Sunday, July 13, 2008

த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை'


எப்போதும்
எனது
சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில்
ஒளிந்திருக்கிறது


முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின் நிழல்குடை' கவிதைத் தொகுப்பை சகோதரி கவிஞர். பஹீமா ஜஹான் எனக்கனுப்பியிருந்தார்.கடல் தாண்டித் தேசம் தாண்டி வரச்சற்றுத் தாமதமானாலும் கூட வந்து சேர்ந்த அன்றே வாசித்துப் பார்த்தேன்.அதன்பிறகு பலமுறை.ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இவரது கவிதைகளொவ்வொன்றும் வித விதமான வெவ்வேறு அர்த்தங்களைப் பாடுவதாகவே படுகிறது.

பின்புலத்தில் ஒரு மரம்.காற்றில் இலைகள் அசைவதாகக் கூட இல்லை.புல்லாங்குழல் ஊதியபடி எவ்வித அலங்காரங்கலுமற்ற ஒரு சிறுவன்.இதுதான் வசீகரமான அந்த முன்னட்டை ஓவியம்.அந்தப் புல்லாங்குழலின் துளைகளினூடு வெளித்தெரியாத தனிமையின் இசை வழிந்தோடிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடும்.

மேலுள்ள இவரது கவிதை முன்னட்டையின் பின்புறத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது.சிறியதாகவோ,பெரியதாகவோ ஒருவரைப் பற்றிய தீர்ப்பினை மனதில் எழுதிவிட்ட பிறகே அவருடனான நமது உரையாடல் சாத்தியப்படுகிறது.அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதிலாவது அவரது முழுக்கருத்தை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்குமா நமது எண்ணங்கள்?

உரையாடலின் மறுபுறத்திலுள்ளவர் நமக்குப் பிடித்தவரெனில் அவர் பேசுவதத்தனையிலும் இனிமை பொங்கிவழிவதாகவே காண்போம்.அவர் நமது மனதுக்கு ஒவ்வாதவராக இருப்பின் ?அவரது பேச்சில் நல்லவைகளிருப்பினும் ஏதோ கெடுதியொன்றைச் சொல்வதாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோம்.

மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் மாயப்பாதங்களை இவரது மேலுள்ள கவிதை வரிகள் கொண்டிருக்கின்றன.அடிக்கடி அசைபோட வைப்பதையும்,யாருடனாவது உரையாட நேரும் தருணங்களில் எண்ணத்தில் வந்துபோகும் அற்புதத்தையும் இவ்வரிகள் தம்மில் சுமந்தவண்ணம் இருக்கின்றன.இனித் தொகுப்பினுள் நுழைவோம்.வாருங்கள்.

மழை எப்பொழுதுமே தன்னுடன் மாயங்களையும்,விசித்திரங்களையும்,அற்புதங்களையும் துளிகளுடனும் ஈரத்துடனும் எடுத்துவருபவை.முதல் மழைத்துளி நம்மை நனைத்த கணமோ,அதனைப் பார்த்த கணமோ நம்மில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?
மழை பொழியும் அந்தப்பொழுதில் அவரவர் எண்ணங்களைப் பொறுத்து மழை அழகாயும் இருக்கலாம,ஆபத்தாகவும் இருக்கலாம் ஏன் இடையூறாகக் கூட இருக்கலாம்.ஆனால் மழை பற்றிய ஈரக்குறிப்புகள் மட்டும் நம் மனதை விட்டு என்றும் நீங்காதவை.

இத் தொகுப்பின் முதல் கவிதையாக உள்ள 'மழை என்னும் பிராணி' கவிதையின் இறுதி வரிகளிவை.

