Thursday, October 1, 2009

அணுவளவும் பயமில்லை

கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு ஒரு போட்டி. உங்களிலிருந்து பத்து மீற்றர் தூரத்திலொரு பெரிய வட்டம் நிலத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்த நீல நிற வட்டத்துக்குள்ளே அதை விடச் சிறிய ஒரு மஞ்சள் நிற வட்டம். அந்த மஞ்சள் வட்டத்துக்குள்ளே சிவப்பு நிற மிகச் சிறிய வட்டம். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குத் தரப்படும் பொருளை கடப்பாறையால் அள்ளி, பத்து மீற்றர் தொலைவில் இருக்கும் அந்த வட்டத்தை நோக்கி எறியவேண்டும். அப் பொருள் போய் விழும் இடத்தினைப் பொறுத்து உங்கள் போட்டி ஆரம்பமாகும்.

        அப் பொருள் நீல நிறப் பெரிய வட்டத்துக்குள் விழுந்தால், ஒரு தட்டு நிறைய உங்களுக்குத் தரப்படும் முழு உணவினை சற்றும் மிச்சம் வைக்காமல் நீங்கள் உண்ணவேண்டும். மஞ்சள் நிற வட்டத்துக்குள் விழுந்தால் அதே உணவின் சிறிய பகுதியை உண்டால் போதும். சிவப்பு நிற வட்டத்துக்குள் விழுந்தால் உண்ணவே தேவையின்றி நீங்கள் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அடுத்த சுற்றுக்குப் போக உங்களுக்குச் சவாலாக இருக்கும் அந்த உணவைப்பற்றிச் சொல்லவில்லையே. அந்த உணவுதான், நான் முன்னர் சொன்ன பல நாட்களுக்கு முன்னர் செத்த விலங்கின், வீச்சத்தோடு புழு வடியும் குடல் பகுதி.

        இது போன்ற பல போட்டிகளில் தேர்ச்சி பெற்று, இச் சுற்றுக்கு ஆறு இளம்பெண்கள் வந்திருந்தார்கள். முதல் பெண் எறிந்த பொருள் நீல வட்டத்துக்குள் விழுந்தது. முகம் அஷ்டகோணலாகிப் போக, பார்க்கும் என்னையும் அறுவெறுக்க வைத்தபடி அவர் வேறு வழியின்றி அந்தக் குடல்பகுதியை உண்ணத் தொடங்கினார். உதடுகளில் தொங்கிக் கொண்டு புழுக்கள் நெளிந்தன. உணவு, தொண்டையைத் தாண்டிப் போகும் பொழுதெல்லாம் வாந்தி வருவது போலச் சத்தமிட்டார். இரு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே போட்டிக்கு வந்திருந்த சக பெண்களும் மூக்கோடு வாயையும் இறுகப் பொத்தியபடி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் சாப்பிட்டு முடித்து, நடுவரால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றாரென அறியக் கிடைத்ததும் அந்த இடத்தின் ஒரு மூலைக்குப் போய் சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுக்கத் தொடங்கினார். அடுத்த பெண் எறிந்ததும் நீல வட்டத்துக்குள் விழுந்தது. அவர் தன்னால் இதனை உண்ணமுடியாதெனச் சொல்லி போட்டியை விட்டும் விலகிப் போனார். அடுத்தடுத்த பெண்கள் எறிந்ததுவும் நீல நிற வட்டத்துக்குள் விழுந்து, அதே உணவு உண்ணக் கொடுக்கப்பட்டது. மூக்கைப் பிடித்து ஒக்காளித்தபடி உண்டவர்கள், வெற்றி அறிவிப்பு வந்ததும் உடனே போய் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அன்று மதியம் சோறு இறங்கவில்லை.

        இன்னுமொரு சுற்று இப்படி. செத்த விலங்குகளின் உடல்கள் ஒரு அறைக்குள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதன் உடலிலிருந்து விழுந்த புழுக்கள் தரையெங்கும் நெளிகின்றன. மேலாடையில்லாமல் வெற்றுடம்போடு அந்தத் தரையில் ஊர்ந்துபோகவேண்டும். பிறகு அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய உருளையான பாத்திரத்தின் அடி ஆழத்தில் இருக்கும் சாவியை எடுக்க வேண்டும். அந்த ஆழமான பாத்திரம் முழுவதுமாக இறந்த விலங்குகளின் கொழுப்புக்களாலும், கழிவுகளாலும் நிரம்பி வழிபவை. அதனுள்ளேதான் அந்தச் சாவி ஒளிந்திருக்கிறது. அதற்குள் தலையோடு மூழ்கித் தேடி சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் பின் அறையின் ஒரு மூலையில் உறைந்த பனிக்கட்டியிருக்கும் பெட்டியைத் திறக்கவேண்டும். அந்தப் பனிக்கட்டியை விரல்களால் குடைந்து அதன் மத்தியில் இருக்கும் இன்னுமொரு சாவியைக் கண்டுபிடித்து எடுத்துப் போய் அதன் மூலம் வாசல் கதவைத் திறந்தால் அந்த அறையை விட்டும் வெளியே வரலாம். இவ்வளவையும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்துமுடித்தால் அடுத்த சுற்றுக்கும் போகலாம்.

        இந்தப் போட்டியில் இது போலப் பல சுற்றுக்கள். விஷத் தேள்களை உடலில் ஊர்ந்துசெல்ல விட வேண்டும். பாம்புகளோடு, கொடிய விலங்குகளோடு ஒரு சிறு பெட்டிக்குள் இருந்து காட்டவேண்டும். கரப்பான் பூச்சி, சிலந்தி போன்ற சிறு பிராணிகளை தயங்காமல் உயிரோடு உண்டு காட்டவேண்டும். எந்தவித மறுப்பும் சொல்லாமல் சாக்கடைக்குள் இறங்கிக் காட்டவேண்டும். அவர்கள் சொல்லும் உயரமான இடங்களிலிருந்து குதித்துக் காட்டவேண்டும். நிர்வாணமாக தெருவில் நடந்துசெல்ல வேண்டும். கண்கள் கட்டப்பட்ட, முடி திருத்துபவர்களிடம் தைரியமாகத் தலையைக் கொடுக்கவேண்டும். பல இளைஞர்களும் , யுவதிகளும் பின்வாங்காமல் இவற்றையெல்லாம் செய்துகாட்டுகிறார்கள். காரணம் வெற்றி பெற்றால் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் மற்றும் பிரபலம் !

