Friday, February 1, 2013

மட்டக்களப்பின் 'மகுடம்'



          சிறுவயது முதற்கொண்டே மட்டக்களப்பு குறித்த உருவகமொன்று எனக்குள் இருக்கிறது. அப் படிமம் எனது பாட்டியால் விதைக்கப்பட்டது. உண்ண அடம்பிடிக்கும்போதும், உறங்க மறுக்கும்போதும் பாட்டியால் சொல்லப்பட்ட எனது பால்ய காலக் கதைகளில் மட்டக்களப்பு எனும் பரப்பு தவறாமல் இடம்பிடித்திருக்கும். பாட்டியோ, எனது குடும்பத்தினரோ இதுவரை ஒருபோதும் மட்டக்களப்பு சென்றதில்லை. இப்பொழுதெல்லாம் நினைத்தபோது அந் நகரத்துக்குச் செல்லமுடியுமான காலத்தில் இருக்கிறோம். ஆனால் பாட்டியின் காலத்தில் யாராலோ, எப்பொழுதோ சொல்லக் கேட்ட ஒரு ஊரின் பெயர், அங்கு செல்ல வேண்டுமென்ற அவரது உள்மன ஏக்கங்களோடு விதைக்கப்பட்டு, அவரது வாய்வழிக் கதைகளில் வேர்விட்டு வளர்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
           
            இலங்கைக்குள் பல ஊர்களுக்குள்ளும் பயணிக்கும்பொழுது காண நேரும், பருத்து, அகன்று, உயர்ந்த பழங்கால விருட்சங்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். எத்தனையோ நூற்றாண்டுகளாக இங்கேயே தரித்திருக்கும் இவை எத்தனை எத்தனை வரலாறுகளை, மனிதர்களை, நடமாட்டங்களை, காலநிலை மாற்றங்களை, அனுபவங்களைக் கண்டு வளர்ந்திருக்குமென சிந்தித்து வியந்திருக்கிறேன். அதையொத்து, இலங்கையின் வரைபடத்தில் உள்ளடங்கியிருக்கும் மட்டக்களப்பைக் காணும் ஆவலும் ஏக்கமும் எனக்குள்ளும் இருக்கிறது. மீன்கள் பாடிடும் பெரும் களப்பமைந்த அதன் வரலாற்றை அறியும் ஆவல் மிகைத்திருக்கிறது.
           
            மட்டக்களப்பு மண்ணை மேலும் வியக்கச் செய்யும்விதமாக, ஒரு அபூர்வமாக மலரும் பூவையொத்து, 'மகுடம்' எனும் கலை, இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழை அண்மையில் சற்றுத் தாமதமாக வாசிக்கக் கிடைத்தது. முதல் இதழை எடுத்தவுடனேயே வாசிக்கத் தூண்டியது பேராசிரியர்.செ.யோகராசா எழுதியுள்ள 'மட்டக்களப்பின் வரலாற்றை அறிதல்' எனும் ஆய்வுக் கட்டுரை. மட்டக்களப்பின் கலை, இலக்கியம், நாட்டாரியல் போன்ற இன்னும் பல பிரதான அம்சங்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரையானது மிகவும் பயனுள்ளதாகவும் சேமிப்புக்குரியதாகவும் உள்ளது. அதேபோல பெறுமதியான இன்னுமொரு தொடர் கட்டுரைதான் 'பெருநதியும் ஒரு கிளை நதியும்' எனும் தலைப்பில், இலங்கையின் தென்பகுதி சிறுபான்மையின மக்கள் பெரிதும் அறிந்திராத கூத்து எனும் கலையின் பரிமாணங்களையும், வரலாற்றையும் விளக்கி எழுதும் பேராசிரியர்.சி.மௌனகுருவினால் எழுதப்படும் தொடர்கட்டுரை.
           
            இரண்டு இதழ்களிலும் வெளிவந்திருக்கும் கவிதைகள் அனைத்தும் காத்திரமானதும் அருமையானதுமான தெரிவுகள். அ.ச.பாய்வாவின் 'ஆயிரம் தலைவாங்கி...' நிதர்சனமான கவிதை. அப்படியும் நடந்திருக்கலாம் என்பதைத்தாண்டி, அப்படித்தான் நடந்திருக்கிறது என பொட்டில் அறைகிறது. வி.மைக்கல் கொலின் எழுதியுள்ள 'பரசுராம பூமி' சிறுகதையும் அதையே வேறுவிதமாக உரைக்கிறது. யுத்தம் தழுவிச் சென்ற தேசத்தின் சேதங்கள் எத்தனை ஓலங்களைக் காற்றில் அலைய விட்டிருக்குமென எண்ணிப் பார்க்கவும் முடியாமலுள்ள நிலையில் கதையும், கவிதையும் பெரும் தாக்கங்களை உள்ளுக்குள் உண்டுபண்ணுகின்றன.  அதைப் போலவே 'இன்றைக்காவது' எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் குறுநாவல், நல்லதொரு கருவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சுவாரஸ்யமான நெடுங்கதை எனலாம். இது எத்தனையோ மானிடர் அனுபவித்த துயர நிகழ்வுகள் குறித்து 1994 இல் எழுதப்பட்ட கதையாயினும், இன்னும் அச் சூழ்நிலைகளிலோ துயரநிகழ்வுகளிலோ எவ்வித மாற்றமுமில்லை என்பதே நிதர்சனம்.
           