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப் போயிருக்கிறது
தூக்கம்

மிகத் தெளிவான வரிகள்.அத்தனை சொல்லிலும் ஈரம் சொட்டச் சொட்ட.மழைக்கால இரவுகளில் விழித்திருந்த நினைவுகள் மீளவும் மீட்டப்படுகின்றன.அத்துளிகள் காய்ந்திருக்கும் இப்பொழுது.மேகங்கள் ஈர்த்து வேறு இடங்களில் வேறொருவர் உறக்கத்தைப் பறிக்கப் பெய்துமிருக்கும்.ஆனாலும் நம் தூக்கம் பறித்த அந்த மழை இரவுகள் எப்பொழுதும் மனதில் ஈரம் சொட்டிக்கொண்டே தானே இருக்கும்.

இவரது 'மீள் நினைவு' கவிதை ஞாபகங்களின் அடுக்கைத் தோண்டவிழைகிறது.நமது அத்தனை ஞாபகங்களிலும் ஏதோவொரு சடப்பொருளோ,உயிர் ஜீவனோ அடக்கமாக உறங்கிக்கொண்டிருக்கும்.நினைவு விரலின் சிறுதொடுகை போதும் அதனை ஊர்ந்திடச் செய்யவும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கச் செய்யவும்.அதனை மிக அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லிய காற்று,
ஏன்?
ஒரு
தேனீர்க்குவளையின்
ஓரம்கூடப் போதுமானதாயிருக்கும்
ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு


பதிலிட முடியாக் கேள்விகளும்,தவறான விடைகளே பதில்களாக அமைந்த கேள்விகளும் அழுத்தும் கொடூர பாரமதனை 'சிந்திப்பது குறித்து' கவிதையில் இறக்கிவைத்து விடுகிறார் அகிலன்.

நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து
கொண்டேயிருக்கிறது.
அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.


அழகுத்தோல் போர்த்திய குரூரங்கள்,கொடிய விஷங்களைக் கொண்டு நிரப்பிய மனங்கள் இவரில் ஏற்படுத்திய தாக்கங்களினைப் பின்வரும் வரிகள் சொல்கின்றன.

எல்லோருடைய
புன்னகைகளின் பின்னால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஒவ்வொரு வார்த்தையினதும்
குரூர நிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொல்லித்தருகிறது


எதைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுவது குறித்தான தீர்மானத்தையெப்படி அடைந்தாரென்பதை இப்படியெழுதிக் கவியினை முடிக்கிறார்.

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்


தேவதை குறித்த சொற்கள் எந்தக் கவிஞருக்கும் இடறாமல் இல்லை.சிறு வயதில் தேவதைக் கதைகளையும் சாத்தான்களின் கதைகளையும் கேட்டவாறே வளர்கிறோம்.பின்னாட்களில் சாத்தான்கள் எப்பொழுதுமே வாழ்வினைச் சூழ்ந்திருக்க, தேவதைகளை மட்டும் எப்பொழுதாவதுதான் சந்திக்கநேர்கிறது.அப்படித் தன்னால் பார்க்க நேர்ந்த ஒரு தேவதைப் பெண்ணைப் பற்றித் தனது 'உரசிப் போகும் பட்டாம்பூச்சி' கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான்
அவளைக் காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே
அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக் குறிவைத்து
நடந்தபடியோ
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோ தான்
அவள் எப்போதுமிருக்கிறாள்...


தேவதையின் பார்வை வீச்சினைப் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் கவிஞர் அந்தப் பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில் உருவான தென்றல் தன்னில் மோதிச் சென்ற அனுபவத்தை

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி


எனச் சொல்கிறார்.இதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 'சொற்களைத் திருடிய வண்ணாத்தி' கவிதையில் வெளிப்படுகிறது.

உன் மௌனம்
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு
தம் சிறகுகளால்
காலத்தைக் கடந்தன வண்ணத்திகள்


இரு மனக்காதலின் பின்னரான மௌனங்களும்,முத்தங்களும் எப்பொழுதும் சலனத்துக்குரியவையாகவே இருக்கின்றன என்பதனைச் சொல்வதனை

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப் பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை


இக் கவிதையின் முடிவினில் பார்க்கக் கிடைக்கிறது.

வாட்டி வதைத்த கோடைக் காலமொன்று தான் பீடித்திருந்த எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சென்றதைச் சொல்லும் 'கோடை/02' கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் அழகானது.