        நான் மேற்சொன்னவையெல்லாம் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்று தனது பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் செய்த  Fear Factor தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சில பகுதிகள் மட்டுமே. அதே போன்ற நிகழ்ச்சியொன்றை நேற்று விஜய் டீவியிலும் பார்த்தேன். நிகழ்ச்சியின் தலைப்பு 'அணுவளவும் பயமில்லை'.  'காபி வித் அனு' நிகழ்ச்சி நடத்தும் அனு ஹாசனின் நிகழ்ச்சியென்பதால் 'அனுவளவும் பயமில்லை' எனத் தலைப்போ என்று இத் தலைப்பை மீண்டும் மீண்டும் கவனித்தேன். நல்லவேளை, அணுவளவும் பயமில்லைதான். நான் மேற்சொன்ன அமெரிக்கப் போட்டிகளின் ஆரம்ப நிலையில் இந் நிகழ்ச்சி இருந்தது. அதைப் போலவே தொடருமோ என அவர்களுக்கு இல்லாமல் போனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது.

முதற்கட்டமாக பிரபலமான ஏழு தொலைக்காட்சி நடிகைகளை அழைத்து வந்து அவர்களுக்கு போலிஸ் பயிற்சிமுறையின் போது கொடுக்கப்படும் சில கட்டப் பயிற்சிகளைச் செய்யச் சொன்னார் அனு. உயரமான இடத்தில் அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் ஊர்ந்து செல்லல், கம்பி வளையங்களில் ஏறி, இறங்குதல் போன்றவற்றைச் செய்தார்கள் அப் பெண்கள். அடுத்து ஒரு உயரமான சுவற்றிலிருந்து கயிற்றில் தொங்கிப் போய் எதிர்ப்புறத்திலிருந்த அடுத்த உயரமான சுவரில் உட்காரவேண்டும். இரு நடிகைகள் இதில் கீழே விழுந்து, காலிலும் தோள்பட்டையிலும் அடிபட்டு, காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்ட அந்த இரு நடிகைகளையும் தமது தொடர்களுக்காக ஒப்பந்தம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிறு கலங்கியபடி பார்த்திருந்திருப்பார்கள். மீதி நடிகைகள் இன்னும் பல சாகசங்களைச் செய்து, பாம்புப் பெட்டிக்குள் கைகளை விட்டுக் காட்டி, அடுத்தடுத்த சுற்றுப் போட்டிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியோ எதிர்வரும் காலங்களில் விஜய் டீவியின் அமெரிக்க உத்திகளால், பார்வையாளர் எண்ணிக்கை இன்னுமின்னும் அதிகரித்து, அவர்களது பணப்பெட்டி நிறையப் போவது மட்டும் உறுதி.

        அனு ஹாசன் மற்றும் விஜய் டீவிக்கு இரண்டு கோரிக்கைகள். எப்படியும் அடுத்தடுத்த காலங்களில் நான் மேற்சொன்னபடி அமெரிக்கத் தரத்துக்கு இந் நிகழ்ச்சியும் வந்துவிடும். அடுத்த போட்டிகளின் போதாவது ஒரு மருத்துவரையும், ஆம்புலன்ஸ் வண்டியையும் அருகிலேயே வைத்திருங்கள். கலந்து கொள்பவர்கள் அந்தரத்தில், உயரத்தில் கால்கள் உதற நீங்கள் சொல்லும் சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது 'இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள்?', 'அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?' என ஒலிவாங்கியைக் கொடுத்து, அவர்களிடம் அபத்தமான கேள்விகளைக் கேட்காதீர்கள். அத்தோடு இனிமேலாவது, கலந்துகொண்டவர்களுக்கு இப் பயிற்சிகளைச் செய்து காட்டிய போலீஸாருக்குத் தொப்பை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயிற்சியாளர்களைப் பார்க்கும்போதும் இவ்வளவு சாகசமான பயிற்சிகளைச் செய்துமா இந்தளவு பருத்த தொப்பை வந்திருக்கிறதென ஆச்சரியமாக இருக்கிறது. முடிந்தால், கொஞ்சமாவது சமூகப்பற்று இருந்தால் இந் நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள். தொலைக்காட்சி பார்த்து, எல்லாவற்றையும் செய்துபார்க்கும் பல குழந்தைகளின், சிறுவர் சிறுமிகளின் உயிர்கள் காப்பாற்றப்படட்டும். அவர்களுக்குத்தான் உண்மையில் அணுவளவும் பயமில்லை பாருங்கள்.

        இது போன்ற சாகசங்களை, வீர தீரச் செயல்களை எல்லாம் இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் பார்க்கவேண்டும் என்றில்லை. கடந்த ஜூலை மாத இறுதியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துக்கருகே பலவிதமான பயங்கர ஆயுதங்களோடு பஸ்ஸுக்குள் ஏறி பயணிகளிடம் தம் வீரதீரம் காட்டிய கல்லூரி மாணவர்களை நேரில் பார்த்துத் தெறித்தோடிய மக்களுக்கு இந்தத் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தந்துவிடாது. அதுபோலவே கடந்த அதே ஜூலை மாதத்தில் பீகாரின் தலைநகரம் பாட்னாவில், பொது இடத்தில் எல்லோரும் பார்த்திருக்க 22 வயதுப் பெண்ணொருவரை ஆடைகள் கிழித்து அசிங்கப்படுத்தி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் எல்லோரும் பார்க்க ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தி, வீதியில் வைத்து ஒரு கும்பல் மானபங்கப்படுத்திய கொடூரக் காட்சியைக் கண்டவர்களுக்கு மேற்படி சாகச நிகழ்ச்சிகள் பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.