            முதலாம் இதழில் 'அரூப வெளிப்பாட்டு வாதத்தில் கோபிறமணனின் ஓவியங்கள்' ஒரு மாற்றத்திற்கான வித்திடல் எனலாம். கலையும், ஆற்றலும் நிறைந்திருக்கும் ஒருவர் மறைந்திருத்தல் தகாதது. அவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சு.சிவரெத்தினத்தைப் பாராட்டவே வேண்டும். இதழில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டிருக்கும் கோபிறமணனின் கைவண்ணங்கள் பல விடயங்களைப் பகர்கின்றன. நந்தினி சேவியரின் 'அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' தொகுப்பு குறித்து காத்தநகர் முகைதீன்சாலி எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரையானது தொகுப்பை உடனே வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது. விமர்சனக் கட்டுரைகளோடு அதில் இடம்பெற்றிருக்கும் தொகுப்புக்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் பிரதேசத்தைத் தாண்டி எங்கோ தொலைவில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அத் தொகுப்புக்கள் எளிதில் கிடைப்பது சாத்தியமில்லை. எனவே அடுத்தடுத்த இதழ்களில் இவை இடம்பெறுமென எதிர்பார்க்கிறேன்.
           
            1950 - 1980 காலப்பகுதியை முன்வைத்து சி.ரமேஷ் எழுதியிருக்கும் 'ஈழத்து தமிழ்க் கவிதைப் புலத்தில் முஸ்லிம் கவிஞர்கள்' எனும் கட்டுரை நான் அறியாக் காலப்பகுதியின் இலக்கியத்தில் முக்கியமாக கவிதையின் பரிணாமத்தை அழகாக விளக்குகிறது. இந்த ஆய்வில் விடுபட்ட கவிஞர்களும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. கருணாகரனினதும், இதழில் இடம்பெற்றிருக்கும் இன்னும் சிலரதும் கவிதைகள் நான் முன்பு சொன்னதைப் போலவே துயர வரலாறொன்றில் எஞ்சிய வாழ்வின் காயங்களை விவரிக்கின்றன. திசேராவின் பார்வை வித்தியாசமானதாகவிருக்கிறது. அவர் ஒவ்வொன்றைப் பார்ப்பதிலும், அவற்றை எழுத்துக்களாகக் கோர்ப்பதிலும் புதுமைகளை உண்டுபண்ணி என்னை வியப்புக்குள்ளாக்கிவிடுகிறார்.
           
            மகுடத்தின் இரண்டாம் இதழில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான நேர்காணல் குறித்து நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவானதும் நேர்மையானதுமான ஒரு நேர்காணலை வாசித்த திருப்தி ச.இராகவனின் நேர்காணலை வாசித்தபோது ஏற்பட்டது. எவ்விதமான பொய்ச் சாயங்களும், பூடகமான பதில்களுமற்று வெளிப்படையாக அவர் அளித்துள்ள பதில்கள் சுவாரஸ்யமாகவும் அதேசமயம் பாதியில் மூடிவைக்கத் தோன்றச் செய்யாத ஒரு நல்ல புதினத்தை வாசிப்பதை ஒத்ததுமான உணர்வைத் தந்தது. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் உரையாடக் கூடியவருக்குள் ஒளிந்திருக்கும் இறந்தகால அனுபவங்கள் இன்னுமின்னும் பல நல்ல எழுத்துக்களை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வரும் என்பது நிச்சயம். அவரது நேர்காணலின் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.
           
            இவ் வருடத்தின் ஜனவரியிலேயே மலர்ந்திருக்கும் பூ, எனது கைக்குக் கிடைக்க ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருக்கிறது. எனினும் அப்பொழுதுதான் பூத்த வாசனையோடு, சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் பெறுமதியானதும் காத்திரமானதுமான ஆக்கங்களோடு 'மகுடம்' பூரித்துத் தளும்பியிருக்கிறது எனலாம். இலங்கையில் மிகவும் குறைவாக, விரல்விட்டு எண்ணக் கூடிய அளவேயுள்ள காத்திரமான இலக்கிய இதழ்களுக்கிடையே புதிதாக வரத் துவங்கியிருக்கும் மகுடமும் சிறப்பான இடத்தை வகிக்கும் என்பதை முதல் இரண்டு இதழ்களிலேயே நிரூபித்து நம்பிக்கையளிக்கிறது 'மகுடம்'.

- எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# வீரகேசரி
# தினகரன்
# உயிர்மை
# திண்ணை
# பதிவுகள்