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..


பெருங் கோடைக்குப் பின்னரான முதல்மழையில் எல்லா மனங்களும் குதூகலிக்கும்.வரண்ட செடி முதற்கொண்டு வியர்த்த மனிதர்கள் வரை அனைவரினது விழிகளும் ஆகாயத்தையே மழைக்காக நோக்கியவண்ணமிருக்கையில் பெய்யும் முதல்மழை எவ்வளவு உவகையை அள்ளிவருகிறது...?!

புன்னகையைப் போர்த்திய துயரத்தின் குரூரம் மிகும் பரவுதலை இவரது 'துயரின் பயணம்' கவிதை சொல்கிறது.கவிதையின் பாடுபொருளை மிக அழகான எளிய வரிகளில் சுருக்கமாகச் சொல்வதில் தான் இவரது சூட்சுமம் இருக்கிறது.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்

ஒரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்
ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...


துயர் சூழ்ந்த ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் அது பற்றிக்கொள்வதனை

அது தன்
தீராக் காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையை நோக்கி


இப்படியெழுதி முடிக்கிறார்.

இவரது முத்தங்களைப் பூக்களுக்கும் காதலி நிராகரித்த முத்தங்களை வாடிய பூக்களுக்கும் ஒப்பிட்டு காலம் காலமாய் வாடிய பூக்களை மட்டுமே சேமித்த மனதினைத் திறந்து காட்டுகிறார் காதலிக்கு இவ்வாறாக.

பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டுவருகிறேன்
புறந்தள்ளிப் போகிறாய்...

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.


இவரது இந்தக் கவிதை 'உன் புன்னகை குறித்து' தலைப்பின் கீழிருக்கிறது.

இக்கவிதையினைத் தொடர்ந்து அடுத்துவரும் கவிதையான ‘சூரியனின் சித்திரம்' கவிதையில் பூவைப் பெண்ணுக்கும் சூரியனை ஆணுக்கும் ஒப்பிட்டு எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூரியன்
குறித்த சித்திரம்


தனக்கு வரப்போகும் கணவனான ஆணைப் பற்றிய எண்ணக்கரு எப்பொழுதுமே ஒரு கன்னிப்பெண்ணின் இதயத்தில் குடியிருந்துகொண்டே இருக்கும்.

பூக்களைத் தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூரியனின் தோல்வி

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூரியனின் புன்னகை


எப்பொழுதும் பெண் வதனத்தின் மலர்ச்சியில்தான் அவளை நாடும் ஆணின் உவகை இருக்கிறது.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப் பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உரிக்கின்றன
மரங்கள்.


ஆனால் பெண்ணானவள் சடங்குகள்,சம்பிரதாயங்கள் என்ற எல்லைகளுக்குள்ளே மட்டுமே வளையவர விதிக்கப்பட்டவள்.இங்கு நிலவு அதற்கு ஒப்பிடப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.நிலவானது வளரும்,தேயும்.ஆனால் பெண் ? அவளது எல்லைகள் ? எல்லைகளை விதித்த மரங்களே அதற்கான தண்டனையாக தம்மை உதிர்த்துக் கொள்கின்றனவோ?

எல்லோருடைய எதிர்பார்ப்புக்களுமான ஏக்கங்கள் சில 'எதிர்பார்ப்பு'கவிதையில் வருகின்றன.

என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்?
ஒரு துளி
கண்ணீர் கூட
உதிர்க்கலாம்


என்
கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதை நீ
பூக்களால்
நிறைக்கலாம்


எப்பொழுதுமே சலனத்துக்குரிய எதிர்பார்ப்புக்கள் இவை.ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறுமா என நாம் அறிவோமா?
ஆனால் இக்கவிதையின் அடுத்த வரிகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றன.

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது


எந்த எண்ணமும் அற்ற மனதில் ஒரு விடையறியாக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.அது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையாயிருக்கிறதா?