        இதிலென்ன விஷேசம் என்றால் அப்பெண்ணை, அவர் கதறக் கதற அந்தளவு மானபங்கப்படுத்தும் காட்சியைக் கூட சுற்றிலுமிருந்த ஊடகவியலாளர்கள் புகைப்படங்களாகவும், வீடியோக் காட்சிகளாகவும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்களே தவிர, எவரும் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த வெறித் தாண்டவத்தைச் செய்தியாக்கி விற்றுப் பணம் பார்க்கும் ஆர்வம் அவர்களை வழி நடத்திய அளவு கூட மனிதாபிமானம் அவர்களை வழி நடத்தவில்லை. இந் நிகழ்வில் பொதுமக்களும் சூழ நின்று ஏதோ சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதுபோல அந்த அநீதமிழைக்கும் கும்பலுக்கெதிராக எதுவுமே செய்யாமல் பார்த்திருந்தது கூட மிகவும் வேதனைக்குரியது. பொதுமக்களை விடுவோம். போலிஸ்காரர்களே இந் நிகழ்வின்போது அருகிலிருந்திருப்பின் அவர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்திருப்பர் எனத் தோன்றுகிறது. முன்பு இவர்கள் வேடிக்கை பார்த்த அழகை சென்னை, அம்பத்தூர் சட்டக் கல்லூரி மோதலில் நாம்தான் கண்டிருக்கிறோமே.

        சட்டக் கல்லூரி கலவரத்தின் போதே, அரசும் போலிஸும் இதுபோன்ற கல்லூரி மாணவர்களின் வெறித்தனமான வன்முறைகளுக்கெதிராக ஏதேனும் உயர்மட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தால், எழும்பூர் இரயில் நிலைய அட்டகாசம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கல்லூரி மாணவர்கள் மேல் பெரிய அளவில் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியம் இருக்கும் காரணத்தால் அவர்கள் மேலும் மேலும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். அதிரடிச் சண்டைக் காட்சிகளோடும், வெட்டுக் குத்துக்களோடும் எடுக்கப்படும் சினிமாக்கள் அவர்களது இள ரத்தங்களைத் தூண்டிவிடுகின்றன. எதிர்காலம் குறித்த அச்சங்களெதுவுமின்றி தம்மை, எல்லாம் வல்ல கதாநாயகர்களாகச் சித்தரித்துக் கொண்டு மோதல்களில் இறங்கிவிடுகிறார்கள். இப்பொழுதாவது இதற்கொரு சட்டம் கொண்டுவரப்படட்டும். இல்லாவிட்டால் காவல்துறையைச் சிரிப்புப் போலிஸாக மட்டுமே கண்டு வளரும் கல்லூரி மாணவர்களிடம் சட்டங்கள், தண்டனைகள் குறித்து கேட்கப்படுமிடத்து இப்படிச் சொல்லுவார்கள். 'அணுவளவும் பயமில்லை'.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Tuesday, September 1, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !


        அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

        மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

        இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

        இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

        தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

        போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

        'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

        போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

        குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்



நன்றி - உயிர்மை

Monday, December 1, 2008

நிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்'

காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது. இவ்வாறாக மன உணர்வுகளை மாற்றிச் செல்லக்கூடிய 'நிழல் தேடும் கால்களை' சமீபத்தில் கிடைக்கப்பெற்றேன். இத் தொகுப்பிலுள்ள இளவயதுக் கவிஞன் நிந்தவூர் ஷிப்லியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அவர் குறித்தான பெரும் மதிப்பொன்றினை சுமந்து வந்திருந்தன.

இத் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஈழத்தின் யுத்த மேகங்கள் சூழ்ந்த இருள் கிராமங்களின் துயருற்ற வாழ்வினைப் பாடுவதோடு, காதல், வறுமை, வாழ்க்கை,அரசியல், பெண்ணுரிமை எனப் பல கருக்களைக் கொண்டெழுகிறது.

'இன்னும் வெளுக்கவில்லை' எனும் தலைப்பிலான தொகுப்பின் முதல் கவிதையில்

எங்கள் வாழ்வும் தீவுதான்
துயரக்கடலால்
சூழப்பட்டிருக்கிறது
மிகப்பத்திரமாய்...

எனும் வரிகள் ஆண்டாண்டு காலமாக இச் சிறுதீவினுள் அலையடித்துக் கிடக்கும் பெருஞ்சோகத்தை எளிய வரிகளில் மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றன.

ஆயினும்
இன்னும் வெளுக்கவில்லை
எங்கள் கிழக்கு...!

எனக் கவிஞர் இக்கவிதையை முடித்திருக்கிறார். மண்ணை நேசிக்கும் எல்லோருடைய ஆதங்கங்களின் வெளிப்பாடான இவ்வரிகள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் நிறுத்தப்பட்டிருப்பதைப் போலவும், பலருக்கும் இது பற்றி விவரித்துச் சொல்லப்படுவதைப் போலவும் உணர்கிறேன்.

வலிகளின் பிடிமானங்களில்
கவனமாய் செருகப்பட்டிருக்கிறது
உடலும் உயிரும்...

என்ற வரிகளைக் கொண்ட 'இருட்டு உலகம்' எல்லோராலும் வாழ்வில் உணரப்படக் கூடிய தனிமையின் விரக்தி நிலையை, சுயமிழந்த பொழுதின் வேதனையை அலசி எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இதே உணர்வைத் தோற்றுவித்த இன்னொரு கவிதையான 'வாழ்க்கை' கவிதையின் இறுதி வரிகள்

ஆயினும்
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்
சாகும் பொழுதைத் தவிர....

வாழ்க்கையின் ரணங்களில் கீறி வெளிப்பட்ட கவிதையாக வலிக்கச் செய்கிறது.

ஊரிலும், நகரத்திலும் தான் வாழ்ந்த பொழுதுகளில் கவிஞர் கண்ணுற்ற காதல்களின் பிரதிபலிப்புக்கள் 'காலிமுகத்திடல்' கவிதையில் இவ்வாறு வெளிப்படுகின்றன.

