாயக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஓர் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், ஊடகவியலாளர் மற்றும் இதழாளர். இதுவரை பல உயர் விருதுகளைப் பெற்றிருப்பவர். 2009இல் ஸ்வர்ண புஸ்தக விருதும் 2010இல் தன் புத்ததாசி நாவலுக்காக All Ceylon Buddhist Congress  விருதும் இவர் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

மிகச் சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் சுனேத்ரா. இடதுசாரி அரசியல் பற்றிய புரிதலும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனப்பாங்கும் உள்ள குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த சுனேத்ராவுக்கு எழுதுவது என்பது மூச்சு விடுவதைப் போல எளிதாக இருந்தது. தான் கட்டாயம் ஒரு நாவலாவது எழுதுவோம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்குச் சிறு வயதிலிருந்தே. 1999இல் இவரின் முதல் நாவல் வெளிவந்து மூன்று மாதங்களிலேயே விற்றுப்போனது. ஆனால் ஒரு விமர்சனம் கூட வரவில்லை. அதற்காக அவர் முயலவில்லை. தொலைக்காட்சியிலும், நாடகத் துறையிலும், பத்திரிகைகளிலும் இவர் பல முறை செயலாற்ற நேர்ந்தபோதும் எந்தவித சமரசங்களுக்கும் உடன்பட மறுத்தே செயலாற்றினார். தொலைக்காட்சிகளில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் வெறும் சமையல் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பேசும் ஒன்றாக மாற்றினார். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அரசியல் குறித்த விமர்சனங்களை வைக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்.

பல கடுமையான, ஆபாசமான  விமர்சனங்களை இவர் எழுத்து எதிர்கொள்ள நேரிட்டது. அரசுக்குச் சொந்தமான ஆங்கிலச் செய்தித்தாள் இவரது நாவல் பொது புருஷயாவை கிட்டத்தட்ட ஓராண்டு தொடர்ந்து தாக்கி எழுதியது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசைக் கவிழ்க்க ஜனதா விமுக்தி பெராமுனா முயன்றபோது பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1971இலும் பிறகு எண்பதுகளின் இறுதியிலும்  ஜேவிபி இயக்கம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் வீதிகளில் மரித்தனர். பள்ளி மாணவர்கள் கூட கடத்தப்பட்டனர். ஜேவிபி இயக்கத்தினர் புனிதர்கள் இல்லை; அவர்களும் அரசியல் கொள்கையில் மாறுபட்டவர்களை, ஏழைகளை,  இரக்கமில்லாமல் கொன்றார்கள். இந்த நாவலின் களம் சிற்றூர் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் அலைக்கழிக்கப்பட்ட ஏழைச் சிங்களக்  குடும்பம். அதிலுள்ள ஒரு பெண் மனத்தில் புதைத்திருக்கும் ரகசியம் ஒன்று கடைசியில் வெளியே வருகிறது.

வெகு குறைவான விவரணைகள். சொற்களை விரயமாக்காத நடை. குறியீடுகளும் ஒப்புவமையும் கிடையாது. மிகை இல்லாத, மிகக் குறைந்த அளவுத் தளத்தில் உள்ள minimalist ஓவியம் போல் இருக்கிறது நாவல்.

சுனேத்ராவின் படைப்புலகை எட்டிப் பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிபெயர்ப்பு. இதன் பின் அப் படைப்புலகின் பெருஞ் சன்னல்களும் கதவுகளும் திறக்கப்படும் வாய்ப்பு உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர். இத்தகைய படைப்பு ஒன்றை அதன் எல்லா அம்சங்களும் ஊறு படாமல் மொழியாக்கம் செய்வது மிகக் கடினமான வேலை. அதை ரிஷான் கவிஞராக இருப்பதால் மிகவும் செம்மையாகச் செய்திருக்கிறார். ஒரு வேளை இது தமிழில்தான் எழுதப்பட்டதோ என்று ஐயப்பட வைக்கும் மொழியாக்கம்.

சுனேத்ராவின் மற்ற படைப்புகளையும் ரிஷான் தமிழுலகுக்குக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரிஷான் இந்த மொழியாக்கம் மூலம். ஒரு பெருங் காற்று இந்த நாவல். இது அடித்து ஓய்ந்ததும் புயலும் வெள்ளமும் கூடவே மந்தமாருதங்களும் வரும் என்று எதிர்பார்ப்போம். அவற்றையும் ரிஷான் தன் வசப்படுத்திக்கொண்டு நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்.