ஒரு அதிர்வை ஏற்படுத்தும் கேள்வியல்லவா இது?எவ்வளவு அழகாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

தாய்நாட்டினைப் பிரிந்த துயரத்தையும் அதனாலான இழப்புகளையும் வலிகளோடும்,தைக்கும் நிதர்சனத்தோடும் சொல்கிறது 'கடலின் வரிகள்' கவிதை.

எனது தெருவின் புழுதி
சிறு அடைப்பெனக் கிடக்கலாம்
நுரையீரல் கோளங்களிற்குள்


சிறு வயதில் தெருவலைந்து உடலும் சுவாசமும் சுமந்த புழுதி கழுவிடக் கழுவிடக் கரைந்து போய்விடுமா என்ன?காலம் கழுவி விட்டால்தான் உண்டு.காலம் அதனைச் செய்தாலும் தெருவின் புழுதிவாசம் மட்டும் நாசிக்குள்ளேயே இருக்கும்.

முற்றத்தின்
ஞாபகங்களைத் தேக்கிவைத்திருக்கும்
என் காலடி மறுபடியும்
திரும்புவதற்கில்லை.

அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிடமுடியாது
குட்டிப்பையனின் எச்சில் முத்தங்கள்
மழலை அழைப்புக்கள்
கிடையவே கிடையாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது


தாய்நாட்டைப் பிரிந்ததான ஏக்கமும்,பழைய தடங்களும் அதனுடனான வலியும் கவிதையில் எளியவரிகளில் வெளிப்படுவது மிகச்சிறப்பு.அதுவே வாசிக்கும்போது மனதில் எளிதில் பதிந்துவிடக் கூடியதாக இருக்கிறது.

நமைச் சூழ நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாகவே நமது ஜீவிதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளை,தூக்கம் பறிக்கும் செயல்களை ஜீரணிக்கமுடியாக் கோபம் 'சாட்சியாயிருத்தல்'கவிதையில் வெளிப்படுகிறது.

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்

இப்படி
எல்லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்.


அகதியாகிப்போன அக்காவுக்கான கடிதமென அகிலன் வரைந்திருக்கும் கவிதைதான் 'இது கவிதையில்லை'.இக் கடிதம் ஒரு அக்காவுக்கு மட்டுமான கடிதமா என்ன?

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
என்பது.


தாய்தேசத்திலேயே அகதியாகி வேதனைகளைச் சும்ந்துகொண்டிருக்கும் அத்தனை உயிருக்குமான கடிதம் அது.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறைப்படுத்தப்பட்டதான வாழ்க்கையின் வேதனை வரிகளை இவரது 'அம்மம்மாவின் சுருக்குப் பை' கவிதையும் சொல்கிறது.

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏதுமில்லை.

தடங்கள்
இறுகிக் கொண்டன
.

மென்மையாகவும் பத்திரமாகவும் இருந்த வாழ்க்கையானது யுத்தத்தின் பிடியில் சிக்கிட நேர்ந்ததன பிற்பாடு அதன் எல்லைகள் சுருங்கிவிட்டதென வலியோடு சொல்கிறது இக்கவிதை.

இவருடைய 'சாத்தானுடன் போகும் இரவு' கவிதையும் கொடூரம் போர்த்திய யுத்த ஊரின் இரவைப் பற்றிப் பேசுகிறது.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள் முளைத்தன.

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


பல உயிர்களைக் காவு வாங்கும் இரவின் இருளொன்றில் எத்தனை சாத்தான்கள் ஒளிந்திருக்கின்றன?அத்தனை சாத்தான்களாலும் அகோரங்களே நிகழ்ந்திட

சூரியனைப் போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.


என முடிக்கிறார்.சாத்தான்களுடனான இரவுகள் மட்டும் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இதே போன்ற இவரது இன்னொரு கவிதையான 'அடுத்து வரும் கணம்' இப்படிச் சொல்கிறது.

துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன

ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்


வழிநெடுகத் துரத்தும் வலிகளையும் அச்சத்தையும் குறித்துக் கவிதையை முடிக்கிறார்.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பக்கிடக்கின்றன
வழிமுழுதும்.