கிராமத்துக் காதல்
புழுதி படாப் பூ
நகரத்துக் காதல்
நசுங்கிய பூ

காதல் பற்றிய இந்தக் கண்ணோட்டம் நகரத்துக்காதலர்களை விசனப்படச் செய்யக் கூடுமெனினும் அழகிய வரிகள்.

தொகுப்பின் மற்றொரு கவிதையான 'தொலைதூர அழுகுரல்' கவிதையின் இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டைக் காணமுடியுமான
ஒரு தேசத்தில் நான்...

பணம் சம்பாதித்துக்கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்...!

காற்றில் மிதந்திருக்கும் கிளைகளின் இலைகள் எப்பொழுதுமே வேரைத் தேடியபடியிருக்கும் என்பதனைப் போல மீள வரமுடியாத் தொலைவில் புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ மனதுகளின் ஏக்கங்களை வெளிப்படுத்துவதோடு பழங்கால நினைவுகளைத் திரும்பப் பெரும் ஆவலையும் சொல்லி முடிகிறது இக்கவிதை. இதையே உணர்த்தும் இன்னுமொரு கவிதையின் வரிகளிவை.

காலத்தின் சூழ்ச்சிகளால்
அகதிகளாய்ப்போகையில்
விட்டுப் போன உயிர்
சொந்த ஊர் பார்க்கும் போதுதான்
மீண்டும் துளிர்க்கிறது

இதே நிதர்சனத்தை

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண் வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது

என இவரது 'மண்வாசம்' கவிதையும் பாடுகிறது.

'நெற்றிக்கண்ணாவது' கவிதையும், 'கருக்கலைப்பு' கவிதையும் விதவைகள் குறித்தான சமுதாய விழிப்புணர்வையும், கருவறையில் சிசுக்களுக்குக் கல்லறை கட்டப்படுவதைச் சாடி, அது சம்பந்தமான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.

பிரிந்து போன நேசமொன்றின் வலிகளைக் குறித்தான 'நீயா? பிரமையா?' கவிதையின்

இயல்பாக சேமிக்கப்பட்ட
உனக்கான
அன்பின் வார்ப்புகளை
வலுக்கட்டாயமாக துரத்தியடிக்க
நானொன்றும்
இதயமில்லாத நீயில்லை

என்ற அருமையான வரிகள் இழந்த நேசத்தின் நினைவுகளைச் சுமந்தலையும் துயருற்ற வாழ்வினைச் சுட்டி நிற்கிறது. இதையே தான் 'அறுந்து போன சிறகுகள்' கவிதையும் சொல்கிறது.

நீ பற்றிய
ஞாபகங்கள்
நொந்துபோன மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன

எனும் 'அர்த்தமில்லா அவஸ்தைகள்' கவிதையும் இதையே சொல்கிறது.

கிளிக்கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பட்சிகளின் சிறைப்படுத்தப்படுதலோடு ஒத்த பெண்களின் வாழ்வினை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது 'கிளிகள் பெண்கள் சுதந்திரம்' கவிதை. இதே கருப்பொருளோடு ஒத்திருக்கிறது 'நானும் ஒரு பெண்' கவிதையும்.

திருமணம் என்பது
இவர்களை
கைதிகளாக்கும்
திறந்த சிறை

எனச் சொல்லும் 'பெண்மை போற்றி' கவிதையானது திருமண வாழ்வுக்குப் பின்னர் பாரிய அடக்குதலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களைப் பற்றி எழுதப்பட்டதாகவும் அது சம்பந்தமான விழிப்புணர்வைக் கேட்டு நிற்பதாகவும் உணர்கிறேன்.

அடையாளமிழந்த சடலங்களில்
பரவிக் கிடக்கும்
சதைத் துகள்கள்
வழிந்தோடும்
இரத்த ஆறுகளை
வழி மறித்து நிற்கும்
எலும்புக் கூடுகள்

என்ற வரிகளைக் கொண்ட 'போர்க்களமும் சில பூக்களும்' கவிதை யுத்தத்தின் வலிகளை சிந்திய குருதி தொட்டு எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வாறாக சமுதாயத்தின் பல்வேறுபட்ட விம்பங்களைப் பற்றி இத் தொகுப்பிலுள்ள தன் கவிதைகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷிப்லி. கவிதைகளும் அவற்றின் பாடுபொருளும் நன்று. இவர் இன்னும் காத்திரமான சொற்களைக் கோர்த்துக் கவிதைகள் வடிப்பாராயின் கவிதைகளின் அழகுணர்ச்சி இன்னும் அதிகரித்து மேலும் இவரது கவிதைகள் மெருகேறும் என்பதில் ஐயமில்லை. கவிஞரின் தொடரும் முயற்சிகளனைத்தும் இது போல வெற்றிகளை ஈட்டித்தர வாழ்த்துகிறேன்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Sunday, July 13, 2008

த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை'


எப்போதும்
எனது
சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில்
ஒளிந்திருக்கிறது


முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின் நிழல்குடை' கவிதைத் தொகுப்பை சகோதரி கவிஞர். பஹீமா ஜஹான் எனக்கனுப்பியிருந்தார்.கடல் தாண்டித் தேசம் தாண்டி வரச்சற்றுத் தாமதமானாலும் கூட வந்து சேர்ந்த அன்றே வாசித்துப் பார்த்தேன்.அதன்பிறகு பலமுறை.ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இவரது கவிதைகளொவ்வொன்றும் வித விதமான வெவ்வேறு அர்த்தங்களைப் பாடுவதாகவே படுகிறது.

பின்புலத்தில் ஒரு மரம்.காற்றில் இலைகள் அசைவதாகக் கூட இல்லை.புல்லாங்குழல் ஊதியபடி எவ்வித அலங்காரங்கலுமற்ற ஒரு சிறுவன்.இதுதான் வசீகரமான அந்த முன்னட்டை ஓவியம்.அந்தப் புல்லாங்குழலின் துளைகளினூடு வெளித்தெரியாத தனிமையின் இசை வழிந்தோடிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடும்.