நன்றி
# எழுத்தாளர் அம்பை
# காலச்சுவடு 
# பதிவுகள்
# திண்ணை

Saturday, March 2, 2013

'நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்


            விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.

            "ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்பது கூடத் தெரியாது."

            "ஆனா அவர் என்னோட தந்தைன்னு எனக்குத் தெரியும்."

            இவ்வாறாக நீதிபதியின் முன்னால் வாதிட்டுக் கொள்ளும் தம்பதியினது விவாகரத்து குறித்த விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான காரணம் வலிதற்றதெனக் கூறி அவ் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது நீதிமன்றம். அதற்கு மேலும் கணவன், மகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி தனது பெற்றோரிடம் சென்று விடுகிறாள். அதற்கு முன்பு, கணவன் வங்கி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்றதன் பின்னால் வீட்டில் தனித்திருக்கும் தனது வயோதிப மாமனாரைப் பார்த்துக் கொள்வது யாரென்ற கவலையில் மனைவி, ஒரு பெண்ணை அதற்காக ஏற்பாடு செய்கிறாள். அதன் பின்னர் அக் குடும்பத்தில் நடந்தவை என்ன என்பதுதான் படத்தின் கதை.

            இஸ்ரேலை ஆட்டம் காண வைத்து, இஸ்ரேலின் திரைப்படமான 'ஃபுட் நோட்(Footnote)"டைத் தோற்கடித்து, இந்த வருடத்துக்கான 84 ஆவது ஒஸ்கார் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினை வென்றெடுத்திருக்கிறது "எ ஸெபரேஷன் - A Separation (பிரிவொன்று)" எனும் இந்த ஈரான் திரைப்படம். ஈரானிய, இஸ்லாமியப் பண்பாடுகளை விளக்கும் இத் திரைப்படமானது ஒஸ்கார் விருதினை வென்று தனது இருப்பை அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் உரக்கச் சொல்லியிருக்கிறது.

            படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இணைந்து படத்தினை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்கள். நாம் பார்த்துப் பழகியிருக்கும் சினிமாக்களில் மிகைத்திருக்கும் சினிமாத்தனங்களுக்கு மத்தியில் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாத காட்சியமைப்புக்களும், நடிப்பும், யதார்த்தமும் அதன் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது.

            தனது கணவன் கடனாளியான நிலையில், அன்றாட வாழ்க்கையைக் கழிக்கச் சிரமப்படும் ஏழைப் பெண் ராஸியா தனது கணவனுக்குத் தெரியாமல் நாளாந்த வருமானத்துக்காக தனது ஆரம்பப் பாடசாலை செல்லும் மகளுடன்  அம் முதியவரைக் கவனித்துக் கொள்ளவென வந்து செல்கிறாள். இறைபக்தி மிக்க அவள், பகல்வேளையில் அவ் வீட்டுக்கு வந்து முதியவருக்கு பணிவிடை செய்துவிட்டு, அவ் வீட்டவர்கள் வந்ததும், தனக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புகிறாள். ஒரு நாள், அவள் வீட்டினைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில், முதியவர் வீதிக்குச் சென்று விடுகிறார். வாகன நெருக்கடிக்கிடையே வீதியைக் கடக்கும் முதியவரைக் காப்பாற்ற அவள் ஓடுகிறாள்.

            அடுத்த நாள் வங்கிக்குச் சென்ற நாதிரும், பாடசாலை சென்ற அவனது மகள் தேமேயும் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தால் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. சாவி வைக்குமிடத்தில் சாவி இல்லை. தன்னிடமிருந்த திறப்பைக் கொண்டு கதவைத் திறக்கும் கணவன், உள்ளே சென்று பார்க்கிறான். மகள் அலறுகிறாள். அவனது முதிய தந்தை கட்டிலருகே விழுந்து பேச்சு மூச்சற்றிருக்கிறார். அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. திகைத்துப் போகின்றனர் கணவனும் மகளும். முதலுதவிகள் செய்து தந்தையைக் காப்பாற்றுகிறான்  கணவன். கோபமும், கழிவிரக்கமும், அழுகையும் அவனிடம் மிகைத்திருக்கும் நிலையில் ராஸியா, தனது மகளுடன் வீட்டுக்கு வருகிறாள். தனது தந்தையை அநாதரவான நிலையில், கைகளைக் கட்டித் தனியாக விட்டுச் சென்றதற்கு ராஸியாவைத் திட்டி வெளியே தள்ளுகிறான் கணவன். தனது பணத்தைத் திருடியதாகவும் அவள் மீது குற்றம் சுமத்துகிறான். அவள் வாசலிலிருந்து கதறுகிறாள். தனது அன்றைய ஊதியத்தைத் தருமாறு கெஞ்சுகிறாள். திடீரென ராஸியாவும் அவளது மகளும் கதறியழுவதைக் கேட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் தேமே. படிகளில் விழுந்து எழும்பும் ராஸியாவைக் காண்கிறாள் அவள்.