போர்ப்பிரதேசமொன்றில் நாட்கள் நகருகையில் அங்கு வாழ்ந்திட நேரும் குழந்தைகளுக்கான இராக்கதைகளில் துப்பாக்கிகள் இருக்கும்.ஆனால் தேவதைக்கதைகளை எத்தனை பேரால் சொல்லவியலும்? தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன? 'துப்பாக்கிகளும் சில தேவதைக் கதைகளும்/02' பாருங்கள்.

நான்
தேவதைக் கதைகளை
எழுதிக்கொண்டேயிருப்பேன்

ஏனெனில்
சபிக்கப்பட்ட என் நிலத்தில்
தேவதைகள் குறித்த
சொற்கள் மட்டுமே
துப்பாக்கிகளால்
அச்சமூட்டப்படாதிருக்கின்றன.

இப்போதெல்லாம்
இன்னுமின்னும்
அச்சமூட்டப்பட்டிருக்கின்றன
சொற்கள்.
புன்னகைகளைப்
பலியிட்டுவிட்டபின்
சொற்களையும் பலியிடுவோம்.


அகிலனின் 'வெட்கக் குறிப்புகள்' கவிதை காதல்,யுத்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு நிதர்சன உலகைக் கண் முன்னே கொண்டுவருகிறது.அதிலிருக்கும் 3 சின்னக் கவிதைகளும் சொல்லும் அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருக்கக் கூடுமானவை.

இரவிற்கு வெளிச்சம் பிடித்து வரும் நிலவினைச் சாடுகிறார் தன் 'மதங்கொண்ட நிலவு' கவிதையில்.இரவின் கறுப்பில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் சாட்சியாகப் பார்த்திருக்கும் நிலவு,இவரின் கவிதையின் இறுதியில் இப்படி வருகிறது.

யாரும்
விசாரணைகளை நிகழ்த்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.


ஒரு அடர் வனாந்திரத்தையும் சமுத்திரத்தையும் கடந்து வந்த நிகழ்வினை 'காட்டின் நினைவு' கவிதையாக்கியிருக்கிறார்.இக்கவிதையில் காட்டைப் பற்றியும் கடலைப்பற்றியுமான இவரது பார்வை வியக்கவைக்கிறது.

காடு
அடர்ந்திருந்தது
அதன் ரகசியங்களைப் போல
எங்களையும் விழுங்கிக்கொண்டு
மௌனமாய்.
ஆனால்
கடல்
அப்படியல்ல அதனிடம்
ரகசியங்கள் கிடையா
அதற்கு மௌனமும் தெரியா !


விடையறியாக் கேள்விகளை முன்னிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் வதையுர நேரும் அவலத்தை 'கேள்விகளின் குகை'கவிதை சொல்கிறது.இக்கவிதையின் இறுதிவரிகள் மனம் அதிரச் செய்பவை.

சுவர்
உறுஞ்சிக் கறுத்த
இரத்தத்தின் சுவடென
இரவு கவிகையில்..
என் இதயத்தின் ஒலி
அவன் காதுவரைக்கும் வந்து
அச்சமூட்டுவதாய்
அருகில் அழுதவன்
சர்வ நிச்சயமாய்ச் சொன்னான்.


யுத்தத்தின் பெருவலியைச் சுமந்த கவிதைகளும்,காதலின் கடைக்கண் தீட்டிய பேருவகையைக் கொண்டாடும் கவிதைகளும்,சுயத்தினைப் பாடும் கவிதைகளும்,இங்கு குறிப்பிடப்படாக் கவிதைகளுடன் சேர்த்து 'தனிமையின் நிழல் குடை'யில் நிறைந்திருக்கின்றன.முழுவதுமாய் வாசித்துமுடித்ததன் பிற்பாடு எழுதியவரைக் கவிதைகளினூடு புரிந்துகொள்ள முடியுமாயிருக்கிறது.இதுவே தனது படைப்புகளினுள் வாழும் கவிஞரின் வெற்றியெனலாம்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.