மேலுள்ள இவரது கவிதை முன்னட்டையின் பின்புறத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது.சிறியதாகவோ,பெரியதாகவோ ஒருவரைப் பற்றிய தீர்ப்பினை மனதில் எழுதிவிட்ட பிறகே அவருடனான நமது உரையாடல் சாத்தியப்படுகிறது.அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதிலாவது அவரது முழுக்கருத்தை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்குமா நமது எண்ணங்கள்?

உரையாடலின் மறுபுறத்திலுள்ளவர் நமக்குப் பிடித்தவரெனில் அவர் பேசுவதத்தனையிலும் இனிமை பொங்கிவழிவதாகவே காண்போம்.அவர் நமது மனதுக்கு ஒவ்வாதவராக இருப்பின் ?அவரது பேச்சில் நல்லவைகளிருப்பினும் ஏதோ கெடுதியொன்றைச் சொல்வதாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோம்.

மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் மாயப்பாதங்களை இவரது மேலுள்ள கவிதை வரிகள் கொண்டிருக்கின்றன.அடிக்கடி அசைபோட வைப்பதையும்,யாருடனாவது உரையாட நேரும் தருணங்களில் எண்ணத்தில் வந்துபோகும் அற்புதத்தையும் இவ்வரிகள் தம்மில் சுமந்தவண்ணம் இருக்கின்றன.இனித் தொகுப்பினுள் நுழைவோம்.வாருங்கள்.

மழை எப்பொழுதுமே தன்னுடன் மாயங்களையும்,விசித்திரங்களையும்,அற்புதங்களையும் துளிகளுடனும் ஈரத்துடனும் எடுத்துவருபவை.முதல் மழைத்துளி நம்மை நனைத்த கணமோ,அதனைப் பார்த்த கணமோ நம்மில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?
மழை பொழியும் அந்தப்பொழுதில் அவரவர் எண்ணங்களைப் பொறுத்து மழை அழகாயும் இருக்கலாம,ஆபத்தாகவும் இருக்கலாம் ஏன் இடையூறாகக் கூட இருக்கலாம்.ஆனால் மழை பற்றிய ஈரக்குறிப்புகள் மட்டும் நம் மனதை விட்டு என்றும் நீங்காதவை.

இத் தொகுப்பின் முதல் கவிதையாக உள்ள 'மழை என்னும் பிராணி' கவிதையின் இறுதி வரிகளிவை.

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப் போயிருக்கிறது
தூக்கம்

மிகத் தெளிவான வரிகள்.அத்தனை சொல்லிலும் ஈரம் சொட்டச் சொட்ட.மழைக்கால இரவுகளில் விழித்திருந்த நினைவுகள் மீளவும் மீட்டப்படுகின்றன.அத்துளிகள் காய்ந்திருக்கும் இப்பொழுது.மேகங்கள் ஈர்த்து வேறு இடங்களில் வேறொருவர் உறக்கத்தைப் பறிக்கப் பெய்துமிருக்கும்.ஆனாலும் நம் தூக்கம் பறித்த அந்த மழை இரவுகள் எப்பொழுதும் மனதில் ஈரம் சொட்டிக்கொண்டே தானே இருக்கும்.

இவரது 'மீள் நினைவு' கவிதை ஞாபகங்களின் அடுக்கைத் தோண்டவிழைகிறது.நமது அத்தனை ஞாபகங்களிலும் ஏதோவொரு சடப்பொருளோ,உயிர் ஜீவனோ அடக்கமாக உறங்கிக்கொண்டிருக்கும்.நினைவு விரலின் சிறுதொடுகை போதும் அதனை ஊர்ந்திடச் செய்யவும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கச் செய்யவும்.அதனை மிக அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லிய காற்று,
ஏன்?
ஒரு
தேனீர்க்குவளையின்
ஓரம்கூடப் போதுமானதாயிருக்கும்
ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு


பதிலிட முடியாக் கேள்விகளும்,தவறான விடைகளே பதில்களாக அமைந்த கேள்விகளும் அழுத்தும் கொடூர பாரமதனை 'சிந்திப்பது குறித்து' கவிதையில் இறக்கிவைத்து விடுகிறார் அகிலன்.

நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து
கொண்டேயிருக்கிறது.
அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.


அழகுத்தோல் போர்த்திய குரூரங்கள்,கொடிய விஷங்களைக் கொண்டு நிரப்பிய மனங்கள் இவரில் ஏற்படுத்திய தாக்கங்களினைப் பின்வரும் வரிகள் சொல்கின்றன.

எல்லோருடைய
புன்னகைகளின் பின்னால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஒவ்வொரு வார்த்தையினதும்
குரூர நிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொல்லித்தருகிறது


எதைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுவது குறித்தான தீர்மானத்தையெப்படி அடைந்தாரென்பதை இப்படியெழுதிக் கவியினை முடிக்கிறார்.

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்


தேவதை குறித்த சொற்கள் எந்தக் கவிஞருக்கும் இடறாமல் இல்லை.சிறு வயதில் தேவதைக் கதைகளையும் சாத்தான்களின் கதைகளையும் கேட்டவாறே வளர்கிறோம்.பின்னாட்களில் சாத்தான்கள் எப்பொழுதுமே வாழ்வினைச் சூழ்ந்திருக்க, தேவதைகளை மட்டும் எப்பொழுதாவதுதான் சந்திக்கநேர்கிறது.அப்படித் தன்னால் பார்க்க நேர்ந்த ஒரு தேவதைப் பெண்ணைப் பற்றித் தனது 'உரசிப் போகும் பட்டாம்பூச்சி' கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான்
அவளைக் காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே
அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக் குறிவைத்து
நடந்தபடியோ
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோ தான்
அவள் எப்போதுமிருக்கிறாள்...


தேவதையின் பார்வை வீச்சினைப் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் கவிஞர் அந்தப் பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில் உருவான தென்றல் தன்னில் மோதிச் சென்ற அனுபவத்தை

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி


எனச் சொல்கிறார்.இதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 'சொற்களைத் திருடிய வண்ணாத்தி' கவிதையில் வெளிப்படுகிறது.