            அதன்பிறகுதான் அக் குடும்பத்தில் பாரிய சிக்கல்கள் எழுகின்றன. ராஸியா ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள் என்பதுவும், அந்தச் சம்பவத்தில் அவளது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என்பதுவும் அக் கணவனைக் கொலைகாரனெனக் குற்றம்சாட்டி அவனைக் கைது செய்ய ஏதுவாக அமைகிறது. அதன் பின்னர் நடந்தவை என்ன? அக் கணவன், மனைவி விவாகரத்து வழக்கிற்கு என்னவானது? மகள் தேமே, முதிய தந்தை ஆகியோரின் நிலைமை என்ன? என்பவற்றை உணர்வுபூர்வமாக இத் திரைப்படம் சித்தரிக்கிறது.

            நடிப்பென்றே சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் ஆழமாக, கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் எல்லா நடிகர்களும். பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பேமென் மோடி, திரைக்கதையாசிரியராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியவர். இத் திரைப்படத்தின் இயக்குனரான அஸ்கர் ஃபர்ஹதியின் திரைப்படமான 'அபௌட் எல்லெ(About Elle)'யில் 2009இல் அறிமுகமானவர். இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதினை வென்றிருக்கிறார்.

            கணவனோடு வாதிடும்போதும், கணவனுக்காக வாதிடும்போதும் மிகச் சிறப்பாகத் தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை லைலா ஹாதமி, சிறந்த நடிகைக்கான விருதினை பல தடவைகள் வென்றவர். இவர்களது மகளாக இயக்குனரின் சொந்த மகளான ஸரீனா ஃபர்ஹதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அழுகையையும், கவலையையும் உள்ளடக்கியபடி இவர் துயருரும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமானது.

            கர்ப்பிணியாக வீட்டு வேலைகள் செய்கையிலும், அபாண்டமான பழி சுமத்தப்பட்ட நிலையில் அழுகையுடன் குரலுயர்த்திப் பேசும்போதும், தனது குழந்தையை இழந்து கையறு நிலையில் தவிக்கும்போதும், கணவனுடைய கோபத்தை எதிர்கொள்ளும்போதும் என பல முகங்களைக் காட்டி நடிக்க முடிந்திருக்கிறது பணிப்பெண்ணாக நடித்திருக்கும் நடிகை சரே ஃபயத்திற்கு. ஏற்கெனவே பலமுறை சிறந்த நடிகை விருதினை வென்றிருக்கும் இவர் இத் திரைப்படத்துக்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதினையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

            பல திரைப்படங்களை இயக்கி விருதுகளை வென்று சிறந்த இயக்குனராக தனது பெயரை நிலைநாட்டியுள்ள இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதிக்கு இத் திரைப்படத்தின் மூலமும் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. எட்டு லட்சம் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படமானது, இதுவரையில் இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகளையும், டர்பன் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், ஃபஜ்ர் திரைப்பட விழாவில் ஏழு விருதுகளையும், 15 ஆவது ஈரான் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளையும், இன்னும் பல முக்கியமான திரைப்பட விழாக்கள் பலவற்றில் விருதுகள் பலவற்றையும் வென்றுள்ளது.

            படத்தின் ஒரு காட்சியில் நாதிருக்கும் ஸிமினுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உரையாடல் இப்படி இருக்கிறது.