உன் மௌனம்
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு
தம் சிறகுகளால்
காலத்தைக் கடந்தன வண்ணத்திகள்


இரு மனக்காதலின் பின்னரான மௌனங்களும்,முத்தங்களும் எப்பொழுதும் சலனத்துக்குரியவையாகவே இருக்கின்றன என்பதனைச் சொல்வதனை

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப் பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை


இக் கவிதையின் முடிவினில் பார்க்கக் கிடைக்கிறது.

வாட்டி வதைத்த கோடைக் காலமொன்று தான் பீடித்திருந்த எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சென்றதைச் சொல்லும் 'கோடை/02' கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் அழகானது.

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..


பெருங் கோடைக்குப் பின்னரான முதல்மழையில் எல்லா மனங்களும் குதூகலிக்கும்.வரண்ட செடி முதற்கொண்டு வியர்த்த மனிதர்கள் வரை அனைவரினது விழிகளும் ஆகாயத்தையே மழைக்காக நோக்கியவண்ணமிருக்கையில் பெய்யும் முதல்மழை எவ்வளவு உவகையை அள்ளிவருகிறது...?!

புன்னகையைப் போர்த்திய துயரத்தின் குரூரம் மிகும் பரவுதலை இவரது 'துயரின் பயணம்' கவிதை சொல்கிறது.கவிதையின் பாடுபொருளை மிக அழகான எளிய வரிகளில் சுருக்கமாகச் சொல்வதில் தான் இவரது சூட்சுமம் இருக்கிறது.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்

ஒரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்
ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...


துயர் சூழ்ந்த ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் அது பற்றிக்கொள்வதனை

அது தன்
தீராக் காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையை நோக்கி


இப்படியெழுதி முடிக்கிறார்.

இவரது முத்தங்களைப் பூக்களுக்கும் காதலி நிராகரித்த முத்தங்களை வாடிய பூக்களுக்கும் ஒப்பிட்டு காலம் காலமாய் வாடிய பூக்களை மட்டுமே சேமித்த மனதினைத் திறந்து காட்டுகிறார் காதலிக்கு இவ்வாறாக.

பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டுவருகிறேன்
புறந்தள்ளிப் போகிறாய்...

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.


இவரது இந்தக் கவிதை 'உன் புன்னகை குறித்து' தலைப்பின் கீழிருக்கிறது.

இக்கவிதையினைத் தொடர்ந்து அடுத்துவரும் கவிதையான ‘சூரியனின் சித்திரம்' கவிதையில் பூவைப் பெண்ணுக்கும் சூரியனை ஆணுக்கும் ஒப்பிட்டு எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூரியன்
குறித்த சித்திரம்


தனக்கு வரப்போகும் கணவனான ஆணைப் பற்றிய எண்ணக்கரு எப்பொழுதுமே ஒரு கன்னிப்பெண்ணின் இதயத்தில் குடியிருந்துகொண்டே இருக்கும்.

பூக்களைத் தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூரியனின் தோல்வி

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூரியனின் புன்னகை


எப்பொழுதும் பெண் வதனத்தின் மலர்ச்சியில்தான் அவளை நாடும் ஆணின் உவகை இருக்கிறது.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப் பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உரிக்கின்றன
மரங்கள்.


ஆனால் பெண்ணானவள் சடங்குகள்,சம்பிரதாயங்கள் என்ற எல்லைகளுக்குள்ளே மட்டுமே வளையவர விதிக்கப்பட்டவள்.இங்கு நிலவு அதற்கு ஒப்பிடப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.நிலவானது வளரும்,தேயும்.ஆனால் பெண் ? அவளது எல்லைகள் ? எல்லைகளை விதித்த மரங்களே அதற்கான தண்டனையாக தம்மை உதிர்த்துக் கொள்கின்றனவோ?

எல்லோருடைய எதிர்பார்ப்புக்களுமான ஏக்கங்கள் சில 'எதிர்பார்ப்பு'கவிதையில் வருகின்றன.

என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்?
ஒரு துளி
கண்ணீர் கூட
உதிர்க்கலாம்


என்
கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதை நீ
பூக்களால்
நிறைக்கலாம்


எப்பொழுதுமே சலனத்துக்குரிய எதிர்பார்ப்புக்கள் இவை.ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறுமா என நாம் அறிவோமா?
ஆனால் இக்கவிதையின் அடுத்த வரிகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றன.

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது


எந்த எண்ணமும் அற்ற மனதில் ஒரு விடையறியாக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.அது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையாயிருக்கிறதா?


ஒரு அதிர்வை ஏற்படுத்தும் கேள்வியல்லவா இது?எவ்வளவு அழகாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

தாய்நாட்டினைப் பிரிந்த துயரத்தையும் அதனாலான இழப்புகளையும் வலிகளோடும்,தைக்கும் நிதர்சனத்தோடும் சொல்கிறது 'கடலின் வரிகள்' கவிதை.

எனது தெருவின் புழுதி
சிறு அடைப்பெனக் கிடக்கலாம்
நுரையீரல் கோளங்களிற்குள்


சிறு வயதில் தெருவலைந்து உடலும் சுவாசமும் சுமந்த புழுதி கழுவிடக் கழுவிடக் கரைந்து போய்விடுமா என்ன?காலம் கழுவி விட்டால்தான் உண்டு.காலம் அதனைச் செய்தாலும் தெருவின் புழுதிவாசம் மட்டும் நாசிக்குள்ளேயே இருக்கும்.

முற்றத்தின்
ஞாபகங்களைத் தேக்கிவைத்திருக்கும்
என் காலடி மறுபடியும்
திரும்புவதற்கில்லை.

அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிடமுடியாது
குட்டிப்பையனின் எச்சில் முத்தங்கள்
மழலை அழைப்புக்கள்
கிடையவே கிடையாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது


தாய்நாட்டைப் பிரிந்ததான ஏக்கமும்,பழைய தடங்களும் அதனுடனான வலியும் கவிதையில் எளியவரிகளில் வெளிப்படுவது மிகச்சிறப்பு.அதுவே வாசிக்கும்போது மனதில் எளிதில் பதிந்துவிடக் கூடியதாக இருக்கிறது.