            "இந்தப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல."
            "அவர்களுடைய குழந்தை இறந்து விட்டது."
            "என்னோட தந்தையும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் கதைக்கவேயில்ல."
            "அவர் இதுக்கு முன்னாடியும் கூடக் கதைக்கல்ல"
            "ஆனா அவர் பேசிய சில சொற்கள்ல நான் சந்தோஷப்பட்டிருக்கேன்."
            "அவர் பேசாம இருக்கிறது ஒரு குழந்தையை இழக்கிறதை விட அவ்வளவு மோசமானதா?"
            "அதுக்கு நான்தான் காரணம்னு நீங்க எப்படிப் பார்க்குறீங்க?"
            "அப்புறம் எப்படி அவ தன்னோட குழந்தையை இழந்தா?"
            "எனக்குத் தெரியாது. அவளோட கணவன் அவளுக்கு ஏதோ செய்து அதனால குழந்தையை இழந்திருக்கலாம். இப்ப என் மீது குற்றம் சுமத்துறா. அன்னிக்கு டொக்டர்கிட்ட போனதா அவளோட பிள்ளை சொல்லுது. நான் வீட்டுக்கு வரும்வரை டொக்டரிடம் போறதுக்கு அவளால ஏன் காத்திருக்க முடியாமப் போனது? இவ்வளவு வயதானவரை அவள் ஏன் கட்டிலோடு கட்டி வச்சுட்டுப் போனாள்?"

            எல்லாக் கதாபாத்திரத்தின் மீதும் அனுதாபத்தை ஏற்படுத்தி விடும்படியான படத்தின் ஒவ்வொரு காட்சியும் உரையாடல்களும் நாற்காலியின் முனைக்கு நம்மை இழுத்து வருகிறது. காந்தமாக ஈர்க்கிறது. எந்தநிலையிலும் எதுவும் நடக்கலாம் எனும் உயிர்ப்பு நிலை படம் முழுவதும் விரவியிருக்கிறது. இக் கதை இடம்பெறும் களம் ஈரானாக இருந்தபோதிலும், இக் கதையானது ஈரானுக்கு மாத்திரமானதேயல்ல. முழு உலகத்தின் எல்லா மூலைகளிலும் எக் கணத்திலும் நடைபெறக் கூடியது.

            நடுத்தர வர்க்க இஸ்லாமியக் குடும்பங்களிலெழும் சிக்கல்கள், பாசப் போராட்டங்கள், பிரிவுகள் என முக்கியமானவற்றை உள்ளடக்கி உருவாகியிருக்கும் இத் திரைப்படமானது ஈரானின் கலாசாரத்தையும், அரசியலையும் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பழமைக்கும் நவீனத்துக்கும் இடையிலான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நவீன ஈரானில் ஆண் பெண் உறவு குறித்துச் சித்தரித்துள்ளதோடு, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் மீதுள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தியுள்ளதன் மூலம் அமெரிக்காவின், முஸ்லிம்கள் மீதான தீவிரவாத எண்ணங்களையும் அசைத்துப் பார்க்கிறது. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது மார்க்கத்தின் எல்லைக்குள் நின்று உண்மையாகவும், நேர்மையாகவும் வாழப் போராடுகின்றமையை எடுத்துக் காட்டுகிறது.

            ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது ஈரான் திரைப்படமாக இது இருப்பதோடு, ஒஸ்கார் விருதினை வென்ற முதல் ஈரான் திரைப்படமாகவும் இது அமைகிறது. ஈரானிய மக்கள் இத் திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒஸ்கார் விருதினை வென்றதை விடவும், தமது எதிரி தேசமான இஸ்ரேலின் திரைப்படத்தைத் தோல்வியடையச் செய்து முதலிடத்தைப் பிடித்ததனால் ஈரானில் இத் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. பெண்ணுடலையும் ஆபாசங்களையும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்கும் நமது இந்திய மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கிடையில், துளியும் ஆபாசமற்றும் சிறந்த, உலகத்தரமான, நல்ல திரைப்படங்களைத் தர முடியுமென்று நீருபித்திருக்கிறது இந்த ஈரானியத் திரைப்படம். பல நல்ல திரைப்படங்களை உலகுக்குத் தந்திருக்கும் ஈரான், இத் திரைப்படத்தின் மூலமும் தனது படைப்பாற்றலை மீண்டும் உறுதியாக  நிலைநிறுத்தியிருக்கிறது. வரவேற்போம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# காலச்சுவடு  இதழ் - 153, செப்டம்பர், 2012
# எதுவரை இதழ் - ஜனவரி, 2013
# பேசாமொழி இதழ் - பெப்ரவரி, 2013
# உயிர்மை
# எங்கள் தேசம்
# திண்ணை
# பதிவுகள்