நமைச் சூழ நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாகவே நமது ஜீவிதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளை,தூக்கம் பறிக்கும் செயல்களை ஜீரணிக்கமுடியாக் கோபம் 'சாட்சியாயிருத்தல்'கவிதையில் வெளிப்படுகிறது.

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்

இப்படி
எல்லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்.


அகதியாகிப்போன அக்காவுக்கான கடிதமென அகிலன் வரைந்திருக்கும் கவிதைதான் 'இது கவிதையில்லை'.இக் கடிதம் ஒரு அக்காவுக்கு மட்டுமான கடிதமா என்ன?

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
என்பது.


தாய்தேசத்திலேயே அகதியாகி வேதனைகளைச் சும்ந்துகொண்டிருக்கும் அத்தனை உயிருக்குமான கடிதம் அது.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறைப்படுத்தப்பட்டதான வாழ்க்கையின் வேதனை வரிகளை இவரது 'அம்மம்மாவின் சுருக்குப் பை' கவிதையும் சொல்கிறது.

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏதுமில்லை.

தடங்கள்
இறுகிக் கொண்டன
.

மென்மையாகவும் பத்திரமாகவும் இருந்த வாழ்க்கையானது யுத்தத்தின் பிடியில் சிக்கிட நேர்ந்ததன பிற்பாடு அதன் எல்லைகள் சுருங்கிவிட்டதென வலியோடு சொல்கிறது இக்கவிதை.

இவருடைய 'சாத்தானுடன் போகும் இரவு' கவிதையும் கொடூரம் போர்த்திய யுத்த ஊரின் இரவைப் பற்றிப் பேசுகிறது.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள் முளைத்தன.

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


பல உயிர்களைக் காவு வாங்கும் இரவின் இருளொன்றில் எத்தனை சாத்தான்கள் ஒளிந்திருக்கின்றன?அத்தனை சாத்தான்களாலும் அகோரங்களே நிகழ்ந்திட

சூரியனைப் போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.


என முடிக்கிறார்.சாத்தான்களுடனான இரவுகள் மட்டும் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இதே போன்ற இவரது இன்னொரு கவிதையான 'அடுத்து வரும் கணம்' இப்படிச் சொல்கிறது.

துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன

ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்


வழிநெடுகத் துரத்தும் வலிகளையும் அச்சத்தையும் குறித்துக் கவிதையை முடிக்கிறார்.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பக்கிடக்கின்றன
வழிமுழுதும்.


போர்ப்பிரதேசமொன்றில் நாட்கள் நகருகையில் அங்கு வாழ்ந்திட நேரும் குழந்தைகளுக்கான இராக்கதைகளில் துப்பாக்கிகள் இருக்கும்.ஆனால் தேவதைக்கதைகளை எத்தனை பேரால் சொல்லவியலும்? தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன? 'துப்பாக்கிகளும் சில தேவதைக் கதைகளும்/02' பாருங்கள்.

நான்
தேவதைக் கதைகளை
எழுதிக்கொண்டேயிருப்பேன்

ஏனெனில்
சபிக்கப்பட்ட என் நிலத்தில்
தேவதைகள் குறித்த
சொற்கள் மட்டுமே
துப்பாக்கிகளால்
அச்சமூட்டப்படாதிருக்கின்றன.

இப்போதெல்லாம்
இன்னுமின்னும்
அச்சமூட்டப்பட்டிருக்கின்றன
சொற்கள்.
புன்னகைகளைப்
பலியிட்டுவிட்டபின்
சொற்களையும் பலியிடுவோம்.


அகிலனின் 'வெட்கக் குறிப்புகள்' கவிதை காதல்,யுத்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு நிதர்சன உலகைக் கண் முன்னே கொண்டுவருகிறது.அதிலிருக்கும் 3 சின்னக் கவிதைகளும் சொல்லும் அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருக்கக் கூடுமானவை.

இரவிற்கு வெளிச்சம் பிடித்து வரும் நிலவினைச் சாடுகிறார் தன் 'மதங்கொண்ட நிலவு' கவிதையில்.இரவின் கறுப்பில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் சாட்சியாகப் பார்த்திருக்கும் நிலவு,இவரின் கவிதையின் இறுதியில் இப்படி வருகிறது.

யாரும்
விசாரணைகளை நிகழ்த்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.


ஒரு அடர் வனாந்திரத்தையும் சமுத்திரத்தையும் கடந்து வந்த நிகழ்வினை 'காட்டின் நினைவு' கவிதையாக்கியிருக்கிறார்.இக்கவிதையில் காட்டைப் பற்றியும் கடலைப்பற்றியுமான இவரது பார்வை வியக்கவைக்கிறது.

காடு
அடர்ந்திருந்தது
அதன் ரகசியங்களைப் போல
எங்களையும் விழுங்கிக்கொண்டு
மௌனமாய்.
ஆனால்
கடல்
அப்படியல்ல அதனிடம்
ரகசியங்கள் கிடையா
அதற்கு மௌனமும் தெரியா !


விடையறியாக் கேள்விகளை முன்னிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் வதையுர நேரும் அவலத்தை 'கேள்விகளின் குகை'கவிதை சொல்கிறது.இக்கவிதையின் இறுதிவரிகள் மனம் அதிரச் செய்பவை.

சுவர்
உறுஞ்சிக் கறுத்த
இரத்தத்தின் சுவடென
இரவு கவிகையில்..
என் இதயத்தின் ஒலி
அவன் காதுவரைக்கும் வந்து
அச்சமூட்டுவதாய்
அருகில் அழுதவன்
சர்வ நிச்சயமாய்ச் சொன்னான்.


யுத்தத்தின் பெருவலியைச் சுமந்த கவிதைகளும்,காதலின் கடைக்கண் தீட்டிய பேருவகையைக் கொண்டாடும் கவிதைகளும்,சுயத்தினைப் பாடும் கவிதைகளும்,இங்கு குறிப்பிடப்படாக் கவிதைகளுடன் சேர்த்து 'தனிமையின் நிழல் குடை'யில் நிறைந்திருக்கின்றன.முழுவதுமாய் வாசித்துமுடித்ததன் பிற்பாடு எழுதியவரைக் கவிதைகளினூடு புரிந்துகொள்ள முடியுமாயிருக்கிறது.இதுவே தனது படைப்புகளினுள் வாழும் கவிஞரின் வெற்றியெனலாம்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Sunday, June 1, 2008

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

















கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல் ஒரு போர்வையாகப் படியும்.

அவ்வாறான ஒரு துயரத்தின் உணர்வை தீபச்செல்வனின் 'கீறல் பட்ட முகங்கள்' வலைப்பூவில் அவர் பதிந்திருக்கும் அவரது கவிதைகளில் காணலாம்.இவ்வலைப்பூ துயரங்களைச் சொல்லும் ஆவணங்களின் கவிதைகளைக் கொண்டிருப்பவை.பெரும் புற்றுப் போலப் படர்ந்து வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி,வாசிப்பவரை விழிகசியச் செய்பவையாக இருக்கின்றன இவரது பெரும்பாலான கவிதைகள்.

இவரது 'கிளிநொச்சி' தலைப்பிலான கவிதை சமாதான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதன் பிற்பாடு திரும்பவும் பதுங்குகுழிக்கு மீண்ட வாழ்வை மிகத் துயருடன்,எளிதில் புரிந்து கொள்ள முடியுமான மொழியில் பேசுகிறது.கவிதையின் சில வரிகள்,

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்
.

எனச் சொல்லி, இப்படி முடிக்கிறார்.

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.


இதே வலியை இவரது 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' கவிதையும் பேசுகிறது.இதில் யுத்தப்பிரதேசங்களின் சூனியங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான துயரத்தாலாட்டுக்கள் கண்ணீரால் பாடப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது
குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்


என்று துயருருத்தும் வரிகளால் தொடங்கி,

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்


என இவர் முடிக்கையில் சுடும் துயரம் படர்ந்த யதார்த்தத்தின் சாரலானது வாசிப்பவரது மனங்களில் வலிக்க வலிக்கச் சிதறுகிறது.

இவரது 'வெளிக்கு நகரும் மரங்கள்' சாபங்கள் சூழ்ந்த யுத்தத்தின் சாயலைப் பேசுவதோடு தற்போதைய இயற்கையின் பசுமைச் சீரழிவையும் பேசுவதாகவே படுகிறது.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.

என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்


எனக் கேட்கிறார்.

'நீயும் நமது குழந்தைகளும்' கவிதையானது யுத்தத்தின் இரு தரப்புப் படைகளின் மனிதம் நிரம்பிய முகங்களையும்,சமாதானத்துக்கான அவாவையும் பேசுகிறது.சமரினால் பாதிப்புறும் குழந்தைகளின் பாடல் ஆயுதங்களால் கரையும் உலகத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.

எனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்


நாம் புன்னகைக்கலாம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னகைக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்...........
உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்............
நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.


என இவர் முடிக்கும்போது தீராதவலியொன்று நெஞ்சில் இடறுகிறது.இதே போன்றதொரு உணர்வை இவரது 'பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்' கவிதையும் தருகிறது.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.


நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன........
..

பாட்டி சொல்லும் கதையின் வரிகளாக இவர் எழுதும்

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.


மேலுள்ள வரிகள் நம்பிக்கையை விதைக்கின்றன.

'குட்டிமானின் புள்ளிகள்' எனும் தலைப்பில் இவர் வடித்திருக்கும் கவிதை, யுத்தம் சூழும் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மக்களின் வாழ்வியலையும்,மக்களின் வலிகளில் கண்ணீர் தொட்டு வரையப்பட்ட துயர ஓவியங்களையும் மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்பிட்டு வெளிக்காட்டுகிறது.

அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.........

எனத் தொடரும் கவிதையில்,

இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.

மானே பொறியாக இருக்கலாம்..........


ஆகிய வரிகள் சமரின் ஆயுதங்களும்,அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி,கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.

கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானாக மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.


என முடித்திருக்கும் இவ்வரிகளில் மானின் மருட்சியும்,உயிர் பிழைத்து வாழ்வதற்கான அவாவும்,மக்களின் ஏக்கமும் ஒன்றாகவே பிரதிபலிக்கிறது.
இவரது 'இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப்பறவை' கவிதை நிகழும் யதார்த்தத்தினைச் சுட்டி ஒரு சமூகத் துயரத்தின் கீதமாக உயிரினில் கசிகிறது.இதன் இறுதி வரிகள்

இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.


தற்காலத்தில் சகோதர,சகோதரிகள் கடத்தப்பட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதே வெள்ளை நிற வாகனம் பெரும் வலியைச் சொல்கிறது.
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.
எனக் குறிப்போடு இவர் எழுதியிருக்கும் 'நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்' கவிதை கடல் தாண்டிய நாடொன்றின் காயங்களை உரத்துப் பேசிடினும் யுத்தப்பிசாசின் ஆட்சிகளில் மூழ்கியிருக்கும் அத்தனை நாடுகளுக்கும் ஒத்துப் போகிறதாக அமைகிறது.
கிளிநொச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பின் தங்கிய கிராமத்தின் குளக்கரையோரம் இவருக்கு,இவரது நண்பரோடு சில நேரங்களைச் செலவிட நேருகிறது.அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை மிக அழகாகச் சொல்லும் 'முறிப்புக்கிராமம்' கவிதை இவரது கவிதைகளிலேயே யுத்தத்தின் வாடை அதிகளவு படியாத கவிதை எனலாம்.
இவரது வலைப்பூவில் காயங்களின் வலியைச் சொல்லும் துயரத்தின் கவிதைகளே அதிகம் உள்ளன.அவை மிக அழுத்தத்தைத் தரவல்லன.இதன் மூலமே மனதுக்கு நெருக்கமானவராக இவரும்,இவரது கவிதைகளும் ஆகி விடுகின்றனர்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.